“இது ஒரு கனவு நிலை…
கனவுக்குள் கனவாய் எனை நானே கண்டேனே”
தாமரையின் இந்த வரிகள் கேட்கும்போது
நகுலன் ஒருவேளை ரொமாண்டிக்காக கவிதை எழுதியிருந்தால் இப்படித் தான் எழுதியிருப்பார்
என தோன்றியது.
தாமரையின் திரைப்பாடல்களில் இது
போல் அதி அற்புதமான உருவகங்கள் அடிக்கடி வரும். காதல் என்பது கனவு நிலை என்பது அனைவரும்
அறிந்ததே. ஆனால் விஷயம் அது மட்டுமல்ல. இந்த கனவு எங்கிருந்து வருகிறது?
ஒரு சிலந்தி வலையை பின்னி பூச்சிக்காக
காத்திருப்பது போல யாரோ பின்னி வைத்த கனவு தான் காதல். இன்னொருவர் பின்னிய கனவில் நாம்
போய் விழுகிறோம். முழுக்க வேறொருவராக மாறுகிறோம். மற்றொருவரின் கற்பனையில் மொட்டு விட்டு
மலர்கிறோம். இன்னொருவருக்கு நம் மீதுள்ள பிரியம், உணர்ச்சிகள், நம்பிக்கை, ஆதர்சங்கள்,
ஈர்ப்பு, கற்பிதங்களில் திளைக்கிறோம். அதில் ஒரு அலாதியான சுதந்திரம் இருக்கிறது. நீங்கள்
நீங்களாக இல்லாமல் இருக்க முடிகிறது. இது தான் மற்றொருவர் கனவில் வாழும் சுகம். அதன்
மயக்கம்.
நாம் இதோடு நிறுத்துவதில்லை. நம்முடைய
கனவில் எதிர்தரப்பையும் மாட்ட வைக்கிறோம். அவர் நம் கனவில் சுகிக்கிறார். இப்படி ஒரு
கனவின் மேல் இன்னொரு கனவை கட்டி எழுப்புகிறோம். அவன் கனவில் அவள் தன்னையும் அவள் கனவில்
அவன் தன்னையும் பார்க்க முடிகிறது. தனியே இருந்து யோசிக்கையில் கனவுக்குள் கனவாக நம்மையே
கண்டு சிலாகிக்கிறோம். இதுவே “கனவுக்குள் கனவாய் எனை நானே கண்டேனே!”