இக்கட்டுரையில் இமையத்தின் கேள்வி முக்கியமானது. ஏன் மாணவர்கள்
நாள் முழுக்க கழிப்பறையை பயன்படுத்தாமல் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.
ஏன் ஒரு பள்ளி நிர்வாகம் கழிவை வெளியேற்றுவதை முக்கியம் என நினைப்பதில்லை? ஏன்
போதுமான கட்டமைப்பு வசதிகள், நேரம் இதற்கு வழங்கப்படுவதில்லை?
நான் பள்ளி மாணவனாய்
இருக்கும் போது வகுப்பில் இருந்து கழிப்பறை தொலைவில் இருக்கும். போலியோ காரணமாய்
என்னால் வேகமாய் நடக்க இயலாது. நான் கழிப்பறையை நெருங்கும் போது மணி அடித்து
விடும். இடைவேளை முடிந்து விடும். இதனால் நான் நாள் முழுக்க மூத்திரத்தை அடக்க
கற்றுக் கொண்டேன். இதை சமாளிக்க அதிகமாய் தண்ணீரும் அருந்த மாட்டேன்.
இது ஒரு பண்பாட்டு பிரச்சனையும் தான். முன்பு உயிரோசையில் ஒரு
கட்டுரை படித்த ஞாபகம் சிங்கப்பூரில் கழிப்பறைக்கு தரப்படுகிற முக்கியத்துவம்
பற்றியது. ஆனால் இந்தியர்களுக்கு கழிவுகள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணம் உள்ளது.
கழிவை நாம் கீழ்மையுடன், கீழ் சாதியுடன், ஒதுக்கப்பட வேண்டியவற்றுடன் இணைத்துக்
கொண்டே போகிறோம். மாணவர்களின் மூத்திரத்தை அடக்க சொல்லும் ஆசிரியர்களும் இந்த
பண்பாட்டில் இருந்து தான் வருகிறார்கள். அழுக்கின் மீது சந்தனத்தை பூசி மறைக்கும்
ஒருவித பண்பாடு நமது.
நமக்கு அழுக்கு, சீழ், கழிவு முக்கியம். இவற்றை கேவலமானவையாய்
காட்டி நம்மை இவற்றில் இருந்து விலக்கி வைப்ப்போம். பிறகு விலகி இருப்பதாலே நாம்
மேலானவர் என காட்டிக் கொள்வோம். நம் சாதியத்தின் அடிப்படையே இந்த உளவியல் தான்.
இதனால் தான் பொதுத்தளத்தில் மல ஜலம் பற்றி பேச நமக்கு சிக்கலாக உள்ளது. அதை ஒரு
முக்கிய பிரச்சனையாய் விவாதிக்க மனத்தடை உள்ளது.
ஒரு பள்ளியிலோ
நிறுவனத்திலோ ஒரு பிரம்மாண்ட பூங்காவனம் அமைத்து அதை பராமரிப்பார்கள். ஆனால்
கழிப்பிடத்தை குறுகலாய், பராமரிப்பற்றதாய், தண்ணீர் கூட இல்லாமல் வைத்திருப்பார்கள்.
இது அடிப்படை இந்திய மனப்பான்மை.
நான் கல்லூரி ஆசிரியனாய் இருந்த
போது வகுப்பில் மாணவர்கள் அடிக்கடி வெளியே செல்ல அனுமதி கேட்பார்கள். நான் மறுத்ததே
இல்லை. ஆனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் இதை செய்ய முடியாது. பள்ளியில் கல்வி, ஆரோக்கியத்தை
விட கட்டுப்பாடு மிக முக்கியம். அங்கு மாணவர்கள் எப்போதும் சிலை போல் வகுப்புக்குள்
இருக்க வேண்டும், வளாகத்தில் திரியக் கூடாது என நிர்வாகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு
அழுத்தம் தரப்படும். கழிப்பறைக்கு அனுப்பினால் மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பாமல்
ஓடி விடுவார்கள் என பயம் வேறு.
மாணவர்களை நம்பி அவர்களை அனுசரணையாய் நடத்தும் பள்ளிகள்
நமக்குத் தேவை. பள்ளிக் கல்வியில் நமக்கு நிறைய சீர்திருத்தங்கள் தேவை. முதலில் பள்ளிக்கூடங்கள்
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அங்கு சிறைக்கூடங்களின் சூழல் இருக்க கூடாது.