பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத்
தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு ராணுவத்தினர் பலியாகி விட்டனர். இன்னும்
தாக்குதல் ஓயவில்லை. தொடர்கிறது. இத்தாக்குதல் நடக்கக் கூடும் என ஜனவரி 1 அன்றைக்கே
தகவல் வந்து விட்டது. அனைத்து படையினரும் தயார் நிலையில் முடுக்கி விடப்பட்டனர். ஆனால்
நேரடியாய் களமிறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதற்கோ தளத்தை பாதுகாப்பதற்கோ ராணுவத்தினருக்கு
ஆணை வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதிகள் தளத்துக்குள் நுழைந்து தாக்கும்வரை
அவகாசம் வழங்கப்பட்டது. இது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
பல்வேறு பாதுகாப்பு படையினர் பதன்கோட்டில் முகாம்
இட்டிருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்க ஆள் இல்லை என்று கூறப்படுகிறது என்றாலும்
இது நம்பும்படியான வாதமாக இல்லை. ராணுவத்தை சேர்ந்த சிலர் இதை ஒரு அரசியல் சதி என்கிறார்கள்.
அதிகார மையத்தில் உள்ள சிலர் தீவிரவாதிகள் பதன்கோட் தளம் வரை சென்று சேர வேண்டும் என
விரும்பினார்கள். அதனாலே அவர்கள் பாதுகாப்பு படையினரை தடுத்து நிறுத்தினர் என ஒரு தரப்பு
கூறுகிறது.
பதன்கோட்டை தீவிரவாதிகள் அடையும் முன்னர் அவர்கள்
ஒரு காரை கடத்தினர். அக்காரில் ஒரு எஸ்.பி, அவரது சமையற்காரர் மற்றும் ஒரு நண்பர் இருந்தனர்.
பின்னர் அவர்களை ஒரு வனத்தில் விடுவித்து விட்டு தீவிரவாதிகள் பதன்கோட்டுக்கு விரைந்தனர்.
சமையற்காரர் அங்குள்ள ஒரு காவல் நிலையத்துக்கு சென்று தம்மை தீவிரவாதிகள் கடத்திப்
போன விவரத்தை சொல்ல, போலிசார் அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அவரை அடித்து துன்புறுத்தினர்.
மாவோயிஸ்டுகளின் துண்டுபிரசுரத்தை வைத்திருந்தவர்களை துருவி துருவி விசாரித்து சிறையில்
தள்ளி சித்திரவதை செய்யும் நம் போலீசார் தீவிரவாதிகள் ஒரு போலீஸ் அதிகாரியை கடத்திப்
போனதை நம்பவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. ஒருவேளை இத்தகவல் வெளியே பரவக்
கூடாது என நினைத்த உயர் அதிகாரிகள் தம் வழக்கப்படி புகார் கொடுத்தவரையே குற்றவாளியாக்கி
துன்புறுத்தியிருக்கலாம். எப்படியோ தீவிரவாதிகள் விமானப்படை தளத்தை அடைவதற்கான உச்சபட்ச
உதவிகளையும் நாம் செய்து கொடுத்து விட்டோம்.
எனக்கு இந்த சந்தர்ப்பம் கார்கிலை
நினைவு படுத்துகிறது. கார்கிலில் தீவிரவாதிகள் ஊடுருவியது முஷாரப் மற்றும் வஜ்பய்க்கு
இடையிலான மறைமுக ஒப்பந்தத்தின்படியே நடந்தது. பின்னர் இதே தீவிரவாதிகளை வெளியேற்றுகிறோம்
எனும் பெயரில் நிறைய ராணுவ வீரர்களை பலிகொடுத்தோம்; கணக்கற்ற பணத்தையும் வீணடித்தோம்.
இந்த போர் அப்போது தன் மீதுள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்கள் கவனத்தை
திருப்பவும், பாகிஸ்தானுடன் போர் புரிந்தோம் என்று மார்தட்டவும் பா.ஜ.கவுக்கு உதவியது.
மறுபக்கம் முஷாரப்புக்கும் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு படையெடுத்த மாவீரர் எனும் பெயரைப்
பெறவும் ராணுவத்தில் தன் செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதிகள்
என்றுமே இரட்டை முகம் கொண்டவர்களே. ஒரு பக்கம் அவர்கள் ராணுவத்தை திருப்திப்படுத்தி
தம் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும். ராணுவத்துக்கு எப்போதும் போர் தேவை. இன்னொரு பக்கம்
இந்திய பிரதமர்களூடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேச நற்பெயரையும் வணிக நலன்களையும்
பாதுகாக்க வேண்டும். அதனாலே ஒவ்வொரு முறையும் இந்திய-பாக் பேச்சுவார்த்தை நடக்கும்
போது உடனே தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கின்றன. இந்த பதன்கோடு தாக்குதல்
இந்திய-பாக் அரசுகளின் புரிந்துணர்வுடன் தான் நடந்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது.
இப்போது தம் மீதுள்ள மக்கள் அதிருப்தியை மட்டுப்படுத்தி தேசியவாத உணர்வலையை பரப்ப பா.ஜ.வுக்கு
இத்தாக்குதல் பலனுள்ளதாக இருக்கும். பாகிஸ்தானில் மோடி சென்று நேரடியாய் நவாஸ் ஷரீப்பை
சந்தித்தது அங்குள்ள ஆளுங்கட்சிக்கு மக்களிடையிலும் ராணுவத்திலும் ஏற்படுத்திய கசப்பை
போக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு இது பயன்படும்.
சமீபத்தில் தில்லியில் கேஜ்ரிவால்
அரசு இரு அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்ததை அடுத்து ஒட்டுமொத்தமாய் அனைத்து
அதிகாரிகளும் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தை எவ்வாறு தில்லியின் லெப்டினெண்ட்
ஜெனரல் ஜங் கோவாவில் இருந்தபடி மத்திய அரசுடனும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளுடனும் போனில்
ஒருங்கிணைத்தார் என்பதை கேஜ்ரிவால் விளக்கினார். இதையெல்லாம் சாமர்த்தியமாய் ஒருங்கிணைக்க
முடிகிற போது ஒரு நாளுக்கு முன்பே தகவல் தெரிய வந்த பின்னரும் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும்
விதமாய் பாதுகாப்பு படையினரை நம்மால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
மோடி அரசு பதவியேற்ற போது நான்
உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன் “என்ன செய்ய போறீங்க மிஸ்டர்.மோடி?“. அதில் சில
வருடங்களுக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், பா.ஜ.கவுக்கு எதிரான
ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் என்று கூறியிருந்தேன். என் கணிப்பின் படியே அருண்
ஜேட்லியின் கிரிக்கெட் கிளப் ஊழல் வெளியாகி விட்டது. அடுத்த இரு வருடங்களில் இன்னும்
பல ஊழல்கள் அம்பலமாக உள்ளன. தொடர் தீவிரவாத தாக்குதல்களில் நம் தேசம் பலவீனமாகி வருகிறது.
ஊழலுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான அரசு என்று போலி பிரச்சாரத்தின் மூலம்
ஆட்சிக்கு வந்த இந்த அரசு இப்போது அம்மணமாகி நிற்கிறது. காங்கிரஸ் மென்மையானது, பா.ஜ.க
வன்மையானது. காங்கிரஸ் ஊழல்மயமானது, பா.ஜ.க களங்கமற்றது என்ற எதிரிடையை கொண்டு இனியும்
வடை சுட முடியாது. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.