வியாசரின் மகாபாரத்தின் மொழியாக்கம் ஒன்றை படித்துக்
கொண்டிருக்கிறேன். அதில் தன் தேரோட்டியான சால்ய மன்னர் பற்றி கர்ணன் சொல்வதாய் ஒரு
அடைமொழி: ”மித்ர முக சத்ரு”. அதாவது நண்பனின் முகம் கொண்ட எதிரி. படித்ததில் இருந்து
மனம் அதையே சுற்றிக் கொண்டிருக்கிறது. சால்ய மன்னர் கர்ணனோடு இருந்தாலும் அவர் மனம்
பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்றே ஏங்குகிறது. அதனால் அவர் போரின் போது கர்ணனை ஊக்கம்
குன்ற செய்யும் நோக்கி தொடர்ந்து மட்டம் தட்டி பேசுகிறார். அப்போது தான் கர்ணன் இவ்வாறு
அவரை குறிப்பிடுகிறான்.
-
மித்ர முக சத்ரு சாத்தியம் என்றால் எதிரியின்
முகம் கொண்ட நண்பனும் இருக்க வேண்டுமே. அவர்கள் யார்? போர்க்களத்தின் இரு பக்கமும்
நிற்கும் பாணடவர்களுக்கும் கௌரவர்களூக்கும் பரஸ்பரம் எதிரி முகம் கொண்ட நண்பர்கள் தாம்.
முகங்களை தாண்டி பார்ப்பது தான் நமக்கு எவ்வளவு சிரமம்? முகங்களுக்ககாவே நாம் மோதி
மோதி அழிகிறோம்