நேற்று பனுவலில் புதுமைப்பித்தன்
நினைவுதின அரங்கு மிக நிறைவான வகையில் நடந்தது. வேலை நெருக்கடி காரணமாய் நான் சற்று
தாமதமாகவே செல்ல நேர்ந்தது. அதனால் முதலில் பேசிய இருவரை கேட்க இயலவில்லை. பெருந்தேவியின்
உரை செறிவான ஒன்று. காஞ்சனை கதை பற்றி பேசிய அவர் புதுமைப்பித்தனிடம் செயல்பட்ட நவீன
தன்னிலை (modern subjectivity) பேய் போன்ற மரபான நம்பிக்கைகளை சித்தரிக்கும் போது அடையும்
தத்தளிப்புகளை குறிப்பிட்டார். அக்கதையின் சிறப்பே தன்னை நவீனமான, புரட்சிகரமான சிந்தனையாளனாக
நினைக்கும் ஒருவன் பேய் போன்ற வேலைக்காரி அவன் வீட்டில் இருக்கையில் அடையும் குழப்பங்களும்
பயமும் தான். அவன் பயம் உண்மையானதா அல்லது வெகுளியானதா என பு.பி அறுதியிட்டு கூற மாட்டார்.
அரவிந்தன் புதுமைப்பித்தன் கதையுலகு பற்றி விரிவாக
நுணுக்கமான பார்வையுடன் பேசினார். இரண்டாம் முறையாக அவர் பேச்சைக் கேட்கிறேன். “நீங்கள்
ஒரு நல்ல பேராசிரியராய் வந்திருக்க முடியும்” என அவரிடம் கூறினேன். தனக்கு அப்படி ஒரு
ஆசை முன்பு இருந்தது என்றார். பொதுவாக சுந்தர ராமசாமியின் பள்ளியை சேர்ந்தவர்கள் –
ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர், அரவிந்தன், சங்கர ராமசுப்பிரமணியன்,
சுகுமாரன் – சமத்காரமாய், நுணுக்கமாய், அறிவார்ந்த நகைச்சுவையோடு சிறப்பாய் பேசக் கூடியவர்கள்.
தனிப்பட்ட உரையாடல்களில் இவர்கள் மேலும் வித்தகர்கள். சங்கர் மேடையை விட தனிப்பட்ட
முறையில் சிரிக்க சிரிக்க பேசுவார். இப்படி சு.ரா பள்ளிக்கு என தனிப்பட்ட ஒரு பேச்சு
பண்பு இருப்பது இயல்பான விபத்தா அல்லது சு.ராவின் தாக்கமா அல்லது எதேச்சையாக இவர்களுக்கு
கடவுள் வாயில் வயம்பு தேய்த்து அனுப்பினார்களா தெரியவில்லை.
இறுதியில் பேசின தமிழ்மகன் “புதிய
நந்தன்” கதையை சுவைபட வாசித்து நகைச்சுவையுடன் விளக்கினார். அதையும் ரசித்தேன். இப்படி
கதை வாசிப்பது ஒரு நல்ல பாணி. இனிவரும் நிகழ்ச்சிகளில் நாம் ஆளாளுக்கு மணிக்கணக்கில்
உரையாற்றாமல் சில கதைகளை வாசித்து கூட்டமாய் அமர்ந்து கேட்கலாம். அப்போது நாடகம், சினிமாவுக்கு
இணையான ஒரு காட்சிபூர்வ அனுபவத்தை இலக்கியம் நமக்கு தரும். நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும்
இதை பின்பற்றிப் பார்க்கலாம்.
நான் புதுமைப்பித்தனின் மூன்று
தத்துவார்த்த கதைகளான “பிரம்மராக்ஷஸ்”, ”கபாடபுரம்”, ”கயிற்றரவு” பற்றி பேசினேன். இந்திய
தத்துவத்தையும், நமது நாட்டுப்புற வாழ்வையும் புதுமைப்பித்தன் பேசும் போது இன்றுள்ள
ஜெயமோகன், இமையம், அழகிய பெரியவன் போன்றோரிடம் இருந்து இருவிதத்தில் வேறுபடுவதைக் குறிப்பிட்டேன்.
திருநெல்வேலி பிள்ளைமார் வாழ்க்கையை அவர் விவரிக்கும் போது வெளிப்படுவது அவ்வாழ்க்கையோடு
ஒன்றிப் போய் அதை ஏற்றுக் கொண்ட குரல் அல்ல. அது அவ்வாழ்க்கையை விலகி நின்று பார்த்து
விமர்சிக்கும் ஒரு நவீன குரல். கிராம மற்றும் நகர வாழ்க்கையை அதிருப்தியுடன் அங்கதம்
செய்யும் ஒரு வேற்றாள் குரல். இமையம் தன் ஊர் மக்களைப் பற்றி கரிசனையோடும் விமர்சனத்தோடும்
பேசுகையில் அவ்வாழ்வோடு உணர்வுரீதியில் ஒன்றுகிறார். அழகிய பெரியவனும் அவ்வாறே. பு.பியிடம்
இதைப் பார்க்கவியலாது. அதைப் போல் ஜெயமோகன் இந்திய மரபின் தத்துவங்கள், வரலாற்று தொன்ம
சித்திரங்களை மீள் கட்டமைக்கும் போது அவற்றை ஏற்றுக் கொள்ளே உள்ளே பயணிக்கிறார். ஆனால்
புதுமைப்பித்தனின் கபாடபுரம், கயிற்றரவு போன்ற கதைகளில் ஐரோப்பிய புத்தொளி இயக்கத்தின்
வாரிசான ஒருவனாக நின்று ஒவ்வொரு திருப்பத்திலும் நம் இந்திய நம்பிக்கைகள், மயக்கங்கள்
பற்றி விமர்சித்தும் கிண்டலடித்தும் போகிறார்.
புதுமைப்பித்தனின் “பிரம்மராக்ஷஸ்”,
“கபாடபுரம்” போன்ற கதைகளை எவ்வாறு ஒரேநேரம் தத்துவக்கதைகளாகவும் விஞ்ஞான புனைவுகளாகவும்
பார்க்க இயலும் என்று பேசினேன். இச்சிறுகதைகளில் அவர் உருவாக்கும் பிரம்மாண்டம், சீற்றம்
கொண்ட மொழி, கதையின் உருவத்தை குடைந்து வெளிவரத் துடிக்கும் கருத்துக்களும் உணர்வுகளும்,
தத்துவார்த்த, வரலாற்று கேள்விகள் ஆகிய அவர் காலத்திலோ அவருக்கு பின்னரோ கணிசமான சிறுகதையாளர்கள்
முயலாதவை என்றேன். ஏனென்றால் அடிப்படையில் சிறுகதை அவ்வளவு பாரத்தை தாங்காது. புதுமைப்பித்தன்
சிறுகதைக்குள் நாவல் எழுத முயன்ற கலைஞன். அவருக்கு பின் அவரைப் போன்று விரிவான களமும்,
கொப்புளிக்கும் பிரம்மாண்ட சித்தரிப்புகளும் கொண்டு சிறுகதை எழுத முயன்றவர் ஜெயமோகன்
மட்டும் தான் என்றேன். நான் பேசி முடித்ததும் பெருந்தேவி அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார்.
ஜெயமோகனை விட சம்பத்தை தான் புதுமைப்பித்தனின் நீட்சியாக கருத முடியும் என்றார். எனக்குப்
பின் பேசிய அரவிந்தன் புதுமைப்பித்தனுக்கும் ஜெயமோகனுக்குள் உள்ள ஒற்றுமைகள் உண்மை
தான் என்றார். ஆனால் புதுமைப்பித்தன் லாவகமாய் பிரக்ஞையின்றி எழுதும் போது ஜெயமோகன்
அதையே சற்று பிரக்ஞைபூர்வமாய் செய்வதாய் கூறினார்.
கூட்டம் முடிந்த பிறகு என்னுடன்
வந்த நண்பர்கள் நிகழ்ச்சியுடன் சாப்பாடும் போட்டால் சிறப்பாக இருக்குமே என ஆலோசனை சொன்னார்கள்.
நான் செந்தில்நாதனிடம் “என்ன முதலாளி அடுத்த நிகழ்ச்சிக்கு ஒரு கெடா வெட்டுங்க” என்று
பரிந்துரைத்தேன். அவர் “கல்லாவில் உட்கார்ந்திருப்பவர் தான் நிஜமான முதலாளி” என்றார்.
சரி தான். இப்படி படாதபாடுபட்டு நிகழ்ச்சியை சிறப்பாய் ஒருங்கிணைப்பது போதாதென்று சோறும்
கேட்பது சற்று அதிகம் தான்.

