நான் தோனி வெறுப்பாளன் அல்ல. இதை முதலில் சொல்லி விடுகிறேன். அதேநேரம் நான் தோனியின் அணித்தலைமையின் பெரிய ரசிகனும் அல்ல. இந்திய அணித்தலைவர்களை ரெண்டாய் பிரிக்கலாம். கவாஸ்கர் வகையறா, கபில் வகையறா. அசருதீன், அவருக்கு பின் தோனி ஆகியோர் கவாஸ்கர் வகையறா. இவர்கள் சம்பிரதாயமானவர்கள். தற்காப்பை முக்கியமாய் நினைப்பவர்கள். வேகவீச்சாளர்களை விட ஸ்பின்னர்களை அதிகம் விரும்புகிறவர்கள். ஒரு ஆட்டத்தை ஆவேசமாய் ஆக்ரோசமாய் வழிநடத்தாமல் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பவர்கள். முக்கியமாய் பவுலிங்கை விட பேட்டிங்கே முக்கியம் என நினைப்பவர்கள்.
நான் அடிப்படையில் கபில் வகை அணித்தலைமையின் விசிறி.
இவ்வகையறாவை சேர்ந்த அஜய் ஜடேஜா, கங்குலி, திராவிட், விராத் கோலி போன்றோர் தான் என்னைப்
பொறுத்தவரையில் சரியான அணித்தலைவர்கள்.
ஏனென்றால் 1) அவர்கள் இளம் வீரர்களுக்கு நிறைய
வாய்ப்பளிப்பார்கள். வேகவீச்சை ஊக்குவிப்பார்கள். டிராவுக்கு பதில் தோல்வி மேல் என
நினைப்பார்கள். வெற்றியடைய எத்தகைய ரிஸ்கும் எடுப்பார்கள். பவுலர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி
அதிரடியாய் மோதி ஆட தூண்டுவார்கள். புதிய இளம் வீரர்கள் தோன்றி வரும் கட்டத்தில் தோனியை
போன்ற ஒரு அணித்தலைவரை விட கோலியை போன்றவர்களே அணியை வழிநடத்துவது நலம் பயக்கும் என
நம்புகிறேன்.
தோனி
இயல்பில் ஒரு நல்ல மனிதவள ஒருங்கிணைப்பாளர். சிறந்த திறமையாளர்கள் உள்ள அணியை அவரால்
சிறப்பாய் வழிநடத்த முடியும். ஒரு ஸ்விட்சை ஆன் செய்வது போலத் தான் அவர் தலைமை வகிப்பது
இருக்கும். அணியில் எல்லாமே தானாக நடக்க வேண்டும் அவருக்கு. ஒரு சொதப்பலான ஆனால் திறமையான
பவுலரை தோனியால் கையாளவோ ஊக்குவித்து மேலாக வீச வைக்கவோ முடியாது. அதனாலே தோனியின்
கீழ் மிக மோசமாய் வீசும் உமேஷ் யாதவும் இஷாந்தும் கோலியின் கீழ் பலமடங்கு மேலாக வீசுகிறார்கள்.
சஹீர்கான் போன்ற முழுமையான பவுலர் கிடைத்தால் தோனி
நிம்மதியாய் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு தன் வேலையை பார்க்க சென்று விடுவார்.
அவரது விட்டேந்தியான பாணி ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அணிக்கு உதவியது போல்
2010க்கு பிறகு உதவவில்லை. குறிப்பாய், தோனியின் கீழ் இந்தியாவின் பந்து வீச்சு அதலபாதாளத்துக்கு
போனது.
நீங்கள்
கேட்கலாம்: அது தோனியின் தவறா? நிச்சயமாய். வங்கதேச அணியைப் பாருங்கள். ஒரே அணி டெஸ்டில்
ஆடும் போது பந்து வீச்சு படுசுமாராகவும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாயும் இருக்கும்.
காரணம் ஒருநாள் அணியின் தலைவரான மஷ்ரபே மொர்தாஸா. அவர் தனக்கு கீழ் இரண்டு மூன்று வேகவீச்சாளர்களை
வளர்த்தெடுத்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளில் வங்கதேசத்தின் சிறப்பான ஆட்டத்துக்கு
அவரது ஆக்ரோசமான அணித்தலைமையும் பந்து வீச்சுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும்
காரணம். அவரை தலைமையில் இருந்து நீக்கிப் பாருங்கள். ஒரேநாளில் வங்கதேச பவுலிங் இந்திய
பவுலிங் போல் படுமட்டமாகி விடும்.
தென்னாப்பிரிக்காவுடனான தொடர் முடிந்த போது கோலி
உமேஷ் யாதவின் பந்து வீச்சு பற்றி சொன்னார் “ஒரு பவுலரைப் பற்றி எவ்வளவு உயர்வாய் நினைக்கிறீர்களோ
அவர் அவ்வளவு சிறப்பாய் வீசுவார்”. தோனி எந்த இளம் பவுலர்களையும் நம்புவதில்லை. அவரது
இந்த அணுகுமுறை காரணமாய் புது பவுலர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. யாராவது ஒருவர்
எதேச்சையாய் வாய்ப்பு கிட்டி நன்றாய் ஆடினால் கூட தோனி அவரை இடைவிடாமல் ஆட வைத்து காயமடைய
வைத்து விடுவார். ஷாமி ஒரு உதாரணம். மோஹித் ஷர்மா காயமுற்ற ஒரே காரணத்தினால் தான் பும்ரா
இந்திய அணியில் இடம்பெற்றார். வேறு வழியில்லாமல் அவருக்கு வாய்ப்பளித்து பார்த்த பின்
இப்போது தோனி அவரை கொண்டாடுகிறார். ஏன் அவருக்கு முன்பே வாய்ப்பளிக்கவில்லை? எவ்வளவு
ஆட்டங்கள் மோஹித்தும் புவனேஷ்வரும் மிக மட்டமாய் வீசினார்கள். ஒரு வருடமாவது அவர்கள்
மோசமாய் ஆட்டநிலையில் வீசினார்கள். அப்போதும் தோனி அவர்கள் இடத்தில் புது வீரர்களுக்கு
வாய்ப்பளிக்கவில்லை.
இதையே
ஸ்பின்னர்கள் விசயத்தில் கூற முடியாது. ஜடேஜாவை தோனியாகவே அணிக்குள் கொணர்ந்து நிறைய
வாய்ப்புகள் அளித்தார். அதே போல் பீயுஷ் சாவ்லாவுக்கும் வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்.
ஆனால் வேகவீச்சாளர்கள் என்றாலே தோனிக்கு ஒருவித ஒவ்வாமை. கடந்த பத்து வருடங்களில் தோனியாகவே
வாய்ப்பளித்து உருவாக்கின ஒரு வேக வீச்சாளரை கூட நீங்கள் காட்ட முடியாது. ஆனால் கங்குலி
சஹீர்கான், பதான், ஆர்.பி சிங், முனாப் படேல் போன்ற பலரையும் முன்னெடுத்தார். அவருக்கு
பின் வந்த திராவிடின் காலத்திலும் வேகவீச்சாளர்கள் செழித்தார்கள். தோனி தலைவரானதும்
ஒரேயடியாய் இந்திய பந்து வீச்சு பலவீனமானது எதேச்சையாய் நடந்தது அல்ல.
தோனி
ஏன் புது பவுலர்களை ஊக்குவிப்பது இல்லை? முக்கிய காரணம் அவர் அதிகமாய் பவுலர்களிடம்
பேசி புரிய வைக்க விரும்புகிறவர் அல்ல. அதனால் அவரை நன்கு புரிந்த பவுலர் என்றால் தோனி
எந்த ஆணையும் கொடுக்க வேண்டியதில்லை. அவர் பந்தை மட்டும் தூக்கி வீசினால் போதும், அவர்கள்
ஒரு எந்திரம் போல் தோனி விரும்புகிறதை ஊகித்து அதற்கு ஏற்றாற் போல் வீசுவார்கள். புது
பவுலர்களை புரிந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து, சற்றே ரிஸ்க் எடுத்து அவர்களை மேம்படுத்தும்
ஆர்வமும் மனப்பான்மையும் தோனிக்கு இல்லை.
மேலும் தோனி எதிர்பாராத தன்மையை விரும்பாதவர். தினமும்
ஒரே பஸ்ஸில் ஏறி ஒரே டிபன்பாக்ஸில் சாப்பிட்டு ஒரே நேரத்தில் திரும்ப வீட்டுக்கு வருகிற
குமாஸ்தா போன்றவர் தோனி. எதிர்பாராத மாற்றங்களை அவரை எரிச்சலடைய வைக்கின்றன. ஒரு வேகவீச்சாளர்
இயலாகவே கட்டுப்பாடு குறைவானராய் இருப்பார். ஆனால் எதிர்பாராமல் விக்கெட் எடுத்து வெல்ல
வைக்கவும் செய்வார். ஆனால் தோனி ஆட்டத்தில் எல்லாமே எந்திரத்தனமாய் தன் திட்டத்தில்
இருந்து துளியும் பிசகாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த கட்டுப்படுத்தும்
வெறி அவரை மூர்க்கமான தன்னிச்சையான பவுலர்களை வெறுக்க வைக்கிறது.
இன்னொரு
காரணம் தோனி பவுலர்களிடம் பேசி களத்தடுப்பு வியூகங்களை விவாதிக்க விரும்புவது இல்லை
என்பது. முன்பு சஹீர்கான் இருக்கையில் அவரையே மொத்த களத்தடுப்பு அமைப்பையும் கவனிக்க
விட்டு விடுவார். இப்போது தோனியின் வியூகம் என்பது பேட்ஸ்மேன் எங்கெல்லாம் அடிக்கக்
கூடும் என ஊகித்து அங்கே ஆளை நிற்க வைப்பது தான். பேட்ஸ்மேனை எப்படி அவுட் பண்ணுவது
என பாஸிட்டிவாக திட்டமிடுவது அல்ல.
எல்லா
அணித்தலைவர்களுக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. நான்கில் இருந்து ஆறு வருடங்கள். அதன்
பின் புது தலைவரை நியமிப்பது தான் அணிக்கு நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு ஆறில் இருந்து
எட்டு வருடங்களின் போது கிரிக்கெட்டின் போக்கு மாறுகிறது. பழைய தலைவர்கள் அணியை அடுத்த
நிலைக்கு எடுத்துப் போவதில் தடையாக இருப்பார்கள். ரெண்டாயிரத்தின் போது உலகம் முழுக்க
ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் சார்ந்ததாய் இருந்தது. அப்போது பழைய பந்து ரிவர்ஸ் ஸ்விங்
ஆகும். 30 ஓவருக்கு மேல் ஸ்பின் எடுபடும். 2011க்கு பிறகு புது விதிமுறைகள் வர இந்த
இரண்டு அம்சங்களும் காணாமல் போய் விட்டன. ஆனால் தோனி புது மாற்றங்களுக்கு தன்னை புதுப்பிக்கவில்லை.
ஆவேசமான பந்து வீச்சு இருந்தால் தான் இப்போது தொடர்ந்து வெல்ல முடியும். இதை தோனி இன்றும்
புரிந்து கொள்ள மறுக்கிறார். அவர் ரெண்டாயிரத்திலே இன்றும் இருக்கிறார்.
நான்
T20 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்காய் தோனி ஓய்வு பெற வேண்டும் என சொல்லவில்லை.
என் காரணங்கள் வேறு:
1) தோனி ஒரு மோசமான பவுலிங் கேப்டன்
2) அவரது அணித்தலைமை காலாவதி ஆகி விட்டது
3) அவர் கடந்த இரு வருடங்களாய் மோசமான ஆட்டநிலையில் இருக்கிறார்.
அவர் ரன் அடித்து நீண்ட காலமாகி விட்டது
4) கடந்த இரு வருடங்களாய் அவர் பல ஒருநாள் தொடர்களை தொடர்ந்து
இழந்து வருகிறார்.
5) அவர் புது வீரர்களை அறிமுகப்படுத்துவதோ அணியை புதுப்பிப்பதோ
இல்லை
6) அவர் தனது தலைமை காலத்தில் பந்து வீச்சை வெகுவாய் சீரழித்து
விட்டார். அடுத்த இரு வருடங்கள் அவர் நீடித்தால் அது இன்னும் மோசமாகும்
7) தோனியும் ஜடேஜவும் கீழ்மத்திய வரிசை பேட்டிங்கை பலவீனமாக்குகிறார்கள்.
ரெய்னா ரன் அடிக்காத நிலையில் நாம் முழுக்க கோலியை நம்பி இருக்க வேண்டி இருப்பது இதனால்
தான். தோனிக்கு பதிலாய் வேறு யாராவது சிக்ஸர் அடிக்க வேண்டி உள்ளது. அவர் 40 ஓவருக்கு
பின் களமிறங்கி 90 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து ரன் ரேட்டை மெத்தனமாக்குகிறார்.
தோனி
ஓய்வு பெற்றால் இந்திய ஒருநாள் அணி தோற்கவே செய்யாது என நான் கூறவில்லை. ஆனால் அணியை
புதுப்பிக்கவும் உத்வேகப்படுத்தவும் பந்து வீச்சை பலமாக்கவும் அவரது ஓய்வு உதவும்.
அதேநேரம் கோலியையும் நான்கில் இருந்து ஆறு வருடங்களுக்குள் நீக்கி விட வேண்டும் என்பதிலும்
நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
சமீபத்தில்
ஒரு வெளிநாட்டு நிருபர் தோனியிடம் அவரது ஓய்வு பற்றி வினவ அவர் இரண்டு சம்மந்தமில்லாத
விளக்கங்கள் தருகிறார். தான் நல்ல உடல் தகுதியில் உள்ளதாகவும் நன்றாய் ஓடுவதாகவும்
அதனாலே 2019வரை நீடிக்க முடியும் என்றும் அதனால் ஓய்வு பெற வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்.
தோனி என்ன ஓட்டப்பந்தய வீரரா? நல்ல உடற்தகுதியும் ஓட்டவேகமும் அல்ல கிரிக்கெட்டுக்கு
முக்கியம், ரன்களும் வெற்றிகளும் தான். கடந்த இரு வருடங்களில் தோனியால் இரண்டையும்
செய்ய இயலவில்லை. இதனாலே அவர் ஓய்வு பெற வேண்டும் எனும் கோரிக்கை வலுக்கிறது. தோனி
சாமர்த்தியமாய் இந்த இரு அம்சங்களையும் தவிர்த்து விட்டு நிருபர்களிடம் ஜோக்கடித்து
தப்பிக்க பார்க்கிறார். ஆனால் உண்மை என்பது தெருவை மறித்து நின்று கொண்டிருக்கும் யானையைப்
போல. அதை பார்க்கவில்லை என நாம் நீண்ட காலம் நடிக்க முடியாது.