இன்று மதியம் அடையார் நோக்கி சென்று
பைக்கில் கொண்டிருந்தேன். சாலை கிட்டத்தட்ட காலி. சின்னமலை சிகனலில் வழக்கமாய் வாகனங்கள்
இரண்டு கிளைகளில் இருந்து ஒரே நேரம் மோதுவது போய் பாய்வார்கள். இன்று ஒரு போக்குவரத்து
காவலர் மெயின் கிண்டியில் இருந்து வருகிற வாகனங்களை தடுத்தி நிறுத்தி என்னை போக அனுமதித்தார்.
எனக்கு ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. எப்போதும் ரெண்டு பக்கத்தில் இருந்து சாலையில்
பாய்கிற பொதுமக்கள், இடம் வலம் என கண்டமேனிக்கு திரும்பும் பைக்குகள் பற்றி அஞ்சிக்
கொண்டே ஓட்டுவேன். இன்று யாருமே குறுக்கிட வில்லை. குறிப்பாய் அண்ணா பல்கலைக்கழக சிக்னலில்
சாலை குறுக்கே பாய தயாராக தற்கொலை படை போல நிற்கும் ஐம்பது பேரை யாரோ ஒருவர் தடுத்து
நிறுத்தி வைத்திருந்தார். அவர்களும் பொறுமையாய் நின்றிருந்தனர். அப்போது தான் எனக்கு
தோன்றியது. என்ன இவ்வளவு ஒழுங்கது, ஒரே நாளில் நம் நாடு சிங்கப்பூர் ஆகி விட்டதா?
தடையின்றி நிம்மதியாய் மத்திய கைலாஸ் சிக்னலை அடைந்த
போது சாலையில் நானும் எனக்கு பின்னால் மற்றொரு பைக் மட்டுமே. போக்குவரத்து காவலர் ஒருவர்
என்னை நோக்கி எதுவோ சொன்னார். எனக்கு புரியவில்லை. அதன்பிறகு அவர் ரொம்ப பதற்றமாய்
எனக்கு காதுகேட்காதா என சைகை மொழியில் கேட்டார். ஹெல்மட் காரணமாய் உண்மையிலே கேட்கவில்லை.
ஒதுங்கு என மீண்டும் சைகை காட்டி முகத்தை அஷ்டகோணலாக்கினார். நானும் ஒதுங்கினேன். அப்போது
என்னை கடந்து நான்கு போலீஸ் வாகனங்களும் நடுவில் ஒரு ஆம்புலன்ஸும் போனது. அவர்கள் போய்
முடிந்த பின் சாலை பழையபடி தேனிகூட்டை கலைத்தது போல் ஆனது.
என் ஊர் சில நிமிடங்களாவது சிங்கப்பூர் ஆக ஒரு விஐபி
உடல் நலமிழந்து ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக வேண்டி இருக்கிறது.