எனக்கு என்றுமே ரஜினி ரொம்ப நவீனமான
நடிகர் எனத் தோன்றும். குளோசப் மற்றும் சூழலை மிக நுணுக்கமாய் காட்டும் தொழில்நுட்ப
வசதி காரணமாய் ஒரு நடிகன் இன்று மிக மிக கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டினால் போதும் - அது
பன்மடங்காக பெருகி பார்வையாளனை அடையும். ஒரு நுண்பெருக்கியின் கீழ் ஒரு எறும்பு நிற்பது
போன்ற காரியம் இது. ஆனால் கமல் இதை புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. கமலுக்கு தன் கை,
கால், விரல்கள், மூக்கு, கண், நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். சட்டகம் முழுக்க
தான் வியாபிக்க வேண்டும். படக்கருவி, இசை, சூழல் இவற்றின் பங்கை அவர் முக்கியமாய் கருதுவதில்லை.
ஆச்சரியமாய் ரஜினியிடம் நாடக மேடையின்
உடல் மொழியும் உண்டு. நிற்பது, நடப்பது, கை நீட்டி பேசுவது, நிற்கும் போது தன் கோணத்தை
கவனமாய் பயன்படுத்துவதாய், இதில் எல்லாம் சற்று மிகை காட்டுவது என. ஆனால் முகபாவங்கள்,
குரல் இரண்டையும் சற்று மட்டுப்படுத்தி அழகாய் சமநிலைப்படுத்துவார்.
கமலின் மிகப்பெரிய பலம் அவர் அடிப்படையில்
ஒரு நல்ல மிமிக்றி நடிகர் என்பது. அதாவது சாதாரண டிவி, மேடை மிமிக்றி அல்ல. ஆழமான அவதானிப்புகள்
கொண்டு பல வித மனிதர்களை உள்வாங்கி அவர்களை தன் உடலில் பிரதிபலித்துக் காட்டும் உயர்ந்த
வகை மிமிக்றி. எத்தனை எத்தனை வகை மனிதர்களை தன் நடிப்பில் கோண்டு வந்து காட்டியிருக்கிறார்.
பாலக்காட்டு பிராமணன், ஸ்டண்ட் நடிகன், பைத்தியம், கிராமத்து வெகுளி, முரடன், வயதான
வஞ்சகமான வில்லன், அறிவுஜீவி கல்லூரி ஆசிரியர், அப்பாவியான, நகரத்துக்கு வந்து ஏமாற்றப்படும்
நடுத்தர வர்க்க விவசாயி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இறுக்கமான, உள்ளத்தில்
பழி உணர்ச்சி கொந்தளிக்கும் மீசை முறுக்கிய பிராமணர், விபத்தில் முகம் சிதைந்து ஊனமுற்ற
ஒரு கம்யூனிஸ்ட், ஸ்திரிலோலன் இப்படி எவ்வளவு எவ்வளவு! தமிழில் சிவாஜியும் உள்ளிட்டு
எந்த நடிகனும் இவ்வளவு மாறுபட்ட தன்மையிலான வேடங்களை செய்ததில்லை. இந்த வேடங்களுக்கு
என்று குரலில், உடல் மொழியில், வசனங்களை பேசுவதில் விடும் இடைவெளி மற்றும் வேகத்தில்,
பேச்சு மொழியில் அவ்வளவு நுணுக்கமாய் வேலை செய்திருப்பார்.
ரஜினியுடன் ஒப்பிடும் போது இந்த
வெரைட்டி கொண்ட கமலிடம் ஒரிஜினாலிட்டி இல்லை என்பதையும் கவனிக்கலாம். இந்த வேடங்களில்
உண்மையான கமல் யார்? திருஷ்யம் படத்தின் ஒரு ஸ்டில் பார்த்தேன். மலையாள படத்தில் லால்
அணிந்திருந்த உடை, அவரது தலைமுடி அமைப்பு என அப்படியே போல செய்திருந்தார். இது தான்
கமல் பாணி. இப்படித் தான் அவர் மார்லன் பிராண்டோவை ”நாயகனில்” போல
செய்திருந்தார். அவர் மனிதர்களை நேரடியாய் கிரகிப்பது போல சினிமாவில் வரும் பாத்திரங்களையும்
கிரகித்து அப்படியே தன் நடிப்பின் வழி சித்தரிப்பார். காப்பி அடிப்பார் என சொல்ல மாட்டேன்.
ஆனால் கணிசமான தாக்கம் இருக்கும். கமலிடம் மிக அதிகமாய் தாக்கம் செலுத்தின நடிகர் சார்லி
சாப்ளின் தான். குறிப்பாய் நகைச்சுவை மற்றும் துன்பியல் பாத்திரங்களில் கமல் நடிப்பதை
பாருங்கள் - சார்லி சாப்ளினின் கண்ணாடி பிரதிபிம்பம் தான். சாப்ளினை போலவே கமலும் இது
போன்ற காட்சிகளில் தடுமாறி தடுக்கிக் கொண்டே நடிப்பார். முகத்தில் ஒரு சின்ன சுளிப்பும்
திகைப்பும் இருக்கும். அடிக்கடி இமைகளை தூக்குவார். பொருட்களை கைதவறி போடுவார்.
Pathos எனும் உயர்தர இரக்க உணர்வு தொனிக்கும் காட்சிகளில் அவர் அபாரமாய் நடிப்பதற்கும்
சாப்ளினின் தாக்கமே காரணம். சாப்ளினுக்கு ஹோமெஜ் போல அவர் சாப்ளின் செல்லப்பாவாக கூட
நடித்திருக்கிறார். பல விதமான தமிழ் பேச்சுவழக்குகளை கமலைப் போல் லாவகமாய் பயன்படுத்த
மற்றொருவர் தமிழில் இல்லை. குறிப்பாக “சதி லீலாவதியில்” பேசின
கோவைத் தமிழ் மற்றும் “தசாவதாரத்தில்” பேசின குமரிமாவட்ட களியாக்கவிளை தமிழ். மிகக்கொஞ்சம்
மிகை இருந்தாலும் இரண்டுமே சாதனைகள் தாம். “தெனாலி” ஈழத் தமிழ் இப்போது பல ஈழத்தமிழ் நண்பர்களின்
பரிச்சயம் கிடைத்த பின் மிகையாக தோன்றுகிறது. இந்த போல செய்யும் நடிப்பு பாணி அவரது
பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
பலவிதமான பரிமாணங்கள் கொண்ட நடிப்பு
என்றால் கமல் தான். ஆனால் ஒரிஜினலான நவீன நடிகன் என்றுமே ரஜினி. அதனாலே அவர் எனக்கு
பிடித்தமானவர்.
சர்வோத்தமனின் ரஜினிகாந்தின் திரைப்படங்கள்
என்ற கட்டுரை தான் இந்த எண்ணங்களை எனக்குள் தூண்டின. அதையும் படித்துப் பாருங்கள்.