ஸ்வாதி படுகொலையின் காரணங்கள்
பற்றி உங்களுக்கு தெரிந்த அளவே எனக்கும் தெரியும்.
கொன்றது வாடகைக் கொலையாளியாக இருக்கலாம் என பரவலாய்
கூறப்படுகிறது. இன்று நண்பரும் இயக்குநருமான வினோத் மலைச்சாமியிடம் பேசும் போது அவர்
தான் நேற்று நெல்லையில் இருக்கும் போது போலீஸ் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து
நிறுத்தி சோதனை செய்ததை பார்க்க நேர்ந்ததாய் குறிப்பிட்டார். நெல்லை வாடகைக் கொலையாளிகளின்
கூடாரம் என்றார் வினோத். ஆக போலீஸும் இந்த கோணத்தில் விசாரிப்பதாய் நாம் அனுமானிக்கலாம்.
மேலும் அந்த பெண் வாயிலும் கழுத்திலும் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டுள்ள முறை இந்த
ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. வினோத் என்னிடம் கூறிய மற்றொரு விசயம் வாடகைக்கொலையாளிகள்
எப்போதும் விடிகாலையில் தான் கொலை செய்வார்கள் என்பது.
நான் அவரிடம் கேட்டேன்: ”கொலையாளி ஸ்வாதிக்கு தெரிந்தவர்கள்
இல்லை என்றால் ஏன் அவர்கள் நான்கு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?”
அது அப்பெண்ணின் கவனத்தை கலைத்து
எதிர்பாராமல் தாக்குவதற்கான தந்திரம் என்றார் வினோத். இருக்கலாம். ஆனாலும் நான்கு நிமிடங்கள்
அவளை உணர்ச்சிவசப்பட வைக்கும் படி பேச வேண்டும் என்றால் அவன் அவளுக்கு தெரியாதவனாய்
இருந்தாலும் ”தெரிந்த” ஏதோ பிரச்சனையை தானே பேசியிருக்க வேண்டும்?
எனக்கு இரண்டு ஊகங்கள்:
1.
இப்பிரச்சனையில் ஸ்வாதி குடும்பத்தினர் மேலும் விபரங்கள்
வெளிவருவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பொதுமக்களுக்கு போலீஸ் தரப்பிடம் இருந்து ஒரு
கற்பனை கதை தான் செய்தி வடிவில் கிடைக்கும்.
2.
வாடகைக் கொலையாளி கோணம் உண்மையெனும் பட்சத்தில்
கொலையில் ஒரு அதிகார மட்டத்துக்கு பணக்கார ஆள் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்வாதியின் செல்போனை கொலையாளி
எடுத்து சென்றிருந்தாலும் அவளது போனில் இருந்து யாரிடம் எல்லாம் பேசியுள்ளாள், குறுஞ்செய்தி
அனுப்பி உள்ளாள், அவளது மெயிலிலும் பேஸ்புக் மெஸஞ்செரிலும் யாரிடம் எல்லாம் உரையாடி
உள்ளாள் போன்ற விபரங்களை போலீசால் எளிதில் திரட்ட முடியும். அதனால் கொலைக்கு காரணமானவரை
போலீஸால் எளிதில் அடையாளம் காண இயலும். அதனால் இம்முறை கொலை ஒரு மனநலம் பிறழ்ந்தவனாலோ
அல்லது மறுக்கப்பட்ட காதலனாலோ நடந்தது என போலீஸ் கூறுமானால் அவர்கள் ஒரு பெரிய புள்ளியை
காப்பாற்ற முயல்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு
இந்த கொலையின் பாணியை பார்க்கும் போது அப்பெண்ணுக்கு குறைந்த பட்ச தற்காப்பு முறைகளும்
ஆயத்தங்களும் தெரிந்திருந்தால் தப்பவோ குறைந்தபட்சம் சற்று தூரம் ஓடி விலகவோ முடிந்திருக்கும்
என படுகிறது. இவ்வளவு சுலபத்தில் ஒரு லகான் கோழியை கழுத்தை திருகி நீரில் அழுத்துவது
போல் அவள் தன்னை கொல்ல அனுமதிக்காமல் இருக்கலாம்.
கொலையாளி ஒற்றை ஆள் என்பதால் அவள்
என்ன செய்திருக்க முடியும்?
புரூஸ் லீ அமெரிக்காவில் ஒரு குங்
பூ பள்ளி நடத்தி வந்தார். அவர் பெண்களின் தற்காப்புக்காய் சில எளிய அடவுகளை முன்வைத்தார்.
இதை அவரது Enter the Dragon படத்தில் வரும் லீயின் தங்கைக்கும் அவளை துரத்தி வரும்
ஆண்களுக்குமான சண்டைக்காட்சியில் அவர் சித்தரிக்கவும் செய்தார். (இது குறித்து எனது
”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” நூலில் விளக்கமாய் பேசியிருக்கிறேன்)
ஒரு எளிய அடவு இது: ஒரு ஆண் தன்னை
நெருங்கி வந்து தொந்தரவு கொடுக்கும் போது பெண் அவனது வலது தோளை கவனிக்க வேண்டும் அவன்
கையை நீட்ட முனையும் போது, மிகச்சரியாய் அவன் தோள் அசையும் போது, அவன் வலது கால் பாதத்தை
ஓங்கி மிதித்து விட வேண்டும். உடனே தன்னிச்சையாய் அவனது இடதுதோள் வலது காலை நோக்கி
சரியும். அவன் வலியில் ஒரு நொடி தலைகுனிவான். அப்போது அவனது விதைப்பையில் ஓங்கி உதைக்க
வேண்டும் என்கிறார் லீ. அருகில் இருந்து முட்டியை மடித்து ஒரு ஏத்து ஏத்தலாம். ஏனென்றால்
மற்ற நேரத்தில் அங்கு உதைத்தால் ஆண்களால் பெண்ணின் காலை பிடிக்கவும் இழுத்து தள்ளவும்
முடியும். ஆனால் அவன் நிலைகுலையும் சந்திர்ப்பத்தில் அவன் பார்வை தன் காலில் இருக்கும்
என்பதாலும் அப்போது அவனது இரண்டு கால்களும் சற்று தவளைக்கால்கள் போல் வளைவதனாலும் விதைப்பை
உள்ள இடம் சுலபத்தில் தாக்கப்படும் வகையில் இருக்கும்.
ஆனால் இப்படி உதைப்பதற்கு கொஞ்சம்
பயிற்சி வேண்டும். பயிற்சி இல்லாதவர்கள் ஆணை அவன் தலை குனியும் போது பிடித்து தள்ளி
விட்டு ஓடி விடலாம்.
இதை செய்யும் துணிவோ சாமர்த்தியமோ
இல்லாதவர்கள் பெப்பர் ஸ்பிரே வாங்கி பையில் வைத்துக் கொள்ளலாம். 120 ரூபாய்க்கு இணையத்தில்
கிடைக்கிறது. எதிராளியின் கண்ணில் ஸ்பிரே செய்தால் சற்று நேரத்துக்கு அவனால் கண்ணையே
திறக்கவோ செயல்படவோ முடியாது. சுற்றி நிற்கும் நான்கைந்து பேர்களின் விழிகளில் சில
நொடிகளில் சுழன்று ஸ்பிரே செய்யும் பெப்பர் ஸ்பிரேயும் உள்ளது. இது சற்று விலை அதிகம்.
நான் கராத்தே கற்க சென்ற போது
என் ஆசான் ஒரு விசயத்தை வலியுறுத்துவார். யார் நம்மை நோக்கி வந்தாலும் அவர்கள் நம்மை
தாக்கத் தான் வருகிறார்கள் என கற்பனை செய்து கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல இது ஒரு பழக்கமாகும்.
ஏனென்றால் உடல் தயாராகும் சில நொடிகள் முன்பே மூளை தயாராக வேண்டும். இல்லாவிட்டால்
நீங்கள் கையும் முறுக்கும் முன்னர் அடி வாங்கி உங்கள் உதடு கிழிந்திருக்கும்.
இந்த கராத்தே, குங் பூ கூட தேவையில்லை.
சின்ன புட்டி பெப்பர் ஸ்பிரே இருந்திருந்தால் ஸ்வாதி அங்கு தப்பியிருக்க முடியும்.
கைப்பையில் லிப்ஸ்டிக், கர்ச்சீப், சீப், கண்ணாடியுடன் பெப்பர் ஸ்பிரேயும் இனி ஒவ்வொரு
பெண்ணும் வைத்திருக்க வேண்டும்.