“பட்டியல்” என்றொரு மாபியா படம்
முன்பு வந்தது. வாடகைக் கொலையாளிகளான ஆர்யா மற்றும் பரத்துக்கு கொச்சின் ஹனீபா ஒரு
பட்டியல் அளிப்பார். அதில் உள்ளவர்களை இவர்கள் போட்டுத் தள்ளுவார்கள். கடைசியில் இந்த
பட்டியலில் ஆர்யா மற்றும் பரத்தையே சேர்த்து அவர்களையும் போட்டுத் தள்ளுவார்கள். பட்டியல்
தூக்கினவர்கள் பட்டியலாலே சாகிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் பட்டியல்கள் இது போன்ற மாபியா பண்பாட்டை ஒரு பக்கம் வளர்க்கிறது. ஆனாலும் பட்டியலை சிலநேரம் தவிர்க்காமல்
இருக்க முடிவதில்லை.
உங்களுக்கு முக்கியமாய் தோன்றுகிற பத்து நாவல்களைப்
பற்றி பேசச் சொன்னால் ஒரு பட்டியல் போடாமல் முடியாது. அங்கு உங்கள் ரசனையும் அது சார்ந்த
தர்க்கமும் தான் அளவுகோல். இந்த அளவுகோல் ஆளாளுக்கு மாறுபடும் என்பது கூட சிக்கல் இல்லை.
ஆனால் பட்டியலில் உட்படாதவர்கள் பெரும்பாலும் காயப்படுவார்கள். நான் பட்டியலுக்கு எதிரானவன்.
ஆனாலும் சமீபமாய் வாசக சாலை கருத்தரங்கில் நவீன பெண் கவிஞர்கள் பற்றி பேசின போது ஒரு
பட்டியல் தர நேர்ந்தது. ஏழு பெண் கவிஞர்களைத் தேர்ந்து அவர்களைப் பற்றி மட்டும் பேசினேன்.
ஏன் தம்மை குறிப்பிடவில்லை என சிலருக்கு வருத்தமேற்பட்டால் அது நியாயமானதே. ஆனால் எல்லாரையும்
பற்றி பேச நேரம் இல்லாத போது பட்டியல் அவசியமாகிறது. முழுக்க தனிப்பட்ட தேர்வின் அடிப்படையில்
பேசும் போதும் பட்டியல் அவசியம் ஆகிறது. வெறும் பெயர்களை மட்டும் அடுக்கி விட்டு போனால்
எல்லா எழுத்தாளர்களையும் உள்ளடக்கலாம் தான். ஆனால் அது மோர்ப்பந்தல் ஆகி விடும். இது
பட்டியல் போடுவதன் இன்னொரு பக்கம்.
பட்டியல் அமைப்பதன் முக்கிய சிக்கல்
அது ஒரு அதிகார கட்டமைப்புக்கு வழிகோலும் என்பது. திட்டமிட்டு அனுகூலங்களுக்காய் இதை
செய்யாத வரை பட்டியலின் விளைவுகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பது என் நிலைப்பாடு.
இதை விடுபடுகிறவர்களின் கண்ணோட்டத்தில்
இருந்து நோக்க விழைகிறேன். நான் எழுதத் துவங்கி இந்த சில வருடங்களில் ஆறு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.
இரட்டிப்பு நூல்கள் வெளியிடும் அளவுக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் எஸ்.ராவைத் தவிர
என்னை யாரும் படிக்க வேண்டிய எழுத்தாளன் என பரிந்துரைத்தில்லை. பல நாவல் பரிந்துரைகளில்
என் நாவல்கள் இடம் பெற்றதில்லை. நேரில் பார்த்தால் என் எழுத்தை பாராட்டுகிறவர்கள் அதை
பதிவு பண்ணுவதும் இல்லை. என்னுடைய சக எழுத்தாளர்கள் பலரையும் போல எனக்கும் எப்போதெல்லாம்
பட்டியல்களில் தவிர்க்கப் படுகிறேனோ அப்போதெல்லாம் வருத்தம், கோபம், கொலைவெறி எல்லாம்
ஏற்பட்டதுண்டு. ஆனால் மெல்ல மெல்ல பட்டியலிடுபவரின் பார்வையில் இருந்து யோசிக்க ஆரம்பித்து
அவரது நியாயங்களை புரிந்து கொள்ள முயன்றேன்.
ஒருவருக்கு நம்மை பிடிக்காதிருப்பதில் தவறில்லை எனத்
தோன்றியது. அல்லது ஒருவரது ரசனையில் நாம் தேறாமல் இருக்கலாம். ஆனால் மிக முக்கியமாய்
என்னை இது சார்ந்த கவலைகளில் இருந்து காப்பாற்றியது ஒரு புரிதல் தான். யார் பரிந்துரைத்தாலும்
இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவர்கள் நிச்சயம் படிப்பார்கள். இது வெறும் ஆறுதல் அல்ல.
உண்மை. எனக்கு நேர்ந்துள்ள அனுபவம். அதனால் பட்டியலில் இருந்து விடுபடுவது சொந்த காதலியால்
கைவிடப் படுவது போல் நிர்கதி நிலை ஒன்றுமல்ல.
எழுத்து சர்க்கரைக் கட்டி போல
என எஸ்,ரா ஒரு உதாரணம் சொல்வார். அது தன்னை விளம்பரப் படுத்த வேண்டியதில்லை. எறும்புகள்
தானே வரும்.
அதனால் பட்டியல்களை நாம் ஒருவரின்
நிலைப்பாடு, ரசனை, விமர்சன அளவுகோல், வாசிப்பு ஆர்வம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான
முகாந்திரமாய் நினைக்கலாம். நான் நாளை எனக்குப் பிடித்த ஐந்து சிறுகதையாளர்களைக் குறிப்பிட்டால்
அவர்கள் தான் சிறந்தவர்கள் என்றில்லை. அவர்களை
அறிவிப்பதன் மூலம் நான் என் ரசனையை, வாழ்க்கைப்பார்வையை, வாசிப்பு நோக்கை புலப்படுத்துகிறேன்
என்றும் கொள்ளலாம்.
மற்றொரு விசயம். கடந்த பத்தாண்டுகளில்
அதிகம் வெளியான பட்டியல்கள் மற்றும் பரிந்துரைகளில் பெரும்பாலும் என் வயதை ஒத்த எழுத்தாளர்கள்
விடப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக இதற்கு ஒரு pattern உள்ளது. இப்போது ஐம்பது வயதான
எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அதிகமாய் தமது சீனியர்களான அறுபது எழுபது
வயதுக்காரர்களை அதிகம் பரிந்துரைப்பார்கள். முப்பதில் இருந்து நாற்பதுக்குள் இருப்பவர்கள்
மேற்சொன்ன ஐம்பது வயதான தம் சீனியர்களை பரிந்துரைப்பார்கள். தம் சமவயது எழுத்தாளர்களை
பாராட்டவோ விமர்சிக்கவோ பொதுவாய் எழுத்தாளர்களுக்கு ஒரு தயக்கம் உள்ளது.
வாசக எழுத்தாளர்களை (ஆம் அப்படி ஒரு வகைமை உள்ளது)
எடுத்துக் கொண்டால் அவர்களும் பெரும்பாலும் தமக்கு வந்து சேரும் பரிந்துரைகளை ஒட்டியே
வாசித்து அவர்களைப் பற்றியெ எழுதுகிறார்கள். இவர்களின் பட்டியலிலும் ஐம்பது அறுபது
வயதானவர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால் எழுபது எண்பதுக்கு மேலான அசோகமித்திரன், இ.பா,
செத்துப் போன லா.ச.ரா, மௌனி போன்றோர் இருப்பார்கள். அப்புறம், இருபதுகளில் உள்ள ஒரு
வகை வாசக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதிகம் இணையத்தில் புழங்கும் இவர்களை சமூக
வலைதளங்களில் பகடியும் காமமும் கலந்து எழுதுபவர்கள் கவர்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள்
ஆதர்ச எழுத்தாளர்கள் ஆகிறார்கள். இப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட வயதினரும் தமது ரகசிய
சுற்றுப்பாதைகளில் தமக்கான பட்டியல்களுடன் பயணிக்கிறார்கள். இப்படி வயதுரீதியாக பரிந்துரைகளைப்
பிரிப்பது கொஞ்சம் கச்சடாவாக உங்களுக்கு படலாம். ஆனால் இதில் உண்மை உள்ளது. எப்போதாவது
ஒரு இருபதுகளில் உள்ள இளைஞர் அசோகமித்திரனை கொண்டாடலாம். அல்லது ஐம்பதுகளில் உள்ள எழுத்தாளர்
ஒரு இளைய எழுத்தாளனுக்கு ஷொட்டு வைக்கலாம். ஆனால் இதெல்லாம் விதிவிலக்கு.
பட்டியலில் ஏன் நம் பெயர் விடப்படுகிறது
என விசனிக்கும் முன் நாம் இந்த வகையறாக்கள் பற்றி யோசிக்க வேண்டும். இதில் நாம் எங்கிருக்கிறோம்
என கேட்க வேண்டும். இப்பட்டியல்கள் முழுக்க அரசியல்பாலானவை அல்லவை. இயல்பாகவே நாம்
ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்தை, சில பதிப்பகங்களின் நூல்களைத் தான் படிக்கிறோம். இதில்
மாவட்ட சார்பும் உள்ளது. உதாரணமாய் சில அற்புதமான குமரி மாவட்ட படைப்புகளை என்னளவுக்கு
என் நண்பர்கள் பலருக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால் நான் அப்படைப்பாளிகளை பலமுறை சந்தித்து
படைப்புகளை அச்சுக்கு வரும் முன்பே கூட படித்திருப்பேன். ஒரு மதுரைக்காரருக்கு குமரிமாவட்ட
எழுத்து என்னளவுக்கு பரிச்சயமில்லை என்றால் அது இயல்பே. இதில் எந்த அரசியலும் சூழ்ச்சியும்,
“இருட்டடிப்பும்” இல்லை.
ஒரு காலத்தில் சு.ரா தீவிர இலக்கியத்தின்
ரசனை மதிப்பீட்டில் முக்கிய பங்கு வகித்தார். பத்து பதினைந்து வருடங்களில் அவர் இடத்துக்கு
அவர் காலத்தில் இளைஞர்களாக இருந்த சிலர் வந்து சேர்ந்தார்கள். இன்று இளைஞர்களாக இருப்பவர்கள்
நாளை அவர்களின் இடத்துக்கு போய் சேரக் கூடும். அப்போது முப்பதுகளில் இருப்பவர்கள் அவர்களை
படித்து பரிந்துரைப்பார்கள். அப்போதுள்ள ஐம்பது வயதுக்கார எழுத்தாளர்களின் பரிந்துரைப்
பட்டியலும் மாறும். அல்லது அவர்கள் அப்போதும் திறந்த மனதுடன் புதிதாய் வருகிறவர்களையும்
வாசித்த் வரவேற்கிறவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இது ஒரு சுழற்சி.
பட்டியல் இல்லாது சுதந்திரமாய்
வாசிப்பது தான் லட்சியம். ஆனால் அது சாதி பார்க்காமல் திருமணம் செய்வது போல. அதில்
பல அசௌகரியங்கள். இளமையில் (அதாவது 15-25 வயது வரை) நான் சீனியர்களிடம் இருந்து பட்டியல்
பெற்றுத் தான் படித்தேன். அப்பட்டியல்கள் எனக்கு அதிருப்தி அளித்தன. கல்லூரியில் கூட
பாடத்திட்ட பரிந்துரைகள் அசட்டுத்தனமாய் தோன்றின. அப்போதெல்லாம் இவ்வளவு இணையவளர்ச்சி
இல்லை. அதனால் நானாகவே இலக்கிய வரலாறு நூல்களை கடைந்து என ரசனைக்கு தோதான புத்தகங்கள்
கொண்ட ஒரு பட்டியலை தயாரித்து தேடிப் படித்தேன். இது என் இயல்பு. சின்ன வயதிலேயே யார்
பேச்சும் கேட்காதவன் என்பதால் நான் வாசிப்பிலும் அவ்வாறே இருக்கிறேன். இப்போதும் யாராவது
ஒரு நாவலை அதிகப்படியாய் பரிந்துரைத்தால் மிகுந்த சந்தேகத்துடனே வாசிப்பேன். அவர்களின்
ரசனை தவறு என்று அல்ல. ஒரு புத்தகம் நம் அறிவு மற்றும் ஆன்மீகத் தேடலுக்கான உதவிக்கரம்.
ஒரு வீதியை கற்பனைப் பண்ணிக் கொள்ளுங்கள். அங்குள்ள பல முடிதிருத்த கடைகளின் வாசலில்
நம்மை அழைத்து உள்ளே ஏற்றிவிட நீட்டின கரங்களுடன் பலர் நிற்கிறார்கள். நீட்டின எல்லா
கரங்களையும் பற்றினால் நம் மண்டை என்னவாகும்?