அமேசான் கிண்டில் எனும் மின்நூல்
வாசிப்புக்கருவி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த கிண்டிலை இப்போது மும்முரமாய்
டி.வியில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆங்கில நூல்களை வாசிப்பதற்கான எளிய மார்க்கமாய்
அதை முன்வைக்கிறார்கள். சுலபமாய் புத்தகங்களை நொடியில் தரவிறக்கலாம்; ஒருதடவை சார்ஜ்
செய்தால் வாரக்கணக்கில் பயன்படுத்தலாம். நிறைய புத்தகங்களை அதில் வைத்திருப்பதன் மூலம்
பயணத்தின் போது புத்தக சுமை இருக்காது என அனுகூலங்களை கூறுகிறார்கள். எனக்கு என்றுமே
மின்நூல்களில் ஆர்வமுண்டு. நான் கோபோ எனும் வாசிப்பு கருவியை பயன்படுத்துகிறேன். சில
வருடங்களுக்கு முன் சந்தையில் அதுவே விலை குறைவாக இருந்தது. இப்போது wifi கொண்ட கிண்டிலின்
விலையை அதிரடியாய் குறைத்து விட்டார்கள். அதனால் கோபோவை விட கிண்டிலே மலிவாய் உள்ளது.
ஐயாயிரம் ரூபாய்க்குள் வாங்கி விட்டால் கணிசமான ஆங்கில மின்நூல்களை இலவசமாய் தரவிறக்கி
படிக்கலாம்.
உதாரணமாய் எழுத்தாளர் இந்திரன் தான் ஐயர்லாந்தில்
சந்தித்த ஜான் பான்வில் எனும் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பற்றி முகநூலில் ஒரு
வித்தியாசமான சேதி எழுதியிருந்தார். பான்வில் எனும் பெயரில் இலக்கிய நாவல்களும், பெஞ்சமின்
பிளேக் எனும் பெயரில் அவர் துப்பறியும் நாவல்களூம் எழுதி இருக்கிறார். ஏற்கனவே போர்கஸ்
போன்றோர் துப்பறியும் கதைகள் எழுதியுள்ளதை அறிந்திருக்கிறோம். இவர் ஒரு பேட்டியில் “நான் இலக்கிய நாவல் எழுதும் போது வசந்த காலமாகவும் துப்பறியும் நாவல் எழுதும் போது
இலையுதிர் காலமாயும் உணர்கிறேன்” எனக் கூறுகிறார். இவரது மொழி அழகும் பிரசித்தம். சரி
இப்படியானவர் இரண்டு வகைகளிலும் புழங்கும் போது எப்படி மாறுபடுகிறார் என அறிய ஆவல்
கொண்டேன். உடனே அவரது படைப்புகளை இணையத்தில் தேடினால் விலை அதிகம். ஒரு இணையதளத்தில்
இலவசமாய் கிடைக்க தரவிறக்கி வாசித்தேன். முதலில் பெஞ்சமின் பிளேக்காய் அவர் எழுதிய
“Christine Falls” படித்தேன். அடுத்து பான்விலாக அவர் எழுதிய ஒரு நாவலை படிக்கப் போகிறேன்.
(இரண்டையும் முடித்து விட்டு என் வாசிப்பனுவத்தை எழுதுகிறேன்) இப்படி உடனடி வாசக ஆர்வ
நிவாரணத்துக்கு மின்நூல் வாசிப்பு கருவி முக்கியமானது.
தமிழில் கிண்டில் நூல்கள் இப்போது
வரை இல்லை என நினைக்கிறேன். அமேசான் தமிழ் சந்தையை கண்வைப்பதாயும் தெரியவில்லை. மாநில
வாரியான புத்தக விற்பனையை அமேசான கணக்கில் கொள்ளும்பட்சம் அவர்கள் கோடிக்கணக்கான லாபம்
வரக் கூடிய ஒரு சந்தைக்குள் காலடி வைக்கக் கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதாகவும் இருக்காது.
தமிழில் புத்தக விற்பனை பெரும்பாலும் நூலக ஆணை, கண்காட்சி, சிறு புத்தக வியாபாரிகளை
நம்பித் தான் உள்ளது. ஆங்கிலத்தில் இலக்கிய நூல்கள் அந்தஸ்துக்காகவும் ஆர்வத்துக்காகவும்
ஒருசேர வாங்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விற்பனை ஒருங்கிணைந்ததாகவும் இங்கு ஒருங்கிணையாததாகவும்
உள்ளது. தற்போது நியூஸ்ஹண்ட் போன்ற மொபைல் இணையதள வாசிப்பு நிறுவனங்கள் பழைய ஜாம்பவான்களான
ராஜேஷ்குமார் துவங்கி இலக்கிய பிதாமகர்கள், இன்றுள்ள இலக்கியவாதிகள் வரை மின்நூல் வடிவுக்குள்
கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்சனைகள் - எனக்குத்
தெரிந்து – இரண்டு. ஒன்று இதுவரையில் பதிப்பாளர்களுக்கு மின்நூல் வடிவம் மீது நம்பிக்கை
ஏற்படவில்லை. பெரும்பாலான நூல்களின் உரிமைகள் அவர்கள் வசமே உள்ளதால் எழுத்தாளன் நினைத்தால்
கூட எளிதில் தன் நூல்கள் முழுதையும் மின்நூலாய் வெளியிட முடியாது. ஏனென்றால் மின்நூல்
வடிவம் இன்னும் இங்கு உறுதியாய் வாசகர்களை சென்றடையும் என்றோ லாபம் பெற்றுத் தெரியும்
என்றோ ஆதாரபூர்வமாய் தெரியவில்லை. அதனால் இரண்டு பக்கமிருந்தும் மின்நூல் வெளியிடுபவர்களுக்கு
ஆதரவு குறைவே.
ஆனால் அமேசான் போன்ற பெரும் கார்ப்பரேட்
நிறுவனங்கள் சந்தையில் காலெடுத்து வைக்கும் போது அவர்களால் எளிதில் நம் பதிப்பாளர்களின்
நம்பிக்கையை பெறவும் போதுமான முதலீடுகளை செய்யவும் இயலும். மின்நூல் வருவதனால் அச்சுநூல்களின்
விற்பனை குறையுமா? ஓரளவு குறையும். ஆனால் மின்கருவிகள் வழி வாசிக்கும் புது வாசகர்கள்
தோற்றுவிப்பதன் வழியாக ஒரு சமநிலையை எட்ட முடியும். ஒரு கட்டத்தில் இது பதிப்பாளர்களுக்கு
லாபமாகவே அமையும்.
இதனால் எழுத்தாளனுக்கு அனுகூலமா?
வணிக எழுத்தாளர்கள் சந்தையில்
எந்த புது இடம் தோன்றினாலும் அங்கு முதலில் கடை விரிப்பார்கள். மின்நூல் விசயத்திலும்
இதுவே நடக்கும். இப்போதே இணையத்தில் கணிசமான இலவச நூல்களை வெளியிட்டுள்ளவர்கள் கிழக்கு
பதிப்பகத்துடன் சம்மந்தமுள்ள எழுத்தாளர்கள் தாம். எனக்குத் தெரிந்து மின்நூலாய் விற்கத்தக்க
கணிசமான நூல்களை கிழக்குப்பதிக்கம் வைத்திருக்கிறார்கள். அதே போன்று சோதிடம், சமையற்குறிப்பு
நூல் வெளியீட்டாளர்களும் லாபம் பார்ப்பார்கள். முகநூலில் எழுதுபவர்களும் முந்தியடிப்பார்கள்.
எல்லாரும் வண்டியில் தொத்திக் கொள்ள பார்க்கும் போது இலக்கிய எழுத்தாளனும் நிச்சயம்
பின்னாலே ஓடி வருவான். பெரிதும் சின்னதுமாய் எல்லாருக்கும் லாபம் இருக்கும்.
இதுவரையிலும் மின்நூலாய் மட்டுமே
புத்தகங்களை வெளியிடும் வழக்கம் ஆங்கிலத்திலும் குறைவே. அச்சு மற்றும் மின்நூலாய் சேர்த்து
வெளியிடுகிறார்கள். இரண்டின் விலையிலும் 10 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இல்லாமல்
பார்த்துக் கொள்கிறார்கள். பதிப்பகங்களின் நோக்கம் இதன் மூலம் வாசகர்களை முழுக்க மின்நூல்
நோக்கி கொண்டு போகாமல், இருவடிவங்களிலும் வாசிக்க வைத்து வாசக எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது.
தமிழிலும் இவ்வாறே நடக்கும். விளைவாக, அமேசான இங்கு வந்தாலும் கூட எழுத்தாளர்களின்
ராயல்டி தொகை அதிகமாகப் போவதில்லை. ஏனென்றால் அச்சில் கொண்டு வருவதற்கான செலவையும்
சேர்த்து மீட்க வேண்டுமே? சில அதிக விற்பனை சாத்தியமற்ற நூல்களை மட்டும் ஒரு பதிப்பகம்
மின்நூலாய் வெளியிடும் சூழல் தோன்றுமா? தெரியவில்லை. அதை எழுத்தாளர்கள் விரும்புவார்களா
என்பதும் சந்தேகமே.
அமேசான் ஆங்கிலத்தில் சுயபிரசுர
வாய்ப்பை எழுத்தாளனுக்கு அளிக்கிறது. குறைந்த விலையில் உங்கள் நூலை நீங்களே வெளியிட்டுக்
கொள்ளலாம். இம்முறையில் ஆங்கிலத்தில் நிறைய சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். தமிழிலும்
இது வெற்றி பெறலாம். ஆனால் சில தடைகள் உள்ளன.
ஒன்று wifi இணைய தொடர்பு இன்னமும்
நம்மூரில் இலவசமாகவில்லை. அதை விட முக்கியமாய் வாசிப்புக் கருவிகளை ஐயாயிரம் ரூபாய்
கொடுத்து நம்மாட்கள் வாங்குவதும் சிரமம் தான். சற்றே பெரிய மொபைல் இருந்தாலும் அதில்
பெரிய/சிறிய நாவல்கள் வாசிப்பதும் வசதியானதல்ல. ஒருவேளை நம் அரசாங்கமே கிண்டில் போன்ற
கருவிகளை குறைந்த விலைக்கு வாங்கி இலவசமாய் பள்ளி மாணவர்களுக்கு அளிக்குமானால் அது
இங்கு பெரும் மாற்றத்தை கொண்டு வரலாம். பள்ளி நூல்கள் பிரசுரமாவது தாமதமாவதைச் சொல்லி
வகுப்புகள் தாமதமாவதையும் தவிர்க்கலாம். பொதுவாக இக்கருவிகளை இயக்குவது மொபைலை விட
எளிது. இக்கருவிகளில் இணையதளங்களில் உலவுவதில் பெரும்பாலும் சாத்தியப்படாது என்பதல்
மாணவர்களுக்கு தோதாக இருக்கும். மேலும் உயர்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான
எத்தனையோ மின்நூல்கள் இணையத்தில் இலவசமாய் கிடைக்கின்றன. அவற்றைத் தேடி திருவல்லிக்கேணி
நடைபாதை கடைகளில் அலைய வேண்டியதில்லை.
மக்களுக்கு வாசிக்க நேரமில்லை
என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் வகுப்பில் பல புதுதலைமுறை படிப்பாளர்களை பார்க்கிறேன்.
அடுத்த சில பத்து வருடங்களில் இது போன்ற புதுதலைமுறை மாணவர்கள் பெருகுவார்கள். கல்வி
பரவலாகும் போது வாசகர்களை பெருக்குவதும் வாசிப்புக்கான மலிவான கருவிகளை வழங்குவதும்
முக்கியமான மாற்றத்தை கொண்டு வரும். அத்தகையவர்கள் டி.வி, பேஸ்புக், வேலை என வாழ்க்கையை
பிரித்து சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். வாசிப்புக்கும் தினம் அரைமணி ஒதுக்குவது ஒன்றும்
சாகசம் அல்ல. இன்று முகநூல் வந்த பின்னரும் இணையதளங்களில் கட்டுரைகள் படிக்கப்படுவது
தொடர்கிறதே. எப்போதும் ஒரு புது விசயம் தோன்றும் போது அதற்கான பயன்பாட்டாளர்களும் கூட
புதிதாய் தோன்றுவார்கள். புத்தகங்கள் என்றுமே அழியப்போவதில்லை. வாசகர்கள் பன்மடங்காகப்
போகிறார்கள்.