இன்று சன் நியூஸ் விவாத மேடையில்
மாட்டுக்கறி தடை பற்றி விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நான் இது அடிப்படையில்
ஒரு சாதிய பிரச்சனை என்றேன். பா.ஜ.கவில் உள்ள பலருமே அசைவம் உண்பவர்கள். கணிசமான இந்துக்களும்
அசைவர்கள் தாம். கேரளா போன்ற மாநிலங்களில் மிக அதிகமாய் மாட்டுக்கறி உண்பவர்கள் இருக்கிறார்கள்.
ஹைதராபாதில் இஸ்லாமியர் நோன்பை முறிக்க உண்ணும் ஹலீம் எனும் மாட்டுக்கறி கலந்த உணவை
இஸ்லாமியரை விட பிராமணர்களும் இந்துக்களும் உண்பதாய் காஞ்சன்யா ஒரு பேட்டியில் சொல்கிறார்.
மாட்டுக்கறி பிராமணர்களுக்கு மட்டுமே ஒவ்வாமல் இருக்கிறது. ஜெயின்கள் இன்னொரு பக்கம்
அனைத்து வகை அசைவ உணவுகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த இரு மிகச்சிறுபான்மை சமூக
மக்களின் தேவைக்காக பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பண்பாட்டையும் அவமதிக்கிறது.
அது மட்டுமல்ல இஸ்லாமியர் மட்டுமே மாட்டுக்கறி உண்பதாய் ஒரு போலி பிரச்சாரத்தையும்
மேற்கொள்கிறது என்றேன்.
என்னைத் தொடர்ந்து இவ்வாதத்தை முன்னெடுத்த இஸ்லாமிய நண்பர்
ஒருவர் எப்படி முகலாய மன்னர்களின் காலத்திலும் அரசவையில் முக்கிய பதவிகளில் இருந்த
பிராமணர்கள் மாட்டுக்கறி தடையை தம் செல்வாக்கால் கொண்டு வந்தார்கள், இன்றும் எப்படி
நாட்டின் 3% பேரின் தனிப்பட்ட செண்டிமெண்ட் மிச்ச 97% மக்கள் மீது திணிக்கப்படுகிறது
என்றார். அதுவரை அமைதியாக பேசிய பா.ஜ.கவின் நாராயணன் பிராமணர்களைப் பற்றி விமர்சித்ததும்
கொந்தளித்து நீங்கள் ஒரு சமூகத்தை தாக்கினால் நாங்கள் இஸ்லாமியரையும் இனி நேரடியாய்
தாக்கி பேசுவோம் என மிரட்டினார். அதாவது தலித்துகள் மற்றும் பிற மத்திய சாதியினர் மீது
என்ன கேள்வி எழுந்தாலும் பா.ஜ.கவுக்கு பிரச்சனையில்லை. பிராமணர்கள் மீது ஒரு விரல்
சுட்டப்பட்டால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நாராயணன் ஒரு பக்கம் பசுமாட்டை
மட்டுமல்ல காளை மற்றும் எருமைகளை கொல்வதையும் தான் பாஜக எதிர்க்கிறது என்றார். நம்முடைய
அரசியலமைப்பு சட்டம் முதிய பசுமாடுகளை கொல்வதை அனுமதிக்கிறதே என்று கேட்டதற்கு இது
போன்ற சட்டங்களை மாநிலங்கள் தம் விருப்பப்படி உருவாக்கலாம் என்றார். 3% பேரின் செண்டிமெண்டுக்காய்
ஏன் வயதாகி பயனற்ற மாடுகளை கோசாலாக்களில் பாதுகாக்க வேண்டும் என அவர் விளக்கவில்லை.
பா.ஜ.கவுக்கு எந்த தெளிவான கொள்கையும் இல்லையும் என்பதும் இதில் தெளிவாகியது. பா.ஜ.கவுக்கு
எல்லா சமூகத்தினரின் ஓட்டும் ஆதரவும் வேண்டும். ஆனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டையும்
மொழியையும் மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள். அதை மிச்ச சமூகத்தினர் மீது திணிப்பார்கள்.
ஒரு மாநிலத்தில் மதத்தையும் வேறு ஒரு மாநிலத்தில் சாதியையும் வைத்து அரசியல் செய்வார்கள்.
படித்த மேல்தட்டினரிடம் நாங்கள் மதசார்பற்றவர்கள், பொருளாதார வளர்ச்சியே எங்கள் செயல்திட்டம்
என்று கூறி ஓட்டுக் கேட்பார்கள். இந்துத்துவாவை தம் கொள்கை என்று கூறும் பா.ஜ.கவின்
நாராயணன் இன்றைய நிகழ்ச்சியில் தம் கட்சி மதசார்பற்றது என்று வேறு கூறினார். தம் கொள்கையான
இந்துத்துவாவில் கூட உறுதி இல்லாமல் வெறும் சந்தர்ப்பவாதிகளாய் இருக்கிறார்கள்.