நீதிமன்ற படிக்கட்டில் இருந்தபடி
அந்த காக்காய் கூட்டை பார்த்தேன். உயர்ந்து ஒரு கொக்கி போல் வளைந்து லேசாய் தலைகுனிந்த
அந்த கிளையின் பின்புறம் அடர்வெள்ளை பனியில். பல்தேய்த்து பேஸ்டை நுரைத்து துப்பும்
போது சளி அதனுடன் வெளியே வந்து விழுந்து நுரையின் மையத்தில் மிதப்பது போல அந்த கூடு.
தனியாய், காற்றில் மெல்ல அதிர்ந்தபடி. இப்போது யாரும் இல்லை. குஞ்சுகள் பறந்து போய்
சில நாட்கள் இருக்கும். மீண்டும் என்னைச் சுற்றிய பரபரப்பும் கத்திரிக்கோலின் முனைகள்
போல குறுக்குமறுக்காய் விரையும் பல பல கால்களும் நினைவுக்கு வந்தன. கான்ஸ்டபிள்கள்
எதையோ சுவாரஸ்யமாய் சொல்லி சிரித்தபடி டீ குடித்துக் கொண்டு என்னையும் கண்ணனையும் அவ்வப்
போது பார்த்தனர். குளிக்க அமர்த்திய குழந்தைகள் அடிக்கடி பாத்திரத்து நீரைத் தொட்டுப்
பார்த்து யோசிப்பது போல் அவர்களின் பார்வை எங்களை தொட்டு மீண்டது. பாதத்தில் பட்ட வெயில்
இதமாக இருந்தது.
“பணம் வந்து சேர்ந்ததும்…”
“பணம் வராம நான் உங்களை இங்க வர
கொண்டு வந்திருப்பேனா அண்ணா. அட்வான்ஸா பத்து கொடுத்திட்டாங்க. வாங்கி பத்திரப்படுத்திட்டு
தான்…”
“அதுக்கில்ல”, என் குரலின் கடுமையை
உணர்ந்து அமைதியானான்.
“ஆட்டோக்கான அட்வான்ஸை கொடுத்திட்டியா?
இனிமே ஒழுங்கா இருப்பேல்ல?”
தலை குனிந்து நின்றான்.
“இல்ல அதை வித்து குடிப்பியா?”
தலையாட்டினான்.
“நான் எனக்காகத் தான் உங்கள இந்த
பேரத்துக்கு ஒத்துக்க சொன்னேன்னு நினைக்காதீங்க அண்ணே. இப்போ கூட வேண்டான்னு சொல்லுங்க
திருப்பி கொடுத்திரலாம். நீங்க இல்லாம நாங்க மட்டும் என்னத்த சொகம் கண்டு வாழணும்?”
“ம்ம்”
“டீ வாங்கியாரவா?”
“வேணாம். அப்புறம்…”
அவன் ஒரு சேவகன் ரகசியம் கேட்கும்
தொனியில் முழந்தாளிட்டு என் அருகே செவியை நீட்டினான். எரிச்சலாக இருந்தது. பெருமூச்சுடன்
சொன்னேன்
“மல்லனுக்க…”
அவன் சட்டென எழுந்து கொத்தப் போகும்
ஒரு பெரும்பறவையைப் போல என்னைப் பார்த்தான்
“அந்த தாயாளி போட்டும்ணே பாத்துக்கிடலாம்
அண்ணே. தராம எங்க போயிடுவாங்க? அவன் பொண்டாட்டிக்க லேட்டஸ்ட் தொடுப்பு அந்த மாதா ஒயின்ஸ்
ஓனர் சகாயம் போல. அவன் கிட்ட இருந்து முழுப் பணத்தையும் புடுங்காம…”
அவனை நிறுத்தும்படி சைகை காட்டினேன்.
வாயை கையால் பொத்தினான்.
“அவ எப்பிடியும் ஒளிஞ்சு போவட்டும்.
அவனுக்கு ஒரு பிள்ளை உண்டும்லா”
“ஆமாண்ணே”
“நம்ம விக்னேசுக்க வயசு தான் இருக்குமில்லியா?”
“ஆமா இருக்கும்”
“நீ அவ கிட்ட கொடுக்காண்டாம்.
அந்த பிள்ளைக்க பேரில பாங்கில ஒரு அஞ்சு லட்சம் போட்டிரு”
“என்னது?”
“ஏன் காது அடைஞ்சா கெடக்கு?”
“உங்ககிட்ட இருந்து பத்து லட்சத்தை
லவுட்டி அதை தராம என்னவெல்லாம் ரவுடித்தனம் பண்ணி நிம்மதியை கெடுத்த பாவி…இப்போ தெய்வாதீனத்தால
கொஞ்சம் பணம் வந்திருக்கும்போ, அதுவும் நீங்க ஜெயில்ல கிடந்து கஸ்டப்பட்டு சாவுறதுக்கான
பணம், அதைப் போய் அந்த குடிகெடுத்தானுக்க குடும்பத்துக்கு கொடுக்கணுமா? உங்களுக்கு
மண்டை குழம்பிப் போச்சு”
நான் முறைக்க மீண்டும் வாயைப்
பொத்தினான்.
“சொன்னத செய்”
“செரிண்ணே” முதுகை பின்னால் வளைத்தபடி
தயக்கமாய் சொன்னான்.
“அக்கா அம்மா எல்லாம் கேட்டா…”
“ஊம்பச் சொல்லு”
அவன் மீண்டும் வாயைப் பொத்திக்
கொண்டு என்னிடம் இருந்து திரும்பி தூண் மறைவில் போய் நின்றான். அவன் உடல் குலுங்க அழுவதை
உணர்ந்தேன்.
“இப்ப என்னத்துக்கு…இந்த பக்கம்
திரும்பி நில்லு…பொட்ட மாதிரி கண்ணு கலங்காத அசிங்கமா இல்ல”
“இல்லண்ணே எங்க மேல ஒங்களுக்கு
கோவம். எங்களால தானே ஜெயிலுக்கு போறீங்க? அந்த வெறுப்பில தான் அப்பிடி சொன்னீங்க”
அவனை பக்கத்தில் அழைத்து தலையை
தடவிக் கொடுத்தேன்.
“என் கண்ணு முன்னாடி அளுவக் கூடாது
செரியா?”
“ம்ம்”
“இன்னிக்கே பணத்தை போட்டிரு. அடுத்த
வாட்டி என்ன பார்க்க வரும் போ இங்கி்யோ ஜெயிலிலையோ பாஸ் புக்க கொண்டு வந்து காட்டணும்.
அப்புறம் அந்த பிள்ளைய அடிக்கடி போய் பாக்கணும். ம்ம்?”
“செரிண்ணே”
அவன் போன பின்பு விபத்தானவருக்காக
வாதிடும் வக்கீல் வந்து எதிரிலுள்ள மரத்தடியில் நின்றார். என்னை ஈனப் பார்வை பார்த்தபடி
பாக்கு பாக்கெட்டை கிழித்து அடிநாக்கின் கீழ் கொட்டி விரல்களால் நுழைத்து சில நொடிகள்
கண்ணை மூடி விட்டு மீண்டும் பார்த்தார். துப்பினார். மீண்டும் பார்த்தார். அடித்தட்டு
மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்குகளை வழக்கமாக எடுத்து நடத்துபவர். குடும்பம்
குட்டியில்லை. ஒன்று கட்சி அலுவலகத்தில். இல்லாவிட்டால் வைன் ஷாப்பில்.
என்னை நோக்கி வந்தவர் பக்கத்தில்
அமர்ந்தார். சிவப்பேறிய பற்கள் தெரிய சினேகமாய் சிரித்தார். ஒரு துருபிடித்த பிளேடை
சட்டென யாரோ வெளியே எடுத்தது போல் இருந்தது.
“பன்னெண்டு வருசத்துக்கு பெறவு
நீ வந்து ஸ்டேட்மெண்ட் கொடுக்கிற. அதை போலீஸ் தாயளிங்க பதிவு பண்றாங்க.”
மரக்கிளையில் ஒரு வயதான காகம்
அமர்ந்து பார்த்தது. அது இறகுகளை திறந்து ஒருமுறை அடித்து அலகால் கோதி மூட கிளை மெல்ல
ஆடியது.
“எவ்வளவு கொடுத்தாவ?”
“25”
பேரம் பேசப் போனதெல்லாம் கண்ணனும்
அவன் மச்சினனும் தான். 35இல் ஆரம்பித்து 25இல் முடித்தார்கள். பேரம் ஆரம்பிக்குமுன்னே
பணத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு, என்னென்ன செலவுகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும்,
யாரெல்லாம் பாத்தியப்பட்டவர்கள், அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என குடும்பத்துக்குள்
ஒரு விரிவான சர்ச்சை, சண்டை, சமாதானம் நடந்து முடிந்திருந்தது. இப்போது அந்த ஐந்து
லட்சத்தை கண்ணன் எந்த இலை முள்ளிற்கும் பாதகம் இல்லாமல் வெளியே எடுத்து கொடுக்க வேண்டும்.
“உன்னச் சொல்லி குத்தமில்ல. ஜட்ன்மெண்ட்
கொடுக்கியவளே பணத்தை வாங்கி செட்டில் பண்ணியாச்சு. இதெல்லாம் சும்மா ஊர் கண்ண மூடற
சடங்கு தானே?”
டீ வாங்கி குடித்திருக்கலாம்.
தொண்டை வறண்டது. அக்குள் ஜில்லிட்டது. கம்பளி சட்டையில் கிழிசல் விழுந்திருந்த இடங்களை
எண்ணினேன். சித்தப்பாவுடையது. குடிபோதையில் பள்ளத்தாக்கில் இருந்து விழுந்து அவர் இறந்த
போது அணிந்திருந்தது. அவராக விழுந்தாரா அல்லது ஊரில் சொல்வது போல் சித்தியின் ஆள் யாரோ
தள்ளி விட்டு கொன்றதா? இன்னும் தெரியவில்லை.
“எங்கிட்ட தான் முதல்ல பேரத்துக்கு
வந்தாவ. அப்போ வேணான்னோம். இப்போ தோணுது பிளாட்பாரத்துல கிடந்து செத்த அந்த பெண்ணுக்க
தகப்பனுக்காவது ஒரு ஐம்பது லட்சம் வாங்கி கொடுத்திருக்கலாம்”
அவ்வளவு பெரிய தொகையா அவர்களிடம்
பேசினார்கள்? எனக்கு இவ்வளவா? கோபம் லேசாக புகைந்தது. பிறகு அதை நினைத்து நானே சிரித்துக்
கொண்டேன். உயிரின் விலை. சுதந்திரத்தின் விலை.
“நான் வேண்ணா ஒரு அஞ்சு ரூவா எடுத்து
அவருக்கு தரச் சொல்றேன்…என்னால முடிஞ்சது”
“சேச்சே அதெல்லாம்…ம்ஹும். நீயே
கொடுக்கிறதின்னாலும் இனி வழக்கை நிப்பாட்ட முடியாது. நிப்பாட்டியும் யூஸ் இல்ல. எல்லாம்
தான் முடிவாகிடுச்சே.”
தலையாட்டினேன். எழுந்து நின்று
பின்புறத்தில் ஒட்டியிருந்த காய்ந்த இலைகளை தட்டி விட்டார்.
“பீடி வேணுமா?”
“வேணாம்”
அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து
எடுத்து பற்ற வைத்துக் கொண்டு நடந்தார்.
மூன்று மாதங்களாக அவனை பின் தொடர்ந்து
கொண்டிருந்தேன். அவன் என்றால் புரியாதில்லையா? மல்லன். பள்ளியில் என் உயிர்த்தோழன்.
பிறகு எப்படி எல்லாமோ எங்களுக்கு இடையே ஒரு பனிமூட்டம் படர்ந்தது. ஜலஜா காரணம் என பிற்பாடு
புரிந்தேன். நான் அவளிடம் இச்சை கொண்டிருப்பதாக அவள் அவனை தவறாக நம்ப வைத்திருந்தாள்.
ஒருநாள் பூங்கா பின்புறம் உள்ள தூங்குமூஞ்சி மரத்தின் இருட்டில் வைத்து என் மீது அவன்
பாய்ந்து தாக்கினது நினைவு வருகிறது. அந்த வலி இன்னமும் மூளையில் உயிர்ப்பாக பதிந்திருக்கிறது.
எனக்கு அவனை திரும்ப அடிக்கவோ தடுக்கவோ தோன்றவில்லை. திகைப்பாக அவன் தருவதை வாங்கிக்
கொண்டிருந்தேன். என் மடியில் உதைத்து கீழே தள்ளி மாரில் உட்கார்ந்து கன்னத்தில் மாறி
மாறி அறைந்தான். உதடு கிழிந்து கண்கள் கலங்கி மயக்கம் தோன்றும் வரை. பிறகு என் காலைப்
பிடித்து தூக்கி திருப்பி முட்டியை உடைத்த போது ஏற்பட்ட வலியில் நான் துள்ளி திரும்பி
விழுந்தேன். அந்த அதிர்ச்சியில் அவனும் சில அடிகள் தள்ளிப் போய் நின்று சுதாரித்தான்.
என் அலறல் கேட்டு ஆட்கள் வர போய் விட்டான்.
எப்போதும் முட்டியில் இரும்புக்
கம்பியால் தட்டுவது போன்ற அந்த வலி அவனை நினைவு படுத்தும். குளிர் அதிகமாகும் அதிகாலைகளில்
தாங்க முடியாத படி படுத்தி எடுக்கும். மலை ஏறுவது, தோட்ட வேலை, சுமை தூக்குவது எல்லாம்
முடியாமல் ஆகிற்று. அப்படித் தான் கார் ஓட்டப் பழகினேன். ஐயாவிடம் போய் சேர்ந்தேன்.
பிறகு ஒருநாள் அவன் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டான். நிறைய சாராயம் வாங்கித் தந்தான்.
அவள் தன்னை ஏமாற்றி விட்டு போய் விட்டதாக அழுதான். அது உண்மை தான் என விசாரித்து உறுதி
செய்தேன்.
சில மாதங்கள் என்னோடே சுற்றினான். அவனுக்கு ஏதாவது
ஒரு வேலை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பின் அழுத்தம் என் மீது கூடியது. ஒருநாள் அவன்
நான்கு வயது மகன் என்னைத் தேடி வந்தான். பசிக்கிறது என்றான். பிறகு அவன் என்னை விட்டுப்
போகவே இல்லை. அப்பா தான் என்னிடம் வந்து கூட வந்து நின்று கொள்ளச் சொன்னதாய் கூறினான்.
ஒரு மாதம் போல் கூடவே நின்றான். என் மகனுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் போவான். வருவான்.
சாப்பிட்டு தூங்குவான். வீட்டில் பலருக்கும் இது பிடிக்கவில்லை. என் மேல் சந்தேகப்பட
ஆரம்பித்தார்கள். அச்சிறுவனுக்கு வேறு கொஞ்சம் என் சாயல். எங்கே தேடியும் அவனை கண்ணில்
படவில்லை.
ஒருநாள் முழுபோதையில் தள்ளாடியபடி
வந்தான். சண்டையில் அவன் பற்கள் இரண்டு பெயர்ந்து போயிருந்தன. சட்டை கிழிந்து பரிதாபமாய்
இருந்தான். வீட்டுக்கு அழைத்துப் போய் குளிப்பாட்டி தூங்க வைத்தேன். அடுத்த நாள் அவனாகவே
தான் ஆரம்பித்தான். நகரில் ஒரு நகைக்கடையில் வேலை ஒன்று இருப்பதாயும் டெபாசிட் கட்ட
பணம் இருந்தால் சேர்ந்து விடலாம் என்றும் சொன்னான். வங்கியில் இருந்ததை புரட்டி கொடுத்தேன்.
கொஞ்ச நாட்கள் மீண்டும் அவனைக் காணவில்லை. கடையில் அவன் திருடி விட்டதாய் அவனை பிடித்து
வைத்திருப்பதாய் தகவல் வர போய் பார்த்தேன். குற்றுயிராய் கிடந்தான். அதற்கு மேல் போலீஸ்
அடி தாங்க முடியாது, செத்து விடுவேன் என்று அழுதான். வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்து
அவனை வெளியே அழைத்து வந்தேன். மொத்தமாய் எனக்கு ஐந்து லட்சம் செலவு. எப்படியாவது பணத்தை
திரும்பத் தந்து விடுவதாய் சத்தியம் செய்தான். நான் பொருட்படுத்தவில்லை.
அதன் பிறகு அவன் வாழ்வில் திடீரென
ஏறுமுகம் தான். என்னவெல்லாமோ நிழல் வேலைகள். பணம் தாராளமாய் புரண்டது. சதா ஜீப்பில்
எடுபிடிகளுடன் திரிவான். அவன் வீட்டுக்கு நான் போய் பார்த்த போது அவன் வேலையாய் இருப்பதாய்
சொன்னவர்கள் உள்ளே விடவில்லை. ஒரு பக்கம் வட்டி பெருகி அவனுக்காய் நான் வாங்கின ரெண்டு
லட்சம் ஐந்து லட்சமாக வளர்ந்திருந்தது. வீட்டில் பணமுடை. எனக்கும் உடல் நிலை மோசமாகி
வந்தது. செழிப்பாக இருக்கிறானே பணத்தை திரும்ப தரலாமே என்று தான் போய் கேட்டேன். அவன்
பதில் திமிர்த்தனமாய் இருந்தது. நான் பணம் தரவில்லை என ஒரேயடியாய் மறுத்தான். ஆட்களை
விட்டு என் கார் டயர்களை குத்தி கிழித்தான். கண்ணாடியை உடைத்தான். வீட்டுக்கு அவன்
ஆட்கள் அனுப்பி மிரட்டினான். அவனிடம் மோத வேண்டாம் என நண்பர்கள் என்னை அறிவுறுத்தினார்கள்.
அவனுக்கு பின்னால் சாராயக் கடை முதலாளிகள், குட்டி அரசியல்தலைவர்கள் என பல இருந்தார்கள்.
பிறகு அப்படியே பத்து வருடங்கள்
ஓடி விட்டன. மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் என் அம்மா செத்த போது கூட நான் அவனிடம்
கேட்டு போகவில்லை. அடிக்கடி ஆழ்நெஞ்சில் யாரோ கத்தியால் கிழிப்பது போல் ஒரு வலி ஏற்படும்.
அவனுடனான நட்பான தருணங்கள் நினைவுக்கு வரும் போதெல்லாம் தாங்க முடியாத கோபம் மூச்சு
முட்ட செய்யும். என்னுடைய ஒவ்வொரு தனிப்பட்ட தோல்விக்கும், இழப்புக்கும், பிரச்சனைக்கும்
அவனது துரோகமே காரணம் என தோன்றும். என் நசிவுக்கு அவனே முக்கிய காரணம் எனக்கு நினைப்பது
என சற்று ஆசுவாசமாய் இருந்திருக்கலாம்.
ஒருநாள் வைன் ஷாப்பில் வைத்து
எங்கள் இருவருக்கும் சண்டை மூண்டது. மூன்று நாட்கள் நடந்த அடி. தினமும் மூன்று சற்று
நேரம் நாங்கள் கட்டிப்பிடித்து உருண்டு பரஸ்பரம் தாக்குவதை பார்க்க ஊரே திரளும். பிறகு
தளர்ந்து பிரிவோம். மறுநாள் குறித்த நேரத்தில் கடையின் பின்புறம் உள்ள வெற்றிடத்திற்கு
வந்து விடுவோம். அங்கே அந்த மூன்று நாட்களும் டீ, நிலக்கடலை விற்பனை கூட நடந்தது. சண்டையை
வெளியே வைத்துக் கொள்வதற்காக கடை முதலாளி எங்களுக்கு முட்ட முட்ட சாராயம் இலவசமாய்
தந்தார். மூன்றாவது நாள் எனக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத நோவு ஏற்பட்டது. உட்கார்ந்தபடி
போன மூத்திரத்தில் ரத்தம் கசிந்தது. மயக்கம் போல் வந்தது. ஊரே அவன் என்னை வென்றது பற்றி
பேசிக் கொண்டது. நான் பிறகு அவனிடம் பேசிக் கொள்ளவில்லை. அவனும் என்னை பார்ப்பதை தவிர்த்தான்.
ஐந்து வருடங்கள் நாங்கள் கவனமாய் ஒருவரை ஒருவர் தவிர்த்தோம்.
பிறகு அவன் இறங்குமுகம் ஆரம்பித்தது.
ஒரு கொலை வழக்கில் போலீஸ் அவனை வேட்டையாடியது. சொத்துக்கள் காணாமல் போயின. இரண்டாவது
மனைவி ஓடிப் போனாள். உறவினர்கள் மிச்சசொச்ச பணத்தை பிரித்துக் கொண்டனர். அவன் திரும்பி
வந்த போது அவன் வீடு உட்பட அரை அங்குல இடம் கூட மீதம் இருக்கவில்லை. இதனிடையே என் குழந்தைக்கு
இதய அறுவை சிகிச்சைக்கு பணம் சேகரிக்க அலைந்து கொண்டிருந்தேன். அவன் ஒரு நண்பன் மூலமாய்
எனக்கு தேவையான தொகையை அனுப்பித் தந்தான். நான் வாங்கவில்லை. அதை வாங்கிக் கொண்டால்
அவன் செய்த பாவங்களுக்கான தண்டனை குறைந்து போகும் என நம்பினேன். அவன் இன்னும் இன்னும்
துன்பப்பட வேண்டும் என ஏங்கினேன். குழந்தை பறிபோகுமோ எனும் அச்சம் அவன் மீதான கடும்
குரோதமாய் உருமாறியது.
அதன் பிறகு அவனை பூங்காவில் கம்பளி
புதைந்து தூங்குகிறவனாக, இலக்கற்று மலையில் திரிகிறவனாக, கஞ்சா புகையில் கண்கள் மிதக்க
அலைகிறவாய் பல முறை பார்ப்பேன். ஊர் அவனை மறந்து விட்டது. அடுத்த தலைமுறையின் கண்ணுக்கு
அவன் ஒரு பொறுக்கி, பைத்தியம். தலை முழுக்க நரைத்து கன்னங்கள் குழிந்து கண்கள் பஞ்சடைந்து
மற்றொரு ஆளாக மாறி இருந்தான். என்னைப் பார்க்கும் போதெல்லாம் தொட்டில் குழந்தை போல
உதடுகள் குவித்து களங்கமற்று புன்னகைப்பான். அவன் கண்கள் இன்னும் பிரகாசமாய் துல்லியமாய்
புன்னகைக்கும். போய் அணைத்துக் கொள்ளலாம் போல் இருக்கும். ஆனால் விலகி நடப்பேன்.
அன்றைய இரவு துல்லியமாக நினைவிருக்கிறது.
சந்திரா உறங்கிக் கொண்டிருக்க அவள் முலைகளை சுவைத்துக் கொண்டிருந்தேன். கம்பளிக்குள்ளும்
லேசாய் நடுங்கியது. வெளியே காற்று மண்ணை வாரி இறைப்பது போன்ற சப்தம். மரங்கள் முறிவதற்கு
முன்பான கிறுகிறு முனகல் ஒலி. பழைய காற்றாடியின் நினைவுறுத்தல். சந்திரா சட்டென விழித்துக்
கொண்டாள். நான் அவளை படுக்கையோடு அழுத்த முயன்றும் உதறிக் கொண்டு எழுந்து நைட்டி அணிந்து
போர்வை சுற்றிக் கொண்டு போய் பக்கத்து அறையில் பாட்டி அருகில் தூங்கும் மகனை எட்டிப்
பார்த்து விட்டு வெளியே உள்ள கழிப்பறை நோக்கி இறங்கிப் போனாள். அப்போது கார் முகப்பொளி
பட்டு ஜன்னல் கண்ணாடிகள் மினுங்கின. திமிறும் மிருகம் போன்ற அதன் உறுமல் நிலைத்து கேட்டது.
எழுந்து உட்கார்ந்து பேண்ட் அணிந்தேன். சந்திராவுடன் ஐயாவின் வேலை ஆள் எதையோ விளக்கி
பேசிக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவள் மார்பு மேல் நிலைத்திருந்தது. அவசரமாய் எழுந்து
வெளியே போகவும் அவள் நான் உள்ளே இருப்பதாய் கூறவும் சரியாக இருந்தது.
என்னை அழைத்து தனியாய் சொன்னாள்
“ஏதோ பிரச்சனை போல. ஆனா என்னெண்ணு சொல்ல மாட்டேங்கான். நீங்க அவங்க என்ன சொன்னாலும்
ஒத்துக்கிட்டு மாட்டிக்காதீங்க. காலம் கெட்டுக் கெடக்கு”
நாம் முழித்தேன்.
“பாதியிலேயே என்ன விட்டு போகணுமுன்னு
வருத்தமா?”
அவள் இடுப்பில் கை வைத்த போது
தட்டி விட்டாள்.
“போய் வந்திட்டு நான் தூங்கினாலும்
எழுப்புங்க சரியா?”
தலையாட்டினேன்.
“ஆமா நான் தூங்கினாலும் கவலைப்படற
மூஞ்சிய பாரு”. கன்னத்தை கிள்ளி விட்டு கழிப்பறை நோக்கி நடந்தாள்.
ஐயாவின் பங்களா முகப்பில் ஒளியில்லை.
இருட்டில் அவர் கார் குற்றம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி போல் நின்றது. அருகில் போனது
கவிச்சி வாடை.
ஐயா சட்டை பொத்தான்கள் அவிழ்ந்து
மார்பு திறந்து வெறும் பர்முடாஸுடன் படுக்கையில் கால் பரப்பி இருந்தார். உடல் வியர்த்து
நீரில் முங்கின கோழி போல் தோன்றினார். ஒரு விபத்தாகி விட்டது, காரை கழுவ வேண்டும் என்று
மட்டும் பெரிய ஐயா சொன்னார்.
ஐயா இரண்டு பத்தாயிரம் ரூபாய்
கட்டுகளை என்னை நோக்கி தூக்கிப் போட்டார். “எடுத்துக் கோ. எவ்வளவு வேணும்னாலும் கேளு”
படுக்கை முழுக்க பணம் இறைந்து
கிடந்தது.
பிறகு அவர் தலையை தொங்க போட்டு
குழந்தை போல அழுதார். மூர்க்கமாய் படுக்கையில் குத்தினார்.
“வேணும்னே பண்ணலடா”
“தெரியுங்க ஐயா”
“ஒரு நிமிசம் ஸ்டெயிரிங்கில தூங்கிப்
போயிட்டேன். ஏன்னு தெரியாது. எப்படியோ தூங்கிட்டேன்”
“நீயும் நான் குடிச்சிட்டு ஏத்திட்டதா
நினைக்கியா?”
தலையாட்டினேன்.
நிம்மதியானார்.
“முதல்ல ஒரு நாய் மேல ஏத்திட்டேன்னு
தான் நெனச்சேன். சத்தமே வரலடா. ஒண்ணுமே தெரியல. ஆனா இறங்கிப் போய் பார்த்தா அப்படியே
டயரோட ஒட்டிப் போய் செதைஞ்சு…பாத்திக்கிட்டு இருக்கும் போதே ஒட்காந்து வாந்தி எடுத்திட்டேன்.
அந்தக் காட்சியை இப்ப நெனச்சாலும் வாந்தி வருது. ச்சே. அப்புறம் ஒரு சேலை என் காலில
மாட்டிக்கிச்சு அப்படித் தான் பொண்ணுன்னு தெரிஞ்சுகிட்டேன். ஆட்கள் வரதா தெரிஞ்சதும்
காரை எடுத்திட்டு வேகமா வந்திட்டேன்”
“ஏன் முதலாளி தனியா போனீங்க? நான்
இருந்திருந்தா இப்படி ஆக விட்டிருப்பேனா?”
“தலை வரை”
“போட்டும் முதலாளி நான் ஏத்துக்
கிடேன்”
“அதெல்லாம் வேணாண்டா. போய் கழுவிடு.
எங்கியாவது பதுக்கிடு. போன வாரமே தொலைஞ்சு போனதா புகார் கொடுத்திடறேன். பாத்துக்கிடலாம்”
எடுத்து வந்து வீட்டில் நிறுத்தி
விளக்கைப் போட்டு பார்த்தேன். டயரில் நீளமான தலை முட்டி இன்னும் மாட்டி இருந்தது. போனெட்
முழுக்க ரத்தமும் மூளைத்திசுக்களும் சிதறி ஒட்டிக் கிடந்தன. கழுவவே எனக்கு மூன்று மணிநேரத்துக்கு
மேல் பிடித்தது. அடிக்கடி காரின் உள்ளே பார்ப்பேன். அந்த பெண் உள்ளே தான் இருப்பதாய்
ஒரு பிரமை. முதலாளியிடம் ஒரு வேகத்தில் சொன்னாலும் இப்போது பழியை ஏற்பது நினைத்தால்
நடுங்கியது. முழுக்க கழுவித் துடைத்ததும் அந்த பெண்ணைக் கொன்றதும் நான் தான் எனத் தோன்ற
தொடங்கியது.
குளித்து விட்டு உள்ளே போய் படுத்துக் கொண்டதும்
சந்திரா என்னை இழுத்துக் கொண்டாள். நைட்டியை திறந்து மார்போடு வைத்து அழுத்திக் கொண்டு
கண் சொருகினாள். அவளிடம் நான் ஒரு கொலைக்கு காரணமாகி விட்டதாய் சொல்லி அழுதேன். திடுக்கிட்டு
எழுந்து முழுக்க கேட்டாள். என்னை சமாதானப்படுத்தி சற்று நேரம் தூங்க வைத்தாள்.
விடிகாலை மூன்றரை இருக்கும். நள்ளிரவு
போலத் தான் வெளியே இருந்தது. குறுகலான பாதைகளில் காரை ஓட்டிப் போவது அந்த வேளையில்
எனக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் அன்று ஸ்டியரிங்கில் கை நடுங்கியது. இரண்டு முறை
பாதையில் நின்று மரங்களில் லேசாய் மோதிக் கொண்டேன். பின்னால் ஏதோ வெளிச்சம் துரத்தி
வருவதாய் தோன்ற அடிக்கடி பிரேக் போட்டு ஏதாவது வண்டி வருகிறதா எனப் பார்த்தேன். இல்லை.
ஆனால் ஒரு வெளிச்சம். அது நான் வண்டியை எஸ்டேட்டில் கொண்டு போய் பதுக்கி விட்டு அங்கிருந்து
சைக்கிளை எடுத்து வீட்டு வந்து சேரும் வரை என் பின்னால் விடாமல் வந்தது.
மதியம் பன்னிரெண்டுக்கு இரண்டு
கான்ஸ்டிபிள்கள் வந்து என்னையும் சந்திராவையும் கூட்டிப் போனார்கள். நான் என் கிழிந்த
உதடுகளின் குருதியை நக்கிக் கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் இருந்தேன். வசைச்சொற்கள்
வேறு எவரையோ குறிப்பதாய் தோன்றியது. இன்ஸ்பெக்டர் அவளை அடிக்க தொடங்கிய போது உடனே கார்
இருக்கும் இடத்தைப் பற்றி கத்தி விட்டேன். நானே கூடப் போய் அடையாளம் காட்டினேன். கொலைப்
பழியை கூட ஏற்றுக் கொண்டு வாக்குமூலம் கொடுத்தேன். ஆனால் அதை பதிவு செய்ய இன்ஸ்பெக்டர்
மறுத்தார்.
இப்போது 12 வருடங்களுக்கு பிறகு
மீண்டும். ஐயாவிடம் இருந்து நின்று ஜீப் ஓட்டத் தொடங்கி இருந்தேன். லாரி உரிமம் வாங்கி
வைத்துக் கொண்டு அவ்வப்போது லோடு அடிக்கவும் போனேன். பிறகு ஐயாவை கைது செய்யப் போவதாய்
ஊரில் பேசிக் கொண்டார்கள். எனக்கு ஒரு இனம்புரியாத பயம். என்னையே கைது செய்யப் போவது
போல்.
என் கவனம் முழுக்க அவனில் இருந்தது.
வேலைக்கு போவதை கிட்டத்தட்ட நிறுத்தி இருந்தேன். அவன் போகிற இடங்களில் எல்லாம் போனேன்.
அவனது ஒரு நாளின் வேலைகள், அவனுக்கான நேரங்கள் அறிந்து மனதில் பதித்துக் கொண்டேன்.
சில நாட்கள் அவன் என்னைப் பார்த்துப் பேச்சுக் கொடுப்பான். நானும் பக்கத்தில் போய்
சிநேகமாய் உரையாடுவேன். அவன் சீட்டாடும் குழுவில் சேர்ந்து கொண்டேன். கஞ்சா வாங்கி
கூட இருந்து புகைப்பேன். நாங்கள் சேர்ந்து குடிப்பது தினசரி பழக்கமாயிற்று. ஆனால் அவனுடன்
பொதுவெளியில் தெரியப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். அவன் தனியாய் இருக்கும்
அந்த ஒரு பொழுதுக்காக காத்திருந்தேன். சில இரவுகளில் என் தோளில் சாய்ந்து எங்கள் பால்ய
கால கதைகளை நினைவுபடுத்தி அழுவான். என் கண்கள் சுற்றிலும் நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கும்.
அவன் தனியாக இருக்கும் போது இடம் சரியாக அமையாது. அல்லது எங்களை சேர்த்து யாராவது பார்த்திருப்பார்கள்.
வாகான இடங்களில் இருக்கும் போது அவன் போதையின்றி தெளிவாக இருப்பான். என் நோக்கம் என்ன
என எனக்கே தெரியவில்லை. ஆழ்மனம் தெளிவாக ஒரு திட்டம் தீட்டி என்னை வழிநடத்தியது. ஒரு
மிருகத்தை துரத்தி பதுங்கி பொறி வைத்து பிடிக்க முயலும் பரபரப்பின், எதிர்பார்ப்பின்
உவகை. ஆனால் அம்மிருகம் என் கண்ணை நேருக்கு நேர் பார்க்கையில் என்ன செய்யப் போகிறேனோ
தெரியாது.
ஒரு நாள் இருவரும் முழுபோதையில்
ஜீப்பில் சென்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளம் பார்த்ததும் நிறுத்தி ஒன்றுக்கு போனேன்.
அவனும் வந்து பக்கத்தில் குத்த வைத்தான். உட்கார முடியாதபடி தள்ளாடினான். எழுந்து அவனுக்கு
பின் ஒரு பெரிய நிழலுருவமாய் நின்றேன். பக்கத்தில் கிடந்த பாறாங்கற்கள் நிலவொளியில்
மினுங்கின. ஒன்றை காலால் நகர்த்த பார்த்தேன். தூக்க முடியுமா என யோசித்தேன். தன்னை
தூக்கி விடும்படி அவன் கேட்டு விட்டு அவனாகவே எழ முயன்று விழுந்து பள்ளம் நோக்கி உருண்டான்.
நான் பாய்ந்து அவனைத் தூக்கிப் பிடித்தேன். சட்டென மனம் குளிர்ந்தது. அவனை பத்திரமாய்
அழைத்து ஜீப்பில் ஏற்றி அறையில் கொண்டு போய் விட்டேன். அப்போது தான் எனக்குத் தோன்றியது.
அவனை மையமாக்கி நான் பின்னும் திட்டங்களும் குருதி மணம் கமழும் கற்பனையும் அளிக்கும்
உவகையை கைவிட நான் தயாரில்லை என. எனக்கு அவன் வேண்டும். தினமும் துரத்திச் செல்ல வேட்டை
மிருகம் இன்றி வேட்டைக்காரன் மட்டும் எதற்கு? அவன் இல்லாமல் ஆகும் மறுநொடி நானும் என்னை
கொன்று விடக் கூடும். நான் ஆதுரமாய் அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டேன். அவன் தூக்கத்தில்
சிரித்தான்.
கண்ணன் தான் வந்து அழைத்துப் போனான்.
பக்கத்து அறையில் அவனும் உறவுக்கார பையன்களுமாய் காசை எண்ணிக் கொண்டிருக்க நான் என்
முன்னிருந்த வெளிநாட்டு மதுவையும் வறுத்த முந்திரியையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சோபாவில் சாய்ந்து கொண்டு என் மகன் ஒரு சிக்கன் காலை பல கோணங்களில் ஆராய்ந்து கடித்துக்
கொண்டிருந்தான். அந்த ஐந்து நட்சத்திர விடுதி அறை எங்கள் வீட்டை விட பெரிதாய் இருப்பதை
எண்ணி வியந்து கொண்டிருந்தேன். செட்டில்மெண்ட் விபரங்களை வக்கீல் என்னிடம் ஒப்பிப்பது
காதில் விழவில்லை. மனம் நிலைகொள்ளாமல் வேறெதுவோ யோசித்துக் கொண்டிருந்தது.
வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கும்
போது சொன்னார்: “ஆனாலும் நீ ரொம்பவே அதிர்ஷடசாலிப்பா. இந்த மாதிரி ஒரு தொகை. நீ ஆயுசு
முழுக்க உழைச்சாலும் சம்பாரிக்க ஒக்குமா? வெறும் அஞ்சே வருசம் தான். அதுவும் நன்னடத்தை
அது இதுன்னெல்லாம் பார்த்து போக ரெண்டு வருசத்தில் வெளியே வந்திருவ. வந்தா நீ லட்சாதிபதி.
உட்கார்ந்த இடத்தில வட்டியை வாங்கி சாப்பிடலாம். என்ன சொல்றே? உனக்கு முன்னே அந்த பார்ட்டிங்களே
ஒப்புகிட்டிருந்தாங்கன்னா உனக்கு இந்த செட்டிமெண்ட் கிடைச்சிருக்குமா சொல்லு. அதான்
சொன்னேன் உனக்கு எங்கியோ மச்சம்”
அதிர்ஷ்டம் என்ற சொல் எனக்குள்
மீள மீள ஒலித்தது. நான் பதிலே சொல்லாமல் சுவரை வெறித்து பார்த்து உட்கார்ந்திருந்தேன்.
கண்ணன் வந்து அழைக்கும் வரை அப்படியே இருந்தேன். போகும் நேரம் வக்கீல் அரை பாட்டிலை
காலி செய்து டிவியில் ஒரு குத்துபாடலை தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார். அவரிடம்
போகும் முன் கேட்டேன் “நான் இனி என்ன வேணும்னாலும் செய்யலாம் இல்லியா?”
“ஆமா இனி நீ ப்ரியா போகலாம். நாளைக்கு
காலையில நானே உன்ன அழைச்சிட்டு போக வரேன். இனி ஒரு கவலையும் இல்ல. எல்லாம் செட்டில்ட்”
என் வாழ்நாளில் அப்படி ஒரு குளிரை
உணர்ந்ததில்லை. காற்று ஒரு ஐஸ்கட்டியை போல் ஈரமாய் வழுவழுத்தது. இலைநுனிகளில் ஐஸ் நீர்
சொட்டியது. பாதையில் அங்கங்கே மூடுபனி உரித்த கோழியின் வயிற்றைப் போல் திறந்து என்னை
உள்வாங்கியது. நுழைந்த பின் சுற்றிலும் மூடிக் கொண்டது. எங்கே இருக்கிறேன் எனும் திகைப்பு.
சாலையில் வளைந்து வளைந்து மனம் போன படி திரும்பி
ஓட்டிக் கொண்டிருந்தேன். தொலைவில் ஏதோ ஒரு பறவையின் அழைப்பு. பனிக்கு அப்பால் தனியாக
மற்றொரு உலகில் இருந்து அக்குரல் என்னை அழைத்தது. அக்குரலின் தனிமை என்னை தொந்தரவு
பண்ணியது. வண்டியை நிறுத்தி குட்டைச்சுவர்களைத் தொட்டபடி நடந்தேன். கீழே பள்ளத்தாக்கு
ஆழம் புலப்படாதபடி புகையில் ஆழ்ந்து தெரிந்தது. புதர்களைக் கடந்து கால் வைத்தால் அந்த
புகைப்பரப்பில் நடந்து கடந்து விடலாம் போல. பள்ளத்தாக்கு அடித்து வீழ்த்தப்பட்ட ஒரு
பிரம்மாண்ட மிருகம் போல் மல்லாந்து கிடந்தது.
தொலைவில் உயர்ந்த பெரும் மரங்களின்
பின்னிருந்து ஒளி பீறிட்டு என் விழிப்பரப்பை தொட்டு விலகியது. அதிர்ந்து பின்னே சென்று
சுதாரித்து நின்றேன். நடக்க நடக்க அது என் பின்னால் வந்து தொட்டு கண்ணாமூச்சி ஆடியது.
தொலைவில் யாரோ வரும் காலடி ஓசை. கேட்டுக் கொண்டே இருந்தது ஒழிய யாரையும் காணவில்லை.
நிலவொளியில் பனிப்புகை மின்னி கண்ணை கூச வைத்தது. கண்ணை சுருக்கி பார்த்தேன். பனித்திரைக்கு
அப்பாலிருந்து யாரோ வருகிறார்கள். அவர் ஒருபோதும் இங்கு வர முடியாது. நான் இங்கே வெளிவராமல்
தனித்திருக்கிறேன் என நினைத்தேன்.
காலடிகள் மத்திய கடந்த ஒருவருடையதாக இருக்க வேண்டும்.
ஆழமாய் பதிந்து கனம் தாளாமல் சமநிலை இழந்து தத்தளிக்கும் நடை. போதையில் நடப்பவராக இருக்கலாம்.
சற்று நேரத்தில் அவ்வோசை என் தனிமைக்கு ஆசுவாசமான துணையானது. அதன் தோற்றுவாயை தேடுவதை
நிறுத்தி அந்த ஓசையுடனே நீண்ட நேரம் அங்கே இருந்தேன். அதனை நோக்கி உரக்கக் கூவினேன்.
வானின் இருள் பாளத்தில் பட்டு எதிரொலித்தது. என் குரலும் இந்த பனியின் சுவரைத் தாண்டி
போக முடியாது. நாங்கள் மூவர் அப்போது அங்கிருக்கிறோம்.
ஜீப்பில் ஏறி சற்று தூரம் ஓட்டினேன்.
நிறுத்தும் போதெல்லாம் காலடி ஓசை வெகு அருகே கேட்டது. பிறகு நான்காவதாய் அங்கு ஒருவர்
வருவதைப் பார்த்தேன். கம்பளியின் கறுப்பும், தலைக்கட்டும் தனியாய் பனிப்புகையின் மத்தியில்
மிதந்து வருவது போல் தோன்றியது. அவன் தோள் நிமிர்த்தி கால்களை அகட்டி வைத்து நடந்து
வந்தான். என்னைப் பார்த்ததும் சில அடிகள் தொலைவிலேயே நின்று கொண்டான். முகம் சுருங்க
புன்னகைத்தான். கையசைத்தான். அருகே சென்று அவனை ஏற்றிக் கொண்டேன்.
“ஒன்ன எங்கியெல்லாம் தேடினேன் தெரியுமா?”
அவனிடம் இருந்து மோசமான மதுவின்
புளித்த வாடை. இருமினான். எதற்கு என்னைத் தேடினான் எனச் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.
சற்று தூரம் அமைதியாக ஓட்டினேன். வண்டியின் குலுங்கலில் இதமாய் உடல் குலுங்க அவன் கண்ணை
மூடித் தூங்கினான். இருமல் துவங்க எழுந்து கொண்டான். விடாமல் பத்து நிமிடம் இருமினான்.
நான் வண்டியை நிறுத்தி தண்ணீர் கொடுத்தேன். அதை குடித்து விட்டு இருக்கையில் சாய்ந்து
கொண்டான். “உள்ளே எல்லாம் காலியாயிடுச்சு. இப்போ இந்த கூடு மட்டும் தான் மிச்சம்” அவன்
தன் வயிற்றைக் காட்டி சொன்னான். மீண்டும் இருமினான்.
நான் தேடி ஒரு பீடி எடுத்து என்
உதட்டில் பொருத்தி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டு கொடுத்தேன். அவன் அதை வாங்கி
இரண்டு இழுப்பு இழுத்து விட்டு இறங்கி நடந்தான். ஓரமாய் கிடந்த எல்லைக்கல் மீது அமர்ந்தான்.
ஒரு பறவை குணுக் குணுக் என்றது. சிறுவர்களாய் இருக்கையில் நாங்கள் அந்த பறவையை தேடி
வேட்டையாடியிருக்கிறோம். ஒருநாள் எங்களுக்கு காட்டு முயல் கிடைத்தது. பிடித்து உரித்து
சுட்டு தின்று விட்டு, ஒரு காட்டுப் பெண்ணிடம் பேசி புதர் உள்ளே அழைத்துப் போய் முயங்கினோம்.
முதலில் அவன் போய் விட்டு என்னை அனுப்பினான். அவளை முத்தமிடாதே, வாயில் புண்ணுடைந்து
சீழ் என்றான். அதை நினைவுபடுத்திய போது அவன் ஒன்றும் சொல்லாமல் பள்ளத்தாக்கின் வெண்பரப்பையே
பார்த்தான். தன் கண்ணுக்கு அங்கே யாரோ தெரிவதாய் சுட்டிக் காட்டினான். நான் சென்று
பார்த்தால் யாரும் இல்லை. ஆனால் யாரோ தெரிவதாய் அவன் பிடிவாதமாய் இருந்தான். சுற்றுச்சுவருக்கு
கீழே பாறாங்கற்கள். பாறாங்கற்களைத் தொற்றியபடி யாரோ ஏற முயல்கிறார்கள் எனக் கூறினான்.
நான் குனிந்து கையை விட்டு அளாவினேன். வேர்கள் தட்டுப் பட்டன. பெண்ணின் தொடையை போல்
வெளுத்த, பூனை மயிர்கொண்ட தண்ணென்ற ஈர வேர்கள். ஒருவேளை விரலாக இருக்கும் என்றான் அவன்.
நான் அதற்கு மேல் அவனிடம் பேச வேண்டாம் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு சிகரெட் கேட்டான். தன் மடியை
துழாவி கஞ்சா பொட்டலம் எடுத்தான். திறந்து கல் மீது வைத்து பரப்பினான். சுத்தம் செய்தான்.
சிகரெட்டை காலி செய்து அதில் நிரப்பினான். பற்ற வைத்தான். சட்டென எனக்கு சுற்றிலும்
அடர்த்தியான இருள் படர்ந்ததாக தோன்றியது. அவன் என் கண்ணில் இருந்து மறைந்தான். சிகரெட்
கனல் மட்டும் மெல்ல மேலும் கீழுமாய் அசைந்தபடி என்னை கண்காணித்தது. நான் எங்கு திரும்பினாலும்,
தள்ளி அகன்று நின்றாலும், கால்களை மாற்றி வைத்தாலும் அது என்னைத் தொடர்ந்து உன்னிப்பாய்
கவனித்தது.
மேகங்கள் நீங்க மீண்டும் முழுநிலா
வெளிப்பட்டது. அவன் புகையை விழுங்கி கண் சொருகினான். எனக்கு நீட்டினான். மறுத்தேன்.
அன்று எனக்கு அந்த விடுபடல் தேவையிருக்கவில்லை. ஏற்கனவே விடுபட்டிருந்தேன். அவன் ஏதோ
நினைவுக்கு வந்தது போல் பரபரப்பானான். தன் மடியைத் துழாவி ஒரு காகிதக் கட்டை எடுத்து
நீட்டினான்.
“பத்தாயிரம் இருக்கு. ஏதோ இப்போதைக்கு
என்னால ஆனது. சீக்கிரமா கொஞ்ச கொஞ்சமா உன் கிட்ட வாங்கினதை கொடுத்து தீத்திடுறேன்.
தீர்க்கமுடியாத அளவுக்கு உனக்கு பாவம் பண்ணியிருக்கேன். இதை நீ கண்டிப்பா வாங்கிக்கணும்.
உயிர் இருக்குமுன்னா உன் கடனை அடச்சிடுவேன். நான் வேற என்ன பண்ணனும் சொல்லு?”
நான் அதை வாங்கி மடியில் சொருகிக்
கொண்டேன். அவன் மீண்டும் கஞ்சா இழுத்து தலை கழுத்தோடு சரிந்திட கண் மூடினான். அப்படியே
சில நிமிடங்கள். அசைவே இல்லை. மெல்ல இருமினான். கண்ணைத் திறக்கவில்லை.
நான் சில அடிகள் நடந்தேன். பிறகு
திரும்பி அவனைப் பார்த்தேன். இடைவெளியை கணித்தேன். எதிர்பாராத வேகத்தில் ஓங்கி உதைத்தேன்.
அவன் முறிந்த கிளையைப் போல உருண்டு சென்றான். ஓரிரு முறை பாறைகளில் மோதும் ஒலி கேட்டது.
ஆனால் எந்த ஓலமோ அலறலோ இல்லை. பள்ளத்தாக்கில் இந்நேரம் அவன் மறைந்திருந்தான். மோதின
வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் தலை சிதைந்து அடையாளம் காண முடியாத படி தான் உடல்
கிடைக்கும். வெண்மையில் ஒரு சிவப்பு புள்ளி போல, வெள்ளை நெற்றியில் குங்குமப் பொட்டு
போல எங்கோ விழுந்து கிடப்பான் எனத் தோன்றியது.
நன்றி: ஜூன் 2015 அம்ருதா
நன்றி: ஜூன் 2015 அம்ருதா