சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில்
கறுப்பர்கள் போராட்டம் நடத்தியது நினைவிருக்கும். அப்போது அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு
எதிரான புரட்சி என உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதினார். அமெரிக்கா அதற்கு பின்
ஏகாதிபத்தியத்தை வேறறுத்து சோஷலிஸ நாடானதா என்பதை நான் தினமும் டிவியிலும் தினசரிகளிலும்
தேடி வருகிறேன். மீடியா என்பது முதலாளித்துவ கூலிகளின் கூடாரம் அல்லவா. அவர்கள் நான்
தேடும் அந்த செய்தியை தவிர வேறு எல்லா தறுதலை மேட்டர்களையும் வெளியிடுகிறார்கள்.
ஆறு வருடங்களுக்கு முன்பு துனிசியா, லிபியா, சிரியாவில்
நடந்த போராட்டங்களையும் அரேபிய வசந்தம் என தோழர்கள் கொண்டாடினார்கள். அரபு தேசம் முழுக்க
புரட்சி மலர்ந்து விட்டது என்றார்கள். ஆனால் அமெரிக்கா அப்படியே தான் இருக்கிறது.
”புரட்சி மலர்ந்த” நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. மீடியா அந்நாடுகள் இப்போது
”அரேபிய பனிக்காலத்தில்” இருப்பதாய் கூறுகின்றன.
அதன் பிறகு இந்தியாவில் நிர்பயா கொல்லப்பட்ட போது
பல வாரங்கள் மாணவர் போராட்டங்களால் தில்லி ஸ்தம்பித்தது. அப்போது பெண்கள் மீதான குற்றங்களுக்கு
முடிவு வந்து விட்டது பார் என பேசினார்கள். அதன் பிறகு ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலை மற்றும்
ஜெ.என்.யு மாணவர் போராட்டங்கள் இந்துத்துவாவுக்கு எதிராய் மாணவர் தலைமுறை திரண்டு எழுந்து
விட்டதாய் முழங்கினார்கள். அறுபதுகளின் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல மாணவர் சமூகத்தின்
மனசாட்சியை தட்டி எழுப்பி அவர்களை அரசியல்படுத்திய ஒரு மைல்கல் நிகழ்வு இது என ஒரு
இலக்கிய பத்திரிகையில் ஒரு மூத்த எழுத்தாளர் எழுதிக் கூட படித்தேன். ஆனால் பெண்களுக்கு
இன்றும் தில்லியில் பட்டப்பகலில் கூட பாதுகாப்பில்லை. மாணவர்கள் எந்த அரசியல் ஆர்வமும்
அற்றவர்களாகத் தான் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். 99% பேர் பத்திரிகையே படிப்பதில்லை.
எது எப்படியோ ஒவ்வொரு ஆறு மாதமும்
தோழர்கள் புரட்சி பற்றின செய்திகளை நமக்கு தர தவறுவதில்லை. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.
அவன் ஒரு சுவிசேச பேச்சாளரின் தீவிர விசிறி. அவர் தோன்றும் கூட்டங்களை தவற விட மாட்டான்.
அவன் சொல்வான் “அவர் ஏசு இதோ வந்து விட்டார் என கூறும் போது ஏசு இதோ நம் பக்கத்தில்
வந்து நிற்பது போல் தோன்றும்”. எனக்கும் தோழர்கள் புரட்சி பற்றி பேசும் போது அப்படித்
தான் தோன்றும்!