”எங் கதெ” நாவல் பெற்ற பரவலான
கவனத்துக்கு காரணம் என்ன? அது சிறிய நாவல் என்பதா?
ஒரு கதையை சுருக்கமாக எழுதுவது
ரொம்ப ரொம்ப கடினம். குறிப்பாக நாவலில் இது ஒரு குரங்கு தன் வாலை தொங்க விடாது கிளையில்
உட்காருவது போன்று சிரமமானது. பக்க அளவுக்கும் பரவலான கவனத்துக்கும் ஒரு சிறு தொடர்பு
உள்ளது. ஆனால் பரபரப்பான ஒரு துப்பறியும் நாவலை நானூறு பக்கங்களில் சொன்னாலும் படிப்பார்கள்.
அதே போல இலக்கிய நாவல்கள் இயல்பில் வாசிக்க சவாலானவை. கடுமையான உத்தியையெல்லாம் சொல்லவில்லை.
நீண்ட நேரம் எடுத்து சிக்கலான கசப்பான உணர்வுகளை கடந்து செல்வது நம் சமநிலையை சற்றே
சிதறடிக்கக் கூடியது. எந்த இலக்கிய நாவலும் உங்களை புத்துணர்வடைய வைக்காது. குழப்பமும்
ஆழ்ந்த துக்கமும் அளிக்கும். இதையெல்லாம் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதனாலே இலக்கிய
நாவல்கள் உடனடியாய் கவனம் பெற்று ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்படுவதில்லை. ஒரு இலக்கிய
நாவல் போதுமான வாசகர்களை அடைய பத்தில் இருந்து ஐம்பது வருடங்கள் கூட ஆகலாம். ஆனால்
இதற்கு விதிவிலக்கு உண்டு.
நான் குறிப்பிட்ட இதே சிக்கலான
வாழ்வனுபவத்தை மக்கள் மொழியில், நாடகீயமான தருணங்களுடன், உணர்ச்சிகரமான உரையாடல்களுடன்
ஒரு இலக்கிய நாவல் முன்வைக்க முடியும் என்பதற்கு “எங் கதெ” ஒரு நல்ல உதாரணம். அசோகமித்திரனின்
பல முக்கியமான கதைகளை மனதைத் தொடும் எளிய எதார்த்த கதைகளாய் கூட படிக்கலாம். எனக்குத்
தெரிந்து அசோகமித்திரன் தன்னை ஒரு இலக்கிய எழுத்தாளர் என காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
ஒரு கதைக்கு இலக்கிய ஜம்பங்கள் கூடாது என அவர் நினைக்கிறார். இமையமும் அப்படித் தான்.
அது அவரது வலிமை.
மனுஷ்யபுத்திரனிடம் பேசும் போது
இமையம் எவ்வாறு ஒரு கதையின் மிக உணர்ச்சிகரமான நாடகீயமான மோதல்களை மட்டும் தொகுத்து
நாவலாக்குகிறார் என குறிப்பிட்டார். அவர் நாவலில் சரளமான வாசிப்பை தடை செய்யும் விவரிப்புகள்
இருக்காது. “அவள் கண்கள் தளும்பின. அவன் கவனிக்கிறானா எனப் பார்த்தாள். அவன் இறுக்கமான
தோரணையில் இருந்தான். முகத்தின் இறுக்கம் தளராமல் அவளிடம் கண்களைத் துடைத்துக் கொள்ள
சொன்னான்” எனும் பத்தியை அவர் “கண்ணை துடை” என ஒரே வசனம் மூலம் கடந்து போய் விடுவார்.
இது போன்ற சுருக்கமான வசனங்களின் தாக்கம் காட்சிபூர்வ விவரிப்புக்கு இருக்காது. பொதுவாக
தமிழ் நவீன புனைவுகள் காட்சிபூர்வமானவை. உலகம் முழுக்க அப்படித் தான். இலக்கிய படைப்புகள்
என்றால் வண்டிவண்டியாய் விவரணைகள் குவிந்து கொண்டு போகும். அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இமையத்தினுடையது வேறுவகையான எழுத்து முறை.
“எங் கதெ” நம் இலக்கிய மரபில்
நீண்ட காலத்துக்கு பின்பு எழுதப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை. நான் இதைப் பற்றி
பலமுறை யோசித்திருக்கிறேன். ஏன் காதல் கதைகள் எழுதப்படுவதில்லை. இங்கு தான என்றில்லை.
ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கூடத் தான். உலக இலக்கியத்தில் இதற்கு முன்பு நான் படித்த
ஒரு முழுமையான காதல் கதை என்றால் முராகாமியின் “நார்வேஜிய வனம்”. இலக்கிய கதை என்றால்
தனிமனித துயரம், கசப்பு, வாதை, வரலாறு, குடும்பங்களின் பரம்பரைக் கதை, சமகால வாழ்வின்
சிக்கல்கள் என ஒரு வரைமுறையை உருவாக்கி விட்டோம். ஆனால் ஒரு எழுத்தாளன் தன்னை பாதிக்கிற
எதைப் பற்றியும் எழுதலாம். ரெண்டாயிரத்துக்கு பிறகு நாவலில் எல்லாரும் திடீரென வரலாற்றை
மீள் எழுதுவது, நாட்டார் வழக்காற்றியல், குடும்ப வரலாறு, ஊர், நகரங்களின் வரலாறு என
எழுதத் துவங்கினாரும். அப்போது நான் முழுக்க தனிமனித பிரச்சனைகளை பேசும் எழுபதுகள்
பாணியிலான நாவல் ஒன்றை எழுதினேன் – ”கால்கள்”. “எங் கதெயின்” சிறப்பு அது தன் காலத்தின்
போக்கைப் பற்றி கவலைப்படாமல் அதை மீறுவது தான். இதில் நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடம்
உள்ளது.
அவர் இந்நாவலை எப்படி எழுதினார்
எனும் கேள்விக்கு ஞாநியின் கேணிக் கூட்டத்தில் சமீபமாய் விடையளித்தார். ஒரு பெண்ணைப்
பார்ப்பதற்காய் பேருந்தில் நகரத்திற்கு போகிறார். வழியில் அவளுக்கு போன் செய்கிறார்.
அவள் “பிறகு வா. என்னுடன் இன்னொருவன் இருக்கிறான்” என சாதாரணமாய் சொல்கிறாள். இது அவர்
சற்றும் எதிர்பாராதது. அவளுடன் ஒரு தீவிரமான உறவு அவருக்கு இருந்திருக்க வேண்டும்.
அவரை இது காயப்படுத்துகிறது. அன்று முழுக்க நகரத்தில் இலக்கின்றி திரிகிறார். “நான்
இறங்கிய ஆற்றுக்கு மறுகரை இல்லை” எனும் வரி அவருக்குள் தோன்றுகிறது. அவ்வரி அவரை மொத்த
நாவலையும் எழுதத் தூண்டுகிறது.
இப்படியான ஒரு தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து நாவல்
எழுதுகையில் அவர் முதலில் தன்னை அந்த பிரதான பாத்திரத்தில் இருந்து துண்டிக்கிறார்.
ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்துக்கும் அதற்கான நியாயங்களையும் சூழல்களையும் அதற்கேற்ற
எதிர்வினைகளையும் அளிக்கிறார். ஒரு பிரச்சனைக்கு பல்வேறு நியாயங்களும் காரணங்களும்
இருப்பதை காட்டுகிறார். அதற்கு மேல் அவர் நாவலில் எதையும் செய்து சிக்கலாக்குவதோ விவாதிப்பதோ
இல்லை. பாலியல் சிக்கல்களில் மாட்டிக் கொள்பவர்களின் சூழல் என்னவாக இருக்கும், அவர்கள்
தம் பிரச்சனைகளை எப்படி நியாயப்படுத்துவார்கள் என அறியும் விருப்பமே இந்நாவலின் பிரதான
கவர்ச்சி.
”எங் கதெ” அசோகமித்திரனின் “பதினெட்டாவது
அட்சக்கோடு” போன்ற நாவல். ஆங்கிலத்தில் மினிமலிஸம் எனும் ஒரு எழுத்து பாணி உள்ளது.
ஹெமிங்வே, ரெய்மண்ட் கார்வர் போன்றோர் இதில் வித்தகர்கள். ஒரு பெரிய கதையை அதன் பிரம்மாண்டம்
குறையாமல் சுருக்கமாய் கூற இவர்களால் முடியும். இது மிக மிக பெரிய திறமை. ஆனால் நிறைய
நுணுக்கமான விவரணைகளுடன் பொறுமையாய் கதையை பல்வேறு முடிச்சுகளுடன் நகர்த்துவதும் பெரிய
திறமை தான். தல்ஸ்தாயில் துவங்கி நமது ஜெயமோகன் வரை இந்த காப்பிய பாணியை சேர்ந்தவர்கள்.
இரண்டுக்கும் அதற்கான அனுகூலங்கள் உள்ளன. பொதுவாக மினிமலிஸ்டுக்ள் தம் ஆளுமையின் நிழல்,
தனிப்பட்ட உணர்ச்சிகள், நம்பிக்கைகள் எழுத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.
அதற்காக அவர்கள் ஒரு கதையை பலதடவை அலுக்காமல் திருத்தி செதுக்கிக் கொண்டே போவார்கள்.
இமையம் இந்த மினிமலிஸ்டுகளில்
இருந்து ஒரு விசயத்தில் வேறுபடுகிறார். ஒரு தனியான வீட்டில் ஒரு பெண் குத்துப்பட்டு
கிடக்கிறாள். இக்காட்சியை எப்படி ஆரம்பிக்க? குத்துகிற காட்சியை விவரித்து துவங்கலாம்.
அல்லது அந்த இடத்தை, அதில் உள்ள மனநிலையை நுணுக்கமாய் விவரிக்கலாம். சில பத்திகளை இப்படி
நீட்டிய பின் அப்பெண் எப்படி குத்துப்பட்டு கிடக்கிறாள் எனச் சொல்லலாம். அடுத்து அவள்
மனதில் என்ன ஓடுகிறது எனச் சொல்லலாம். மார்க்வெஸ் என்றால் அவளது வாழ்க்கை வரலாற்றை
மொத்தமாய் ஒரே பத்தியில் முதலில் சொல்லி விடுவார். சுஜாதா ஒரே வரியில் சம்பவம், சூழல்
ஆகியவற்றை காட்சிபூர்வமாய் காட்டி விட்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதற்குள்
போவார். இமையம் இந்த ஆரம்ப கட்ட ஜரிகை தோரணங்களை நீக்கி விட்டு நேரடியாக வலியில் துடிக்கும்
அப்பெண்ணின் சொற்களோடு கதையை துவக்கி விடுவார். அது பெரும்பாலும் ஒரு வசையில் தான்
ஆரம்பிக்கும். இது நமது இயல்பான நாட்டார் கதை பாணி. இப்படித் தான் மக்கள் தம் கதைகளை
பரஸ்பரம் பகிர்கிறார்கள். ஒருவரிடம் எப்படி விபத்தில் கால் போனது எனக் கேட்டால் சம்பவம்
நடந்த நாள், இடம், அன்றைய தனது மனநிலை என்றெல்லாம் பிரஸ்தாபித்து துவங்க மாட்டார்.
சட்டென அன்றைய நிகழ்வின் போது தனக்கு என்ன தோன்றிற்று எனத் துவங்குவார். இமையத்தின்
கதைமொழி இவ்வாறு நம் இயல்புவாழ்வின் கதையாடலுக்கு ரொம்ப நெருக்கமாய் இருப்பதால் அவர்
சட்டென நம்மை கவர்கிறார். மிக மிக இயல்பான கதைசொல்லியாய் தோன்றுகிறார்.
ஒரு நாவல் மூலம் எதையும் நிறுவவோ
காட்டவோ முயலக் கூடாது என்பது இமையத்தின் கலை நம்பிக்கை. அவர் இவ்விசயத்தில் எஸ்.ரா,
ஜெயமோகன் போன்றோருடன் பெரிதும் வேறுபடுகிறார். வாழ்க்கையை ஒரு விவாதமாய் மாற்றி அதன்
பல்வேறு பரிமாணங்களை காட்டுவது நாவலின் நோக்கம். விவாதிக்கிற வேலையை நாவலாசிரியன் எடுத்துக்
கொள்வதுண்டு. உதாரணமாய் “போரும் அமைதியும்” நாவலில் ஒரு அத்தியாயம் முழுக்க தல்ஸ்தாய்
போர் பற்றின தனது கருத்தியலை கட்டுரை போல் எழுதுகிறார். தஸ்தாவஸ்கி ஒரு பாத்திரம் பற்றின
தன் கருத்துக்களை அடிக்கடி தயங்கமல் உள்புகுந்து சொல்லி விடுவார். புதுமைப்பித்தனின்
பாத்திரங்கள் அவரது சாட்டையடிக்கு தப்பிப்பதே இல்லை. எஸ்.ரா, ஜெயமோகனின் ஒவ்வொரு சொல்லிலும்
அவர்களின் ஆளுமையின் சாரம் உள்ளது. இமையம் இங்கு தான் வேறுபடுகிறார். அவரும் ஒரு வாழ்வியல்
விவாதத்தை தான் சித்தரிக்கிறார். ஆனால் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை காட்டி விட்டு
நிறுத்திக் கொள்கிறார். தன் கைரேகை படியக் கூடாது என கையுறை மாட்டி கவனமாய் கொலை செய்யும்
குற்றவாளியைப் போன்றவர் அவர்.
இந்த பாணியின் ஒரு அனுகூலம் வாசகன் சுலபமாய் கதைக்குள்
நுழைந்து எழுத்தாளனின் வழிநடத்தல் இன்றியே படிக்க முடியும் என்பது. “எங் கதெயை” ஒரு
எளிய காதல் கதையை படித்தவர்கள் பலர். படித்து விட்டு பலரும் அது தம் வாழ்க்கைக் கதையை
கூறுவதாய் தன்னிடம் கூறியதாய் இமையம் சொன்னார். மிக அரிதாய் தான் இலக்கிய நாவல்களில்
இது வாசகனுக்கு சாத்தியமாகும். நான் மட்டும் தான் அவ்வாறு அவரிடம் சொல்லவில்லை என்றார்.
“எழுத்தாளன் என்பதால் நீ திறமையாய் உன் அனுபவத்தை என்னிடம் இருந்து மறைக்கிறாய்” என்றார்.
ஆனால் உண்மை அதுவல்ல. எந்த நூலையும் உணர்ச்சிவசப்படாமல் சற்று விலகின மனநிலையில் படிப்பது
என் இயல்பு மற்றும் பயிற்சி. எனக்கு விநாயகத்துக்கு வருவது போன்ற சிக்கல்களில் ஒன்று
கூட நேர்ந்தது இல்லை. ஆனால் என்னைப் போன்றவர்களையும் இந்நாவல் ஈர்க்கிறது. அந்தளவுக்கு
அது தன்னை அகலத் திறந்து வைக்கிறது.