சித்தர்கள், மந்திர தந்திரம் பண்ணுபவர்கள்,
பில்லிசூனியக்காரர்கள் பற்றிய ஹிட்டான டிவி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. அதில்
சம்மந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவர் மந்திரம் மூலம் புற்றுநோய்
குணப்படுத்துபவராம். நிகழ்ச்சியில் அதற்கான ஆதாரங்கள் காட்டி இருக்கிறார். நிகழ்ச்சி
ஒளிபரப்பாகி சில மணிநேரங்களில் இடைவிடாத போன் அழைப்புகள். நூற்றுக்கணக்கான பேர் அவரது
தொடர்பு எண்ணை கேட்கிறார்கள். சில வாரங்களில் அவர் இன்னோவா கார், பல ஏக்கர் நிலம் வாங்கி
பணக்காரர் ஆகி விடுகிறார்.
இன்னொருவர் பில்லி சூனியம் எடுப்பவர்.
அவருக்கு நல்சாட்சியம் வழங்கியவர் தான் திருமணமாகாமல் தவித்து வந்ததாகவும் சாமியார்
தான் தன்னை காப்பாற்றினதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கும் நல்ல வேட்டை. ஆனால் அடுத்த
நாள் டிவி குழுவினரை அழைத்த ஒரு பெண் நிகழ்ச்சியில் சாட்சி சொன்னவர் தன் கணவர் என்றும்,
அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இப்போது பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் தன் பரிச்சயக்காரர்களும் உறவினர்களும் அழைத்து விசாரிக்க
பெருத்த அவமானமாகி விட்டதாகவும் புலம்பி இருக்கிறார்.
இன்னொரு சாமியார் இது போல் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி
விட்டவர். பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பது அவரது சிறப்பு. அவரிடம் குறைதீர்ப்பதற்காக
ஒரு பெண் 70000 கொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பின் சாமியாரை பிடிக்க முடியவில்லை.
அழைத்தார் சீடர் ஒருவர் “சாமி தீவிரமான பூஜையில் இருக்கிறார்” என்கிறாராம். இது போன்ற
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான இரவே நம் மக்கள் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி கார்
பிடித்து சென்று விடுகிறார்களாம்.
இதை மூடநம்பிக்கை என எளிதில் புறந்தள்ளுவதில்
பயனில்லை. நம் மக்களின் மன அமைப்பு அப்படி. சிறுவயதில் இருந்தே பல சடங்குகள், நம்பிக்கைகள்
ஊட்டப்பட்டு வளர்கிறோம். என் வீட்டில் ஒருமுறை களம் எழுதி மணிக்கணக்கில் ஒரு சாமியார்
பூஜை செய்ததை பார்த்த நினைவுண்டு. இத்தனைக்கும் என் அப்பா நாத்திகர். பெரியாரை பின்பற்றுபவர்
என்று சொல்லிக் கொள்பவர். இப்படி ஏமாறுகிறவர்கள் இயல்பில் ரொம்ப உஷாரானவர்கள். வேறு
விசயங்களில் இவர்களை ஏமாற்றி கால்காசு பிடுங்க முடியாது. ஆனால் மந்திரம் தந்திரம் பூஜை
நம்பிக்கை என்றால் தளர்ந்து விடுவார்கள். ஒரு பிரச்சனை என்று வந்தால் எளிதில் தீராது
என நமக்குத் தெரியும். நோயோ குடும்பச் சிக்கலோ வேறு மனவேதனைகளோ அதுவாகத் தான் சரியாகும்.
அப்போது பூஜை செய்து கொண்டால் சரியாகி விடும் என நம்ப மனம் ஏங்கும். உடனே நிச்சயம்
சரியாகாது என இதை செய்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு ஆறுதல் கிடைக்கும். கணவரிடம்
பிரச்சனை வந்து பிரிந்து வாழும் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் யாரிடம் இது பற்றி
விவாதித்தாலும் தீர்வு அமையாது. பெண்ணியவாதிகளும் வக்கீல்களூம் பிரிய வலியுறுத்துவார்கள்.
பெற்றோர்கள் பொறுத்துக் கொள் என்பார்கள். இரண்டும் தீவிர எதிர்நிலைகள். அப்போது அப்பெண்ணுக்கு
தேவை உறுதியாய் சரியாகி விடும் என நம்பிக்கை ஊட்டும் ஒரு சந்தர்ப்பம். அதை உருவாக்கி
அளிக்கும் ஒருவர். அந்த இடத்தை தான் பில்லியசூனியக்காரர்கள் நிரப்புவார்கள்.
இந்தியர்கள் இயல்பாகவே காரணகாரியம் கொண்டு எதுவும்
நடப்பதாய் நம்புவதில்லை. என்ன நடந்தாலும் தலையெழுத்து என நினைப்போம். என் பிள்ளை பிறக்கும்
முன்பே என் அம்மா காலெண்டரில் நட்சத்திரம் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
குழந்தைப்பேறின் போது என் மாமியார் மருத்துவரிடம் போய் நேரம் பற்றி விசாரித்தார். பிறக்கும்
முன்னரே எவ்வளவு கதையாடல்கள் நம்மைச் சுற்றி உருவாகின்றன?
நான் தர்க்கவாதி தான். அதற்காய்
வாழ்வின் எல்லா தருணங்களையும் காரணகாரியம் கொண்டு விளக்கலாம் என நினைக்கவில்லை. நான்
இவ்விசயத்தில் பிரமிளின் கட்சி. நமக்குத் தெரியாத புரியாத பல புதிர்கள் இவ்வுலகில்
உண்டு என அவர் சித்தர்கள், சாமியார்கள் பற்றின கட்டுரை ஒன்றில் அவர் சொல்கிறார். ஒருவேளை
இந்த சாமியார்களும் பில்லிசூனியக்காரர்களும் சொல்வதில் உண்மை இருக்கலாம். உறுதியாய்
தெரியாத எதையும் பின்பற்றக் கூடாது என்பது என் தரப்பு. அதனால் நான் இது போன்றவர்களிடம்
போக மாட்டேன். போகிறவர்க்ளை முழுக்க முட்டாள்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் இவர்கள்
ஏமாறும்படி நிறைய போலிகள் தான் நம் ஊரில் உலாவுகிறார்கள். ஒரு டிவி நிகழ்ச்சியில் தன்னைப்
பற்றி உயர்வாய் பொய் சாட்சி சொல்ல ஒருவரை ஏற்பாடு பண்ணுகிறார் என்றால் எப்படியான தில்லாலங்கடியாய்
இருப்பார்? இவர்களை விசாரித்து தண்டனை வழங்குவதற்கான கராறான சட்டங்களை இயற்ற வேண்டும்.
இந்த போலிகளை களையெடுத்தாலே பல குற்றங்கள் குறைந்து விடும். ஆனால் இதுவரை காவல்துறை
காவி அணிந்தவர்கள் விசயத்தில் மென்மையாகவே நடந்து வருகிறது. குற்றம் செய்வதற்கும் காவி,
அதிலிருந்து தப்பிப்பதற்கும் காவி. கலவரம் நடத்துவதற்கும் காவி, அதை வைத்து ஓட்டுவாங்கி
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் காவி. இந்தியாவில் இந்த நிறத்தை வைத்துக் கொண்டு ஒரு
கொலைகாரன் கூட உத்தமனாகி விடலாம்.