நிர்பயாவை கொன்றவர்களில் ஒருவரான
பதினெட்டு வயதுக்கு கீழான குற்றவாளி விடுதலை செய்யப்படுவதை ஒட்டி தில்லியின் ஜந்தாமந்தரில்
கண்டக்கூட்டம் நடக்கிறது. டி.வியில் இது ஒளிபரப்பாகிறது. ஷபானா ஆஸ்மி ஆவேசமாய் பேசி
முடித்த பின் அவரது கணவர் ஜாவித் அக்தர் வந்து நிர்பயாவுக்கு நடந்த அநீதி பற்றியும்
பெண்களின் நிலை பற்றியும் ஒரு கவிதை வாசிக்கிறார். பேட்டி எடுக்கும் சர்தீப் நெகிழ்ந்து
போய் பாராட்டுகிறார். அடுத்து அவர் ஒரு கேள்வி கேட்கிறார் “நீங்கள் ஒரு ராஜ்யசபா எம்.பி.
இளங்குற்றவாளிகளுக்கான சட்டத்தை மாற்றுவதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் உங்களைப் போன்றவர்கள்
முடக்கி வைத்திருக்கிறார்கள். அது நிலுவையில் வந்திருந்தால் இது போன்ற குற்றவாளிகள்
இப்போது சுளுவில் வெளிவே வர முடியாதில்லை தானே?”.
ஜாவித் அக்தரின் முகம் சோர்வடைகிறது.
இமைகள் தளர்கின்றன. கசப்பாய் உதட்டை சுளிக்கிறார். “நாங்கள் யார் மீதும் வேற்றுமை பாராட்டி
செயல்படுவதில்லை” என்று கூறி விட்டு அங்கிருந்து விலகுகிறார். இன்றைய மீடியா யுகத்தில்
ஒருவர் ஹீரோ ஆக்கப்பட்டு கொண்டாடப்பட பெரிய காரணங்கள் தேவையில்லை. ஆனால் மறுநொடியே
சிலுவையிலும் அறையப்படுவார்கள். இன்று நம்மால் வாதப்பிரதிவாதங்களை மடித்தும் திரித்தும்
யாரையும் குற்றவாளி ஆக்க முடியும். எதுவும் நம் கையில் இல்லை. ஜாவித் அக்தர் அதை அந்த
நொடியில் உணர்ந்திருப்பார். அவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? அவரை போன்ற கௌரவ
உறுப்பினர்களா ராஜ்யசபாவில் ஒரு மசோதாவை முடக்குகிறார்கள்? இதை நாம் சச்சினை நோக்கியும்
கேட்கலாமே: “நீங்க நூறு சதம் அடித்தீர்கள். பாராட்டுக்கள். ஆனால் நிர்பயாவின் குற்றவாளியை
தப்பிக்க விடாமல் தடுக்க உங்களைப் போன்ற எம்.பி என்ன தான் செய்தீர்கள்?”