சமீபத்தில் டிவியில் ஒரு ஆவியெழுப்பும்
கூட்டத்தை பார்த்தேன். வழுக்கைத் தலை கொண்ட ஒரு ரெவரெண்ட் ஆவேசமாய் பேசினார். ஒரு பக்கம்
பார்வையாளர்களில் கணிசமாய் இருந்த பெண்கள் தலையாட்டியபடி ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
ரெவரெண்ட் ரொம்ப சாதாரணமான வசனங்களை தான் வாசித்தார். சாலமன் யாருடைய பிள்ளை என்பது
போன்ற எளிமையான கேள்விகளை கேட்டார். அதற்கு சிலர் பதிலளித்தார்கள். ”ஏசு அழைக்கிறார்”
பேச்சாளர்கள் போல் அவரிடம் உக்கிரமும் சரளமும் குரல் வளமும் போதவில்லை. கொஞ்சம் சொதப்பலான
கூட்டம் தான். இதன் பிறகு மேடையில் இரண்டு பெண்கள் வந்தார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த வறுமையில் உள்ள பெண்கள் என்பது அவர்களின் உடையை பார்த்தாலே தெரிந்தது. பயிற்சியில்லாத
நடிகர்கள். ஒருவரிடம் ரெவரெண்ட் “உனக்கு என்னம்மா உடம்புக்கு?” என்றார். அப்பெண் பார்க்க
ஆரோக்கியமாக வலுவாக தான் தோன்றினார். ஆனாலும் தனக்கு வயிற்று வலி என்றார். ரெவரெண்ட்
உடனே அவளைப் பிடித்துள்ள ஆவியிடம் பேச ஆரம்பித்தார். அப்பெண் தளர்ந்து பின்னே சாய்ந்தார்.
மீனைப் போல் துடித்தார். தயாராக பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் அவரை தளர்வாக
பற்றிக் கொள்ள அவர் தரையில் கால்களை உதறியபடி சாய்ந்து கொண்டு கத்தினார். பத்து நொடிகளுக்குள்
அந்த உடம்பை விட்டு போய் விடுவதாய் ஒப்புக் கொண்டார். அடுத்து உடனே நார்மலாகி எழுந்து
கடந்து போய் விட்டார். அடுத்து வந்த பெண்ணும் உடம்பு வலி என்றார். அதே கேள்விகள், அதே
அமெச்சூர் நடிப்பு. பார்வையாளர்கள் இதற்கெல்லாம் பழகி இருக்க வேண்டும். அவர்கள் இதெல்லாம்
தெரிஞ்சது தானே எனும் பாவனையுடன் பாலா படத்து கிளைமேக்ஸ் பார்ப்பவர்களை போல் தோன்றினர்.
இந்த பகுதியை கமல் ஏற்கனவே ஒரு
படத்தில் பகடி செய்திருப்பார். அது பகுத்தறிவாளரின் பார்வை. ஆவியெழுப்புபவரையும் அதில்
பங்கெடுப்பவர்களையும் மோசடிக்காரர்களாகவும் முட்டாள்களாகவும் பார்க்கும் தரப்பு. ஆனால்
மக்கள் முட்டாள்கள் அல்ல. மக்களுக்கு இது நாடகம் எனத் தெரியும். ஆனாலும் அவர்கள் அந்த
சில நிமிடங்கள் அதை நம்பி பங்கேற்க விரும்புகிறார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் 99%
நேரமும் நாம் பகுத்தறிவுக்கு அப்பால் தான் செயல்படுகிறோம்.
சமகால உளவியல் ஆய்வுகள் நம் அன்றாட
வாழ்க்கை பல்வேறு நாடகப் பகுதிகளால் ஆனது என்று பார்க்கிறது. ஒரு சர்ச்சையை எடுத்துக்
கொள்வோம். ஒரு பிரபல இலக்கியவாதியோ நடிகரோ அரசியல் தலைவரோ ஒரு கருத்தை கூறுகிறார்.
அதை ஏற்கனவே பலர் சொல்லி இருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட சந்தர்பத்தில் நாம்
அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அதில் ஈடுபட்டு அதை கடுமையாய் விமர்சித்து ஆதரித்தும் பேசுகிறோம்.
அது ஒரு அற்பமான பிரச்சனை என நமக்கு உள்ளூர தெரியும். ஆனாலும் அந்த சில மணிநேரங்கள்
அந்த நாடகீய காட்சியில் பங்கெடுத்து “சாமியாடி” முடித்து வெளியே வந்தால் நமக்கு ஒரு
திருப்தி, நிம்மதி, கிளர்ச்சி.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை பலவிதமான ஆட்கள்
வந்து சந்தித்து பேசிக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஒரு நண்பர்
வந்ததும் அரசியல், சமூகம் பற்றி கோபமாய் பேசுவார். அடுத்த நண்பர் வந்ததும் அங்குள்ள
மனநிலை உடனடியாக மாறி விடும். இவரைப் பார்த்ததும் அவர் பெண்களைப் பற்றியோ ஏதாவது நகைச்சுவையான
சம்பவம் பற்றியோ விசாரிப்பார். ரெண்டு பேரும் பத்து நிமிடம் சிரித்து பேசுவார்கள்.
அடுத்து என்னிடம் வந்ததும் நண்பர் சீரியஸான முகத்துடன் என்னைப் பற்றி தனிப்பட்ட அக்கறையுடன்
விசாரிப்பார். குரல் மென்மையாக முகத்தில் கனிவு சுடரும். நான் பேச்சை மெல்ல மெல்ல சூடாக்குவதற்கு
ஏதாவது ஒரு புத்தகம் பற்றி கேட்பேன். அதில் இருந்து ஒரு கருத்துக்கு நகர்வோம். பத்து
நிமிடங்கள் கவிதை, நாவல் என மிகவும் தீவிரமான விவாதத்துக்கு நகர்வோம். இதை ஒரு நாடக
அங்கத்தின் பல்வேறு தொடர் காட்சிகள் எனலாம். ஒவ்வொன்றிலும் என் நண்பர் உண்மையாகத் தான்
இருக்கிறார். யார் எப்படியான பாத்திரம், அங்கு என்ன வசனம் சொல்லி ஆரம்பிக்க வேண்டும்
என அவருக்கு தெரியும். அவ்வளவு வேகமாய் சுலபமாய் காட்சிக்கு காட்சி மாறுவது தான் அவரது
திறமை. நவீன உளவியல் இதை ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறன் என்கிறது. அன்றாட வாழ்க்கையில்
மகிழ்ச்சியான அனுபவங்கள் வேண்டுமென்றால் சந்திக்கிற மனிதர்களுக்கு ஏற்றபடி உரையாடலை
சுவாரஸ்யமாக்கவும் ஆளைப் பொறுத்து உக்கிரமான, லகுவான, ஆழமான, தீவிரமான, தீவிரமற்ற பல்வேறு
மனநிலைகளுக்குள் தாவிச் செல்லவும் தெரிய வேண்டும். நாம் சந்திக்கிற ஒவ்வொருவரும் ஒரு
பாத்திரம். நாம் அதன் வடிவத்தை பொறுத்து உருவம் பெறும் நீராக இருக்க வேண்டும்.
மாறாக பிடிவாதமாய் ஒரே மனநிலையில் இருக்கிறவர்கள்
உண்டு. யாரைப் பார்த்தாலும் தம் மனத்திற்குள் உழல்வதை பற்றியே பேசுவார்கள். இவர்களுக்கு
நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். தனிமையும் எரிச்சலும் அவர்களை துரத்தும். இறுக்கமாய்
தங்களுக்குள் சுருங்குகிறவர்களாக இருப்பார்கள். இப்படியும் இருக்கலாம் என்றாலும் ரத்த
அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய வியாதிகளுக்கு இது ”நல்லதல்ல”.
கடற்கரைக்கு வருகிற ஜோடிகள் உடனே
கைகளை கோர்த்துக் கொண்டு தோள்களை உரசியபடி நடப்பார்கள். தள்ளாடி கொஞ்சம் ஒருவர் மேல்
ஒருவர் விழுந்து விடுவார்களோ என்று கூடத் தோன்றும். இதே திருமணமான தம்பதிகள் என்றால்
கடற்கரையை அடைந்ததும் கைகளை விடுவித்து தனியே நடக்க ஆரம்பிப்பார்கள். இது சற்று விசித்திரமாக
தோன்றும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பத்து அடி இடைவெளியாவது வைத்துக் கொண்டு
உலாத்துவார்கள். அப்பெண் நடப்பதை பார்த்தால் கடற்கரையில் தொலைந்த யாரையோ தேடுவது போலக்
கூட தோன்றும். இந்த இரண்டு ஜோடிகளும் அந்த இடத்துக்கு வந்ததும் சட்டென ஒரு புது காட்சியின்
பாத்திரம் ஆகிறார்கள்.
சமூகம் வேறு வெளியிடங்களில் காதல் ஜோடிகள் அணுக்கமாய்
இருப்பதை அனுமதிக்காது. அதனால் கடற்கரைக்கு வந்ததும் அவர்கள் தம்மை புது நபர்களாக கற்பனை
பண்ணிக் கொள்கிறார்கள். அந்த இடம் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு அனுமதி
அளிக்கிறது. அவர்களால் அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கு அவர்கள் தொட்டுக்
கொள்ளாமல் நடந்தால் அது அவர்களுக்கே அபத்தமாய் இருக்கும். அந்த காட்சியில் அவர்கள்
சுதந்திரமான காதலர்கள். ஆனால் வீட்டுக்குள் சதா சேர்ந்திருக்கும் தம்பதியினருக்கு சுதந்திரமாய்
ஒருவரை ஒருவர் விட்டு விலகி இருக்க ஏக்கமாகிறது. வீட்டுக்குள் அவர்களே நினைத்தாலும்
அது முடியாது. அது உறவில் சிக்கலை உண்டு பண்ணும். ஆனால் கடற்கரையில் தனித்தனியாக நடக்கும்
போது தாம் திடீரென சுதந்திரமாய் இருப்பதாய் கற்பனை செய்து கொள்கிறார்கள். அந்த இடத்தில்
இருந்து அகன்றதும் அவர்கள் மீண்டும் தம்மை தம்பதி என “கற்பனை” செய்து அன்றாட வாழ்வின்
அணுக்கத்துக்குள் மீள்கிறார்கள்.
இப்படி காட்சி மாற்றத்துக்கு ஏற்ப
மாறுகிற திறனின் உச்ச கட்டத்தை இழவு வீடுகளில் பெண்களிடம் பார்க்கலாம். அங்கு பிரேதத்தின்
முன் நிற்கையில் அவர்கள் உணரும் துக்கம் உண்மையானது. அந்த கண்ணீரும் போலியானது அல்ல.
ஆனால் அது அவர்கள் தமக்குள் அடக்கி வைத்திருந்த வருடக்கணக்கான கண்ணீர், தம் மொத்த வாழ்வின்
இழப்புணர்வின் துக்கம். இதுவரை தம்மை விட்டு அகன்ற அப்பா, அம்மா, நண்பர்கள் என யார்
யாரோவுக்காக வெளிப்படுத்தியதில் தீராது மிட்டமிருக்கிற ஆழமான துயரம் அது. அங்கு அரை
மணி போல உண்மையாக இருந்து விட்டு வெளியே வந்ததும் சட்டென முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.
புன்னகைத்தபடி யாரிடமாவது குசலம் விசாரிப்பார்கள். பருப்பு நீரை அருந்தியபடி அதன் சுவையை
மனதுக்குள் சிலாகிப்பார்கள். ஒருவேளை இறந்து போனவரை பற்றி யாரிடமாவது ரெண்டு வார்த்தை
வையக் கூட செய்வார்கள். இந்த இரண்டு முரணான மனநிலைகளும் அவர்களைப் பொறுத்த மட்டில்
பொய்யற்றவை.
இனி அன்றாட வாழ்வின் பழக்கங்களுக்கு
வருவோம். சரியான நேரத்தில் எழுந்து தயாராகி உணவருந்தி ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்
அலுவலகம் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து அங்குள்ள நடைமுறைக்கு ஏற்றபடி நாம்
தினமும் இயங்குகிறோம். இது தேவை கருதி மட்டுமல்ல. இந்த ஒழுங்கில் ஏதாவது ஒன்று குலைந்து
போனாலும் நாம் தடுமாறி நிம்மதி இழந்து போவோம். அலுவலகத்திலும் வீட்டிலும் நம் உடல்
மொழியும் பேச்சு மொழியும் இருவேறாக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? நாம் முன்பு மாலைமலரில்
வேலை பார்க்கும் போது ஒரு நண்பர் இருந்தார். அவர் சனிக்கிழமை மாலை மட்டும் மதுவருந்துவார்.
நான் யோசிப்பேன்: ”ஏன் அவர் அதே மதுவை வெள்ளிக்கிழமையோ வியாழக் கிழமையோ அருந்தக் கூடாது?”
வெள்ளிழமைக்கும் சனிக்கிழமைக்குமான வித்தியாசம் பெயரளவில் தானே?
Routine எனும் இந்த வழமைகள் அடிப்படையில் நாடகப்பயிற்சிகளே.
இவை நமக்கு நம்மை ஒரு குறிப்பிட்ட ஆள் என நம்பவும் வேலைகளை லயித்து செய்யவும் ஒழுங்குக்குள்
இருக்கவும், மகிழ்ச்சியாக வாழவும் உதவுகின்றன. ஆறு மாத குழந்தையாக விளையாட துவங்குவதில்
இருந்தே ”வாழ்க்கை நாடக பயிற்சிகள்” ஆரம்பிக்கின்றன. குழந்தை தன்னை ஒரே நிமிடத்தில்
பல்வேறு ஆட்களாக கற்பனை பண்ணிக் கொள்கிறது. அதில் அவ்வளவு மகிழ்ச்சி உண்டு என உணர்ந்து
கொள்கிறது. வயதாக ஆக இந்த “கற்பனை பாத்திரங்களில்” ஒரு சிலருக்குள் மட்டும் தன்னை சுருக்கிக்
கொள்ள கற்கிறது. அதையே சமூகம் எதிர்பார்க்கிறது. அதுவே தன் ஆரோக்கியத்துக்கும் நல்லது
என அவன் புரிந்து கொள்கிறான்.
காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள்,
மதவாதிகள் போன்ற லட்சியவாதிகள் மட்டுமே வாழ்க்கை நாடகத்தில் ஒரே பாத்திரமாக எப்போதும்
இருக்க விரும்புகிறவர்கள். அதனாலே விரைவில் கேலிச்சித்திரம் ஆகி விடுகிறார்கள். இந்த
வாழ்க்கைத் திறன் அதிகமாய் வாய்க்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள். தனிப்பட்ட வாழ்வில்
மிகவும் நேசிக்கத்தவர்களாக நட்பார்ந்தவர்களாக அவர்கள் இருப்பதும் அதனாலே. ஒரு பொதுவான
அரசியல்வாதியிடம் நீங்கள் காரசாரமாய் விவாதிக்கலாம். அவரை திட்டலாம். கண்டிக்கலாம்.
கேலி செய்யலாம். ஆனால் விவாதம் முடிந்ததும் அவர் அதையெல்லாம் மறந்து மிகவும் ஜாலியாக
உங்களிடம் பேசுவார். கண்ணியமாய் நட்புணர்வுடன் பழகுவார். இதை நான் நடைமுறையில் பலமுறை
கண்டிருக்கிறேன். இதையே நீங்கள் ஒரு கராறான லட்சியவாதியிடம் எதிர்பார்க்க முடியாது.
கொஞ்சம் முரண்பட்டு பேசினாலும் உங்களை ஜென்மவிரோதி போல் நடத்துவார்கள்.
திராவிட கட்சிகள் இடையே கட்சி
தாவுகிறவர்களை கண்ணியமான கனிவுடன் ஏற்றுக் கொள்வதைப் போல கம்யூனிஸ்ட் கட்சி என்றும்
செய்யாது. வெளியே போனால் சாகும் வரை துரோகி தான். இது கம்யூனிசத்தின் பிரச்சனை அல்ல.
லட்சியவாத்தின் சிக்கல்.
லட்சியவாதிகள் என்றுமே துருபிடித்த பூட்டு போல் தாழ்ப்பாளோடே
இருப்பார்கள். பூட்டவும் முடியாது; திறக்கவும் முடியாது. காந்தியின் சுயசரிதையை படிக்கையில்
அவர் சின்ன சின்ன பிரச்சனைகளை கடந்து போக முடியாமல் எப்படி அதற்குள் மாட்டி அவதிப்பட்டுள்ளார்
என புரியும். ஒருமுறை அவரது அப்பா மரண படுக்கையில் இருக்கையில் காந்திக்கு காம உணர்வு
மேலிடுகிறது. நெருக்கடியின் போது இது இயல்பானது. காந்தி தன் மனைவியுடன் உறவு கொள்கிறார்.
அந்நேரம் அப்பா இறந்து போகிறார். இதை அறிந்து நேரிடும் காந்தியால் குற்றவுணர்வில் இருந்தும்
பாவ உணர்வில் இருந்து மீளவே முடியவில்லை. மன உழற்சியில் இருந்து விடுபட அவருக்கு நீண்ட
காலம் பிடித்தது. இந்த இடத்தில் ஒரு எளிய மனிதன் இருந்திருந்தால் மிக எளிதாய் உணர்வு
நிலை மாற்றங்களை கையாண்டிருப்பான். மனைவியுடன் இருக்கும் போது அவன் வேறு ஒரு ஆள். அவன்
மகன் அல்ல. அங்கிருந்து அப்பாவிடன் பிரேதத்திடம் செல்லும் போது அவன் மகன் ஆகிறான்.
இரண்டு வேறு வேறு காட்சிகள், இருவரும் வேறு வேறு பாத்திரங்கள். இதை அவன் உள்ளூர உணர்ந்து
சுலபமாய் தன் மனநிலையை மாற்றிக் கொண்டு வேகமாய் செயல்படுவான். தான் முரண்படுவதாய் அவன்
கருதவே மாட்டான். பொதுவாகவே பகுத்தறிவாதிகள், லட்சியவாதிகளை விட எளிய மக்களுக்கு வாழ்க்கை
திறன் அதிகம். தஸ்தாவஸ்கி தன் நாவல்களில் மீள மீள சொல்வது இதைத் தான். அவர் நாவல்களில்
கோயிலுக்கு வந்து சாமியாடும் எளிய பெண்களிடமும் தன்னை மறந்து அழுகிற ஆண்களிடமும் மட்டுமே
கடவுள் பளிச்சிடுகிறார்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட
ஆவியெழுப்புதல் கூட்டத்தில் மேம்போக்காய் ஒரு ஐரோப்பிய கிறுத்துவ தாக்கம் உண்டென்றாலும்
அடிப்படையில் அது ஒரு நாட்டார் கலை வடிவம் தான். ஊரில் நாம் கோயில் விழாக்களில் ஊரில்
யாரும் மதிக்காத பொறுக்கிகள் கூட திடீரென ஆவி புகுந்து சாமியாடுவதை பார்த்திருக்கிறோம்.
அந்த சில நிமிடங்கள் அவர் எல்லாருக்கும் கடவுளின் வடிவம் தான். ஆடி தளர்ந்ததும் தான்
அவரிடம் உள்ள சாராய நெடியை நாம் உணர துவங்குவோம். பழங்குடி சமூகங்களில் இத்தகையோரை
shamans என அழைத்தார்கள். கடந்த இருபதாண்டுகளில் தோன்றி பெரும் ஆன்மீக நிறுவனங்களாய்
வளர்ந்த அமிர்தானந்த மயி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ‘அம்மா’, நித்தியானந்தா,
ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் இந்த நாட்டார் மரபின் தொடர்ச்சி தான்.
இவர்களை நாம் ரமணர், காஞ்சி பெரியவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற சமிஸ்கிருதமயமான பெருமத
சாமியார்களிடம் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பெருமத சாமியார்கள் பொதுவாக
சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆகம ஒழுங்குக்கு வழங்கி இயங்குவார்கள். பாலியல் ஒழுக்கத்தை
கடைபிடிப்பார்கள். ஆனால் சிறுதெய்வ மரபை சேர்ந்தவர்கள் ஒரே நேரம் அன்றாட வாழ்வின் ஒழுங்கின்மையுடனும்
கடவுள் நிலையின் தூய்மையுடனும் இருப்பார்கள்.
அமிர்தானந்த மயி துவங்கி ஜக்கி வரை நான் குறிப்பிட்ட
வகை கார்ப்பரேட் சாமியார்கள் அடிப்படையில் நாட்டார் சாமியாடிகள் என்றாலும் அவர்கள்
நிறுவனமயமானதும் தம்மை பெருமத சாமியார்களாக காட்டிக் கொள்ள துவங்கினார்கள். இரண்டுக்கும்
இடைப்பட்ட சாமியார்கள் ஆனார்கள். அங்கு தான் சிக்கல் ஆரம்பித்தது. இவர்களின் முரண்பட்ட
வாழ்க்கை பகுத்தறிவாளர்களுக்கு அப்பட்டமான பாசாங்காக பட்டது. விமர்சனங்கள் கிளம்பின.
அமிர்தானந்த மயியின் முன்னாள்
சிஷ்யையான கெயில் டிரெட்வெல் தான் எழுதிய Holy Hell எனும் நூலில் இந்த முரண்பாட்டை
பற்றித் தான் அதிகமும் பேசுகிறார். அமிர்தான்ந்த மயி தன்னை கடவுளாக பிரகடனம் செய்கிறார்.
நம்புகிறார். ஆனால் அவர் கோடிக்கணக்கான பணமும் கிலோகணக்கில் நகைகளும் வைத்துள்ளார்.
பக்தர்களின் பணத்தை முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள், வணிக ஸ்தாபனங்கள் நடத்தி கொழிக்கிறார்.
அவர் தன் சீடர்களிடம் சில நேரம் மிகுந்த வன்மத்துடன் நடந்து கொள்கிறார். அவர்களை உதைக்கிறார்.
வசைச்சொற்களால் திட்டுகிறார். முக்கியமாய், ஒரு சீனியர் சீடருடன் அவர் வாய்வழி புணர்ச்சியில்
ஈடுபடுவதை கெயில் டிரெட்வல் பார்த்து விடுகிறார். கடவுள் நிலையில் உள்ளவர் எப்படி இது
போன்ற சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஆளாகி சீரழியலாம் என வினவுகிறார். முரண்பாட்டின்
உச்சத்தில் அவர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறுகிறார். உண்மைகளை ”வெளிப்படுத்தும்” முகமாய்
மேற்சொன்ன நூலை எழுதுகிறார். இதே போல ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பானதை ஒட்டி அறிவுஜீவிகளும்
முற்போக்காளர்களும் மீடியாவும் நித்தியானந்தாவின் முகத்திரை கிழிந்து விட்டதாய் கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த இரண்டு சம்பவங்களும் பக்தர்களை தீண்டவே இல்லை. நித்தியானந்தாவின் மீடியா
வெளிச்சம் குறைந்து விட்டாலும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
பங்காரு
அடிகளாருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் சம்மந்தமான ஊழல் வழக்கு ஒன்று
நினைவிருக்கும். வினவு இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை “அம்மாவையும்” அவரைப்
போன்ற பிற முதலாளித்துவ சாமியார்களையும் கடுமையாய் சாடுகிறது:
“ஆன்மீகம் என்ற
பெயரில் கடவுளுக்கு புரோக்கர் வேலை செய்யும் சாமியார்கள் பொறியியல் கல்லூரிகளையும்
மருத்துவக் கல்லூரிகளையும் ஆரம்பித்து மக்களைச் சுரண்டி வருகின்றனர். நிலங்களை
கைப்பற்றுவது, அதிகார வர்க்கத்தின் துணையை தேடிக் கொள்வது, அரசியல் கட்சி
ரவுடிகளுடன் பரஸ்பர சகாய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்று தமது செல்வாக்கை
வளர்த்துக் கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தின் சங்கர மடம், நிலங்களை வளைத்துப் போட்டு பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. இதே
போன்று அமிர்தானந்த மாயி, சாயி பாபா உள்ளிட்டு பல்வேறு கார்ப்பரேட் சாமியார்கள்
கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல
மடங்கு காணிக்கைகளை கொடுப்பதால் இவர்கள் தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர
வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் செய்து வருகின்றனர்.”
இந்த விமர்சனம் முக்கியமானது தான்.
ஆனால் முற்போக்காளர்கள் கருதுவது போல இது “கடவுள் பிஸினஸ்”, “புரோக்கர்” வேலை, “சுரண்டல்”
என்றெல்லாம் பொதுமக்கள் பார்க்கவில்லை.
ஒரு சாமியார் பெரும் நிறுவனங்களை நடத்தி கோடீஸ்வரர்
ஆவதோ, காரில் வலம் வருவதோ, ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதோ, ஆவியெழுப்பல் கூட்டத்தில்
ஆள் செட் பண்ணி நடிக்க வைப்பதோ, எதிர்ப்பவர்களை ரவுடிகளை வைத்து அடிப்பதோ எளிய பொதுமக்களுக்கு
ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. ஏனென்றால் பெருமத சாமியார்களூக்கான விதிமுறை ஒழுங்குகளும்
கட்டுப்பாடுகளும் இவர்களுக்கு தேவையில்லை என மக்கள் நினைக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கும்
பெண்ணை அடைவதற்கும் முயலும் போது இச்சாமியார்கள் சாதாரணர்கள். ஆனால் கடவுள் “புகும்
போது” அவர்கள் ‘அசாதாரணர்கள்’. மக்கள் இவர்களை கிராமத்து மந்திரவாதிகள், சாமியாடிகளின்
பிம்பத்தில் வைத்து கவனிக்கிறார்கள். அறிவுஜீவிகள் மட்டுமே பெருமத சாமியார்களோடு இவர்களை
குழப்பிக் கொள்கிறார்கள்.
பொதுவாக இது போன்ற பிரபல சாமியார்களின்
துவக்கம் எளிமையாக மிக சாதாரணமாய் இருப்பதும் இதனால் தான். நீங்கள் ஒரு ஆசிரமத்தில்
சேர்ந்து பயின்று மெல்ல மெல்ல முன்னேறி தலைமை துறவி ஆவது போலல்ல இது. இந்த நொடி நினைத்தால்
நீங்கள் உடனே உங்களை கடவுளாக கருதிக் கொள்ளலாம். சாமியாராக வாழலாம். இந்திய சமூகம்
உங்களை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளும். பணமும் மரியாதையும் அன்பும் வழங்கும். அமிர்தானந்த
மயியின் துவக்கம் இதற்கு சிறந்த உதாரணம். அவர் ஆரம்பத்தில் கிராமத்தில் ஒரு மீனவ குடும்பத்து
கொஞ்ச மனம் பிசகிய பெண். திருமணத்திலோ வேலையிலோ விருப்பம் இல்லாமல் தன் வீட்டு புழக்கடையில்
ஒரு கடவுளை நிறுவி வாராவாரம் பூஜை நடத்துவார். அப்போது அம்மனாக தன்னை அலங்காரம் பண்ணிக்
கொண்டு சன்னதம் வந்து ஆடுவார். வருகிறவர்களை தழுவிக் கொண்டு ஆசீர்வதிப்பார். ஆண்களை
மகனே என அழைத்து அருகே வைத்துக் கொள்வார். ஊரில் அவரது பூஜையில் ஒரு சிறு கூட்டம் கலந்து
கொள்ளும். வெளியூர்களில் இருந்து படித்த இளைஞர்கள் இக்கூட்டத்துக்கு வர ஆரம்பித்ததும்
தான் அமிர்தானந்த மயியின் தலைவிதி மாறியது. அவர் இதே சடங்கை, நிகழ்த்து கலையை அவர்களின்
துணையுடன் ஒரு பெரிய நிறுவனமாய் வளர்த்தெடுத்தார். இதற்காய் தன் சீடர்களுக்கு பயிற்சி
கொடுத்தார். தானும் ஆன்மீக நூல்களை பயின்று பேச கற்றுக் கொண்டார். ஆனாலும் பூஜையின்
போது அலங்காரம் செய்து தன்னை அம்மனாக பாவித்து சன்னத நடனம் ஆடுவதை அவர் நீண்ட காலம்
கைவிடவில்லை. கேரளா நகர்மயப்பட்ட நிலையில் அங்கு ஒரு கார்ப்பரேட் வடிவிலான நாட்டார்
சாமியாடியின் தேவை உருவாகிறது. அந்த வெற்றிடத்தை மயி கச்சிதமாய் பிடித்துக் கொள்கிறார்;
தமிழகத்தில் முழு சாமியாடிகளான மேல்மருவத்தூர் அம்மா போன்றோரும் செமி-சாமியாடிகளான
நித்தி, ஜக்கி போன்றோரும் அதே வெற்றிடத்தை நிரப்பினார்கள். இவர்களை நாடி வருகிறவர்களுக்கு
தம் சாமியார்கள் ”24×7 கடவுள்” அல்ல என தெரியும். சன்னதம் வரும் போது அவர்களிடம் கடவுள்
வெளிப்படுவதாய் நம்புவார்கள். அந்த சில நிமிட கடவுள் அனுபவத்துக்கு அப்பால் அவர்கள்
என்ன களியாட்டங்களில் ஈடுபட்டாலும் இந்திய மனதுக்கு பிரச்சனையில்லை. ஐரோப்பிய பகுத்தறிவு
கல்வி பெற்ற கெயில் டிரெட்வெல்லுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் தான் அது சிக்கல்.
நமக்கென ”பகுத்தறிவு சாமியாடிகளாக”
மருத்துவர்கள், உளவியலாளர்கள், எழுத்தாளர்கள், டி.வி அறிவுஜீவிகள் இருக்கிறார்கள்.
இவர்கள் பேசுவதை கேட்டால் ஆசுவாசம் கிடைக்கிறது. இவர்களை நம்பியபடி சமூக முன்னேற்றத்தின்
பகுதியாக நாமும் இருப்பதாய் கற்பனை செய்கிறோம். இவர்கள் “சரசம் சல்லாபத்தில்”, குற்றங்களில்
ஈடுபட்டதாயோ தம் முந்தின கருத்து நிலையில் இருந்து வழுவியதாயோ சர்ச்சை ஏற்பட்டால் வருந்துகிறோம்.
இவர்கள் ஏன் மாறாமல் உறைந்த நிலையில் இருக்க கூடாது என ஏங்குகிறோம். ஆனால் வாழ்க்கை
அப்படியானது இல்லையே!
நன்றி: உயிர்மை, மார்ச் 2016