வா.மணிகண்டனின் சமீபத்தைய பதிவில்
இருந்து….
“மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டு ‘அபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லை’ என்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.”
வா.மணிகண்டன் நிறைய விசயங்களில்
முன்னோடி. அவ்வப்போது கவிதை எழுதி ரகசியமாய் இலக்கிய எழுத்தாளராய் வாழ்ந்த அவர் தினமும்
இரண்டு பதிவுகள் எழுதி ஒரு பிரபல பிளாகராகி, அதில் இருந்து சமூக சேவகராகி … இப்படி
பல அவதாரங்கள். ஆரம்பிக்கும் எதையும் அரைகுறையாய் விடாமல் ஜெயித்துக் காட்டி விடுவார்.
நானெல்லாம் மொபைல் செயலிகளை இருட்டில் மின்மினிகளை பிடிப்பது போல் முயன்று கொண்டிருக்கும்
போது அவர் தன் நிசப்தம்.காமுக்கு என்று தனியே ஒரு செயலி ஆரம்பித்து பிளேஸ்டோரில் அறிமுகப்படுத்தினார்.
இப்போது தன் ”மூன்றாம் நதி” நாவலுக்கு ஒலிவடிவம் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மென்பொருள்
பயன்படுத்தி நாவலை ஒலிவடிவில் உருமாற்றி இருக்கிறார். எந்திரக் குரல் தான் என்றாலும்
என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் (இதன் தொடுப்பு
மணிகண்டனின் இணையதளத்தில்).
என்னுடைய நாவலையும் திருப்பதி
மகேஷ் போன்ற அவரது விழியற்ற நண்பர்கள் குறிப்பிட்டு அதற்கு ஒலி வடிவம் வராதா என கேட்டிருக்கிறார்கள்.
இனி அவர்களுக்காக. தில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக உள்ள ஒரு நண்பர் இருக்கிறார்.
பார்வையற்றவர். அபாரமான வாசகர். அவர் தி.ஜா ஆரம்பித்து சமீபத்தில் வந்த ”கறுப்பர் நகரம்”
வரை பல நாவல்களை ஒலி வடிவில் மாற்றி வைத்திருக்கிறார். எனக்கு கூட ஒரு பத்து ஒலி நாவல்களை
தரவிறக்கி கொடுத்தார். எந்திரக் குரல் அல்ல நிஜமான குரலால் வாசிக்கப்பட்ட நாவல்கள்.
இதற்கென வாசித்து பதிவு பண்ணி கொடுப்பதற்கு அவர் சென்னையில் ஒரு அணியை சேர்த்து வைத்திருக்கிறார்.
சமீபத்தில் என் “ரசிகன்” நாவலுக்கு ஒலிவடிவம் கொடுக்கப் போவதாய் சொன்னார். அவருக்கு
ஒரு சிறு சந்தேகம். “ஒரு பெண் தான் வாசிக்கப் போகிறார். அவருக்கு சங்கடம் ஏற்படுத்தும்
கசமுசா சமாச்சாரங்கள் ஒன்றும் நாவலில் வராதே?” என்று கேட்டார். எழுத்தாளன் என்று இதையெல்லாம்
ஒத்துக் கொள்ள போகிறான்? ”சேச்சே ரொம்ப சுத்தமான நாவலுங்க. குழந்தைங்களே படிக்கலாம்”
என்றேன். ”அது மட்டுமில்ல, இது முழுக்க ஆண்களின் உலகம் பற்றின நாவல் என்பதால் ஒரு பெண்
குரலில் இதை கேட்டால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும்”. அவரும் சமாதானமாகி போனை வைத்து
விட்டார்.
அரைமணிநேரம் கழித்த பிறகு தான் எனக்கே ஒரு விசயம்
உறைத்தது. புணர்ச்சியையும் உளவியலையும் தொடர்பு படுத்தும் ஒரு graphicஆன உரையாடல் நாவலின்
துவக்கத்தில் வருகிறதே என. அதற்கு ஒரு பின்னணி உள்ளது:
பொதுவாக பதின்வயது பையன்கள் கொஞ்சம்
வயதில் மூத்த அண்ணன்களிடம் நட்பு கொள்ளும் போது செக்ஸ் குறித்து பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
இது ஒருவிதம் என்றால் அறிவுஜீவிகள் இளைஞர்களை அதிர்ச்சியூட்டுவதற்காய் அவர்கள் எதிர்பாராத
வேளையில் செக்ஸ் பற்றி பட்டவர்த்தமாய் உரையாடுவார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்
தொண்ணூறுகளின் துவக்கத்தில் கல்லூரி மாணவராய் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை ஒருமுறை
குறிப்பிட்டார். நண்பர் அப்போது சென்னை பல்கலை கழக விடுதியில் இருந்தார். ஒரு மூத்த எழுத்தாளர் அடிக்கடி
விடுதிக்கு வருவாராம். நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்து புன்னகைத்திருக்கிறாரே ஒழிய பேசினதில்லை.
ஒருநாள் மூத்த எழுத்தாளர் நேராகவே நண்பரின் அறைக்கு வந்து உட்கார்ந்தார். பேசிக் கொண்டிருக்கும்
போது சட்டென கேட்டார் “நீங்கள் மாஸ்டர்பேஷன் பண்ணுவதுண்டா?”. அதன் பிறகு நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
”ரசிகன்” நாவலின் மையபாத்திரமான
சாதிக் கொஞ்சம் இப்படியான ஒரு அறிவுஜீவி. சின்னப் பையன்கள் சதா அவனோடே திரிவார்கள்.
கதைசொல்லி ஒரு பதின்வயதினன். அவன் சாதிக்கிடம் முதன்முதலாய் அறையில் பேசிக் கொள்ளும்
சந்தர்ப்பம் அது. அரசியல், தத்துவம் என பேசிக் கொண்டிருக்கும் போது சாதிக் ரொம்ப தீவிரமாய்
செக்ஸ் பற்றி பேச ஆரம்பிப்பான். இந்த இடத்தை அப்பெண் உரத்து வாசித்தால் எப்படி இருக்கும்
என எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அதன் பிறகு நண்பரை அழைத்து திருத்தினால் அது
சங்கோஜமாய் இருக்கும் என விட்டு விட்டேன்.
அதன் பிறகு ஒலி வடிவத்திற்கு என்ன
ஆயிற்று என தெரியவில்லை. அவர் பக்கம் இருந்து எனக்கும் அழைப்பில்லை. எதற்கு அமைதியான
குளத்தில் கல்லெறிய வேண்டும் என நானும் அமைதியாக இருந்து விட்டேன்.