நேற்று ஒரு நண்பருடன் அதிமுகவின்
எதிர்பாராத வெற்றி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் இம்முறை கொங்கு வேளாள
கவுண்டர்கள் ஜெயாவுக்கு கொடுத்துள்ள பெரும் ஆதரவு எப்படி இவ்வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது
என குறிப்பிட்டார். இதனுடன் எப்போதும் அதிமுகவுக்கு இணக்கமான தேவர்களின் வாக்குகளும்
பெருவாரியாய் சேர்ந்து கொள்கின்றன. ராமதாஸுக்கு போக வேண்டிய வன்னியர் வாக்குகளையும்
ஜெயலலிதா இழுத்துக் கொள்கிறார்.
நண்பர் சொன்னார் “இளவரசனையும் கோகுல்ராஜையும் பலி
கொடுத்த குருதி கொண்டு தான் இத்தேர்தலில் அவர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்”. கடந்த
சில ஆண்டுகளில் வன்னியர்கள், கௌண்டர்கள், தேவர்கள் ஆகியோருக்கு இருந்த பிரதான கவலை
மாற்று சாதி திருமணம் அல்லது காதல். தம் பெண்கள் தலித்துகளால் கவரப்படுகிறார்கள் எனும்
பீதி. இதை முதலீடாக்கி சாதிய அமைப்புகள் வன்முறையை தூண்டுகின்றன. ஆணவக்கொலைகள் செய்கின்றன.
ஆணவக் கொலைகள் இங்கு ஆண்டாண்டு காலமாய் நடக்கின்றன தாம். ஆனால் அதிமுக ஆட்சியில் தான்
மொத்த தமிழகத்துக்கே காட்சிப்படும்படியாய் அது பொதுவெளியில் வைத்து நிகழ்த்தப்படுகிறது.
அதை முன்வைத்து எண்ணற்ற மத்திய சாதியினர் ஒரு புள்ளியில் திரட்டப்படுகிறார்கள். இவ்வளவு
வெளிப்படையாய் ஆணவக்கொலைகளை நிகழ்த்தியதும் மிரட்டல்கள் விடுத்ததும் கொலைகளை செய்தவர்கள்
துணிச்சலாய் மீடியாவுக்கு பேட்டி கொடுத்ததும் பொதுமேடைகளில் ”தலையை வெட்டுவேன்” என
ஆரவாரிப்பதும் நடந்தது. அரசு ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்தது. இதன் பின்னால் அதிமுக
அரசின் ஒரு தெளிவான திட்டம் இருந்தது.
ஆணவக்கொலை குற்றவாளிகளை உடனடியாய்
தண்டிக்கவோ கலவரச் சூழலை அடக்கவோ செய்யாமல் இம்மூன்று சாதிகளுக்கும் ஜெயலலிதா ஒரு மறைமுக
செய்தி விடுத்தார்:“ பிள்ளைக்ளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு தாய்க்கு தான்
தெரியும். ஆகையால் பிள்ளைகளே நீங்கள் துணிச்சலாய் விளையாடுங்கள். இந்த தாய் தடுக்க
மாட்டேன்” இந்த “பேருதவிக்கு” பதிலாகத் தான் ஆதிக்க சாதியினர் அதிமுகவுக்கு பெருவாரியாய்
ஓட்டளித்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு பின்னால் எத்தனையோ
பேரின் அழுகுரல்களும் அப்பாவிகளின் குருதியும் மறைந்துள்ளன.