நான்கு Exit poll முடிவுகள்
தி.மு.கவே வெல்லும் என கூறியிருப்பது இன்றைய தந்தி டி.வியில் விவாதப்பொருள். பாண்டே
முகம் தொங்கிப் போயிருந்தது. அவரது உடல்மொழியின் சோர்வு சிறப்பு விருந்தினர்களையும்
தொற்றிக் கொள்ள மொத்த ஷோவின் மூடுமே இழவு விழுந்தாற் போல் ஆகி விட்டது. இந்த exit
poll செல்லுபடியாகாது என்று பல குரல்களிலாய் எல்லாரும் ஒன்றாய் சொன்னார்கள். பணப்பட்டுவாடாவுக்கு
முன்பான ஆய்வு என்பதால் இதை நம்ப முடியாது என்றார் மாலன். பணப்பட்டுவாடா தான் தீர்மானிக்கும்
காரணி என்றால் அ.தி.மு.க தானே 234 தொகுதிகளையும் அள்ளிக் கொள்ள வேண்டும்? அப்படி இல்லை
என்று தானே Exit poll முடிவுகள்
சொல்லுகின்றன.
அ.தி.மு.க எந்தெந்த ஆதிக்க சாதிகளுக்கு
எல்லாம் சார்பாய் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பதை துல்லிய புள்ளி விபரங்கள் கொடுத்து
(தேவர்களுக்குள் உள்ள பிரிவுகள் படியெல்லாம் எப்படி வாக்காளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
என்கிற அளவுக்கு சென்று), அதனால் அ.தி.மு.கவே வெல்லும் என முன்பு பேசின ரவீந்திரன்
இந்த முறை அது போன்ற அபத்த புள்ளிவிபரங்களை முன்வைக்காமல் Exit poll முடிவுகள்
ஏற்படுத்தும் தாக்கத்தினால் இருதலைக்கொள்ளி வாக்காளர்கள் தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கலாம்
என்றார். இந்தளவுக்கு மக்களின் தீர்ப்பை நாம் எளிமைப்படுத்த வேண்டுமா? மக்கள் என்ன
ஆட்டுமந்தையா?
இந்த விவாதத்தில் மாலனும் புதிய
தலைமுறை விவாதத்தில் பா.ம.க ஆதரவாளரும் தி.மு.கவும் அதிமுகவும் மக்களுக்கு பணம் கொடுத்தன
என்றார். தி.மு.க பணம் அளித்திருக்கலாம். ஆனால் அதை அ.தி.மு.கவின் ஏழாயிரம் கோடியுடன்
ஒப்பிடலாமா? இதன் மூலம் அ.தி.மு.கவை காப்பாற்ற விரும்புகிறார்களா?
ஒருவேளை தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு
வெற்றியை அறிவித்தால் பின் சப்பைக்கட்டு கட்டுவதற்கான ஒரு பயிற்சியாகத் தான் தந்தி
டிவியில் பாண்டேவின் பேச்சை பார்க்கிறேன். ஆனால் ஒரே வாரத்தில் தந்தி டி.வி தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொண்டு தி.மு.க அபிமானி ஆகி விடும் என்பது ஊர் அறிந்த கதை. அப்போது இந்த அறிவாளிகள்
எங்கே போவார்கள்?
மக்கள் நலக் கூட்டணியினரிடம் இப்போது
சட்டென ஒரு சோர்வைக் காண்கிறேன். அவர்கள் நம்பிக்கை இன்றி காணப்படுகிறார்கள். Exit poll முடிவுகளும்
அவர்களுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்கின்றன. ஆனால் எனக்கு ம.ந.கூ முக்கியமான
எண்ணிக்கையை பெறும் எனப் படுகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் கிட்டத்தட்ட சமமான இடங்களைப்
பெறும் நிலை வருமா? ஒருவேளை கணிசமான பேர் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களித்திருந்தால்
சாத்தியம். அல்லது அ.தி.மு.கவின் பல இலவசத் திட்டங்களினால் பயன்பெற்றவர்கள் அவ்வாறு
வாக்களிக்கலாம். Exit
poll முடிவுகள்
கூட மக்கள் மனநிலையை முழுக்க கணிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். நம் ஊகங்கள்
கூட தவறாகலாம்.
எனக்கென்னவோ இரு திராவிட கட்சிகளில் ஒன்று பெரும்
சரிவை சந்திக்கும் என தோன்றுகிறது. தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகளுடனான உறவு மகாபாரத்தில்
திரௌபதியின் காதலைப் போன்றது. அவள் பாண்டவர் ஐவரில் அர்ஜுனனை நேசித்தாளா அல்லது வீமனையா?
அல்லது அவள் ஆழ்மனம் கர்ணனுக்காய் ஏங்கியதா? அல்லது ஒரு கட்டத்தில் அவள் இந்த ஐவருக்கும்
துரியோதனனே மேல் என நினைத்திருப்பாளா? யாருக்கும் தெரியாது. தமிழர்களும் அப்படித் தான்.
தமிழக வாக்காளர்கள் பாண்டவர்களை நேசிக்கும் போது கௌரவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள்.
பிறகு பாண்டவர்கள் மீது கோபத்தை காட்ட கௌரவர்களுக்கு ரோஜா நீட்டுவார்கள். மூன்றாவதாய்
ஒருவர் கோல் அடிக்க இந்த களத்தில் வாய்ப்பில்லை. சும்மா ஓடி பாய்ந்து விழுந்து பந்தை
பாஸ் பண்ணலாம்!