கோபி கிருஷ்ணன் தமிழ்ப் புனைவுலகில்
மிகவும் வித்தியாசமானவர். பிற எழுத்தாளர்களைப் போல விரிவான பிரச்சனைகள், பரந்துபட்ட
கதாபாத்திரங்களை தன் எழுத்துக்குள் கொண்டு வர அவர் கவலைப்பட்டதில்லை. அவருடைய உளவியல்
பிறழ்வு கொண்ட மனிதர்கள் மிகச் சின்ன உலகம். இப்புள்ளியில் நிலை கொண்டு நேர்த்தியான
சில கதைகளையும், மிகவும் சுவாரஸ்யமான ஒரு நாவலையும் (உள்ளிருந்து சில குரல்கள்) எழுதியிருக்கிறார்.
அவரை எதார்த்த / இயல்புவாத எழுத்தாளர் என்றும் வகைப்படுத்த முடியாது. புனைவும் அபுனைவும்
கலக்கிற ஒரு மெட்டாபிக்ஷன் பாணி எழுத்தை முயன்றிருக்கிறார். ”மகான்கள்”, “கடவுளின்
கடந்தகாலம்” போன்ற சிறுகதைகளிலும், “உள்ளிருந்து சில குரல்களிலும்” இதை அநாயசமாக செய்திருக்கிறார்.
கதைமொழியைப் பொறுத்தமட்டில் கோபி கிருஷ்ணன் சாரு நிவேதிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
இருவரும் பிறழ்வு கொண்ட உதிரி மனிதர்களில் அக்கறை கொண்டவர்கள். உரைநடையும் புனைவுகளும்
ஊடுபாவும் நடையை கொண்டவர்கள். மனதின் கசடுகளை காட்டுவது தான் இருவரும் நோக்கம். ஒரே
வித்தியாசம் சாருவிடம் உள்ள இகோடிசம் (தான் தான் எனும் அறைகூவல்) மற்றும் எலைட்டிசம்
கோபி கிருஷ்ணனிடம் இல்லை.
கோபி கிருஷ்ணனின் இன்னொரு முக்கியமான தனித்துவம் அவரது கதைகளின்
case study வடிவம். எனக்குத் தெரிந்து தமிழில் யாரும் இதை முயன்றதில்லை. பொதுவாக உளவியல்,
சமூகவியல் ஆய்வுகளில் மனிதர்களை பேட்டி கண்டு அதை சுருக்கமாய் ஒரு கதைவடிவில் ஆய்வறிக்கையில்
அளிப்பார்கள். இது தான் கேஸ் ஸ்டடி. இதில் எழுதுபவரின் தாக்கம் இன்றி மிகவும் புறவயமாக
இருக்க வேண்டும். கோபி கிருஷ்ணனின் ”உள்ளிருந்து சில குரல்கள்” முழுக்க உளவியல் நோயாளிகளின்
கேஸ் ஸ்டடிகளின் தொகுப்பு தான்.
(கோபி கிருஷ்ணனின் படைப்புகள்
பற்றி நான் எழுதிய கட்டுரையின் முதல் பத்தி இது. மிச்ச கட்டுரையை விரைவில் பிரசுரிக்கிறேன்)
கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பற்றி
ஒரு முக்கியமான விவாதம் இன்று மாலை 5:30க்கு வாசக சாலை அமைப்பு சார்பாய் நடக்கிறது.
கோபி கிருஷ்ணனின் சமகாலத்தவரான அழகிய சிங்கர் பேசுகிறார். இளங்கோ, தமிழ்ச்செல்வன்,
மனோஜ் ஆகியோரின் பேச்சுகளும் சிறப்பாய் இருக்கும். நான் நிச்சயம் செல்வேன். நீங்களும்
கலந்து கொள்ளுங்கள்.
