”கிரேக்க பயணத்தில் மதுவிடுதி ஒன்றில் சீனர் ஒருவரை
சந்திக்கிறார் [ஹென்றி] மில்லர். இருவரும் சீன மொழியில் உரையாடிக் கொள்கிறார்கள். அப்போது
மில்லர் அவர் தன்னிடம் பொய் சொல்வதாக உணருகிறார். உடனே தானும் நிறைய பொய்களை சொல்லத்
துவங்குகிறார்…. வெளியூரில் நீங்கள் சொல்லுகிற எல்லா பொய்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
அப்படி என்றால் வெளியூர் என்பதே பொய்கள் பகிரும் இடம் என்று கருதலாமா என தோன்றியது”
எஸ்.ரா தீராநதியில் எழுதி வரும்
தொடரில் இம்மாத கட்டுரையான “ஹென்றி மில்லரின் கிரேக்க பயணத்தில்” நான் மிகவும் ரசித்த
இடம் இது. பயணம் குறித்த ஒரு முக்கியமான பார்வை இது.
ஏன் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், கற்பனை
மிக்க மனிதர்களுக்கும் பயணம் அவ்வளவு உற்சாகம் தருவதாய், புத்துணர்வு ஊட்டுவதாய் இருக்கிறது?
ஏனென்றால் பயணத்தின் போது நாம் முற்றிலும் மிகுகற்பனையான (fantasy) உலகில் பயணிக்க
முடிகிறது. அங்கு நாம் மற்றொருவராக மாறுகிறோம். அங்கு நம்மை வேறொருவராய் புது மனிதர்களிடத்து
சித்தரிக்க முடியும் என நம்புகிறோம். ஹென்றி மில்லர் போல் ஏட்டிக்குபோட்டியாய் பொய்
சொல்லாதவர்கள் கூட தமக்குள் ஒரு புது பிம்பத்தை உருவாக்கி அதில் ஒரு சுகத்தை காண்கிறார்கள்.
அதனால் தான் பயணத்தின் போது நம் நடையில் ஒரு விடுதலை உணர்வு, அக்கறையின்மை வருகிறது.
அங்கு நாம் மற்றொருவராய் இருப்பதால், நாம் நமது அசல் சுயம் பற்றிய நம்பிக்கைகள், உறுதிப்பாடுகளை
தக்க வைக்க, பாதுகாக்க அல்லல்பட வேண்டியதில்லை.