ஒரு நிருபர் சும்மா அவரை தொந்தரவு
செய்வதற்காய் போன் செய்யப் போவதில்லை. தமிழின் முக்கியமான இயக்குநர்கள் சிலரை யார்
வேண்டுமானாலும் நேரில் சந்திக்கலாம். பா.ரஞ்சித்தை சந்தித்த போது அவர் மிக மிக எளிமையான
மனிதராய் இருப்பதைக் கண்டேன். நாசரும் அவ்வாறான மனிதர் தான். நலன் குமாரசாமி “தலைவரே”
என்று அழைத்து தான் உரையாடுவார். ஸ்டாலின் போன்ற பெரும் தலைவர்கள் நேரில் மிக எளிமையாய்
இருக்கிறார்கள். தமிழில் உள்ள பல பெரும் கலைஞர்களும் அவ்வாறே. நீங்கள் நள்ளிரவில் கூட
சுந்தர ராமசாமியை அவர் வீட்டில் போய் பார்க்க முடிந்தது. சுஜாதாவை நான் ஒரு சூப்பர்
மார்க்கெட்டில் கண்டு பேசியிருக்கிறேன். கமலுக்கு இணையான அல்லது அவரை விட மேலான எழுத்து
கலைஞர்களான ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் போன்றோர் யாருடனும் சகஜமாய் உரையாடக்
கூடியவர்கள். சாரு சின்ன பையன்களின் தோளில் கையிட்டு ஜாலியாய் பேசக் கூடியவர். இங்கு
தம்மை பொதுமக்களில் இருந்து தனித்து காட்ட விரும்புகிறவர்கள் கதாநாயகர்கள் மட்டும்
தான். நடிகர்களில் பெரும்பாலானோரை மக்கள் வெளியே பார்த்தால் மொய்க்க போவதில்லை. ரஜினி
போன்று ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. பார்த்திபன் தினமும் கடற்கரையில் நடைபழக போவதை
பார்த்திருக்கிறேன். ஒருவர் கூட அவரிடம் சென்று பேசி பார்த்ததில்லை. ஒருவேளை ரஜினி
கூட தினமும் அங்கு நடைபழகினால் மக்கள் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள்.
ஆனால் ஒருவர் நட்சத்திரமாவதே தன்னை கவனமாய் மக்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதன் மூலம்
தானே. தன்னை எளிதில் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதும், ஒரு சாதாரண நிருபர் தன்னிடம்
நேரடியாய் பேச முடியும் என்பதும் கமலின் அகந்தையை சீண்டியிருக்க வேண்டும். அதனாலே அவர்
தன் பி.ஆர்.ஓவிடம் சொல்லி கண்டிக்கிறார். எண்ணை மாற்றுகிறார். குமுதத்தின் டைரக்டர்
அந்த எண்ணில் பேசுவது சிக்கலில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் ஒரு நிருபர் பேசும்
போது கமலுக்கு அது கௌரவக் குறைவாக படுகிறது.
கமலை கூட முழுக்க குற்றம் சொல்ல
முடியாது தான். தொடர்ந்து ரசிகர்களும் மீடியாவும் அவரை கொண்டாடி கொண்டாடி இரண்டு கொம்புகளை
மாட்டி விட்டார்கள். இனி கமலே நினைத்தாலும் கொம்பை அறுக்க முடியாது. ஏனென்றால் கொம்பு
இல்லாமல் தன் முகத்தை அவரால் இனி கற்பனையே பண்ண முடியாது.