என் நண்பர்களில் கிரிக்கெட் பிடிக்காதவர்கள்
இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என் காதருகே வந்து “ஏன் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்
பத்தியே எழுதி தொலைக்கிறே?” என கேட்பார்கள். இத்தனைக்கும் நான் எப்போதாவது தான் கிரிக்கெட்
பற்றி எழுதுகிறேன். மிச்ச நேரங்களில் இலக்கியம், உளவியல், சமூகம் போன்ற சீரியசான சமாச்சாரங்கள்
பற்றியே பேனாவை தேய்க்கிறேன். ஆனால் எப்போதாவது கிரிக்கெட் பற்றி எழுதும் போது அதை
சரியாக வந்து கேட்ச் பிடித்து விட்டு ஏன் நான் அவுட்டாகி விட்டதாய் கண்ணில் விரலை விட்டு
ஆட்டுகிறார்கள்? அப்போது தான் எனக்கு இந்த கேள்வி எழுந்தது. எனக்கு ஏன் கிரிக்கெட்
பித்து ஏற்பட்டது? ஏன் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். ஒரு எழுத்தாளனாக நான் என் நேரத்தை
வீணடிக்கிறேனா?
எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம்
கொஞ்சம் தாமதமாகத் தான் ஏற்பட்டது. பதினாலு வயது வரை அது ஏதோ பித்துக்குளி ஆட்டம் என்று
தான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்போது குட்டிப்பாவாடையுன் இரண்டு பெண்கள் வலைக்கு
அந்த பக்கமும் இந்த பக்கமுமாய் ஓடும் அந்த ஆட்டம் பிடிக்கும். சின்ன வயதில் கிரிக்கெட்
வெறி கொண்ட நிறைய நண்பர்கள் என் கூட இருந்திருக்கிறார்கள். அவர்கள் சாமி வந்தது போல்
தலையாட்டி பேசுவதை நான் நடுவில் இருந்து கற்சிலை போல் கேட்டுக் கொண்டிருப்பேன். ஏதோ
ஒரு கட்டத்தில் எனக்கு கிரிக்கெட் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அந்த ஆட்டம்
ஒன்றுமே புரியவில்லை. நான் பத்திரிகைகளில் கிரிக்கெட் பற்றி வரும் கட்டுரைகளை படிக்க
துவங்கினேன். அவை எனக்கு புரிந்தன. படித்தவை சரி தானா என பார்க்க டிவியில் கிரிக்கெட்
பார்க்க ஆரம்பித்தேன். விதிமுறைகளும் நுணுக்கங்களும் புரியவே எனக்கு சில வருடங்கள்
பிடித்தன.
ஆனால் கிரிக்கெட்டை விட கிரிக்கெட் கட்டுரைகள் மீது
எனக்கு பித்து அதிகம் இருந்தது. அப்போது ராஜு பரதன் என ஒருவர் ஹிந்துவில் எழுதுவார்.
கவித்துவமான நடையில் வித்தியாசமாய் எழுதுவார். ஈடன் கார்டனில் 281 அடித்த பின்னர் இந்தியா
தென்னாப்பிரிக்கா சென்றது. அப்போது பரதன் எழுதினார் “இந்திய அணியை வெற்றி பெற வைக்கும்
உண்மையான ஹீரோ சச்சின் அல்ல. அந்த திறன் லஷ்மணுக்கே உண்டு. ஆனால் அவர் அந்த நிலைக்கு
தன்னை உயர்த்திக் கொள்வாரா? சச்சினை விட அதிக உயரத்துக்கு செல்வாரா?”. ராஜு பரதனின்
மொழி இப்படி இருக்காது. ஆனால் அவர் சொல்ல வந்தது இது தான். ஆனால் லஷ்மணால் இந்த எதிர்பார்ப்பை
நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் ஒரு பத்திரிகை எழுத்தாளரால் இப்படி யோசிக்க முடிந்ததே
வியப்பாக உள்ளது. இன்றும் பொதுப்புத்தியை ஒட்டித் தான் எல்லா பத்திரிகை விளையாட்டு
கட்டுரைகளும் இருக்கும். யாராவது விராத் கோலிக்கு ஸ்கொயர் கட் ஆட வராது என பேசுவார்களா?
சச்சின் ஓய்வுற்றதும் அவ்விடத்துக்கு கோலியை நகர்த்துவதில் அவர்கள் பிஸியாகி விட்டார்கள்.
ராஜு பரதன் யாரும் எதிர்பாராத தலைப்புகளில் எழுதுவார். நவ்ஜோத் சித்து வர்ணனைக்கு வர
ஆரம்பித்த புதுசு. Wearing his heart on the sleeve என்றொரு கட்டுரையை சித்துவின் கொந்தளிப்பான
தடையற்ற ஆளுமை பற்றி எழுதினார். பிறகு அவர் விரைவில் எழுதுவதை நிறுத்தி விட்டார்.
அன்றைக்கும் இன்றைக்கும் நான்
படிக்கும் போதெல்லாம் கடுப்பாகும் கிரிக்கெட் எழுத்தாளர் விஜய் லோகபலி. கடவுளே இவரைப்
போல் இன்னொருவரை படைத்து விடாதே என வேண்டிக் கொள்வேன். ரெண்டாயிரத்தில் சென்னை வந்த
பின் நூலகங்களில் கிரிக்கெட் நூல்கள் நிறையவற்றை தேடிப் படித்தேன். திருவல்லிக்கேணி
தெருவோரக் கடைகளில் டெட் கார்பட் எழுதிய பத்திகள் வெளிவந்த ஆங்கில பத்திரிகைகளை வாங்க
ஆரம்பித்தேன். இணையம் வந்த பிறகு கிரிக்கெட் வாசிப்பு இன்னும் பரவலானது. குறிப்பாக
கிரிக் இன்போ இணையதளத்தின் நிரந்தர வாசகன் ஆனேன். அதற்கு முன் ஹர்ஷா போக்ளே போன்றோர்
ஈஎஸ்பிஎன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் எழுதினார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில்
சவுரங் கங்குலியின் வீழ்ச்சி பற்றி ஹர்ஷா போக்ளே அழகான மொழியில் எழுதின நளினமான கட்டுரை
இன்னும் நினைவுள்ளது. அதன் பிறகு மஞ்சிரேக்கர், அவருக்கு பின் ஆகாஷ் சோப்ரா, சித்தார்த்
மோங்கா ஆகியோரை விரும்பிப் படிக்கிறேன். (ஸ்ரீகாந்த், கவாஸ்கர் வகையறாக்கள் எழுதுவது
எனக்கு ஏழாம் பொருத்தம்)
இன்று கிரிக்கெட் அங்குலம் அங்குலமாய்
புரிகிறது. ஒரு பவுலர் ஓடி வரும் போது பந்து எங்கு எப்படி விழும் என கணிக்க முடிகிறது.
கள அமைப்பை பார்த்ததும் மட்டையாளர் என்ன ஷாட் ஆடுவார் என ஊகிக்க முடிகிறது (சச்சின்
போன்ற மேதைகள் ஆடும் போது தவிர). எப்போதெல்லாம் ஒரு ஆட்டத்தின் அலை மாறி அடிக்கப் போகிறது
என்றும் உள்ளூர உணர முடிகிறது. ஒவ்வொரு பந்தாய் ரசிக்க முடிகிறது. பல அற்புதமான கிரிக்கெட்
ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றும் அதையெல்லாம் விட நான் படித்த கிரிக்கெட்
பற்றின் புத்தகங்களும் கட்டுரைகளும் தான் நினைவில் புதுமை மாறாமல் நீடிக்கின்றன. கிரிக்கெட்
பார்ப்பதை விட அதைப் பற்றி படிப்பது இன்னும் ஆர்வமூட்டுவதாய் உள்ளது. ஏனென்றால் அதன்
அழகியல் கற்பனையால் இன்னும் பலமடங்கு மனதுக்குள் விரிகிறது. வக்கார் யூனுஸ் வீசுவதை
பார்ப்பதை விட அவர் ஓடி வந்து பந்து வீசும் பாணி பற்றி எழுதுவது படிக்க இன்னும் உவகையாய்
இருக்கிறது.
கிரிக்கெட்டுக்கு முன்னூறு நானூறு
வருட வரலாறு என்றால் கிட்டத்தட்ட அதன் பாதி வயசாவது கிரிக்கெட் எழுத்துக்கு இருக்கும்.
குறிப்பாக இங்கிலாந்தில். அங்கு கிரிக்கெட் எழுத்து ஒரு தனி கலைவடிவம். அதை நாம் கிரிக்கெட்டில்
இருந்து தனியாய் பார்க்க வேண்டும் என்று கூட தோன்றுகிறது. எப்படி கிரிக்கெட்டை ரசிக்கிறவர்கள்
இருக்கிறார்களோ அது போல் கிரிக்கெட் எழுத்தை சிலாகிக்கிறவர்களும் தனியாய் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கிரிக்கெட்டை பற்றி யோசிப்பதும் பேசுவதும் படிப்பதும் அதைப் பார்ப்பதை
விட சுவையான அனுபவம். இதை இசைக்கும் சொல்ல முடியும். இசை பற்றி மணிக்கணக்காய் பேசுகிறவர்களுக்கு
மனதுக்குள் ஒரு இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கிரிக்கெட் பற்றி ஒவ்வொரு வாரமும்
ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்படுகின்றன. அதையெல்லாம் விடாமல் மேய்கிறவன்
என்ற முறையில் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள், எரிச்சல், கோபங்கள் ஏற்படும். ஒருமுறை
நான் பிளாக் ஆரம்பித்து ஆங்கிலத்தில் கிரிக்கெட் பற்றி எழுத ஆரம்பித்தேன். முதலில்
எழுதியது அஜந்தா மெண்டிஸ் பற்றி. அவர் வந்த புதிதில் அவரைப் பார்த்தாலே நம் மட்டையாளர்கள்
நின்ற இடத்தில் நடுங்கி ஒன்றுக்கு போனார்கள். எனக்கு அவர் சாதாரணமான சுழலர் என முதலில்
பார்த்த போதே தோன்றியது. அவரை off spinner ஆக கால் பக்கம் அடிக்க முயல்வதே நம் வீரர்கள்
செய்யும் பிழை என ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதினேன். அதன் பிறகு சில வருடங்களுக்கு
கழித்து தமிழில் கிரிக்கெட் பற்றி எழுதினேன். அதுவும் யாராவது திட்டி விடுவார்களோ எனத்
தயங்கி தயங்கி உயிரோசை இணையதளத்தில் எழுதினேன். யாரெல்லாம் கோயில் அர்ச்சகர் ஆகலாம்
என்பது போல் எழுத்தாளன் எதைப்பற்றி எல்லாம் எழுதலாம் என இங்கு சிறுபத்திரிகை வட்டத்தில்
சில ஆகம விதிகள் உள்ளன. மனுஷ்யபுத்திரன் ”நீங்க சீரியஸா எழுதறதை விட இது நல்லா இருக்கு.
தொடர்ந்து எழுதுங்க” என்ற அந்த தயக்க குமிழியை உடைத்தார். இலக்கிய சமூக இதழ்கள் மத்தியில்
கிரிக்கெட் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டது உயிர்மை தான். அதன் பிறகு காலச்சுவடும்
கிரிக்கெட் கட்டுரைகளை வெளியிடத் துவங்கியது.
என் கிரிக்கெட் கட்டுரைகள் கவனிக்கப்பட்டது
விசித்திரமான ஒன்று தான். சீரியஸான வாசகர்கள் பலர் என்னிடம் வந்து “நீங்கள் கிரிக்கெட்
பற்றி எழுதுவது மிக நன்றாய் உள்ளது” என்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் “நான் அதை விட
மேலானதா சில கட்டுரைகள் எழுதியிருக்கேன். அதைப் பத்தி எல்லாம் சொல்றதுக்கு ஒண்னும்
இல்லையா?” என மனதுக்குள் கருவிக் கொண்டு சிரித்தபடி அவர்களுக்கு கைகொடுப்பேன்.
சரி, எழுத்தாளன் கிரிக்கெட் போன்ற
அற்ப விசயங்கள் பற்றி எழுதலாமா?
நான் ஒரு சாமான்யன். எழுத்தாளன்
என்பதால் மற்றவர்களை விட ஒரு அடி உயரே நின்று சில விசயங்களைப் பற்றி மட்டும் தீவிரமாய்
சிந்தித்து எழுத வேண்டும் என நினைக்கவில்லை. எழுத்தாளன் தான் அன்றாட வாழ்வில் ரசித்து
ஈடுபடுகிற எதைப் பற்றியும் (கிரிக்கெட், சினிமா, சிகரெட், மது, தெருவில் பார்த்த ஒரு
விசயம், பெட்ரோல் விலை, ஷாப்பிங்) எழுத வேண்டும். (நான் ஒருமுறை குமரி மாவட்டத்து கடலைக்கறி
எப்படி செய்வது என்று கூட ஒரு பதிவு எழுதினேன். அதற்கு ஒரு இடதுசாரி தோழர் சீ இதையெல்லாமா
எழுதுவது என முகம் சுளித்தார்) இன்றும் என் நிலைப்பாடு இது தான். எதைப் பற்றியும் நமக்கு
சொல்வதற்கு புதிதாய் ஒன்று உண்டென்றால் அதைப் பற்றி நிச்சயம் எழுதலாம். எங்களுக்கு
ஏழாம் வகுப்பில் ஒரு அறிவியல் வாத்தியார் இருந்தார். அவர் ஒருநாள் எப்படி தந்திரமாய்
சாமர்த்தியமாய் கொசு அடிப்பது என்று வகுப்பில் சொல்லித் தந்தார். அதை நான் இன்றும்
மறக்கவில்லை. இன்றும் ஒரு கொசு என் முழங்காலில் உட்கார்ந்து பதம் பார்த்தால் என அறிவியல்
வாத்தியார் சொன்னது நினைவுக்கு வரும். அவர் சொன்னது போல் அடித்ததில் ஒரு கொசுவும் தப்பித்தது
இல்லை. ஒருவர் எப்படி கொசு அடிப்பது என்று கூட கட்டுரை எழுதலாம். கிம்கி டூக் பற்றி
எழுதுவதை விட அது தான் உண்மையான சவால்.
பிரான்ஸிஸ் பேகன் என்றொரு பதினாறாம் நூற்றாண்டு கட்டுரையாளர்
இருக்கிறார். முக்கியமானவர். அவர் நீங்கள் கற்பனையே பண்ண முடியாத சாதாரண அன்றாட தலைப்புகளில்
சுருக்கமான அழகான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருவர் பிரம்மசாரியாய் இருப்பது சமூகத்துக்கு
எவ்வளவு நல்லது என சீரியஸாய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
தனக்கு பிறக்காது போன இரண்டு குழந்தைகளுடனான ஒரு கற்பனை உரையாடலை Dream Children என்று
கட்டுரையாக சார்லஸ் லேம்ப் எழுதியிருக்கிறார். படித்தால் உருகி விடுவீர்கள். அந்த குழந்தைகள்
நிஜமாகவே கண்முன் தோன்றுவார்கள்.
ஒரு எழுத்தாளன் தன் கவனத்தின்
குறுக்கே போகும் எதைப் பற்றியும் கூர்மையான ஒரு படைப்பை தர முடியும். ஒரு தலைப்பில்
எழுத அவன் அதில் நிபுணனாக இருக்க வேண்டியதில்லை. இதை என்னிடம் கூறியது ஜெயமோகன். நான்
கல்லூரியில் படிக்கும் போது அவர் மகாராஜபுரம் சந்தானம் பற்றி ”திண்ணையில்” எழுதியதை
படித்து ஈர்க்கப்பட்டு மகாராஜபுரத்தின் கேஸட் வாங்கி அவரை கேட்க துவங்கினேன். விடுதியில்
என் நண்பர்கள் அந்த கேஸட்டை மட்டும் நள்ளிரவில் போடாதே என என் காலில் விழுவார்கள்.
ஆனால் எனக்கு கர்நாடக் சங்கீதத்தில் ஆர்வம் துளிர்த்தது அந்த கட்டுரையால் தான். எழுத்தாளன்
தொட்டால் சில விசயங்கள் துலங்கும். அவன் பார்த்து எதையும் தீட்டு என ஒதுங்கி செல்ல
வேண்டியதில்லை.
”சு.ரா: நினைவின் நதியில்” நூலில்
ஜெ.மோ சுந்தர ராமசாமிக்கு நடிகை பார்வதியை (இப்போதுள்ள பார்வதி மேனன் அல்ல; இவர் ஜெயராமின்
மனைவி) மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். ஆனால் பார்வதி பற்றி சு.ரா எங்குமே
குறிப்பிட்டதில்லை. அதே போல விஜய் அறிமுகமான புதிதில் அவரை டிவியில் பார்த்து விட்டு
ஜெயமோகனிடம் சு.ரா எதேச்சையாக “இந்த பையன் பெரிய ஸ்டாராக வருவான். ஏனென்றால் இவனிடம்
சாமான்ய தமிழர்களின் உடல் மொழி இருக்குது” என்றிருக்கிறார். இதையும் ஜெயமோகன் அந்நூலில்
எழுதுகிறார். ஆனால் ஒருமுறை கூட விஜய் பற்றின தனது இந்த கணிப்பை சு.ரா நேரடியாய் எழுதியதில்லை.
எதைப் பற்றி எல்லாம் எழுதலாம், எதெல்லாம் கூடாது என அவருக்கு தன் தலைமுறையினரைப் போல
ஒரு கராறான நிலைப்பாடு இருந்தது. ஆனால் எழுத்தாளன் அப்படி தன்னை தணிக்கை செய்து கொள்ளத்
தேவையில்லை. நீங்கள் ஒன்றை ஆர்வமாய் கவனித்து கருத்தை உருவாக்கினால் அதை வாசகனுடன் பகிர்வதில்
தவறில்லை. அது ஒரு சாதாரண விசயம் பற்றின கருத்து என்றாலும் கூட அது புது கோணத்தை கொண்டிருக்கும்
பட்சத்தில் நிச்சயம் எழுத வேண்டும்.