ராமநாதன் சிறுவயதில் இருந்தே நன்கு
யோகா பயின்ற துடிப்பான இளைஞன். அவனுக்கு குடும்ப வாழ்வின் தளைகளில் இருந்து விடுபட
வேண்டும். சமூக சேவை செய்ய வேண்டும். ஆன்மீக தேடலும் வேண்டும். இந்த விருப்பங்கள் அவனை
சிவானந்தர் எனும் சாமியாரின் ஆசிரமத்தில் கொண்டு சேர்க்கின்றன. அங்கு ஸ்வாமிகளின் கீழ்
அவன் யோகாவில் மேலும் நிபுணத்துவம் பெறுகிறான். நுணுக்கங்களை அறிகிறான். பரபரப்பாக
செயலாற்றுகிறான். யோகா கற்பித்தல், முதியவர்கள், பழங்குடியினருக்கு கல்வி கற்பித்தல்,
பெண்களை யோகா வகுப்பில் சேர்த்துக் கொள்வது, ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதன் முன்னேற்றத்திற்காக
உழைப்பது, மக்கள் மத்தியில் சுமூகமாக புழங்குவது என அவனது செயல்கள் ஆசிரமத்தின் மூத்தி
சன்னியாசிகளை எரிச்சலூட்டுகின்றன. அவர்கள் அவனைக் கண்டு பொறாமையும் படுகிறார்கள்.
எப்போதும் ஒரு புயலின் மையத்தில் இருக்க விரும்புகிற,
தன்னைச் சுற்றி மாற்றங்களை நிகழ்த்த விரும்புகிறவன் அவன். ஒரு நிறுவனத்தின் இறுக்கமான
விதிமுறைகளுக்குள் அவனால் முடங்கிப் போக முடிவதில்லை. சின்ன சின்ன விதிமுறை மீறல்கள்
செய்கிறான். இது ஆசிரமத்துக்குள் அவனுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணுகின்றன. சிவானந்த
ஸ்வாமிகளின் மரணத்திற்கு பிறகு அவன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ஒரு யோகா கல்வி நிலையம்
ஆரம்பிக்கிறான். இரண்டாண்டுகளில் இது ஒரு பெரும் ஆசிரமமாக வளர்கிறது.
ராமநாதன் நாவல் நெடுக நிறுவனங்களின் அதிகாரத்துக்கு
கட்டுப்படாமல் திணறக் கூடியவனாக இருக்கிறான். தனிமனிதனாக சமுக சேவை உள்ளிட்ட பணிகளை
செய்வதே நிறுவனத்தை வளர்க்க பாடுபடுவதை விட முக்கியம் என நினைக்கிறான். சிவானந்த ஆசிரமத்தின்
மற்றொரு முக்கிய நிர்வாகியான பிரபு ராமநாதனுக்கு நேர்மாறானவன். அவன் எளிதில் நிறுவனத்தின்
விதிகளுக்கும் மரபுக்கும் பணிந்து போகிறான். தன் ஈகோவை விட்டுக்கொடுத்து நிறுவனத்துக்குள்
ஒரு சின்ன சுதந்திரத்துடன் ஆசுவாசத்துடன் ஒரு குமாஸ்தா போல வாழ எத்தனிக்கிறான். ஆசிரமம்
செயல்படும் விதம் அவனுக்கு அதிருப்தி அளித்தாலும் அதை எதிர்க்காமல் ஒத்துப் போகிறான்.
ஆனால் ராமநாதனோ தனக்கு ஒவ்வாததை மறுத்து தன் போக்கில் வேலை செய்வான், தன் விருப்பப்படி
ஒரு புது நிறுவனத்தை தோற்றுவிக்கிறான். ஆனால் அவனது அம்ருதயோக ஆசிரமமும் சாந்தி யோக
ஆசிரமம் போன்றே போலித்தனங்களிலும் வணிக உத்திகளிலும் சென்று மாட்டிக் கொள்கிறது. ராமநாதன்
நாவல் முழுக்க எதையெல்லாம் எதிர்த்தானோ பின்னர் அதுவாகவே மாறிப் போகிறான்.
அவன் ஒரு ஸ்வாமிஜியாக மாறுகிறான். பக்தர்களுக்கு லிங்கமும் பூஜை புஷ்பமும்
அளிக்கிறான். ஆசிர்வதிக்கிறான். பணக்கார பக்தர்களுக்கு பிரம்மாண்ட அரங்கில் யோகா கற்பிக்கிறான்.
நன்கொடையில் நிறைய பணம் கறந்து தன் ஆசிரமத்தை வளர்க்கிறான். விவேகானந்தரைப் போன்று
கர்மயோகி ஆக விரும்பினவன் மற்றொரு போலி சாமியாராகிறான். இதை பிரபு கண்கூட கண்டு அதிர்ச்சி
அடைவது தான் நாவலின் திருப்பம். பிரபு காணும் ராமநாதன் முற்றிலும் மற்றொரு மனிதனாக
இருக்கிறான். எந்திரம் போல் பதில் அளிக்கிறான். ஒரு பிம்பத்துக்குள் மாட்டி இருக்கிறான்.
இந்த நகைமுரணை நோக்கித் தான் நாவலின் முன்னூற்று சொச்ச பக்கங்களும் பயணிக்கின்றன. ராமநாதன்
ஏன் இப்படி சுயமுரண்பாடு கொண்ட மனிதனாக, தனக்கு எதிரானவனாக மாறிப் போகிறான் என சித்தரிக்கிறது.
இந்நாவலின் மையக்கரு எப்படி நிறுவனங்களுக்கு
எதிராக போராடுகிறவர்களை நிறுவனம் தன் வயப்படுத்தி ஒரு நிறுவனமாகவே ஆக்குகிறது என்பது.
இதைப் பற்றி பிரஞ்சு தத்துவஞானி பூக்கோ விரிவாக எழுதி இருக்கிறார். தனிமனிதனுக்கும்
சமூகம் எனும் நிறுவனத்துக்குமான தொடர்ச்சியான மோதல் பற்றி தமிழில் விரிவாக சிந்தித்தவர்
சுந்தர ராமசாமி. உதாரணமாக அவரது “பல்லக்கு தூக்கிகள்” கதையில் சில உழைப்பாளிகள் சுமந்து
பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பல்லக்கு வரும். அப்பல்லக்கு அங்கு அதிகாரத்தின், நிறுவனத்தின்
குறியீடு. அவர்கள் அதிகாரத்தை பலவிதங்களில் எதிர்க்க பார்த்தாலும் அப்பல்லக்கு தூக்கப்படுவது
அவர்களின் தேவையாகவும் இருக்கும். ஒடுக்கப்பட்டவனும் ஒடுக்குகிறவனும் தன்னை அறியாமல்
பங்கேற்கிற ஒரு செயலாக ஒடுக்குமுறையை சுந்தர ராமசாமி சித்தரிப்பார். சுந்தர ராமசாமியின்
வழித்தோன்றலான ஜெயமோகனின் நாவல்கள் “ரப்பர்” மற்றும் “விஷ்ணுபுரம்” இதே கருவை வேறு
களங்களில் வைத்து விவாதித்தன. மற்றொரு வழித்தோன்றல் லஷ்மி மணிவண்ணனும் மீண்டும் மீண்டும்
அதிகார நிறுவனங்கள் பற்றியே எழுதுகிறார். அப்பா, மனநல மருத்துவமனை, வீடு ஆகியவை அவரது
படைப்புகளில் நிறுவனத்துக்கான குறியீடுகள் ஆகின்றன. சுந்தர ராமசாமிக்கு நெருக்கமானவராக
திகழ்ந்த, “காலச்சுவடில்” ஆசிரியராக பணி செய்த அரவிந்தன் இப்போது அதே கதைக்கருவை ஆன்மீக
தளத்தில் வைத்து பொருத்தி அதே விசாரணையை தான் தொடர்கிறார். சுந்தர ராமசாமியின் குரல்
தமிழில் தொடர்ந்து ஒலிக்கக் கூடியது.
இந்நாவலின் முக்கிய சிறப்பு மிகவும்
சரளமான தெளிவான மொழிநடை. “தர்க்கத்தின் சரங்களின் இடையே ஒளிந்து கொண்ட உண்மை” போன்ற
உருவக பிரயோகங்களில் சுந்தர ராமசாமி எட்டிப் பார்த்தாலும் பொதுவாக அரவிந்தன் யாருடைய
தாக்கமும் தென்படாது தான் எழுதுகிறார். கதையை அவர் தங்குதடையின்றி நகர்த்திப் போகும்
பாங்கு வியக்கத்தக்கது. இது உண்மையில் ஒரு முதல் நாவலுக்கான தத்தளிப்புகள், குழப்பங்கள்
ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது என்பது பாராட்டத்தக்கது. நாவலின் இறுதிக்கட்டத்தில்
போலி சாமியாராக மாறி விட்ட ராமநாதனை பிரபு பார்க்க வரும் இடத்தில் ராமநாதன் அவன் பெயரில்
அல்லாமல் “அவர்” என்றே இரண்டாம் நிலை சுட்டுப்பெயர் (second person pronoun) மூலம்
குறிப்பிடப்படுகிறார். சட்டென ராமநாதன் பாத்திரத்தின் அந்நியத்தன்மையை இந்த தொழில்நுட்பம்
நமக்கு நுணுக்கமாக உணர்த்தி விடுகிறது. இது போல் நாவலில் மேலும் சில நுணுக்கமான இடங்கள்
உள்ளன. இவை நாவலுக்கு ஒரு உருவமைதியை, அடங்கலான தொனியை அளிக்கின்றன. எங்குமே பிறழாமல்
பிசிறின்றி ஏசுதாஸ் கீழ்ஸ்தாயில் ஆலாபனை செய்வது போல் நாவல் பயணிக்கிறது.
இந்நாவலின் களம், இதில் கிட்டத்தட்ட
முடிவு வரை பேசப்படும் லட்சியவாத மன எழுச்சி ஆகியவை இதை தமிழின் சமகால நாவல்களின் வகைமையில்
எங்கு பொருத்துவது எனும் குழப்பத்தை ஏற்படுத்தும். இவர் யாரைப் போல் எழுதுகிறார் என
வியப்பீர்கள். ஏனென்றால் கடந்து பதினைந்து வருடங்களில் வேறெந்த நாவலின் கதைக்களனும்
இது போன்று இல்லை. இந்நாவலின் வேரைக் கண்டடைய நீங்கள் அகிலனின் “சித்திரப்பாவைக்கு”
செல்ல வேண்டும். “சித்திரப்பாவையின்” கதைக்களனும் கிட்டத்தட்ட இதே தான். அண்ணாமலை ராமநாதனைப்
போன்று லட்சியவாதம் மிகுந்த திறமைசாலி. அவனுக்கு குருவாக விளங்கும் கதிரேசன் இந்நாவலில்
வரும் சிவானந்த ஸ்வாமியைப் போன்றவர். பிரபு எதிர்நிலை பாத்திரம் இல்லையென்றாலும் அவன்
நடைமுறை சாமர்த்தியம் மிக்க மாணிக்கம் போன்ற பாத்திரம் தான். “சித்திரப்பாவையின்” ஆனந்தி
எனும் பேரழகி “பயணத்தில்” வரும் காயத்ரியை போன்ற ஒரு லட்சியப்பெண். ஓவியத்தை உபாசிக்கும்
அண்ணாமலையின் கண்முன் அவள் ஒரு நிஜ ஓவியம் போல் தோன்றுகிறாள். அவன் தடுமாறுகிறான்.
அவனைப் போன்றே ”பயணம்” நாவலில் ராமநாதனும் தடுமாறுகிறான். ஆனால் ஒப்பீடு இந்த அளவோடு
நிற்க வேண்டியது தான். அண்ணாமலையைப் போன்றே ராமநாதனும் தன் லட்சியவாதத்தை இந்த நடைமுறை
உலகில் சாத்தியப்படுத்த இயலாமல் திணறுகிறான். வீழ்த்தப்படுகிறான். அகிலனின் நாயகன்
மீண்டும் லட்சியப்பாதையிலே தொடர்கிறான். ஆனால் அரவிந்தனின் நாயகன் லட்சியத்தை விட லௌகீக
வெற்றி முக்கியம் எனும் முடிவுக்கு வருகிறான். தன்னை அறியாமலே நடைமுறை உலகின் போலித்தனங்களை
ஏற்றுக் கொண்டு சீரழிகிறான். இது நாம் இன்று வாழும் சமரச, சீரழிவு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பும்
தான். ”சித்திரப்பாவையின்” முழுக்க நவீனப்பட்ட, இலக்கிய நுட்பமுள்ள ஒரு மறு வடிவமாகவும்
நாம் “பயணத்தை” பார்க்கலாம்.
இந்நாவலை மற்றொரு மாறுபட்ட பார்வையில்
வாசிக்கவும் சாத்தியம் உள்ளது. ராமநாதனின் குருவான சிவானந்த ஸ்வாமியின் பாத்திரம் சுந்தர
ராமசாமியைப் வெகுவாக நினைவுபடுத்துகிறார். தீவிர இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் இக்குறிப்பு
ஒன்றை மட்டும் கொண்டு “பயணத்தை” ஒரு இலக்கிய வரலாற்று குறியீட்டு நாவலாக படிக்க முடியும்.
அக்கோணத்தில் இது அரவிந்தனின் சொந்த வாழ்க்கைப் பயணத்தை பூடகமாக பேசும் ஒரு நாவலும்
தான்.
(நன்றி: உயிர்மை, செப்டம்பர் 2015)
(நன்றி: உயிர்மை, செப்டம்பர் 2015)