தமிழ் ஹிந்துவில் ஜெயமோகன் தன்னை
கவர்ந்துள்ள சமகால புத்தகங்களின் ஒரு பட்டியலை தந்துள்ளார். வழக்கம் போல் முகநூலில்
அவரை வறுத்தெடுக்க துவங்கி விட்டார்கள். யமுனா ராஜேந்திரன் இரா.முருகவேள், லஷ்மி சரவணகுமார்
பெயரையெல்லாம் குறிப்பிட்டு ஜெயமோகன் எப்படி இவர்களை தவிர்த்து ஜெயமோகன் பட்டியல் வெளியிடலாம்
என சாடி உள்ளார். தொடர்ந்து ஜெயமோகனின் இந்துத்துவா, ஐ.எஸ்.ஐ.எஸ், ஏகாதிபத்திய, பாசிஸ
முகங்கள் எல்லாம் இப்பட்டியல் மூலம் பட்டவர்த்தமாகி இருப்பதாய் குறிப்பிடுகிறார்.
பட்டியல்கள் மீதான எத்தனையாவது
சர்ச்சை இது என யாருக்காவது கணக்கு இருக்கிறதா? அந்த கணக்கே ஒரு பெரும் பட்டியலாய்
நீளும்.
எனக்கு பட்டியல் இடுவதிலோ பட்டியலை
ஒட்டி வாசிப்பதிலோ நம்பிக்கையில்லை. அதை விளக்கி சில தனி கட்டுரைகளே எழுதியிருக்கிறேன்.
இப்போது எனக்கு வேறொரு விசயம் தோன்றுகிறது. ஒருவேளை நாம் பட்டியல்களிடம் இருந்து மிகையாய்
எதிர்பார்க்கிறோமோ?
உதாரணமாய், ஒரு பட்டியல் அனைத்து
முக்கியமான படைப்புகளை உள்ளடக்க வேண்டும், மனச்சாய்வு அற்றதாய் இருக்க வேண்டும் என
கோருகிறோம். ஆனால் அப்படி ஒரு பட்டியல் சாத்தியமா? நூலகம் போனால் கேட்டலாக் என ஒரு
தலையணை தடிமனுக்கு ஒரு நூல் பட்டியல் கொடுப்பார்கள். அதில் மட்டுமே மேற்சொன்னது சாத்தியம்.
ஏன்?
எந்த தமிழ் எழுத்தாளனும் சார்புநிலை
கொண்டவனே. பல்வேறு அரசியல், கலாச்சார, தனிப்பட்ட காரணங்களுக்காய் சில படைப்புகளை பிடிக்கிறது,
சிலவற்றை பிடிப்பதில்லை. சில புத்தகங்கள் பரவாயில்லை என தோன்றும். மனம் ஊசலாடிக் கொண்டே
இருக்கும். அந்த படைப்பாளி நம்மிடம் தனிப்பட்ட முறையில் கனிவாய் நடந்து கொண்டால் நடுநிலையாய்
இருக்கும் மனம் சட்டென அவர் பக்கம் ஒரேயடியாய் சாய்ந்து விடும். பரவாயில்லை என்பதற்கு
பதில் பிரமாதம் என்ற சொல் வரும். இது மனித இயல்பு அல்லவா? சொந்த ஊர்க்காரர் எழுதிய
படைப்பு மேல், சொந்த சாதியின் கதையை நேர்த்தியாய் சொன்னதனால், இணக்கமான அரசியல் நிலைப்பாடு
கொண்டிருப்பதனால், ஒரே இலக்கிய குழுவில் இருப்பதனால் என பல காரணங்களுக்காய் நமக்கு
ஒரு புத்தகம் பிரியமானதாய் ஆகலாம்.
இறுதியாய் ரசனை. புத்தகங்களை பொறுத்து
ரசனை எப்படியெல்லாம் மாறுபடும் என்பது விசித்திரமானது. நான் பொதுவாய், புத்தகங்களை
பற்றின என் மாற்றுக்கருத்துக்களை நண்பர்களிடம் சுலபத்தில் சொல்ல மாட்டேன். அவர்களை
திட்டினால் கூட பொறுத்துக் கொள்வார்கள்; அவர்களுக்கு பிடித்தமானவர்களின் படைப்பை நிராகரித்தால்
சட்டென அவர்களுடனான உறவில் ஒரு கசப்பு தோன்றி விடும். அந்த வருத்தம் சுலபத்தில் மறையாது.
இரண்டு தேர்ந்த வாசகர்களுக்கு ரசனையில் முழுக்க மாறுபட்ட தன்மைகள் இருக்கும். ஒருவர்
அபாரமான சாதனை என்பதை இன்னொருவர் குப்பை என்பார். ரசனையை பொறுத்தவரை பொதுவான அளவுகோலே
இல்லை. அவரவருக்கு ஒரு அளவுகோல்.
சரி இனி ஜெயமோகனுக்கு வருவோம்.
அவருடைய பட்டியல்களை அவரது அடிப்படையான மன இயல்பை கொண்டு தான் நாம் மதிப்பிட வேண்டும்.
அவர் உணர்ச்சிகரமானவர். கொந்தளிப்பானவர். சட்டென நெகிழ்ந்து பாகாய் உங்கள் மீது சொட்டுவார்.
அடுத்த நிமிடமே தீப்பிழம்பாய் எழுந்து சுடுவார். அவர் தீவிரமான மனச்சாய்வுகள் கொண்டவரும்
தான். அவருடன் தனிப்பட்ட பிணக்குகள் கொண்டவர்களது படைப்புகளை அவர் நிச்சயம் கொண்டாடப்
போவதில்லை. அதேவேளை தனக்கு நெருக்கமாய் பிரியமாய் உள்ளவர்களை தோளில் வைத்து கொண்டாடவும்
தவற மாட்டார். அவர்களின் வளர்ச்சி மீது தனி அக்கறையும் காட்டுவார்.
நான் சிறுகதைகள் எழுதத் துவங்கிய
காலத்தில், அதாவது பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரியில் நுழையும் பருவத்தில், என் படைப்புகளை
அவரிடம் படிக்க கொடுப்பேன். “நிழல்” என்றொரு சிறுகதை. கொஞ்சம் கவித்துவமான ஆனால் முதிர்ச்சியற்ற
கதை. அதன் நிறைகுறைகளை என்னிடம் அலசி விளக்கினார் ஜெயமோகன். சரி அவருக்கு பிடிக்கவில்லை,
இனி கதை கிதை என அவரை தொந்தரவு பண்ணக் கூடாது என நினைத்தேன். அப்போது அவர் ”சொல் புதிது”
என ஒரு பத்திரிகை நடத்தினார். என்னிடம் சொல்லாமலேயே அக்கதையை பிரசுரித்தார். ஒருநாள்
”உங்கள் கதையை பிரசுரித்திருக்கிறேன் பாருங்கள்” என்று இதழை நீட்டினார். அடுத்த மாதம்
அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் “உங்கள் கதையை பாராட்டி ஒரு கவிஞர் கடிதம்
போட்டிருக்கிறார். ஆனால் அது மிகையாக இருக்கிறது. அதனால் கடிதத்தை நான் பிரசிரிக்க
போவதில்லை”. அக்கதையை ஜெயமோகன் அதன் தரத்துக்காக பிரசுரிக்கவில்லை என எனக்குத் தெரியும்.
என் மீதுள்ள பிரியத்தினாலும், என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தினாலும்
மட்டுமே அவர் அதை பிரசுரித்தார்.
அதன் பிறகு அப்பத்திரிகை சில மாதங்கள் மட்டுமே வெளிவந்து
நின்று போய் விட்டது. நானும் படிக்க சென்னைக்கு சென்று விட்டேன். அவருக்கு அடிக்கடி
போன் செய்து பேசுவேன். அப்போது நான் எழுதிய “ராஜியின் அப்பா” எனும் கதையை அவருக்கு
அனுப்பினேன். அவர் படித்து விட்டு “மாந்திரிக எதார்த்தக் கதை எழுதுவது சுலபம். ஆனால்
உண்மையான சாதனை எதார்த்த கதை வடிவம் தான். அதனால் உன் எழுத்து பாணியை மாற்று” என்றார்.
சரி அவருக்கு கதை உவப்பாக இல்லை போல என நினைத்துக் கொண்டேன். ஆனால் அக்கதையையும் அவர்
ஒரு இணையதளத்துக்கு அனுப்பி பிரசுரிக்க வைத்தார். (அந்த இணையதளம் சில மாதங்களிலேயே
நின்று போனது)
அந்த காலத்தில் நான் வேறு பல மூத்த
எழுத்தாளர்களிடம் பேசி இருக்கிறேன். என் கதைகளை படிக்க கொடுத்திருக்கிறேன். பலர் கருத்து
சொல்ல மாட்டார்கள். நம் எழுத்து பிரசுரமாவது பற்றி அக்கறை காட்டுவது போகட்டும் எழுத
ஊக்குவிக்கவே மாட்டார்கள். நான் சுந்தர ராமசாமியிடம் என் படைப்புகள் பற்றி பேசி இருக்கிறேன்.
படிக்க கொடுத்திருக்கிறேன். நாசூக்காய் தன் கருத்தை சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்வார்.
சில எழுத்தாளர்கள் புதிராக புன்னகைப்பார்கள். சிலர் ஏன் இந்த சின்ன வயதிலேயே எழுத வருகிறீர்கள்,
அனுபவம் சேரட்டுமே என கண்டிப்பார்கள். ஜெயமோகன் திட்டுவார். ஆனால் நீங்கள் எழுதுவதை
தன் படைப்பாய் பாவித்து முன்னெடுப்பார். அதற்கு ஒரே நிபந்தனை நீங்கள் அவரிடம் காதலைப்
போன்ற ஒரு நட்புறவை தக்க வைக்க வேண்டும். அவர் பெயரைக் கேட்டாலே பாகாய் உருக வேண்டும்.
அவர் சொற்களை கையில் ஏந்தி தொட்டு வருடி மகிழ வேண்டும். நீங்கள் அவரிடம் கையளவு அன்பைக்
கொடுத்தால் அவர் கட்டாற்றை போல் உங்கள் மேல் பிரவாகித்து மூழ்கடிப்பார். இதை நீங்கள்
அவரால் பலன் அடைந்தவர்கள் எவரிடம் கேட்கலாம். அவர் பற்றிய நினைவுகளின் நெகிழ்வு இன்றி
அவர்களால் பேச முடியாது.
இந்த வகையறாவில் வருகிற எழுத்தாளர்கள்
படைப்புகளை ஜெயமோகன் கட்டுரைகளில் குறிப்பிட்டு பாராட்டுவார். பட்டியலில் கொண்டாடுவார்.
நேரில் குறிப்பிடுவார். இதை தர்க்கரீதியாய் புரிந்து கொள்ள முயலக் கூடாது.
அடுத்து ஜெயமோகனின் மதிப்பீட்டு
முறை. நான் இளம் வயதில் ஒருமுறை அவரிடம் “தமிழில் முக்கியமான படைப்பாளிகள் யார்?” என
போகிற போக்கில் கேட்டேன். ஜெயமோகன் உடனே ஒரு காகிதத்தை உருவி அறுபது படைப்பாளிகள் மற்றும்
படைப்புகளின் பெயர்களை எழுதி நீட்டினார். அவர் எழுதின வேகத்தை பார்த்து அசந்து விட்டேன்.
இரண்டு நிமிடங்கள் கூட இராது. அந்த காகிதம் இப்போதும் என் கோப்பில் இருக்கிறது. அதிலுள்ள
பெரும்பாலான படைப்புகளை அடுத்த வந்த நாட்களில் மாதங்களில் படித்தேன். பேச்சிடையே அவர்
குறிப்பிட்ட நூல்களையும் தேடிப் படித்தேன். ஆனால் கவிஞர்களைத் தவிர ஜெயமோகன் பரிந்துரைத்த
பெரும்பாலான படைப்பாளிகள் எனக்கு ஏமாற்றம் அளித்தனர். அக்காலத்தில் என் வேலையே அவரை
தினமும் சந்தித்து அவர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட புத்தகம் எனக்கு ஏன் பிடிக்கவில்லை
என அவரிடம் சர்ச்சிப்பது தான். இரண்டே படைப்பாளிகளை மட்டுமே நாங்கள் இருவரும் மாற்றுக்கருத்தின்றி
கொண்டாடினோம். ஒன்று தல்ஸ்தாய். இன்னொன்று, சந்தேகமேயின்றி, ஜெயமோகன்.
ஜெயமோகனுக்கு அடுத்த படியாய் எனக்கு அப்போது பிடித்த
படைப்பாளிகளாய் எஸ்.ராவும் கோணங்கியும் இருந்தனர். இவர்கள் மூவரும் கவித்துவமான நடை
கொண்டவர்கள். வரலாறு, தத்துவம் என கதையை இன்னொரு தளத்துக்கு நகர்த்துபவர்கள். நான்
படித்த எதார்த்தவாத எழுத்தாளர்களை இவர்களோடு ஒப்பிட்டு நிராகரிப்பதே என் அப்போதைய அஜெண்டா.
குறிப்பாய் தோப்பில், அ.மாதவன், நீலபத்மநாபன் ஆகியோரின் நாவல்களை வெறும் கதைகள் என
சாடுவேன். கதை என்றால் அதில் காட்சிபூர்வ சித்தரிப்புகள், உளவியல் ஆழம், மெட்டாபிசிக்கல்
தன்மை, பரிட்சார்த்த முயற்சிகள், நளினம், ஸ்டைல் ஆகியவை கட்டாயம் வேண்டும் என நான்
பிடிவாதமாய் இருந்தேன். எஸ்.ராவின் ஒவ்வொரு வரியும் படிக்க அவ்வள்வு கிறக்கமாய், புதிதாய்,
அந்தரங்கமாய் இருக்கும். ஏன் நீலபத்மநாபன் அப்படி இல்லை என கோபமாய் வரும். நான் அவர்களை
கரித்துக் கொட்டுவதை ஜெயமோகன் பொறுமையாய் கேட்டு புன்னகைப்பார். பிறகு சொல்வார் “எதார்த்தவாத
எழுத்துக்கு என்று ஒரு அழகியல் உண்டு. ஒரு படைப்பில் நமக்கு சில நல்ல அவதானிப்புகள்,
தருணங்கள், சமூகம் பற்றின குறுக்குவெட்டு தோற்றம் கிடைக்க்கலாம். அவையே அப்படைப்பை
பொருட்படுத்த போதுமானது” என்பார். நான் இதை பத்து வருடங்கள் கழித்து ஓரளவு உண்மை என
ஏற்றுக் கொண்டேன்.
ஆனால் இன்றும் எனக்கு நீலபத்மநாபன்,
அ.மாதவன் போன்றோரை முக்கிய இலக்கிய படைப்பாளிகளாய் ஏற்க தயக்கம் உள்ளது. எனக்கு “பள்ளிகொண்டபுரம்”
படிக்கும் போது “போரும் அமைதியும்” நாவலின் ஒரு சிறு அத்தியாயத்தின் எளிய வடிவம் அது
எனத் தோன்றும். இதே போன்ற ஒரு துரோகத்தை பியரின் வாழ்வில் எவ்வளவு நுணுக்கமாய் தல்ஸ்தாய்
சித்தரித்திருப்பார் எனத் தோன்றும். நான் இன்றும் ரொம்ப கராறான ஒரு வாசகன். ஆனால் ஜெயமோகன்
மிக நெகிழ்வான ஒரு வாசகர். ஒரு புத்தகம் மொழியில் சில பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது,
அது இதுவரை அறியப்படாத ஒரு சமூக வாழ்வை முன்வைக்கிறது, வாழ்வின் ஒரு முக்கிய பரிமாணம்
மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது என சில காரணங்களைக் கொண்டு அதை தன் பட்டியலில் சேர்ப்பார்.
ஒரு சின்ன நேர்மறை அம்சத்துக்காக அதன் பற்பல குறைகளை மன்னிக்க தயாராக இருப்பார். சிலநேரம்
ஒரு படைப்பை வரலாற்றுரீதியான முக்கியத்துக்காகவும் கூட பாராட்டுவார்.
”ஆழிசூழ் உலகு” வெளியாகுவதற்கு
முன்பு ஒருமுறை நான் ஜெயமோகனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ஜோ டி
குரூஸ் எதேச்சையாய் அந்நாவலை எழுத நேர்ந்த கதையை குறிப்பிட்டார். அவர் அந்நாவலின் புரூப்பை
படித்திருக்கிறார். பிறகு சொன்னார் ”தமிழில் புழக்கத்தில் இல்லாத நூற்றுக்கணக்கான்
கடல்சார் சொற்கள் இந்நாவலில் வருகின்றன. எந்த இலக்கிய பழக்கமும் இல்லாத குரூஸ் எழுதிய
இந்த முதல் நாவல் வெளியான உடன் தமிழின் மிகச்சிறந்த நாவலாய் இருக்கும் பாருங்கள்”.
நான் ஒருபோதும் புதிய அரிய சொற்களுக்காய் ஒரு நாவலை சிறந்தது என மதிப்பிட மாட்டேன்.
ஆனால் ஜெயமோகன் செய்வார். அவர் மிக தாராள மனம் கொண்ட ஒரு விமர்சகர்.
இறுதியாய் ஜெயமோகனின் மற்றொரு
இயல்புக்கு வருவோம். இதுவும் அவரது பரிந்துரைகளை தீர்மானிக்கிறது. அவர் ஒரு நிலப்பிரபுத்துவ
தந்தையின் மனநிலை கொண்டவர். குறிப்பாய் விவிலியத்தில் வரும் ஊதாரி மகன் (prodigal
son) கதையில் வரும் அப்பாவைப் போன்றவர். அக்கதையில் அப்பா தன் சொத்தை தன் இரண்டு மகன்களுக்குமாய்
சமமாய் பிரித்தளிப்பார். இளைய மகன் ஊதாரி. பணத்தை வீணடித்து ஏழ்மையில் அடிபட்டு கடைசியில்
பன்றி தொழுவத்தில் வாழும் நிலையை அடைவான். மூத்த மகனோ பணத்தை கவனமாய் பொறுப்புணர்வோடு
கையாள்வான். அப்பாவின் பண்ணையில் கடுமையாய் உழைப்பான். அவரிடம் மிகுந்த விசுவாசமாய்
இருப்பான். ஆனால் அப்பா அவனை பாராட்ட மாட்டார். ஒருநாள் ஊதாரி மகன் பரதேசியாய் வீட்டுக்கு
திரும்புவான். அப்பா அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவனுக்கு நல்ல ஆடைகள் அணியக் கொடுத்து
ஆடு மாடு கோழி அடித்து விருந்தளிப்பார். இதைக் கண்டு எரிச்சலாகி மூத்த மகன் அவரிடம்
இதென்ன வித நியாயம் என வினவுவான். அப்பா அவனிடம் சொல்வார் “மகனே நீ எப்போதும் என்னுடனே
இருக்கிறாய். எனக்கு உள்ளது எல்லாம் உனக்குத் தான். ஆனால் உன் தம்பி அப்படி அல்ல. அவன்
செத்து பிழைத்திருக்கிறான். அவன் தொலைந்து மீண்டிருக்கிறான். எனக்கு அதனாலே அவன் மீது
அன்பு அதிகம்”.
இந்த அப்பாவுக்கு தன் பலவீனமான
பிள்ளை மீது தான் அன்பு மிகுதி. ஜெயமோகனும் அப்படித் தான். பலவீனர்களைப் பார்த்தால்
அவரது இருதயம் பலவீனம் ஆகி விடும்.