ஐரோம் ஷர்மிளா சில வருடங்களுக்கு
முன்பும் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து சகஜ வாழ்வுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார்.
அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் என்று கூட கூறப்பட்டது. ஆனால் அப்போது அவரைச் சுற்றியுள்ள
போராளிகள், அரசியல் ஆர்வலர்கள் நெருக்கடி கொடுத்து அவரை தொடர செய்தனர்.
இப்போது 16 வருடங்களுக்கு பின்
அவராகவே தன் விரதத்தை முடித்து விட்டார். மையநீரோட்ட அரசியலுக்கு திரும்ப ஆசைப்படுவதாய்
கூறுகிறார். மணிபூர் முதல்வராகப் போவதாய் தெரிவிக்கிறார். இதை ஒரு நேர்மறையான திருப்பமாகவே
பார்க்கிறேன். ஆனால் அவரது ஊரிலுள்ள இடதுசாரி சாய்வுள்ள அரசியல் போராளிகள் இப்போது
ஷர்மிளாவை ஒரு துரோகியாய் சித்தரிக்க துவங்கி விட்டார்கள். தமக்காய் 16 வருடங்கள் உணவின்றி
பட்டினி கிடந்து போராடியவரை இரண்டு இடங்களில் மக்கள் ஏற்க மறுத்து திரும்ப அனுப்பி
இருக்கிறார்கள். ஷர்மிளா பற்றி தமிழில் உள்ள “போராளி”, “கலகவாதி” பிம்பமும் மெல்ல மெல்ல
இனி சரியத் துவங்கும். ஏன் அவரது இத்தனை வருட பங்களிப்பை மறுத்து அவரை துரோக்கி ஆக்குகிறார்கள்?
ஷர்மிளாவை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர்
அவர் ஜனநாயக அரசியலில் நுழைவதை விரும்பவில்லை, அது அவரை சீரழிக்கும் என கூறுகிறார்கள்.
இந்திய தேசியவாதத்தை ஏற்காத, தனிநாடு கோரும் மக்கள் இவர்கள். ஆனால் ஒரு தனிநாடாக மணிப்பூரால்
தன்னை தக்க வைக்க முடியுமா? சீனாவுடன் இணைவார்களா? சீனா ஏற்கனவே திபத்தியர்களை எப்படி
நடத்துகிறது என அறிய மாட்டார்களா? சீனா இந்தியா அளவுக்கு கூட எதிர்ப்பரசியலை அனுமதிக்காத
நாடு என அறிய மாட்டார்களா?
எனக்கு முக்கியமாய் படுகிற கேள்வி
இது: ஷர்மிளா ஒரு தனிமனிதராக போராட முடிவெடுக்கிறார். பிறகு அவர் தன் போராட்டத்தில்
நம்பிக்கை இழந்து வேறு வகை பாதையை தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு அந்த உரிமை இல்லையா?
எதிர்ப்பரசியலை கையில் எடுப்பவர்கள் மாற்று கருத்துக்களை, எதிர் நிலைப்பாடுகளை ஏன்
திறந்த மனதுடன் ஏற்க தயாராக இல்லை? ஏன் அவர்கள் ஷர்மிளா தன் விரதத்தை தொடர வேண்டும்
என்கிறார்கள்? அவர் ஒருவேளை உடல்நலமிழந்து இறந்தால் ஒரு நல்ல உயிர் தியாகி கிடைப்பார்
எனும் கனவா? அவர்களுக்கு தேவை உயிருடன் உள்ள ஐரோம் ஷர்மிளாவா அல்லது ஐரோம் ஷர்மிளாவின்
பிணமா?
உலகில் பெரும்பாலான இடங்களில்
இடதுசாரி இயக்கங்கள் போராளிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களை நடத்தும் விதம் இப்படியாகத்
தான் இருக்கிறது. எந்த தனிமனித பார்வைக்கும் இடம் தர மாட்டார்கள். சுயமாய் முடிவெடுக்கிறவர்களை
துரோகி என முத்திரை குத்தி வேட்டையாடுவார்கள். இது ஏன்? ஆரம்ப கால மார்க்ஸியம் தான்
காரணம்.
ஆரம்ப கால மார்க்ஸியம் சமூக இயக்கத்தை புரிந்து கொண்ட
விதம் சற்று பிழையானது. முதலாளித்துவ அமைப்பு – தொழிலாளிகள் என்று இருமையாக அது சமூக
இயக்கத்தை கண்டது. இரு தரப்புக்குமான உற்பத்தி உறவு தான் சமூக இயக்கம் என அது குறுக்கிக்
கொண்டது. இந்த தத்துவத்தில் மனம், மூளை, உணர்ச்சி, சிந்தனை, கற்பனைக்கு இடமே இல்லையா?
உண்டு. ஆனால் உற்பத்தி உறவை தக்க வைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இவை பார்க்கப்பட்டது.
அரசியல், கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை முதலாளித்துவம் தொழிலாளிகளை ஒடுக்க பயன்படுத்துவதாகவும்
பூர்ஷுவா எனப்படும் நேரடியாய் உற்பத்தியில் ஈடுபடாத மத்திய வர்க்கம் முதலாளித்துவத்திற்கு
சாதகமாய் கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை பரப்புவதாய் மார்க்ஸ் கருதினார்.
இந்த ஆரம்ப கால மார்க்ஸியத்தில் மனித மனம் இடது
– வலது என ஒரே சீராய் அன்றி முன்பின் முரணாய் யோசிக்க கூடியது எனும் புரிதல் இல்லை.
உலக அறிவியக்கத்தில் தெரிதா, லகான் போன்றோரின் சிந்தனைகள் புகுந்த பின்னர் தான் மனித
மனம் எப்படி தான் நம்புகிற ஒன்றுக்கு நேர் எதிராய் கூற சிந்திக்கலாம், தன் சிந்தனைக்கு
நேர் எதிராய் செயல்படலாம் எனும் புரிதல் ஏற்பட்டது. மனிதன் தர்க்கரீதியானவன் அல்ல எனும்
எண்ணம் வலுவானது. அப்படி என்றால் அவனை வெறும் உற்பத்தி உறவின் நீட்சியாய் மட்டுமே காண
இயலாது. அவன் முதலாளித்துவத்தின் கருவியும் அல்ல, புர்ஷுவாவும் அல்ல. அவனுக்கு என்று
ஒற்றைபட்டையான நிலைப்பாடுகள் இல்லை. அவன் முற்போக்கோ பிற்போக்கோ அல்ல அவன் ஒரு கலவை
எனும் பார்வை வலுப்பட்டது. அல்தூசரின் சிந்தனைகள் மார்க்ஸியத்தில் இருந்த இறுக்கத்தை
தளர்த்த உதவின.
ஆனால் இன்றைய இடதுசாரி அமைப்புகள், கட்சிகள் இந்த
பின்நவீனத்துவ பார்வையை ஏற்பதில்லை. அவர்களுக்கு ஒன்று நீங்கள் முதலாளித்துவத்தின்
பிரச்சாரக் கருவி அல்லது இடதுசாரிகளின் பிரச்சார ஒலிபெருக்கி. இரண்டும் அன்றி, இரண்டுக்கும்
இடைப்பட்டதாய், தனிமனித சிந்தனை கொண்டவராய் நீங்கள் இருக்க முடியும் என்றே ஏற்க மாட்டார்கள்.
ஐரோம் ஷர்மிளா தான் சுயநிலைப்பாடு கொண்டவர், தான் யாருக்கும் பிரச்சார கருவியல்ல என
காட்ட முனையும் போது அவர் இடது முகாமில் இருந்து கடும் எதிர்ப்பை சந்திப்பது இதனால்
தான்.
இந்த ”முற்போக்கு” சிந்தனையாளர்கள்
மிஷல் பூக்கோவின் சிந்தனைகளை கற்க வேண்டும். அவர் அதிகாரத்தை அதிகாரம் கொண்டு மட்டுமே
எதிர்க்க முடியும் என்றார். அரசியலை அரசியலால் மட்டுமே வெல்ல முடியும்! ஜனநாயக அதிகாரத்தை
அதைக் கொண்டு மட்டுமே மணிபூர் மற்றும் பிற வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ள முடியும். அவர்கள்
தம் வளர்ச்சிக்கு இந்திய மையநீரோட்ட அரசியிலில் பங்கு பெற்று, அதிகாரம் பெற்று, இங்குள்ள
கலாச்சார இயக்கங்களில் செல்வாக்கு செலுத்துவது அவசியம். ஷர்மிளா இந்த நிலைப்பாட்டை
எடுத்துள்ளதை தான் மணிப்பூர் பிரிவினைவாதிகளால் தாங்க முடியவில்லை. ஆனால் ஷர்மிளாவினுடையது
துரோகம் அல்ல. சிந்தனை முதிர்ச்சி. அது பாராட்டத்தக்கது!
நன்றி: கல்கி