ஒருவர் சில நாவல்களை எழுதி பிரசுரிக்காமல்
வைத்திருக்கிறார். அவரை நாவலாசிரியர் என்று அழைக்கலாமா? அல்லது வேறு எப்படி அழைப்பது?
சரி, நாவலாசிரியர் என அறியப்பட பிரசுரமும், அது பரவலாக வாசிக்கப்படுவதும் ஒரு அளவுகோல்
என வைப்போம். மற்றொருவர் பல நாவல்கள் எழுதி பிரசிரித்திருக்கிறார். ஆனால் விமர்சகர்களும்
வாசகர்களும் அவை நாவலே அல்ல என்று நிராகரித்து விட்டனர். இப்போது அவர் நாவலாசிரியரா
இல்லையா?
ஒருவர் அனுப்பிய கவிதை தவறுதலாக
வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகி விடுகிறது. இன்னொருவர் கவிதை ஜோக் பகுதியில் தவறுதலாய்
வெளியாகிறது. இரண்டுமே வெகுவாய் பாராட்டப்படுகின்றன. இப்போது அவர் எப்படி அறியப்பட
வேண்டும்?
என் நண்பர் ஒருவர் நாவல்கள் எழுதிக்
கொண்டிருக்கிறார். அவர் வேறெதுவும் இதுவரை பிரசுரித்ததில்லை. நான் அவரை என் நண்பர்களிடம்
அறிமுகப்படுத்தும் போது “இவர் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்” என்பேன். அவர்கள் அவரை
குழப்பமாய் பார்ப்பார்கள். ஏனென்றால் அது ஒரு அடையாளம் அல்ல. அடையாளம் எப்போதும் தொடர்வினையில்
இராது. உதாரணமாய், ஒருவரை குடிகாரர் எனலாம். ஆனால் “குடித்துக் கொண்டிருக்கிறார்” என
அடையாளப்படுத்த முடியாது. எப்போதுமே எனக்கு அந்த நண்பரை அறிமுகம் செய்வதே பெரும்பிரச்சனை.
என்னுடைய உதவி/இணை இயக்குநர் நண்பர்கள்
யாருமே தம்மை இயக்குநர் என்றோ உதவி இயக்குநர் என்றோ அறிமுகம் பண்ணிக் கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் ”சினிமா இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்று தனிப்பட்டு தெரிந்தவர்களிடம்
கூறுவார்கள். பொதுவானவர்களிடம் “சினிமாவில் இருக்கிறேன்” என மேலும் பூடகமான விளக்கம்
ஒன்றை அளிப்பார்கள். அவர்களாலும் தம்மை சுலபத்தில் சுயஅறிமுகம் பண்ண முடியாது.
ஜெயமோகன் இது குறித்து ஒரு நகைச்சுவை
கட்டுரை எழுதியிருக்கிறார். ரைட்டர் என்று தன்னை எழுத்தாளன் அறிமுகப்படுத்தினால் எந்த
போலீஸ் ஸ்டேஷனில் என கேட்பார்கள் என்று கூறியிருப்பார். எனக்குத் தெரிந்து சொன்னவுடனே
புரிகிறாற் போன்ற ஒரு அடையாளம் என்றால் அது “கவிஞர்” தான். “நான் ஒரு கவிஞன்” என சொல்லிப்
பாருங்கள். எல்லாருக்கும் உடனே புரியும். எங்கே எழுதுகிறீர்கள், அதை யார் படிக்கிறார்கள்,
பணம் வருமா என்றெல்லாம் கூட கேட்க மாட்டார்கள். கவிஞனை நம் சமூகம் ஒரு நாடோடிக் கலைஞனாக,
அடுக்குவரிகளை சொல்லி மகிழ்வுக்கும் பொழுதுபோக்காளனாக, மொழி வல்லுநனாக கற்பனை செய்து
வைத்திருக்கிறது. எந்த ஒரு கூட்டத்திலும் ஒருவரை எழுத்தாளர் என அறிமுகப்படுத்துவதை
விட கவிஞர் என பிரகடனம் செய்தால் மக்கள் உடனடியாய் ஏற்றுக் கொள்வார்கள். இங்கு நீங்கள்
நாவல், கதை, கட்டுரை என்ன எழுதினாலும் மக்களுக்கு நீங்கள் கவிஞன் தான். ஒருவேளை நம்
சமூகத்தில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளுமைகள் கவிஞர்களாகவே இருப்பதனால் இது இவ்வாறு
இருக்கலாம்!
இயக்குநர் ராமை எனக்கு அவர் இயக்குநர்
ஆகும் முன்பே தெரியும். அப்போதே அவர் தன்னை இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்துவார்.
“படம் எடுக்கணுமுன்னு நினைச்சாலே அவன் இயக்குநர் தான். பணம் எடுத்து வெளியாகணமுன்னு
அவசியம் இல்லை” என்பார்.
ராமின் நிலைப்பாட்டிலும் ஒரு லாஜிக்
உள்ளது. ஒருவர் யார் என்பதை அவர் அல்லாது வேறு யார் தீர்மானிக்க? ஆனால் ஒருவர் வாழ்நாளெல்லாம்
சினிமா எடுக்கப் போவதாய் தீர்மானித்துக் கொண்டு மட்டும் இருந்தால் அவர் இயக்குநரா?
ஒருவர் எழுத வேண்டிய நாவலின் சொற்களை மனதிற்குள் மட்டும் உருட்டிக் கொண்டு எழுதாமலே
போய் விட்டால் அவர் நாவலாசிரியரா? எழுத முடிவெடுத்த உடன் ஒருவன் எழுத்தாளனா? முடிவும்,
பிரகடனமும் மட்டுமே போதுமா?
பிரசுரம், எழுத்தின் மீதான மதிப்பு,
அங்கீகாரம் என எதுவுமே நிலையானது அல்ல. வெர்ஜினியா வூல்ப் அவரது படைப்புகள் சிலவற்றை
நண்பர்கள் வாசிப்பதற்கு என்று மட்டுமே ஒரு வட்டத்துக்குள் சுற்ற விடுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
அப்படைப்புகளின் அங்கீகாரம் பதிப்பில் இல்லை. சிறிய நண்பர் வட்டத்தின் எதிர்வினையில்
இருக்கிறது. ஒருவேளை அந்நாவல்கள் பதிப்பிக்கப்படவே இல்லை என்று கொள்வோம். நண்பர் வட்டத்தினரின்
மறைவுடன் அவை முழுக்க மனித நாகரிகத்தின் நினைவில் இருந்தே கழன்று விடும். அப்படி என்றால்
அவற்றால் நிலைக்கவே முடியாதா? ஒருவேளை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நண்பர் குழு சில மாதங்களுக்கு
பின்னர் தம் மதிப்பீடு தவறானது, அப்படைப்புகள் உண்மையில் குப்பை என கூறினால் என்னவாகும்?
பதிப்பிக்கப்படாமலே தனக்கென ஒரு இடத்தை பெற்ற படைப்புகள் இப்போது முழுக்க மறைந்து விடுமே!
ஆக சுயமதிப்பீடு மட்டுமே நிலையானது.
நான் என்னை கவிஞன் எனக் கோரினால் நீங்கள் என் தொகுப்பை வெளியிட்டாலும் வாங்கினாலும்
படித்தாலும் இல்லாவிட்டாலும் நான் கவிஞன் தான். நீங்கள் ஒரு விசயத்தை தீவிரமாய் நம்பி
முன்னெடுத்தால் அதுவே உங்கள் அடையாளம். இந்த நம்பிக்கை தான் ஒருவனை தொடர்ந்து எழுத
வைக்கிறது.
நீங்கள் வெளியிட்ட நாவலை படித்து அது நாவலே அல்ல
என ஒருவர் மதிப்பிட்டு நிராகரித்தால். ஒரு உண்மையான எழுத்தாளனாய் நீங்கள் அந்த மதிப்பீட்டை
ஏற்க மறுப்பீர்கள். அந்த மறுப்பில் தான் நீங்கள் நிலை கொள்கிறீர்கள். அந்த புள்ளியில்
தான் உங்கள் அடையாளம் உறுதியாகிறது. “அவர்
சொல்வது உண்மை, அது நாவல் அல்ல” என நீங்கள் நினைக்கத் துவங்கியதும் நீங்கள் எழுத்தாளன்
அல்லாமல் ஆகிறீர்கள். எழுத்தாளன் ஆக விரும்புகிறவர்களுக்கும் ஆனவர்களுக்கும் இது தான்
வித்தியாசம்.