கவிஞர் தேவதச்சன் 2015ஆம் வருடத்தின்
விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருதைப் பெறுகிறார். தேவசதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம். தூத்துக்குடி
மாவட்டத்தின் கோயில்பட்டியை சேர்ந்தவர். எழுபதுகளில் இருந்து கவிதை எழுத துவங்கிய தேவதச்சன்
இன்றும் ஒரு படைப்பாளியாக உறையில் இருந்து உருவப்பட்ட பளபளப்பான வாளைப் போல ஜொலிக்கிறார்.
இதற்கு காரணம் எழுபதுகளில் துவங்கி இன்று வரை அவர் யாரைப் போன்றும் எழுத முயலவில்லை;
அவரை போல் யாராலும் எழுத முடிந்ததில்லை.
தேவதச்சன் இந்த கவிதை வெகுபிரசித்தம்.
”துணி
துவைத்து
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற
சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட
நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற
குருவிகள் சப்தம்”
சப்தங்கள் நம் மனதுக்குள் இருக்கிறதா
வெளியே இருக்கிறதா? “முடியல” எனும் சொல்லைக் கேட்கும் போது வடிவேலுவின் குரல் உடனே
நம் காதில் ஒலிப்பது ஏன்? தேவதச்சன் இது போல் நம் மனம் உருவாக்கும் பலவித சித்திரங்கள்,
ஒலிகள் பற்றி நுணுக்கமாய், மென்மையாய், எளிய அங்கதத்துடன் எழுதுகிறார்.
”அத்துவான வேளை”, “கடைசி டினோசர்”, “ஹேம்ஸ் எனும்
காற்று” ஆகியவை தேவசத்தச்சனின் முக்கியமான நூல்கள். இத்தருணத்தில் அவரிடம் கவிதை பற்றி
கொஞ்சம் பேசுவோம்.
கேள்வி: தமிழில் ஜென் தன்மை கொண்ட
கவிதைகளை ஆனந்த், யுவன், நீங்கள், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் தொடர்ந்து எழுதுகிறீர்கள்.
2000 வருட தமிழ் கவிதை மரபில் ஜென்னை எங்கு பொருத்தலாம்? உங்களுடைய பார்வையில் ஜென்
என்றால் என்ன?
பதில்: ஜென் தத்துவத்தில் மனிதன்
தன்னை சமூகத்தின் மையமாக (ஒரு பகுதியாக) நினைப்பதில்லை. ஜென் மனம் கொண்டவன் தன்னை அடையாளங்கள்
கடந்த ஒன்றாகவே நினைக்கிறான். அவன் தான் எனும் சிந்தையை ஒரு பேரனுபவத்தில் முழுக்க
இழந்து விடுகிறான். ஆனால் தமிழ் நவீன கவிதையில் அப்படியான ஒரு ஜென் மனநிலை உள்ளதென
கூற முடியாது. நவீன கவிதை தமிழில் தோன்றும் பொழுது உலகின் பல்வேறு புதிய அழகியல்களை
உள்வாங்கிக் கொண்டது. உதாரணமாய் எழுபதுகளில் தமிழில் தோன்றின சர்ரியலிசக் கூறுகளைச்
சொல்லலாம். ஆனால் ஜென் எப்போதும் நம் கவிதையின் மைய தத்துவப் பார்வையாக இருந்ததில்லை.
நம் நவீன கவிதையில் உள்ள தேடலை
நாம் தத்துவம் என வரித்துக் கொண்டோம். ஆனால் கவிதையில் உள்ள தத்துவமும் தத்துவத்தில்
உள்ள கவித்துவமும் ஒன்றல்ல. ஜென் கவிதையில் பதிவாகும் இயற்கைக் காட்சிகள் நம் புலன்களில்
அளவில் நாம் நுகரும் வாழ்வை பதிவு செய்கின்றன. அதற்கு அப்பாலோ அதற்கு முன்பாகவோ ஜென்
கவிஞன் பிரதிபலிப்பதில்லை. நவீன தமிழ்க் கவிதையில் இருக்கும் தேடல் முழுக்கமுழுக்க
நவீன மனிதனின் கேள்விகளே. ஜென் கவிதையில் கேள்விகள் இருப்பதில்லை. தமிழ்க்கவிதையில்
பொதுவாக ஒரு ஜென் தன்மை உள்ளதென வேண்டுமானால் கூறலம். ஆனால் அது பிரதானமாய் இல்லை.
கேள்வி: ஒரு செயலை உந்தி நகர்த்தும்
ஆற்றலை ’யின்’ என்றும் அதை நெகிழ்ந்து ஏற்கும் ஆற்றலை ’யாங்’ என்றும் ஜென் தத்துவம்
கூறுகிறது. ஆணை ’யின்’ என்றும் பெண்ணை ’யாங்’ என்றும் வகைப்படுத்துகிறது. உங்கள் கவிதைகளில்
அழுத்தமான பெண்மை நெகிழ்வை, ஒரு ’யாங்’ பார்வையை, பார்க்க முடிகிறது. உங்கள் ஆண் பாத்திரங்களிலும்
பெண்மையின் லகுத்தன்மை உள்ளது.. வாழ்க்கையை செலுத்தும் ’யின்’ தன்மை கொண்டவர்களாக அன்றி
அதை நெகிழ்ந்து ஏற்கும் ’யாங்’ குணம் கொண்ட மனிதர்கள் உங்கள் கவிதையில் அதிகம் வருகிறார்கள்.
இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மேலோட்டமாக பார்த்தோம்
என்றால் நம் கவிதைகளில் ஆண் பெண் தன்மைகள் என தனித்தரியாய் தெரியலாம். அந்த மட்டில்
நீங்கள் குறிப்பிடுவது உண்மை தான். ஆனால் கவிதை அதன் ஆழத்தில் பால் வேற்றுமைகளைக் கடந்த
ஒன்றாக உள்ளது.
பெண்மையின் நெகிழ்வு என் கவிதையில்
உள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது. கவிதை உணர்வுவயமானது. அது காட்சிபூர்வ சித்தரிப்புகள்
கொண்டது. உலகை அறிவியல், தத்துவம் என அறிவுத்துறைகள் வழியாக அணுகி புரிந்து கொள்வது
ஒரு முறை. அதையே உணர்வுபூர்வமாய், நெகிழ்ச்சியாய் உள்வாங்கி முன்வைப்பது கவிதையின்
வழி. பொதுவாய் அறிவை மட்டும் நம்பாமல் புலன் வழி அறிந்து மனம் கரைந்து போய் அனுபவிப்பது
பெண்களின் சுபாவம். என் கவிதையில் பெண் தன்மை இருப்பது இயல்பாகவே அக்காரணத்தினால் தான்.
கேள்வி: உங்கள் கவிதைகளில் படிக்கட்டு
ஒரு மையக் குறியீடாக மீளமீள வருகிறது. படிக்கட்டில் ஏறவோ இறங்கவோ செய்யாது அதில் உட்கார்ந்திருக்கும்
ஆட்கள் வருகிறார்கள். படிக்கட்டை வாழ்க்கைப் பயணத்துக்கான குறியீடாக கொண்டோமானால் அதில்
ஏறாமலோ இறங்காமலோ இருப்பவர்கள் வாழ்க்கையை பற்றி சொல்வது என்ன? வாழ்க்கையை முந்தவோ
பிந்தவோ வேண்டாம், அதன் ஒழுக்கோடு (ஆற்றில் மிதக்கும் படகு போல) சென்று கொண்டிருந்தால்
போதும் என்றா?
பதில்: நாம் பொதுவாக சிறுவயதில்
இருந்தே மீமனிதர்கள் (super humans) மீது பிரேமை கொண்டவர்களாக இருக்கிறோம். இயல்பான
நம் வாழ்க்கை போதாமை கொண்டது என நினைக்கிறோம். நம்மை மீறிப் போவது பற்றி கனவு காண்கிறோம்.
ஆனால் இந்த ஏக்கமும் ஆசையும் நம் ஆழ்மனதின் சிக்கலைத் தான் காட்டுகிறதே அன்றி இது ஆரோக்கியமானதோ
உண்மையானதோ அல்ல. இதைக் குறிக்கத் தான் படிக்கட்டு படிமம் என் கவிதைகளில் வருகிறது.
என் கவிதையில் வரும் மனிதர்களுக்கு எதையும் கடந்து போகத் தேவையில்லை என்பதால் அவர்கள்
படிக்கட்டில் ஏறிப் போவதில்லை. அவர்கள் அதில் உட்கார்ந்தே இருக்கிறார்கள்.
நன்றி: ஜன்னல்