கணினியில் நீளமான வாக்கியங்களை
வாசிப்பது சிரமம் என்பதாலே நாம் இன்று சிறு வாக்கியங்களாய் எழுதி பழகி விட்டோம். நீளவாக்கியங்கள்
இன்று அச்சிதழ்களில் கூட வழக்கொழிந்து விட்டன.
இதை நான் துல்லியமாய் உணர்ந்தது
சமீபத்தில் ஆண்டிராய்ட் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் எழுத ஆரம்பித்த போது தான். சமீபத்தில்
இரண்டு பத்து பக்க கட்டுரைகளின் பாதியை நான் செல்பேசியில் எழுதினேன். அப்போது என் வாக்கியங்கள்
மேலும் சின்னதாய் அமைவதை கவனித்தேன். குறிப்பாய் மிச்ச கட்டுரையை கணினியில் எழுதி முடித்த
பின் கட்டுரையின் முதல் பாதி அதன் வடிவத்தை பொறுத்து தனித்து இருப்பதை கவனித்தேன்.
மே மாத உயிர்மைக்கு “கடவுள் இருக்கிறாரா?” என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதன் ஆரம்ப
பத்திகளில் சொற்றொடர்கள் நறுக்கி தூவினது போல் இருக்கும். ஆனால் கணினியில் எழுதின பிற்பகுதியின்
வாக்கியங்கள் நீளமாக இருக்கும்.
நீளத்தை பொறுத்த மட்டில் கணினி நம் கட்டுரை, கதைகளின்
நீளத்தையும் தீர்மானிக்கிறது. ஒரு மணிநேரத்தில் இவ்வளவு எழுதலாம் என ஒவ்வொருவருக்கும்
ஒரு திறன் உள்ளது. அவ்வளவு எழுதினதும் இயல்பாகவே போதும் எனத் தோன்றி விடும். சோதித்துப்
பார்த்தால் சொற்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். பேஸ்புக்கில்
150 சொற்களில் எழுதுகிற ஒருவருக்கு அதற்கு மேல் எழுதினால் களைப்பாகும். இழுவையாய் தோன்றும்.
பிளாகில் ஐநூறு சொற்களில் எழுதுகிறவர்களுக்கு ஐநூறைத் தொட்டதுமே நிறுத்தத் தோன்றும்.
அச்சு பத்திரிகைக்கு கட்டுரை எழுதுகிறவருக்கு ஆயிரம் வார்த்தைகள் எழுதினதும் கை தானாகவே
நின்று விடும்.