நான் ஜெயமோகனை பகடி செய்யத் தான்
அக்கட்டுரை எழுதினேனா என ஒரு நண்பர் சாட்டில் வந்து கேட்கிறார். எனக்கு அப்படியான நோக்கம்
ஏதும் இல்லை. (சில நேரம் கைமீறி சற்று கிண்டல் என் எழுத்தில் நுழைந்து விடுகிறது. அதற்கு
துர்நோக்கம் ஒன்றுமில்லை.) புத்தக பரிந்துரைகளை எதார்த்தமாய் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதே என் அவா. நாம் நீண்ட காலமாய் அப்பழுக்கற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டியல்கள்
உருவாகின்றன என நம்பி வருகிறோம். அதனால் இந்த எழுத்தாளரை ஏன் குறிப்பிடவில்லை, இவரை
எப்படி பரிந்துரைக்கலாம் என சர்ச்சிக்கிறோம். எழுத்தாளர்கள் துர்பலமான மனம் கொண்டவர்கள்.
உணர்ச்சி அலையில் தத்தளிப்பவர்கள். அவர்களால் புத்தகங்களை தர்க்கரீதியாய் கராறாய் மதிப்பிட
இயலாது. ஒரு எழுத்தாளனின் விருப்புவெறுப்புகள் அவனது பரிந்துரைகள், பட்டியல்கள், மதிப்புரைகளில்
இருந்தே தீரும்.
நாம் இன்று தேர்தல், கல்வி, குடும்பம்,
உறவுகள் எல்லாவற்றிலும் லட்சியத்தை விட எதார்த்தத்தை ஏற்க பழகி விட்டோம். பெண்கள் காதல்
திருமணம் செய்வதற்காய் சொந்த சாதியில் நல்ல சம்பாதிக்கிற பையனாய் கருத்தாய் தேடி கண்டுபிடிக்கிறார்கள்.
திருப்பதியில் ஐநூறு ரூபாய் கொடுத்து வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் பெற்று அதை
வெளியே பெருமை தட்டுகிறோம். இலக்கியத்தில் மட்டும் ஏன் நாம் மணந்தால் மகாதேவி என முரண்டுபிடிக்க
வேண்டும்? நம்முடன் இருப்பவர்களின் மன இயல்புகளை புரிந்து கொண்டு அதன்படியே அவர்களின்
விமர்சனங்களின் இலக்கிய நிலைப்பாடுகளை, மதிப்பீடுகளை நாம் கச்சிதமாய் கவ்விக் கொள்ள
வேண்டும்.
இந்த வகைமையில் நீங்கள் என்னையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் பரிந்துரைகள், விமர்சனங்கள், ஏற்புகள்,
நிராகரிப்புகள் அனைத்தும் பாரபட்சமானவையே. எனக்கு பிரியமானவர்களை தோளில் வைத்து கொண்டாடுவேன்.
அல்லாதவர்களை லேசாய் அரவணைத்து விட்டு விடுவேன். நாம் இந்த விசயத்தில் வெளிப்படையாக
இருப்பதே நல்லது.
பட்டியலுக்கு தலைப்பாய் “சமகாலத்தின்
சிறந்த படைப்பாளிகள்” என்று வைக்காமல் “சமகாலத்தில் எனக்கு பிரியமான படைப்பாளிகள்”
என அகவய சார்புடன் வைக்கலாம். உதாரணமாய், நான் சரவணன் சந்திரனின் “ரோலக்ஸ் வாட்சுக்கு”
விமர்சனம் எழுதும் போது “எனக்கு சரவணன் சந்திரனின் எழுத்து ஏன் பிடிக்குமென்றால்” என்று
தான் ஆரம்பிக்கிறேன். இதை இன்றைய போக்கு எனலாம். நம்மில் பெரும்பாலானோர் புத்தகங்களை
சார்புடன் தான் மதிப்பிடுகிறோம். நெல்லை எழுத்தாளர்களில் யாருக்கு வண்ணதாசனை பிடிக்காது
சொல்லுங்கள்? இடதுசாரிகள் தம் விமர்சனங்களின் ஊடே பரஸ்பரம் சால்வை போர்த்துவதில்லையா?
இந்துத்துவர்கள் இணையத்தில் ஒன்று சேர்ந்து தமக்கான எழுத்தாளர்களை முன்னெடுப்பதில்லையா?
கறுப்பானவர்கள், சிகப்பானவர்கள், பெண்கள், சாதி அபிமானிகள், ஒரே கடையில் புத்தகம் வாங்குபவர்கள்,
அங்கு ஒரு கூட்டத்தில் வாராவாரம் சந்திப்பவர்கள், இவை எல்லாம் ஏன் புகைப்படம் எடுப்பவர்கள்
கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இந்த சங்கங்களின் ஊடே தான் நம் மதிப்பீடுகள் நிகழ
முடியும். இதற்காய் நாம் வெட்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நான் ஆரம்பத்தில் லட்சிய பிழம்பாய்
பாரபட்ச இலக்கிய மதிப்பீடுகளை சாடி வந்தேன். ஆனால் அது ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு
என சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். சார்புநிலை தான் மனித இருப்பின் அடிப்படை இயல்பு.
எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதே
முதிர்ச்சி!