இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள
எஸ்.செந்தில்குமாரின் “புத்தன் சொல்லாத பதில்” நான் படித்துள்ள சிறந்த சிறுகதைகளில்
ஒன்று. தன் வீட்டில் தங்க வரும் புத்தருக்கு தெரியாத்தனமாய் விஷ உணவை படைத்து அவர்
மரணத்துக்கு காரணமாகும் ஒரு அப்பா மற்றும் அவரது கர்ப்பிணி மகளின் கதை இது. தம் கையால்
புத்தருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என குற்றவுணர்வு கொள்கிறார்கள். ஆனாலும் தன்னை
விஷக்காளான் பறித்து சமைக்க செய்தது ஊழ் தான் என அந்த அப்பாவுக்கு தோன்றியபடி இருக்கிறது.
ஏன் இப்படியான மகாபாவத்தை செய்யும் படி ஊழ் தன்னை தூண்டியது என அவருக்கு புரியவில்லை.
இது தான் இக்கதையில் சுவாரஸ்யமான அம்சம். ஒரு ஐரோப்பிய
கதையில் என்றால் இந்த குற்றவுணர்வு அவர்களை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருந்திருக்கும்.
ஆனால் இந்திய மனம் சுலபமாய் விதி எனும் கதையாடல் மூலம் குற்றத்தில் இருந்து கடந்து
சென்று விடுகிறது.
ஊரில் இருந்தால் ஆபத்து என இருவரும்
வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு திருடன் அடைக்கலம் அளிக்கிறான். அவன் மனதளவில்
முதிர்ச்சியான மனிதன். புத்தரின் மரணத்துக்கு இவர்கள் காரணம் என அறிந்ததும் அவன் புத்தரின்
சீடர்கள் மற்றும் பிற ஊர்க்காரர்களைப் போல் அவர்களிடத்து கோபம் கொள்ளவில்லை. புத்தர்
என்பவர் ஒரு மனிதர் அல்ல, அவர் எளிதில் மரணத்துடன் முடிந்து போகும் இருப்பல்ல எனும்
உணர்வு அவனுக்கு இருக்கிறது. அவன் அவர்களை தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறான். அவனது
சகோதரனுக்கும் அவனுக்கும் ஒரே பெண் தான் மனைவி. கர்ப்பிணியான அவள் குழந்தை பெறுகிறாள்.
புத்தரின் மரணத்துக்கு காரணமான பெண் அக்குழந்தைக்கு கௌதம புத்தன் என பெயர் வைக்கிறாள்.
அடுத்து அவளுக்கு குழந்தை பிறக்க அதற்கு யசோதரை என
பெயர் சூட்டுகிறாள். இரு குழந்தைகளிடமும் புத்தரின் சாயல் உள்ளது. திருடன் தானும் தன்
சகோதரனுமாய் புத்தரிடம் திருட சென்ற கதையை சொல்கிறான். திருட்டின் போது இருவரும் புத்தரிடம்
பிடிபடுகிறார்கள். புத்தரிடம் அவன் ஒரு கேள்வி கேட்கிறான்: “உங்களைத் தேடி ஏன் உங்கள்
குழந்தைகள் வரவில்லை?”. அதற்கு பதிலளிக்காத புத்தர் புன்னகைக்கிறார். அடுத்து இரு குழந்தைகளையும்
காண்பதற்காய் புத்தரின் முதன்மை சீடன் ஒருவன் வருகிறான். பிறந்துள்ள குழந்தைகள் புத்தரின்
பிள்ளைகள் என்றும் அவர்களை தான் காண வேண்டும் என்றும் வேண்டுகிறான். பிறகு புத்தரின்
மரணத்துக்கு காரணமான அந்த தகப்பன் இந்த சீடரின் பின்னால் சென்று விடுகிறான். அவரது
பெண் ”எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்க அவர் சொல்கிறார் “நான் கௌதம புத்தனின் பின்னால்
போகிறேன்”.
இக்கதை பௌத்தம் பேசும் விதிக்
கோட்பாடு பற்றின புரிதலை தருகிறது. ஒரு மனிதன் தன் செயல்களின் விளைவுக்கேற்ப மீண்டும்
மீண்டும் பிறந்தபடி இருக்கிறான். இது நடைமுறையில் எப்படி சாத்தியம்? உடல் எனும் அணுக்களின்
கூட்டிணைவு நம் மரணத்துடன் நின்று போகிறது. அழுகி மண்ணோடு மண்ணாகிறது. அதன் பிறகு வாழ்க்கை
இல்லையே?
எம்.ஸி.ஸியில் முதுகலை படிக்கையில் எங்களுக்கு செரியன் குரியன் எனும் ஒரு
பேராசிரியர் இருந்தார். அவர் ஒரு மார்க்ஸியவாதி. அவர் இக்கோட்பாட்டை பற்றிச் சொல்லும்
போது மறுபிறவி என்பது மரணத்துக்கு பிறகு நிகழ்வது அல்ல, அது உளவியல்ரீதியான மறுபிறவி
என்பார். மனிதன் தன் செயல்களின் விளைவாக தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறான். சரி
அப்படி என்றாலும், அவன் மரணத்தோடு பிறவிச் சங்கிலி முடிந்து போக வேண்டுமே? இக்கேள்விக்கு
செரியன் குரியன் பதில் ஏதும் தரவில்லை.
சில வருடங்களுக்கு பிறகு பின்
அமைப்பியல் சார்ந்து வாசிக்கையில் எனக்கு இதற்கு விடை கிடைத்தது. மனித மனம் என்பது
உடம்புக்குள், மூளைக்குள் இல்லை. அது மொழியில் இருக்கிறது. மொழி தொடர்ந்து நம் மனங்களை
உற்பத்தி பண்ணியபடியே இருக்கிறது. என் எண்ணம் உங்களுக்குள் புகுந்து உங்கள் எண்ணமாகிறது.
உங்கள் சலனங்கள் எனக்குள் புகுந்து ஒரு அலையாக உருவெடுக்கிறது. என்னோடு நீங்கள் பகைமை
பாராட்டும் போது என்னுடைய எதிர்வினை என்னை உங்கள் பகைவனாகவோ நண்பனாகவோ ஆக்குகிறது.
ஒரு அழகான பெண்ணருகே இருக்கையில், வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருக்கையில், போர்ச்சூழலில்,
கடும் வறுமையில், செல்வசெழிப்பில் இருக்கையில் அதற்கேற்றபடி மொழி பரிவர்த்தனைகள் மாறுகின்றன.
இந்த பரிவர்த்தனைகள் நம் மனத்தை, நம்மை கட்டமைக்கின்றன. ஒவ்வொரு சூழலிலும், உறவாடலிலும்,
பேச்சிலும், வாசிப்பிலும் நாம் புதிது புதிதாய் பிறவி எடுக்கிறோம்.
இப்படி ஒரு நீண்ட சங்கிலியாய்
நம் பிறவிகள் இந்த ஒரே பௌதிக வாழ்வில் தொடர்கின்றன. இப்பிறவிச் சங்கிலியை முறியடித்து
புத்தனாவதற்கு எதிர்வினைகள் மற்றும் மொழிபரிவர்த்தனைகள் மூலம் நம் மனம் மாறுவதை தடுக்க
வேண்டும் (அதாவது மொழியுடன் இருக்கையில் மனம் அமைதியாக வேண்டும்; எதிர்வினையாற்றக்
கூடாது) என புத்தர் கருதினார். ஆனால் புத்தராலே கூட அது சாத்தியப்படவில்லை என பௌத்த
தொன்மங்கள் கூறுகின்றன. ஒரே பிறவியில் அவரால் புத்தராக இயலவில்லை. அஞ்ஞானமும் இப்பிறவியின்
சிக்கல்களூம் அவரை துரத்தியபடித் தான் இருந்தன.
அவர் ஒரே புத்தர் அல்ல. புத்தர்
மீள மீள பிறந்து இறந்த ஒரு மனிதர். அல்லது அவ்வாறு வாழ்ந்த பல மனிதர்களை ஒற்றை அடையாளத்தின்
கீழ் தொகுக்கும் பெயரே புத்தர்.
இந்த உண்மை தான் புத்தரின் கொலைப்பழியில்
இருந்து அந்த அப்பாவையும் மகளையும் காப்பாற்றுகிறது. அந்த அப்பா தன் குற்றவுணர்வில்
இருந்து விடுபடும் தருணம் அபாரமானது. புத்தனின் சீடர் என வருகிறவர் தன்னை புத்தர் எனக்
கோருவதில்லை. ஆனால் அவரே புத்தர் என இவர் கண்டுகொள்கிறார். எப்படி? புத்தர் என்பது
ஒரு மனநிலையே மனிதர் அல்ல என புரிந்து கொள்கிறார். யாரும் புத்தராக இருக்கலாம் எனும்
போது புத்தர் எப்படி மரிக்க இயலும்? தன் குழந்தைகளை காணும் பொருட்டு புத்தரே மரணித்து
பின் திருடர்கள் மற்றும் தன் மரணத்துக்கு காரணமானோரின் குழந்தைகளாய் தோன்றி அவர்களைப்
பார்க்க தன் சீடன் வடிவில் வருகிறார் என்றும் புரிந்து கொள்ள முடியும்.
இது போன்ற ஒரு கதையை எழுதுவதற்கு
நம் பண்பாடு, தத்துவ மரபு பற்றி ஒரு ஆழமான புரிதலும் கவித்துவமான மன எழுச்சியும் வேண்டும்.
எஸ்.செந்தில்குமார் ஒரு மேலான படைப்பு நிலையில் நின்று இக்கதையை எழுதி இருக்கிறார்.
மொழி அளவில் எஸ்.ராமகிருஷ்ணனின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் அவர் விடுபட்டிருக்கிறார்
என்பதும் மகிழ்ச்சியான விசயம்.