(இது தினமலரில் நான் எழுதி வரும் பத்தி. முக்கியமான இணையதளங்கள், பிளாகுகள், பேஸ்புக் பக்கங்களை அறிமுகம் செய்கிறேன்.)
சொல்வனம் (www.solvanam.com)
ஒரு பெட்டிக்கடையில் என்னென்ன
கிடைக்கும்: வாழைப்பழம், பிஸ்கட், கடலைமிட்டாய், புளிப்பு மிட்டாய், சிகரெட், கொசுவத்தி,
பத்திரிகை…. ஆனால் எங்கள் ஊரில் பெட்டிக்கடைகளில் பழரசமும் கிடைக்கும். இன்னும் சொல்வதானால்
அவை பீடா கடையாகவும் இயங்கும். சென்னையில் ஒரு டாஸ்மாக் அருகே உள்ள ஜூஸ் கடையில் மாலையில்
அதிகம் விற்பவை மாங்காய் துண்டுகளும், பிளாஸ்டிக் கோப்பைகளும். இப்படி தொடர்பற்ற பல
தேவைகளை திருப்தி செய்யும் பெட்டிக்கடை தான் இலக்கிய இணைய பத்திரிகைகள்.
”சொல்வனம்”
கடந்த சில வருடங்களாய் தமிழில் இயங்கி வரும் ஒரு தரமான தீவிர இணைய இதழ். இங்கு வெற்றிலை
பாக்கும் பர்கரும் ஒரே சமயம் கிடைக்கும்.
சொல்வனத்தில் இந்திய பாரம்பரிய
இசை, பற்றி கட்டுரைகள் வரும். அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன், தி.ஜானகிராமன் ஆகிய
ஜம்பவான்களுக்கு சிறப்பிதழ்கள் வரும். (ஆனால் சமகால இலக்கியப் போக்குகளின் சுவடே இருக்காது)
இன்னொரு பக்கம் மேற்கத்திய அரசியல், அறிவியல், தத்துவம் பற்றி முக்கியமான மொழியாக்க
கட்டுரைகளும் வரும். அதாவது சில பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு மேற்குக்கு
சென்றவர்களிடம் தாம் துறந்த வாழ்க்கை மீதான நினைவேக்கமும் தற்போது வாழும் தேசத்தின்
சிக்கல்கள், வரலாறு, கலை சார்ந்த ஆர்வங்களும் கலந்த ஒரு ரசனை இருக்கும். “சொல்வனம்”
அதைத் தான் பிரதிபலிக்கிறது.
தற்போதைய இதழில் ஸ்பினோசா பற்றி
ஸ்டீவன் நாட்லரின் ஒரு முக்கியமான மொழியாக்க கட்டுரை வந்துள்ளது. என்னது ஸ்பி-னோ-சாவா
என்கிறீர்களா? அவர் ஒரு மிக முக்கியமான தத்துவஞானி. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளர்களுக்கோ
வாசகர்களுக்கோ இதுவரை அவர் மீது அக்கறையில்லை. ஆனால் இது போன்ற ஒரு பத்திரிகையில் தான்
அவர் குறித்து முதன்முதலாய் ஒரு நல்ல அறிமுகக்கட்டுரை வர முடியும். இதில் ஸ்பினோசாவின்
மாறுபட்ட பார்வைகளை நாம் அறியலாம்: விவிலியம் தேவவாக்கு அல்ல, அது மனிதர்களால் தொகுக்கப்பட்ட
இலக்கிய நூல்; வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு கடவுளிடம் தீர்வு தேடுவது மனிதர்களுக்கு
நிம்மதிக்கு பதில் பதற்றமும் துக்கமுமே தரும் என்றெல்லாம் ஸ்பினோசா ஏன் கூறினார் என்பதற்கு
எளிமையான விளக்கங்கள் இக்கட்டுரையில் உள்ளன. படித்துப் பாருங்கள்!