முந்தா நாள் என் கனவில், வழக்கமாய்
நான் அதிகம் திட்டியுள்ள, ஒரு மூத்த எழுத்தாளர் வந்தார். நான் அவரிடம் உருக்கமாய் பேசிக்
கொண்டிருந்தேன். அவர் கனிவாய் பதிலளித்தார். நேற்று என் கனவில் சுந்தர ராமசாமி இறந்து
போன சேதி கேட்டு மனம் உடைந்து துக்கம் கொண்டேன். யாரோ ஒருவரிடம் தாள முடியாத இழப்புணர்வை
பகிர்ந்து கொண்டபடி ஒரு பேருந்தில் ஏறி பயணித்தேன். அதன் இருக்கை உருளை வடிவில் சாய்வாய்
இருந்தது. அதில் இருந்து விழுந்த விடாதபடி சிரமப்பட்டு தொற்றிக் கொள்ள வேண்டி இருந்தது.
மீண்டும் மீண்டும் கண்ணீரில் தோய்ந்த நினைவுகளை எனக்குள் தொகுத்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் விடிந்து விட்டது. அடச்சே சு.ரா இறந்து தான் பல வருடங்களாயிற்றே என தோன்றியது.
இன்றிரவு அடுத்து யார் வரப் போகிறார்களோ என நினைத்து பயமாக இருக்கிறது.
பொதுவாக கனவில் வருகிற எதற்கும்
நேரடி பொருளில்லை. ஒருவருக்காய் அழுகிறீர்கள் என்றால் அவர் வேறெதற்கோ குறியீடு மட்டும்
தான். அவரே அல்ல. நான் எதன் இழப்புக்காய் துக்கித்தேன்? யாருக்காய் விம்மி அழுதேன்?
என்ன தான் நடக்கிறது எனக்குள்?