மத்திய
அரசின் காஷ்மீர் கொள்கை தெளிவானது. ஒரு பக்கம் அவர்கள் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை
விரும்புகிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் முனையில் நிற்கிறது எனும்
பிம்பத்தை, பதற்றத்தை உருவாக்கி மதவாதம் + தேசியவாதத்தை மக்களிடையே தூண்டி விட வேண்டும்.
அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவதன்
மூலம் காஷ்மீரிய மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது, போராட்டக்காரர்களை தொடர்ந்து தாக்குவதன்
மூலம் போராளிகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுப்பதை காங்கிரஸ் அரசும் செய்தது, இப்போது அதையே
பா.ஜ.கவும் செய்கிறது.
ஆனால் ஒரே வித்தியாசம் பா.ஜ.க காஷ்மீர் பிரச்சனையை மதப்போராக
மாற்றி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் தேசம் சந்திக்கும் வளர்ச்சியின்மை,
பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் இருந்து கவனத்தை திருப்ப முனைகிறது.
எல்லா
மதவாத கலவரங்களிலும் செய்வது போல் வன்முறையை ஒரு பக்கம் தூண்டி விட்டு விட்டு இன்னொரு
புறம் பா.ஜ.கவின் தலைமை தொட்டிலையும் ஆட்டுகிறது. சுதந்திர தின உரையின் போது மோடி காஷ்மீர்
பிரச்சனையை பாகிஸ்தானுடனான ஒரு எல்லை தகராறாக, தீவிரவாத அத்துமீறலின் விளைவாக மட்டுமே
சித்தரித்து, பாகிஸ்தானை எச்சரித்து ஒரு ராணுவ தளபதி போன்றே தன்னை காட்டிக் கொண்டார்.
அதே போல காஷ்மீரிய போராட்டக்காரர்களை கடுமையாய் ஒடுக்கவில்லை என அவர் காஷ்மீர் முதலமைச்சர்
மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகவும், இது சம்மந்தமாய் – அதாவது பிரச்சனையை வன்மையாகவா
அமைதி பேச்சுவார்த்தை மூலமா தீர்ப்பது என்பதில் – இருவருக்கும் கருத்து மாறுபாடு உள்ளது
என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது மோடி
காந்தியின் ரூபம் எடுத்து “காஷ்மீரிய மக்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்கிறார்.
காஷ்மீரில்
எப்படி உடனடியாய் அமைதியாய் மீட்பது என மோடி அறிவார். ராணுவத்தை குவிப்பது அமைதியை
அன்றி அமைதியின்மையையே அதிகம் தூண்டும் எனவும் அறிவார். அவருக்கு அதுவே வேண்டும். தன்
அரசின் செயல்பாடு மீது அல்லாது மீடியாவின் கவனம் காஷ்மீர் மீது இருக்க வேண்டும் என
அவர் விரும்புகிறார்.
ஒரு
நேர்மையான அரசு காஷ்மீரில் ராணுவ இருப்பை குறைத்து, மக்கள், போராளிகள், பாகிஸ்தான்
ஆகிய முத்தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் அப்படியான ஒரு அரசு இன்னும் இங்கு
அமையவில்லை. எல்லா அரசுகளும் குரங்கின் வால் எரிவதையே விரும்புகின்றன.