ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையும் உணவுப்பண்பாடும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து வளர்கிறவை. தடை எனும் பெயரில் ஒரு உணவை ஒரு சமூகத்திடம் இருந்து பறிப்பது அபத்தம் இல்லையா என சுமதி கேட்டார். நான் முன்பு ஒருமுறை குற்றவியல் துறையில் ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்த போது அவரது அலமாரியில் தூசடைந்து கிடைந்த ஒரு நூலை உருவி புரட்டினேன். அது சுமதியின் முனைவர் பட்ட ஆய்வு. அது திருநெல்வேலி சாணார்கள் பற்றின சுவாரஸ்யமான விவாதங்கள் கொண்டது. அதன் பிறகு தான் அவர் சென்னை பல்கலையில் மானுடவியல் துறையில் உள்ளார் என அறிந்து கொண்டேன்.
இன்று அம்ருதராஜ் மற்றொரு நண்பரை
சந்தித்தேன். அவர் ஒரு கவிஞர் என்றும் பிரமிளின் நண்பர் என்றும் சொன்னார். “பிரமிள்
அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போடுவாரா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பிரமிள் ரொம்ப
இனிமையான மனிதர். ஆனால் யாரிடமாவது ரொம்ப நெருங்கி விட்டால், தான் அவர்களை ரொம்ப சார்ந்து
இருப்பதாய் அவருக்கு தோன்றினால் அவரால் அதை தாங்க முடியாது. வேண்டுமென்றே அவர்களை வன்மமாய்
தாக்கி பேசுவார். காயப்படுத்துவார். பிரிந்து போய் விடுவார். ஆனால் உள்ளுக்குள் நம்
மீது அன்புடனே இருப்பார். நம்மை திரும்ப சந்திக்க முனைவார். ஆனால் அதை வெளிப்படையாய்
காட்டிக் கொள்ள மாட்டார்”. எப்படி பிரமிள் அவரிடம் தான் எழுதிய கவிதையின் பல்வேறு திருத்தின
பிரதிகளை காட்டி விளக்குவார், தான் படிக்கிற, யோசிக்கிற விசயங்களை தயங்காமல் அழகாய்
பகிர்ந்து கொள்வார் எனக் கூறினார். ”பிரமிளுடன் இரண்டு வருடங்கள் இருந்தால் அவர் உங்களை
அவர் நிலைக்கு உயர்த்தி விடுவார். அந்தளவுக்கு மனத்தீவிரமும் முனைப்பும் கொண்டவர்”.
என்றார். பேராசிரியர்களின் கூட்டத்தில் இப்படி ஒரு சிறுபத்திரிகை கவிஞரை காண்பது விசித்திரமாய்
இருந்தது. இன்று நிறைய பேரை சந்தித்து உரையாடினேன். ஆனால் ஒருவர் பிரமிள் பற்றி பேசிய
சில நிமிடங்களில் இவர் நம் குடும்பத்து ஆள் எனும் அன்னியோன்யம் ஏற்பட்டது. மனம் கனிய
அவர் கைகளை பற்றிக் கொண்டேன்.