(சில வாரங்களுக்கு முன் கல்கியில்
வெளியான கட்டுரை)
ரியோ ஒலிம்பிக்ஸில் மூன்று பெண்கள்
நம்மை பெருமைப்பட வைத்திருக்கிறார்கள். பி.வி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மக்கர்.
அதுவும் பி.வி சிந்து பேட்மிண்டன்
விமன்ஸ் சிங்கிள்ஸில் இறுதி ஆட்டம் வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சிந்து
ஆந்திராவை சேர்ந்தவர். அவரை இப்போது ஆந்திரபிரதேசமும், தெலுங்கானாவும் ஆளுக்கு ஒரு
கையை பிடித்து இழுத்து உரிமை கொண்டாடுகிறார்கள். இரு மாநிலங்களும் அவருக்கு வீடு, கோடிக்கணக்கில்
பணம் என பரிசளிக்கிறது. மொத்த தேசமுமே அவரது வெற்றியை கொண்டாடுகிறது.
சிந்துவுக்கு அரை இறுதியை விட
காலிறுதி இன்னும் சிரமமாக இருந்தது. காலிறுதியில் அவர் சீனாவின் வாங் இஹானுடன் மோதினார்.
வாங் இஹான் வலுவானவர். அவரது ஆற்றலும் வலுவும் ஆட்டம் முழுக்கவும் சரியவே இல்லை. சிந்து
அவருடன் கடுமையாய் போராடியே வென்றார். இஹானுக்கு டிராப் ஷாட் எனப்படும் வலைக்கு அருகில்
பந்தை சொட்டி விழும் கணக்காய் மென்மையாய் தட்டி விடும் ஷாட் நன்றாய் வந்தது. சிந்துவின்
சிறப்பு அவரது உயரம் மற்றும் தோள் வலிமை. அதுவும் கத்திரிக்கோல் போல் கோர்ட்டுக்கு
குறுக்குமறுக்காய் அடிக்கும் cross shots, அவற்றை அவர் துள்ளி எழுந்து அடிக்கும் அவரது
பாணி அட்டகாசம். காலிறுதியில் இந்த ஷாட்டை தான் அதிகம் நம்பினார்.
ஆனால் அரை இறுதியில் நசோமி ஒக்குஹாரா எனும் ஜப்பானிய
வீராங்கனையை அவர் தன் முழுமையான ரேஞ்சையும் காட்டி எளிதில் சமாளித்தார். நசோமி சிந்துவுடன்
ஒப்பிடுகையில் வெகுவாய் குள்ளமானவர். அவர் அதனால் சுறுசுறுப்பாய் கோர்ட்டில் குறுக்குமறுக்காய்
நன்றாய் ஓடி, உயரமான, எம்பி தன் நீளக்கைகளால் அடிக்கும் சிந்துவின் ஆவேசமான ஷாட்களை
சமாளிக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நசோமியின் சுறுசுறுப்பும் எனர்ஜியும் சிந்துவை
சற்று தளர வைத்தாலும் அவர் நசோமியின் ஆட்ட பாணியை கவனித்து அதன் பலவீனங்களை புரிந்து
கொண்டு சுலபத்தில் அடுத்தடுத்த சுற்றுகளில் அவரை முறியடித்தார். நசோமி கோர்ட்டின் விளிம்பில்
இருந்து மையம் வரை ஓடியோடி கவர் செய்ய வேண்டி இருக்க, சிந்து அதை கவனித்து வலையின்
அருகில் பந்து செல்லும் படி டிராப் ஷாட் மற்றும் உயரத்தில் இருந்து ஆக்ரோஷமாய் கீழே
நோக்கி அடிக்கும் ஷாட்களை அதிகம் அடித்தார். இது நசோமியை நிலைகுலைய வைத்தது. ஆட்டம்
தனதே என உணர்ந்த பின் சிந்து முழு தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து விளாசி நசோமியை ஒரு
கேலிச்சித்திரமாக்கி விட்டார். குறிப்பாய் இறுதியில் அவர் பந்தை நேராய் நசோமியை உடல்
நோக்கியே சீறி வரும்படியான பாடி ஸ்மேஷ் ஷாட்களை அடித்ததை சொல்லலாம்.
இறுதி ஆட்டம் ஸ்பெயினின் கரோலினா
மாரின் உடன். அந்த ஆட்டத்தில் சிந்துவால் தன் சமநிலையை தக்க வைக்க முடியவில்லை. உலக
தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் கரோலினாவின் அனுபவமும் தன்னம்பிக்கையும் அவருக்கு
பெரும் பிரம்மாஸ்திரங்கள். ஆனாலும் சிந்து கம்பீரமாகவே தோற்றார்.
சிந்து இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸில்
வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் பெண் என்றால், மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக முதன்முதலில்
பதக்கம் வென்ற விராங்கனை சாக்ஷி மாலிக். அவர் காலிறுதி வரை முன்னேறி வெண்கலப் பதக்கம்
வென்றார்.
ஒரு குட்டி பீமனை போல் தோற்றமளிக்கும்
சாக்ஷி ஹரியானாவை சேர்ந்தவர். அவரது அப்பா பேருந்து நடத்துநர். அம்மா அங்கன்வாடியின்
சூப்பர்வைசர். சாக்ஷியின் தாத்தா பத்லு ராம் உள்ளூர் பயில்வான். அந்த தாக்கமே அவரை
சிறுவயதில் இருந்து மல்யுத்தம் நோக்கி நகர்த்தியது. ஆனால் இந்தியாவில் ஒரு பெண் மல்யுத்தம்
பழகும் போது அவள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அவளது பெண்மை அடையாளத்தை ஊர்க்காரர்கள்
கேள்வி கேட்டார்கள். சாக்ஷியின் அப்பாவை கேலி பண்ணினார்கள். சாக்ஷியின் பயிற்சியாளரான
ஈஷ்வர் தஹியாவுடன் அவரை இணைத்து வதந்தி கிளப்பினார்கள். ஆனாலும் சாக்ஷி தளரவில்லை.
அவரது விடாமுயற்சி அவரை இன்று அனைவரும் கொண்டாடி வியக்கும் இடத்துக்கு கொண்டு வந்து
சேர்த்திருக்கிறது. நாம் நமது அகத்தூண்டுதலை நம்பி இயங்க வேண்டும், உலகின் பேச்சுக்கு
செவி சாய்த்து மனம் குழம்பக் கூடாது, உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் எந்த தடைகளையும்
முறியடிக்க உதவும் என்பதற்கு சாக்ஷி நமக்கு ஒரு நேரடி சாட்சியம்.
சாக்ஷியின் பலம் அவரது கட்டுமஸ்தான
உடலமைப்பு. எதிராளியின் இரண்டு கால்களை பற்றி அள்ளி தரையில் கவிழ்த்தி அடிக்கும்
Double legs attack எனப்படும் தாக்குதல் அவரது முத்திரை பாணி. எதிராளி கீழே விழுந்த
பின்னர் சாக்ஷி தன் வலுவான கால்களை கொண்டு அழுத்தி அபாரமாய் பேலன்ஸ் செய்கிறார். இத்தோடு
தன் உடல் எடையையும் அவர் கீழே நோக்கி செலுத்தி எதிராளியை திமிற விடாமல் பூட்டி விடுகிறார்.
இது ஒரு பூச்சியை சிலந்தி பிடித்து உண்ணும் காட்சியை நினைவுபடுத்துகிறது. சாக்ஷியின்
சக்கரவியூகம் இது. உள்ளே மாட்டினவர்கள் தப்பிக்க முடியாது.
பெரும்பாலான இந்திய வீராங்கனைகளைப் போல சாக்ஷியும்
ஆட்டத் துவக்கத்தில் தடுப்பாட்ட மனநிலையில் இருக்கிறார். பின்னர் தோல்வி நெருங்கும்போது
பயத்தை உதறி வெறி கொண்டாடி வெல்கிறார். அவர் தாக்கி ஆடும் மனநிலைக்கு செல்லும் போது
அது அற்புதமான காட்சியாக இருக்கிறது. அவர் கயிர்கிஸ்தானின் தின்பெக்கோவாவை முறியடித்து
வெண்கலம் வென்ற ஆட்டத்தில் முதலில் தடுத்தாடி 0-5 என பின்வாங்கத் துவங்கினார். அடுத்த
சுற்றுகளில் ஆக்ரோசமாய் ஆடி 8 புள்ளிகள் பெற்று வென்றார். இதில் ஒருமுறை அவர் எதிராளியின்
காலைப் பிடித்து வார முயன்று தடுமாறுகிறார். எதிராளி அவரை கீழே தள்ளி லாக் செய்ய பார்க்கிறார்.
சட்டென எழுந்து அவரை திருப்பி போட்டு சாக்ஷி மேலே ஏறி அழுத்தி வென்றார். இதே போல் மற்றொரு
பிரமாதமான திருப்பம் சாக்ஷி தன் எதிராளியின் இடது கால் மற்றும் கையை ஒரே சமயம் பூட்டு
போட்டு பிடித்து வென்றது.
ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் இந்தியாவை
ஒலிம்ப்ஸில் பிரதிநுத்துவப்படுத்திய முதல் வீராங்கனையான தீபா கர்மக்கரின் கதையை உருக்கமானது.
தீபா திரிபூராவை சேர்ந்தவர். அவருக்கு பிறவியிலேயே கால் பாதம் தட்டையானது. இந்த குறைபாட்டை
மருத்துவத்தில் flat foot என்பார்கள். இக்குறை கொண்டோருக்கு ஜிமனாஸ்டிக்ஸில் துள்ளி
கரணமடிப்பது மிக மிக சிரமம். ஆனாலும் தீபா கடுமையாய் பயிற்சி செய்து தன் குறையை கடந்தார்.
ஆறு வயதில் இருந்தே அவர் பயின்று வருகிறார். எந்த அடிப்படை கட்டமைப்பும் இன்றித் தான்
அவர் ஆரம்பத்தில் போராடினார். அவரது பயிற்சியாளரான பிஸ்வேஷ்வர் நந்தி பழைய ஸ்கூட்டர்
உதிரி பாகங்களைக் கொண்டு தீபா துள்ளி கரணமடிப்பதற்கு தேவையான பயிற்சி மேடையை அமைத்துக்
கொடுத்தார். பிற நாட்டு வீரர்கள் ஒரு வருடம் பயிற்சி எடுக்கும் போது தீபாவால் மூன்று
மாதங்களே பயில முடிந்தது. ஆனாலும் அவர் தன் அசுர உழைப்பால் ஒலிம்பிக்ஸில் புரொதுனோவா
எனும் கரண முறையை செய்து காட்டி நான்காவது இடத்தை பெற்றார். புரொதுனோவா என்பது ”மரண
கரணம்” எனப்படுகிறது. ஓடி வந்து கைகளை மேடையில் ஊன்றி நான்கு முறை காற்றில் சுழன்று
சாமர்சால்ட் அடித்து கால்களில் லேண்ட் ஆவது. சற்றே பிசகினால் முதுகு எலும்பு நொறுங்கி
விடும். உலகில் இதை கரணமடித்து சாதித்த ஐந்தே வீராங்கனைகளில் தீபாவும் ஒருவர்.
வெற்றி நாயகிகளுக்கு நம் வாழ்த்துக்கள்!