கச்சத்தீவு விவகாரம் பற்றி சமீபத்தில்
சட்டமன்றத்தில் கத்தி வீச முயன்று அது திமுக அதிமுக இரண்டு தரப்பினருக்கும் ரத்தக்களரியாய்
முடிந்து போனது. கச்சத்தீவு இலங்கைக்கு அளிகப்பட்டதன் வரலாற்றுக்கு ரெண்டு பக்கங்கள்
உண்டு
1.
கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தின் உடைமையாக
இருந்தது வரலாறு. அதன் பின் காலனிய ஆட்சியின் கீழ் அது வருகிறது. அப்போது அது இலங்கைக்கும்
இந்தியாவுக்கும் பொதுவாக இருக்கிறது. வெள்ளையரகள் நமக்கு விடுதலை அளித்து வெளியேறுமுன்
தம் காலனிய நாடுகளின் எல்லைக்கோடுகளை வகுக்கிறார்கள். அப்போது கச்சத்தீவு இலங்கைக்கு
போய் விடுகிறது. ஆனால் இந்தியா தொடர்ந்து அதற்கு வரலாற்று காரணம் காட்டி உரிமை கோருகிறது.
இறுதியில் 1974இல் இந்திரா காந்தி ஆட்சியின் போது ஒரு ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவு இலங்கையிடம்
ஒப்படைக்கப்படுகிறது. நம் மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கலாம், சென்று வரலாம் என இலங்கை
ஏற்றுக் கொள்கிறது.
2.
இரண்டாவது பக்கம் வெளியுறவுத் துறை அரசியல். இலங்கை
தன்னை இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து ஒரு பச்சோந்தி
அரசியல் கொள்கிறது. ஒரே சமயம் அது இந்தியாவிடமும் சீனாவிடமும் இணக்கம் காட்டுகிறது.
1971இல் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது தன் அதிகாரத்தை நிரூபிக்க பாகிஸ்தானுக்கு
உதவுகிறது. பின்னர் சீன, அமெரிக்க யுத்த தளவாடங்களுக்கு இடமளிக்கவும் தயாராக உள்ளது.
இப்படி தன் புவியியல் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் பெரிய நாடுகளுக்கு அது “நிரூபிக்கிறது”.
உண்மையில் இலங்கை எந்த பெரிய நாட்டையும் நம்ப தயாரில்லை.
இலங்கை பக்கம் இருந்து யோசித்தால் அவர்கள் எவ்வளவு பலவீனமான இடத்தில் இருக்கிறார்கள்
என புரியும். அவர்களின் பதற்றம் இப்படியான இடம் தாவும் விசுவாசமற்ற அரசியலுக்கு அவர்களைத்
தள்ளுகிறது. இந்த கட்டத்தில் இலங்கையை சமாதானப்படுத்த இந்திரா காந்தி கச்சத்தீவை “தாரை
வார்க்கிறார்”. வெளியுறவுத்துறையின் சீட்டாட்டத்தில் இத்தீவு ஒரு சிறு துருப்புச்சீட்டு.
ஆனால் இந்தியா இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பின்னர் இலங்கைக்கு சீனா போன்ற நாடுகளிடம்
உள்ள இணக்கத்தை கண்டு கசப்பாகி அங்கு ஒரு உள்நாட்டு பிரச்சனையை வளர்க்க விரும்புகிறது.
விடுதலைப்புலிகளுக்கு பணமும் ஆயுதங்களும் பயிற்சியும் ஆதரவும் அளிக்கிறது. ராஜீவ் ஆட்சிக்காலத்தில்
தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்கிறது. ஒரே சமயம் பக்கத்து
வீட்டுக்காரனுக்கு பாயச விருந்தும் அளித்து அதில் விஷமும் கலந்தால் எப்படி?
இதனால் இலங்கை என்றுமே இந்தியாவை முழுக்க நம்ப தயாராக
இல்லை. இலங்கைக்கு நாம் விஷம் ஊட்ட முயன்றோம் என்றால் பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவு
அளித்து அவர்கள் நம் படுக்கையறையில் பாம்புகளை திறந்து விடுகிறார்கள். இந்த நிலையில்
1987-90 காலகட்டத்தில் இந்தியா இலங்கையில் அமைதிப்படை அனுப்பி பிரச்சனையை பூதாகாரமாக்குகிறது.
இந்தியாவுக்கு தம் நாட்டை ஆக்கிரமிக்கும் துர்நோக்கம் உண்டோ என ஒரு கட்டத்தில் இலங்கை
அரசே அஞ்சுகிறது. சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கு ஒருசேர இந்தியா மீது வெறுப்பு
ஏற்படுகிறது. இக்கட்டத்தில் இலங்கை அரசு புலிகளுடன் கூட்டு சேர்ந்து அமைதியை அறிவிக்கிறது.
புலிகள் அமைதிப்படையினரை தாக்குகிறார்கள். இந்தியா அமைதிப்படையை பின்வாங்கிக் கொள்கிறது.
இந்தியாவிலும் அமைதிப்படை விவகாரத்தில் அரசுக்கு கெட்ட பெயர்.
இப்படி இந்தியாவும் இலங்கையும் மாறி முதுகில் குத்தி
நிறைய குருதியை வீணடித்த பின் இந்தியா சற்று பின் வாங்குகிறது. விடுதலைப்புலிகள் பெரும்
அரக்கனாய் வளர்ந்து இலங்கையை முழுங்குவதை ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்க்கிறது.
இந்த
களேபரத்தின் இடையே கச்சத்தீவு மீண்டும் அரசியல் வலையில் மாட்டுகிறது. அவ்வழியே புலிகள்
ஆயுதம் கடத்துகிறார்கள் என்ற பெயரில் இலங்கை கப்பல் படையினர் தளம் அமைக்கிறார்கள்.
ரோந்து போகிறார்கள். இந்திய மீனவர்கள் அங்கு மீன் பிடிப்பதை குற்றம் எனவும் அத்துமீறல்
எனவும் இலங்கை தரப்பு கோருகிறது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு புலிகளை தம் பிரதான விரோதிகள்
என நிலைப்பாடு எடுக்கும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை ஆக்கிரமிப்பதை எதிர்க்கவில்லை.
இந்தியா இப்போது இலங்கைக்கு ஆதரவு அளித்து புலிகளை அழிப்பதே தன் ஒரே இலக்கு என நினைக்கிறது.
இந்தியாவுக்கு போட்டியாய் இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதில் சீனாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு
ஆதரவு கரம் நீட்டுகிறது. இலங்கை மீண்டும் உலக நாடுகளின் அதிகார அரசியலில் செல்லப்பிள்ளை
ஆகிறது.
கச்சத்தீவு
ஒப்பந்தம் கையெழுத்து ஆன போதும் பின்னரும் பல முறை திமுக மற்றும் அதிமுக அரசுகள் அதை
கண்டித்து குரலெழுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஒன்று இது ஒரு பிரதான மாநில பிரச்சனையாய்
இரண்டு கட்சிகளுக்கும் பட்டதில்லை. இரண்டு இந்தியாவின் வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும்
அதிகாரம் என்றுமே தமிழகத்துக்கு இருந்ததில்லை. அதனால் கச்சத்தீவு விவகாரத்தில் கழக
கட்சிகளின் எதிர்ப்பு ராகுல் திராவிடின் தடுப்பாட்ட ஷாட் போன்றே இருந்துள்ளது. இரு
தரப்புக்கும் லாபமோ நஷ்டமோ இல்லாத விளையாட்டு.
கச்சத்தீவை
மீட்க வேண்டும் என கோரி ஜெயலலிதா வழக்கு தொடுத்த போது வழக்கு ஜெயிக்காது என அவர் அறிந்திருப்பார்.
வெறும் ஒப்பந்தம் மூலம் நாட்டின் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பது சட்டவிரோதம் என நாம்
இப்போது கோரினாலும் அது வெளியுறவு விவகாரம் என நீதிமன்றம் தெளிவாகவே அறியும். நாட்டின்
பாதுகாப்பு, பக்கத்து நாட்டுடனான நல்லுறவு என்ற பெயரில் இந்தியா எடுக்கும் முடிவுகளில்
நீதிமன்றம் தலையிடாது. மேலும் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு முன்பு கூட இலங்கையின் அதிகாரபூர்வ
பகுதி தான். இந்தியாவுக்கு உள்ளது ஒரு வரலாற்று உரிமை மட்டுமே. அரசுத்தரப்பின் பதில்
இம்முறை கூர்மையாகவே வந்தது: “கச்சத்தீவை மீட்க நாம் இலங்கையுடன் போரிட வேண்டும்”.
அதற்கு இந்தியா தயாரில்லை. மக்களும் அதை விரும்பவில்லை. இலங்கை மட்டுமல்ல, பாகிஸ்தான்,
வங்கதேசம், சீனாவுடனான நட்புறவும் வணிக பரிவர்த்தனைகளுமே லாபகரமானது. பரஸ்பர குண்டுவீச்சு
அல்ல.
கச்சத்தீவு
தமிழக மீனவர்களின் பிரதான பிரச்சனையே அல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள். புதிய தொழில்நுட்பங்கள்,
போதுமான கட்டமைப்பு வசதிகள், சரியான திட்டமிடல் மூலம் இந்திய பகுதியில் மீன்பிடித்தே
நம் மீனவர்கள் தழைக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.
இவ்வளவு
விசயங்களையும் நன்கு அறிந்தும், கழகக் கட்சிகள் இப்போது ஒரு இறந்து போன பிரச்சனையை
தோளில் சுமந்து ஊர்வலம் செல்வது எதற்காக?
நன்றி: கல்கி