“இறுதி யாத்திரை” எம்.டி வாசுதேவன்
நாயரின் அதிகம் பேசப்படாத ஒரு நாவல். தமிழில் சமீபத்தில் கே.வி ஷைலஜாவின் மொழியாக்கத்தில்
வம்சி பதிப்பக பிரசுரமாய் வெளியாகி உள்ளது. இந்நாவல் குறித்து பேசும் முன் எம்.டி என்ன
மாதிரியான எழுத்தாளர், அவரது இடம் என்ன என காண்போம்.
எம்.டி வாசுதேவன் நாயர் மலையாள
நவீன இலக்கியத்தின் ஒரு சிறந்த ஸ்டைலிஸ்ட். சுருக்கமான விவரணைகள், நுணுக்கமான பார்வை,
மிக மென்மையான உணர்வுகள் (மரணத்தின் இழப்பை கூட அடங்கின தொனியில் ஒரு கசப்பாக வெளிப்படுத்தும்
பாங்கு), கவித்துவம், சம்பவங்கள் மற்றும் மனிதர்களுடன் ஒரு விலகின அணுகுமுறை கொண்ட
மைய பாத்திரம், நகைமுரண், நிறைவின்மை, அதிருப்தி ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்றி
சுற்றினால் அது தான் எம்.டியின் மொழி.
எம்.டி எதைக் குறித்து பேசினார்?
அவரது நாலுகெட்டு, மஞ்ஞு, காலம், ரெண்டாம் ஊழம் ஆகிய படைப்புகள் மிக நளினமான ஆங்கில
மொழியாக்கத்தில் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றை படிக்கையில் அவர் திரும்ப திரும்ப சிதைவுற்ற
ஒரு மரபான சமூக வாழ்வை பற்றி பேசுகிறார் என உடனே புரிந்து விடும். நாலுகெட்டு எனும்
பாரம்பரியமான நாயர் குடும்ப வீடு தான் எம்.டியின் மையப் படிமம். இந்த வீடு கவனிப்பாரற்று
அழிந்து வருகிறது. “இறுதி யாத்திரை” நாவலில் ஒரு பிராமணக் குடும்பத்தின் தலைவர் தனது
கோவிலகத்தில் உள்ள சிற்பங்களை உடைத்து ரகசியமாய் கொண்டு சென்று விற்கக் கூடியவராய்
இருக்கிறார். அப்படித் தான் அவரது வீட்டில் அடுப்பெரிகிறது. தமிழிலும் இவ்வகையான கருப்பொருளை
மையமாய் கொண்டு செயல்பட்டவர்கள் உண்டு. விக்கிரமாதித்யனைக் குறிப்பிடலாம். அவரது “இற்று
விழப் பார்க்கிறது உத்திரம்” எனும் வரி பிரபலம். தன் வீட்டின் சிதிலமுற்ற நிலை விக்கிரமாதித்யனுக்கு
ஒரு மரபின் வீழ்ச்சியை குறிக்கிறது. அந்த மரபை பொலிவிழந்த வெள்ளாள சமூக வாழ்வு என்றும்
தமிழின் பாரம்பரிய விழுமியங்கள் என்றும் இருவிதமாய் பார்க்கலாம். ஜெயமோகனின் ”ரப்பர்”,
“காடு” ஆகிய நாவல்களும் ”பல்லக்கு” எனும் பிரபல சிறுகதையும் எம்.டியின் மேற்சொன்ன மையப்படிமத்தின்
வேறு வகையான ஒரு கவித்துவ மீளுருவாக்கம் தான். என்ன வகை?
இதை புரிந்து கொள்ள நாம் சுந்தர ராமசாமியின் ”புளிய
மரத்தின் கதை” நாவலுக்கு செல்ல வேண்டும். சு.ரா சோஷலிஸ எதார்த்தவாத்தில் இருந்தும்,
மார்க்ஸிய புரிதலில் இருந்தும் வாழ்க்கை பிரச்சனைகளை வரலாற்று நகர்வின் விளைவாக பார்க்க
கற்றார். மனிதன் துயரத்தில் உழல்கிறான் என்றால் அது அவனது செயலின் விளைவல்ல, (சமூக
பொருளாதார) வரலாற்றின் போக்குக்கு அவன் ஆட்படுவதன் காரணமாகவே அவன் தனிப்பட்ட நெருக்கடிகள்
தோன்றுகின்றன என்கிறது மார்க்ஸியம். அதனால் அது பொருளாதார மறுசீரமைப்பின் மூலம் சமூக
மாற்றம் கொண்டு வர முடியும் என நம்புகிறது. சமூக மாற்றம் தனிமனிதனுக்கும் மகிழ்ச்சியும்
நிறைவும் தரும். ஆக மனிதன் வரலாற்று எந்திரத்தின் ஒரு திருகாணி மட்டுமே. இந்த பார்வையுடன்
சு.ரா நவீன இலக்கியத்தில் இருந்து தான் பெற்ற அந்நியமாதல், தனிமனித அழற்சி, அவநம்பிக்கை,
தனிமை ஆகியவற்றையும் இணைக்கிறார். சு.ராவிடம் இருந்து இந்த பார்வையை வரித்துக் கொள்ளும்
ஜெயமோகனுக்கும் இயல்பில் மார்க்ஸிய ஈடுபாடு உண்டு (அவர் பின்னாளில் தோழர்களுடன் கடுமையாய்
முரண்பட்டாலும்)
சு.ரா என்றுமே ஒரு குடும்பத்தின்
அல்லது சாதியின் சீரழிவை சித்தரிக்க விரும்பியதில்லை. ஆனால் ஜெயமோகன் (விக்கிரமாதித்தியனைப்
போல) ஒரு மேல்சாதி அல்லது மத்திய சாதி தனிமனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து அவன் சார்ந்த
குடும்ப / சமூக அமைப்பின் வரலாற்று மாற்றங்களினால் அடையும் சிதைவுகளை சித்தரிக்கிறார்.
தமிழ் மனதுக்கே உரிய உக்கிரத்துடன், மன எழுச்சியுடன், கண்ணீர் தளும்பல்களுடன், நாடகீயத்துடன்
ஜெயமோகன் “நாலுகெட்டின்” கதையை குமரி மாவட்ட வட்டார வழக்கில் எழுதிப் போகிறார்.
எம்.டியின் நாவல்கள் தமிழில் எப்படி பார்க்கப்படுகின்றன
என்ற கேள்வி முக்கியமானது. பஷீர் அளவுக்கு அவர் இங்கு ஒரு அலையை கிளப்பவில்லை. இங்கு
அவர் பெயரை சிலாக்கியமாய் குறிப்பிடுகிறவர்கள் குறைவு. என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி
சொல்வார் “எம்.டி மலையாள இலக்கியத்தின் சுஜாதா”. அவர் அ.முத்துலிங்கம் குறித்தும் இதையே
சொல்லுவார். எனக்கு எம்.டியும் முத்துலிங்கமும் அருகருகே வைத்து படிக்கப்பட வேண்டியவர்கள்
எனத் தோன்றும். இருவரின் படைப்புகளும் அவை எழுப்பும் தீவிரமான கேள்விகளை விட மொழியின்
நுணுக்கங்களுக்காய் கொண்டாடப்பட்டவை. ஏன் தமிழர்களை எம்.டியின் எழுத்து உலுக்கவில்லை?
1)
மலையாள பண்பாட்டின் ஒரு ஆதார பிரச்சனையை பேசின,
மலையாள வெளிக்கே உரித்தான ஆளுமை எம்.டி. சிரியன் கிறித்துவர்களும், பிற சமூகத்தினரும்
அடைந்த பொருளாதார அரசியல் வெற்றிகள் முன்பு சிறுத்துப் போய் உணர்ந்த, நாகரிக மாற்றங்களின்
இடுக்கில் மாட்டிக் கொண்ட, முன்னாள் நிலப்பிரபுக்களுக்களான நாயர்களின் குழப்பமும் அவலமும்
சிக்கல்களும் பெரும்பாலான தமிழ் சமூகங்களுக்கு நெருக்கமானவை அல்ல. ஓரளவு வேளாளர்களின்
சமூக வாழ்க்கை சிதைவுகளை நாயர்களின் சரிவுடன் ஒப்பிடலாம். அதனாலே விக்கிரமாதித்யன்,
கலாப்பிரியா ஆகியோரை எம்.டியின் அழகியலுக்கு பக்கத்தில் வைக்க முடிகிறது. ஆனால் இந்த
ஒப்பீடு கூட சிறிய அளவிலானது தான்.
2)
எம்.டியிடம் சு.ரா, ஜெயமோகன் ஆகியோர் படைப்புகளில்
உள்ள தத்துவ சாரம், தீவிரமான கேள்விகள், வரலாற்று பார்வை இல்லை. வீழ்ச்சியையும் அந்நியமாதலையும்
தனிமனித பார்வையில் மெல்லிய கவித்துவ எழுச்சியுடன் பேசியவர் எம்.டி. தமிழ் நவீனத்துவ
புனைவின் ஜாம்பவான்களை படித்தபின் நமக்கு எம்.டியை அணுகும் போது விருந்துக்கு பின்
பீடா சாப்பிடுவது போலத் தான் இருக்கும்.
இங்கு நான் எம்.டியை எந்த விதத்திலும்
குறைத்து மதிப்பிடவில்லை. இலக்கிய வரலாற்றில் அவர் இடத்தை தமிழ் நவீன மரபின் சாதனைகளுடன்
ஒப்பிட்டு பார்த்து மதிப்பிடுகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் எம்.டியின் தீவிர
ரசிகன். எங்கு எப்போது அவரது படைப்புகள் கிடைத்தாலும் இரவு பகலாய் வாசித்து சிலாகிப்பவன்.
அவரது மஞ்ஞு நாவலை அலசியும் கொண்டாடியும் ஒரு கட்டுரை பிரசுரித்திருக்கிறேன். அவரை
என்றாவது நேரில் சந்தித்து அதிலுள்ள கருத்துக்களை குறித்து பேச வேண்டும் எனும் கனவு
எனக்குண்டு. என்னளவில் அவரது படைப்புகளின் முக்கியமான அம்சம் ஒரு எதார்த்த கதைசொல்லியாக
அவர் மொழியை கையாளும் விதம் தான்.
ஒரு சூழலை எதார்த்தமாய் விவரித்து செல்லும் போது
சட்டென எதிர்பாராத ஒரு தருணத்தில் அதை ஒரு குறியீடாய் மாற்ற அவரால் முடியும். இந்த
மாயம் தான் அவரது முக்கிய சிறப்பு. ஒரு நாவலுக்குள் பலவித கண்ணோட்டங்களில் ஒரு பிரச்சனையை
அணுகுவது, பேசாத ஒரு பாத்திரத்தையும் கூட ஒரு வலுவான தரப்பாக மாற்றுவது, வாசித்து முடித்த
பின் வாசகனுக்குள் தன் வரிகளை முளைத்தெழுந்து கானகமாய் விரிய செய்வது அவரது வேறு தனிச்சிறப்புகள்.
மனித மனத்தை குறைவாக சொல்லி பிரம்மாண்டமாய் சித்தரிப்பதில் அவர் வித்தகர்.
”இறுதி யாத்திரை”யின் களம் நமக்கு
பழக்கமானது. மிக நெருக்கமான ஒருவரின் மரணம் நிகழ்கிறது. அதற்கு உணர்ச்சிகரமாய் எதிர்வினை
ஆற்ற முடியாத நிலையில் கதையின் மைய பாத்திரங்கள் இருக்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது
என்பதை பகடியாக சித்தரிக்கவோ அல்லது ஏன் நிகழ்கிறது என்பதை தீவிரமாய் அலசவோ இவ்வகை
கதைகள் செய்யும். நான் இதை சொன்னதுமே உங்களுக்கு காம்யுவின் ”அந்நியன்” நினைவு வரும்.
அதே போல் காப்காவின் “உருமாற்றமும்”. இரண்டுமே சிதைவை, அழிவை பற்றி உடலை மையமாக்கி
பேசுகின்றன. பிறகு இந்த சிதைவின் உளவியல் என்னவென கேட்கின்றன. யு.ஆர் அனந்தமூர்த்தின்
மிகவும் புகழ்பெற்ற ”சம்ஸ்காரா” நாவலிலும் ஒரு மரணம் இது போல் நிகழ்கிறது. ஒரு கலகக்கார
பிராமணன் இறக்கிறான். அவனுக்கு ஈமச்சடங்கு செய்யவோ அவன் பிணத்தை தீண்டவோ அக்கிரகாரத்து
பிற பிராமணர்கள் மறுக்கிறார்கள். விளைவாக அவன் உடல் அழுகி அதில் இருந்து ஊரில் பிளேக்
நோய் பரவுகிறது. சம்ஸ்காராவிலும் எம்.டியின் “இறுதி யாத்திரையிலும்” ஒரு மரணித்த உடலை
சகமனிதர் இயல்பாய் எதிர்கொள்ள முடியாததும் அது உருவாக்கும் சிக்கல்களும் தான் கரு.
இது போன்ற நாவல்களில் பிணம் என்பது சமூக நிலையை பகடி
செய்யவும் விசாரணை செய்யவுமான ஒரு சாக்கு மட்டுமே. எம்.டியின் “இறுதி யாத்திரையில்”
அப்பாவின் மரணத்தை ஒட்டி ஈமச்சடங்கு செய்ய ஊரில் உள்ள பாரம்பரிய வீட்டுக்கு வரும் மகன்களின்
கண்ணோட்டத்தில் இருந்து நவீன காலத்தில் நாயர் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பேசப்படுகின்றன.
நாவல் முழுக்க பல்வேறு விதமான பயணங்கள் நிகழ்கின்றன. வேலைக்கான, லட்சியத்தை தேடிய,
கலை வெற்றிக்கான, அப்பாவை காண்பதற்கான பலவித பயணங்கள். மரணத்துக்கு பின்பான அப்பாவின்
இறுதிப் “பயணமும்” இவற்றில் ஒன்று மட்டுமே. நாவலில் எல்லா பயணங்களும் ஒரு தனி மனிதன்
தன் அடையாளத்தை உருவாக்கவோ தேடி அடையவோ செய்பவை, ஆனால் அவை வியர்த்தமாய் முடிகின்றன.
நகைமுரண் இந்நாவலின் ஒரு முக்கிய
அம்சம். அப்பாவின் பிரேதத்தை காண வரும் மகன்களாலோ உறவினர்களாலோ மனம் உடைந்து அழ முடிவதில்லை.
ஒரு உறவுக்கார பெண் சட்டென ஒரு கணம் பிணத்தின் முன் ஒப்பாரி வைத்து நிறுத்தி சுற்றுமுற்றும்
பார்த்த பின் கூட்டத்தில் இருந்து கழன்று கொள்கிறாள். ஒரு நாடகத்தில் ஒற்றை வசனம் மட்டும்
பேசும் சிறிய பாத்திரம் போல் இருக்கிறாள் அவள். மகன்களால் அது கூட முடிவதில்லை. பிணத்தை
பார்த்த பின் எரிக்கும் வரை உணவருந்தக் கூடாது என்பது சம்பிரதாயம். ஆனால் இந்த ஈமச்
சடங்குகளின் ஊடே தொடர்ந்து உணவு, அன்றாட சௌகரியங்கள் குறித்த உரையாடல்களும் தயாரிப்புகளும்
மகன்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடக்கிறது. ஒரு அறையில் சிற்றுண்டியும் தேநீரும்
தயாரித்து வைத்து ரகசியமாய் ஒவ்வொருவராய் சென்று அருந்தி வருகிறார்கள். பிணம் என்பது
ஒரு அசௌகரியம் மட்டுமே.
பிணம் இங்கு ஒரு குறியீடு. அது
பெயரளவில் மட்டுமே நிலைக்கும் நாயர் சமூக விழுமியங்கள், மரபு, கட்டமைப்பு ஆகியவற்றை
குறிக்கிறது. அதன் மரணத்துக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். மரணித்ததும் அனைவரும்
அதன் ஈமச்சடங்குக்காய் காத்திருக்கிறார்கள். அவர்களால் அதன் மரணத்துக்காய் கதறி அழ
முடியாது. அதன் மீதான புகார்களை மட்டுமே வாசிக்க முடியும்.
அப்பா குறித்த மகன்களின் நினைவுமீட்டல்களும் அவர்
மீதான புகார்கள் மற்றும் அதிருப்திகளால் நிரம்பி இருக்கின்றன. அவரால் தன் பிள்ளைகளுக்கு
நல்ல பொருளாதார வாழ்வை ஏற்படுத்தி தர இயலவில்லை. இளமையில் சம்பாதித்த செல்வத்தை குடியிலும்
காமக்களியாட்டங்களிலும் அழிக்கிறார். இறுதிக் காலத்தில் ஏழ்மையில் தவிக்கிறார். இலங்கையில்
வணிகம் செய்கையில் அங்கு மற்றொரு குடும்பத்தை உருவாக்குகிறார். அது அவரது ஊரில் தவிக்கும்
குடும்பத்துக்கு கடும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் அளிக்கிறது. இலங்கைக்கு அப்பாவைத்
தேடிச் செல்லும் மகன் ஒருவனின் பயணம் நாவலின் இறுதிக் கட்டத்தில் வருகிறது. அவன் இலங்கையில்
பார்க்கும் அப்பா தன் மகன் மீது எந்த பாசமும் இல்லாதவர். அவரது வணிக கணக்கு புத்தகத்தில்
உள்ள ஒரு எண்ணாக மட்டுமே ஊரில் உள்ள குடும்பம் எஞ்சி இருக்கிறது. அங்கு அப்பா மீது
மகனுக்கு உள்ள கோபம் அவரது இரண்டாம் மனைவி மீது திரும்புகிறது. அக்குடும்பம் அளிக்கும்
உணவை ஏற்க மறுக்கிறான். சமூக மாற்றமும், குடும்ப சீரழிவும் அவனை அன்புக்கு அந்நியமானவனாக
மாற்றுகிறது. அவனால் மனம் திறந்து மன்னிக்கவும் நேசிக்கவும் முடிவதில்லை. இந்நாவலின்
பாத்திரங்களின் மைய நெருக்கடி இது தான்.
இலங்கையில் அவன் அடிக்கடி ஒரு
கோயில் குளத்திற்கு சென்று அங்குள்ள ஆமைகளுக்கு பொரி வாங்கி போடுகிறான். இவன் அளிக்கும்
உணவுக்காய் அவன் சட்டென நீரின் மேற்பரப்பில் தோன்றி வாயைத் திறந்து கவ்வி மறைவது நாவலில்
ஒரு அபாரமான சித்திரமாக உள்ளது. அற்ப பொரிக்காக எதிர்பார்த்து வாழும் அந்த ஆமைகள் ஒருவிதத்தில்
இந்நாவலின் மனிதர்கள் தாம்.
மிக அழகான சொற்பிரயோகங்கள் இந்நாவலில்
வருகின்றன. புற்றுநோய் மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்து காத்திருக்கும் மகன் ஒருவன்
விடுதி அறையின் துரு பிடித்த கதவை கவனிக்கிறான். அதன் துருக் கறை அவனுக்கு குழந்தைகள்
வரையும் சூரியோதய ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. எவ்வளவு பிரமாதமான நகைமுரண் இந்த ஒப்பீட்டில்
தோன்றுகிறது! மனிதன் தன் இறுதி யாத்திரைக்காய் காத்திருக்கும் புற்றுநோய் கேந்திரத்தில்
குழந்தைகள் பிரியமாய் வரையும் விடியலின் சித்திரம் நினைவுக்கு வருகிறது. விடியல், அஸ்தமனம்
என இரண்டு தரப்புமே ஒரே சமயம் இணையும் அபத்தம் தானே வாழ்க்கை!
கே.வி ஷைலஜாவின் தடையற்ற, சரளமான
மொழியாக்கம் பாராட்டத்தக்கது. அவர் சுகுமாரனைப் போன்று கவித்துவமான மொழிபெயர்ப்பாளர்
அல்ல. ஷைலஜாவினுடையது அறுவை சிகிச்சை கத்தி கிழிக்கும் கோடு போன்ற துல்லியமான மொழியாக்கம்.
நம்மை எம்.டியின் மொழியருகே முடிந்தளவு அணுக்கமாய் கொண்டு செல்கிறார்.