அரசியல் இன்று கார்ப்பரேட்மயமாகி
விட்ட பின் அரசியல் தலைவர்கள் ரோட்டில் இறங்கி போராட விரும்புவதில்லை. அரசியல் இன்று
வெகு சொகுசாகி விட்டது. ஒரு பெரும் அரசியல் தலைவர் மக்கள் பிரச்சனைக்காக பத்து நாள்
உண்ணாவிரதம் இருந்ததாய், போராடி சிறை சென்றதாய் கடைசியாய் எப்போது கேள்விபட்டீர்கள்?
ஒரு அரசியல் தலைவர் சாலையில் அமர்ந்ததாய் கடைசியாய் எப்போது கேள்விப்பட்டீர்கள்? ஆமாம்
கேஜ்ரிவால் செய்தார். அதனால் தான் அவர் உடனடியாய் கவனிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ரட்சகனாகவே
பார்க்கப்பட்டார். இன்றும் போராட்டங்களை சிறு கட்சிகள் மட்டுமே நடத்துகின்றன. பெரும்
கட்சிகள் அறிக்கை விடுவது, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது,
பேரணி போவது என முதலாளித்துவ வடிவம் எடுத்து விட்டன.
போன முறை தமிழகம் முழுக்க சிறுக
சிறுக டாஸ்மாக்குக்கு எதிராய் போராட்டங்கள் வெடித்து பெரும் நெருப்பாய் பற்றிக் கொண்டது.
ஆனால் இது போன்ற போராட்டங்களை ஆளுங்கட்சியின் ஊழல், முறைகேடுகளை முன்வைத்து ஏன் முக்கிய
எதிர்க்கட்சி செய்வதில்லை என ஒரு அரசியல்வாதி நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில்
மேலே நான் எழுதியது தான். இன்று வட்டச்செயலாளர்கள் கார், வீடு, தோட்டம் என வசதியாகி
விட்டார்கள். நிறைய பேரால் நீண்ட தூரம் நடக்க கூட முடிவதில்லை (ஸ்டாலின் நிச்சயம் விதிவிலக்கு).
கேட்டால் நீரிழிவு, ரத்த அழுத்த தொந்தரவு என்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் மக்கள்
செல்வாக்கால் வெல்லலாம் எனும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆயிரங்கோடி பணம் புழங்கும்
வியாபார விளையாட்டில் தீர்மானிக்கப்படுவதாய், அதிர்ஷ்டம், மக்களின் அர்த்தமற்ற கோபதாபங்களின்
விளைவானதாய் தேர்தல் முடிவுகளை பார்க்கிறார்கள்.
நாளைய வேலை நிறுத்த போராட்டத்தை
நான் இந்த பின்னணியில் தான் பார்க்கிறேன். இதனால் கர்நாடகாவுக்கு என்ன பாதகம்? ஒன்றும்
இல்லை. நெருக்கடி? நாளை எப்படியும் சகஜ நிலை பாதிக்கப்படாது என்பதால் ஒரு அர்த்தமற்ற
சடங்காக மட்டுமே இந்த எதிர்ப்பு இருக்கும். பெயருக்கு தமிழகம் தன் எதிர்ப்பை பதிவை
செய்ததாக இருக்கும். ஆனால் இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மட்டுமே நஷ்டப்பட, சிரமப்பட
போகிறார்கள்.
உண்மையிலேயே கர்நாடகாவுக்கு நெருக்கடி
கொடுக்க வேண்டும் என்றால் நமது அரசியல் தலைவர்கள் கர்நாடகாவுக்கு சென்று தர்ணா செய்து
கைதானால் போதும். அதை மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும். எனக்கு என்னவோ கேஜ்ரிவால்
மாதிரி ஒரு தலைவர் அப்படி செய்திருப்பார் என படுகிறது. ஸ்டாலினை கர்நாடக அரசு கைது
செய்தால் அவரது பிம்பம் தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும் எப்படி உயரும் என யோசித்து
பாருங்கள்.
இதனால் தண்ணீர் பிரச்சனை சரியாகும்
என நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்ப்பை தெரிவிப்பது என்றால் அதற்கு தாக்கம் இருக்க வேண்டும்.
மோடி ஒரு யோகா தினத்தை பயன்படுத்திக் கொண்ட அளவு கூட நம் அரசியல்வாதிகளால் ஒரு மாநிலத்தின்
கொதிக்கும் பிரச்சனையை பெரிது படுத்த முடியவில்லை.