நேற்று “புலிகளுக்கு அப்பால்” நூலை தமிழாக்கிய ஆனந்த்ராஜிடம் போனில் முதன்முறையாய் பேசினேன். கல்லூரியில் தன் உறவுக்கார பையனுக்கு இடம் வாங்குவது பற்றி தகவல் கேட்க என்னிடம் தொடர்பில் வந்தவரிடம் இருபது நிமிடங்கள் அந்த புத்தகம் பற்றி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த நூலில் புனைவுக்கான பல வலுவான சாத்தியங்கள் உள்ளன. இதை என்னிடம் கூறியவர் சங்கர ராம சுப்பியமணியன். நானும் அப்படியே உணர்ந்தேன். குறிப்பாய் குண்டுவெடிப்புக்கு முன்பு நளினிக்கு ஏற்படும் குழப்பங்கள், நளினி, முருகனின் தலைமறைவு வாழ்க்கை, பெங்களூரில் புலிகள் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு வாழை மரத்தின் நிழல் விழ அது ஒரு துர்சகுனம் என அவர்கள் நம்பத் தொடங்கும் இடம் என பல தருணங்கள்.
நேற்று நாங்கள் பேசின முக்கியமான விசயம் ஈழப்பிரச்சனையில்
இந்தியாவின் சகுனி ஆட்டம். ஒரு கட்டத்தில் அமைதிப்பேச்சுவார்த்தையின் நீட்சியாக
ஜனநாயக முறையில் ஈழத்தை கட்டமைக்க பிரபாகரன் தயாராகிறார். ஒரு முதலமைச்சரை
பரிந்துரைக்கவும் முன்வருகிறார். ஆனால் ஒரு பக்கம் சிங்கள ராணுவ அதிகாரிகள்
மற்றும் அரசியல்வாதிகள், இன்னொரு பக்கம் இந்திய அரசும் இந்திய வெளியுறவு
அதிகாரிகளும் அதை விரும்பவில்லை. இந்தியா புலிகளின் எதிர் அமைப்புகளை ஊக்குவித்து
தூண்டி விடுகிறது. பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. புலிகளுக்கும்
அமைதிப்படையினருக்கும் மோதல் நடக்கிறது. இதை இந்திய மற்றும் சிங்கள்
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ரசிக்கிறார்கள். இதன் பிறகு சூதாட்டம் மேலும்
மேலும் சிக்கலாகிறது. பிற உலக நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து இலங்கையில்
ரத்தக்களரியை நிகழ்த்துகிறது.
உண்மையில் இந்த போரில் புலிகளின் பங்கு சிறியதே. புலிகள்
வேண்டுமென்றே போர் வெறியில் ஈழத்தை அழிவுக்கு இட்டு சென்றார்கள் என்று ஒரு தவறான
பார்வை இங்கு உள்ளது. புலிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. சர்வதேச அரசியல்
சூதாட்டத்தின் விளைவாக அவர்கள் பெரும் இயக்கமாய் வளர்ந்தார்கள், பின்னர் இதே
அரசியல் அவர்களை பலிகொண்டது. எழுபதுகளில் இருந்தே, குறிப்பாய் இந்தியா-பாகிஸ்தான்
போருக்கு பிறகு, இந்தியாவின் நோக்கம் இலங்கையில் அமைதி நிலவக் கூடாது என்பதாய்
இருந்தது. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்வது இந்தியாவை கடும்
பதற்றத்தில் ஆழ்த்துகிறது. இலங்கைக்கு வேறு வகையில் உதவி வணிக ரீதியான நல்லுறவை
ஏற்படுத்துவதை விடுத்து இந்தியா எதிர்மறை திட்டங்களை வகுக்கிறது. சூழ்ச்சி மூலம்
சில பத்தாண்டுகளுக்கு இலங்கையை பலவீனமாக்கி பிற வல்லரசுகளிடம் இருந்து திசை
திருப்பலாம் என எதிர்பார்க்கிறது.
ஆனால் இந்தியா முதலில் புலிகளுக்கு உதவி பின்னர் புலிகள் ஒரு
வலுவான சக்தியாய் அமைந்து, ஈழம் மலரும் எனும் சாத்தியம் ஏற்படுகிறது. இப்போது
இந்தியாவுக்கு இலங்கையை விட ஈழம் ஒரு முக்கிய சிக்கல் ஆகிறது. இந்திய அரசு,
அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அதை முழுவெறியோடு தடுத்து
அழிக்கிறார்கள். இதற்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளும்
வலிகளும் கனவுகளும் நிஜமாய் இருந்தன. ஆனால் கழுகின் கூர்நகங்களுக்கு இடையில்
இருந்து கோழிக்குஞ்சு கனசு காண்பது போலத் தான் அது இருந்தது.
புலிகள் தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பும்
உண்மையில் இருக்கவில்லை என இப்போது தோன்றுகிறது. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராய் அமெரிக்கா,
சீனா போன்ற வல்லரசுகள் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் ஈழமும்
சிங்கள தேசியமும் இணைந்து தழைத்திருக்கலாம். ஆனால் அந்த உறவை கலைப்பதில் இந்தியா முழு
எத்தனிப்பையும் செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஈழத்தமிழரின் உண்மையான
விரோதி சிங்கள அரசியல் தலைமை அல்ல, இந்திய வெளியுறவு அதிகாரிகளும் இந்திரா காந்தி குடும்பமும்
தான் என இப்போது தோன்றுகிறது. இந்தியாவுக்கு அருகில் ஒரு குட்டித் தீவாய் அமைந்தது இலங்கையின் துரதிஷ்டம்.
”புலிகளுக்கு அப்பால்” நூல் பல
தமிழ் தேசியவாதிகளை எரிச்சல்படுத்தியது. ஏனென்றால் குற்றத்தை செய்தது புலிகள் தாம்
என அது உறுதிப்படுத்தியது. தமிழ் தேசியவாதிகளுக்கு இந்த வாதம் தன் இருப்பை காலி பண்ணி
விடுமோ என அச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். சீமான் போன்றோர் எப்படி ஊர் ஊராக சென்று
இந்த நூலுக்கு எதிராய் பேசி, அதன் விற்பனையை நேரடியாய் தடை செய்தார்கள் என ஆனந்த்ராஜ்
என்னிடம் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் இந்த புத்தகம் ராஜீவ் படுகொலைக்கு
எப்படி புலிகள் மட்டுமே காரணமல்ல, அது பல வல்லரசுகள் பங்கேற்ற ஒரு சர்வதேச சதி, அதற்கு
ராஜீவுக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் உதவினார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. புலிகளுக்கு
ராஜீவை கொல்லும் நோக்கம் இருந்தால் தேவை இருந்ததா எனும் கேள்வியை நூல் எழுப்புகிறது.
ஒருவேளை சர்வதேச அமைப்பு ஒன்றின் கட்டளைக்கு ஏற்ப படுகொலை நிறைவேற்றப்பட்டதா எனவும்
நூல் கேட்கிறது. இந்த கோணம் தமிழ் தேசியவாதிகளை மேலும் எரிச்சல்படுத்தும் என்பதில்
சந்தேகமில்லை.
ஆனால் நளினி, பேரறிவாளனை இந்நூலின் ஆதாரங்களும் வாதங்களும்
காப்பாற்றக் கூடும். நம் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு அவர்களை காப்பாற்றுவது முக்கியமில்லையே.
இப்பிரச்சனையில் சர்வதேச அரசியலின் பங்கை பின்னே தள்ளி விட்டு புலிகளை மட்டுமே முன்னிறுத்தவே
புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசைப் போல அவர்களும் விரும்பினார்கள்.
நான் ஆனந்த்ராஜிடம் சந்திரா சாமி
எப்படி தப்பினார் எனக் கேட்டேன். அவர் காங்கிரஸ் அதிகார மையத்தின் பிரதான புரோக்கர்
எனத் தெரியும். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின்னரும் அவர் எப்படி தப்பிக்க முடியும்?
ஆனந்தராஜ் இது குறித்து தான் இவ்விசாரணைக்கு தலைமை வகித்த ரகோத்தமனிடம் கேட்ட போது
“சந்திரா சாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை” என்று அவர் கூறியதாய் சொன்னார்.
ஆனால், பேரறிவாளனுக்கு எதிராய் மட்டும் எப்படியான வலுவான ஆதாரம் உள்ளது?
தமிழர்கள் உண்மையிலே நல்லவர்கள்,
அமைதியானவர்கள். இவ்வளவு அநீதியை வேறு யாரும் பொறுக்க மாட்டார்கள்.
உலகம் முழுக்க பல்வேறு வன்முறை சம்பவங்களை தூண்டி
விடுவதும், மக்களின் குடியை கெடுப்பதும் வெளியுறவு துறை அமைச்சகங்களின் பணி. உலகம்
முழுக்க இந்த அமைச்சகத்தை இழுத்து மூடுவதற்கும், வெளிநாட்டில் வன்முறையை தூண்டி சூழ்ச்சி
செய்தவர்களை தூக்கிலிடவோ குறைந்த பட்சம் சிறையில் அடைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல லட்சம் தமிழர்களின் ஆவி இவர்களைத் தான் சபிக்கும்.