சமீபத்தில் மனுஷ்யபுத்திரனிடம்
எழுத்தாளர்களின் இலக்கிய சண்டைகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்
“எழுத்தாளர்கள் மிகவும் உணர்வுவயப்பட்டவர்கள். சட்டென சீண்டப்படுவார்கள். லேசாய் உதாசீனித்தாலே
தாம் அவமதிக்கப்பட்டதாய் கொந்தளிப்பார்கள். அவர்களின் தற்காலிக கோபதாபங்களை பொருட்படுத்தி
அதைக் கொண்டு அவர்களை மதிப்பிடக் கூடாது.” முழுக்க முழுக்க உண்மை இது.
தமிழில் எழுத்தாளர்கள் அடிக்கடி
கண் தெரியாத உதாசீனத்தால் சீண்டப்பட்டு உறையில் இருந்து கத்தியை உருவி புரவியில் ஏறி
சீறிக் கிளம்புகிறார்கள். குழுவாய் சேர்ந்து மோதுகிறார்கள். அதே வேகத்தில் ஒன்றாய்
சேர்ந்து ஆறத்தழுவவும் செய்கிறார்கள். தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த மோதல்களும்
கூடல்களும் வேடிக்கையாய் அபத்தமாய் இருக்கும். ஆனால் இந்த அகக்கொந்தளிப்பு, ஈகோவின்
தத்தளிப்பு, தன்னை நிரூபிக்கும் ஆவேசத்தில் இருந்து தான் சிறந்த எழுத்தும் உருவாகிறது.
பெரும் இலக்கிய மோதல்களுக்கு, கடும் வெறுப்பு, கசப்புக்கு பின்னால் பல சமயங்களில்
“என்னை நீ கவனிக்கவில்லை” எனும் மிக எளிய ஏக்கம் தான் இருக்கிறது.
ஆட்டோ சங்கர் போன்று கொலைத்திட்டத்துடன்
வரும் எழுத்தாளனையும் அவனது படைப்பு குறித்து அக்கறையாய் சில சொற்கள் பேசினால் மறுநொடியில்
வண்ணதாசன் போல் நெகிழ்வானராய் மாற்றி விடலாம்.
பின்குறிப்பு: நான் படைப்பின்
மீதான அக்கறை என உண்மையான வாசக கவனத்தை தான் குறிப்பிட்டேன். முகஸ்துதியை அல்ல. முகஸ்துதியை
எழுத்தாளன் உடனே மோப்பம் பிடித்து அறிந்து கொள்வான்.