இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில்
இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில்
ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா
போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து
கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும்
எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு
எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால்
போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக
“போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில்
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல
இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது
தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும்
அந்த சுதந்திரம் நான் அளித்தது தான், என்னால் எப்போது வேண்டுமெனிலும் அதை பறிக்க முடியும்”
என அப்பா குறிப்புணர்த்துவார். போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நடப்பது இது தான்.
கடந்த வாரம் போராட்டத்தை மாபெரும்
மக்கள் எழுச்சியாக சித்தரித்து மகத்துவப்படுத்திய சில சேனல்கள் இப்போது அதை கைவிடும்
படி அறிவுறுத்தி வருகின்றன. அப்படியென்றால் கடந்த வாரம் அவர்கள் எழுச்சிக்கு தந்த முக்கியத்துவம்
அரசின் விருப்பப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. போராட்டத்தின் தலைவர்கள் எனக் கூறிக்
கொள்பவர்கள் இப்போது அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள். அவர்களின் கடந்த வாரம்
ஆவேசம் போலியானது என்பது புலனாகி விட்டது. மெல்ல மெல்ல சில நாட்களில் இப்போராட்டம்
முழுக்க துடைத்து அகற்றப்படும். ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் ஆழ்மனதில் அதிகார
வர்க்கம் மீது ஒரு அச்சம் உள்ளது. அந்த அச்சம் குடும்பத்து மூத்தோர், மேலதிகாரிகள்,
அரசு எந்திரம் அனைவர் மீதும் உள்ளது தான். காவல்துறை இந்த அச்சத்தின் தூல வடிவம். காவல்துறையை
அஞ்சும் வரை நாம் குடும்பத்துக்கு, வேலையிடத்தில் அதிகாரிகளுக்கு, சமூகத்தின் பல்வேறு
அதிகார அமைப்புகளுக்கு பணிவோம்.
அதிகார வர்க்கத்துக்கு இந்திய மனம் மீதுள்ள பருந்துப்பிடி
வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் முறியடிக்கப்பட்டது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின்
போது மக்கள் சுயேச்சையாய் தலையில் தடியடி வாங்கி காயத்துடன் கூட்டம் கூட்டமாய் சரிந்தார்கள்.
அந்த ஆத்மசக்தியை காந்தியால் அளிக்க முடிந்தது. ஆனால் அது வரலாற்றி இனி மீள நிகழுமா
என தெரியவில்லை.
தமிழர்கள் என்னதான் வீரமானவர்கள்
என்றாலும் அதிகாரத்தின் முன் பணியக் கூடியவர்களும் தான். உலகம் முழுக்க அவர்கள் சிறந்த
உழைப்பாளிகளாய் கருதி வரவேற்கப்படுவது இதனால் தான். நீங்கள் ஒரு மலையாளியை சுலபத்தில்
வேலை வாங்க முடியாது. ஆனால் தமிழன் அதிகாரத்துடன் சுலபத்துடன் முரண்பட மாட்டான். உலகம்
முழுக்க தமிழர்கள் பரவி வெற்றி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இந்த அதிகார இசைவும்
தான்.
கடந்த வாரம் நடந்த போராட்டம் கூட
இந்த அதிகார இசைவின் நீட்சி தான். நம்மால் அரசின் இசைவுடன் பெருங்கூட்டமாய் இணைந்து
போராட முடிந்தது. அரசு இசையாவிட்டால் நாம் சிதறி விடுவோம். இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஒரு விதிவிலக்கு. அன்று போராட்டக்காரர்கள் கடும் வன்முறையை எதிர்கொண்டார்கள். ஆனால்
இந்த தலைமுறைக்கு அந்த மனோபலம் உண்டா? எனக்குத் தெரியவில்லை.
போராட்டம் என்பது அதிகாரத்தை எதிர்ப்பது
மட்டுமே. போன வாரம் நாம் உண்மையில் அதிகாரத்தை எதிர்க்கவில்லை. அதிகாரத்தின் தோளில்
கையிட்டு சிரித்தபடி போராடினோம். தன் பெரும்பான்மை பலத்தை காட்ட, மக்கள் தலைவன் எனும்
பெயர் வாங்க இவ்வளவு பெரிய கூட்டம் திரள வேண்டிய தேவை ஒ.பி.எஸ்ஸுக்கு இருந்தது. அதனால்
அவர் அதை அனுமதித்தார். (ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகில் மக்கள் விரல் நுனியில் தகவல்களை
வைத்திருப்பார்கள், மிகுந்த தெளிவுடன் இருப்பார்கள் என்பதை ஒ.பி.எஸ் கணிக்கவில்லை.
அவர் அதனால் ஆட்டத்தின் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றார்)
ஆனால் அதே அதிகாரம் இப்போது நம்மை நோக்கி லத்தி தூக்குகிறது.
நாம் மிரட்டும் அப்பாவைக் கண்டு அழுதபடி வீட்டுக்குள் ஓடப் போகிறோமா?
கடந்த வாரம் நாம் மெரீனாவுக்கு கூட்டமாகவும், குடும்பத்துடனும்,
கைக்குழந்தையுடனும் சென்று நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். என் மனைவியும் குழந்தையுடன்
அங்கு சென்றாள். எனக்கு பயம் இருக்கவில்லை. ஆனால் இப்போது சென்றால் காவல்துறை தடியடி
நடத்தும். நாம் போவோமா? என் குழந்தை மீது தடியடி படுவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன்.
மாணவர்கள் பலர் போலீஸ் தடியடியால் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாய் ஒரு
வாட்ஸ் ஆப் வீடியோ பார்த்தேன். இந்த இளைஞர்களின் பெற்றோர் இனி அவர்கள் மெரினாவில் குழுமுவதை
விரும்புவார்களா? அவர்களுக்கு அச்சம் இருக்காதா? இது வன்முறை மீதான அச்சம் மட்டுமல்ல.
போன வாரம் காவல்துறை உங்கள் நண்பன். ஆனால் இனிமேல் போராடினால் வழக்குகள் போடுவார்கள்.
அதை சந்திக்க நம் இளைஞர்கள் விரும்புவார்களா?
இந்த வாரம் இப்போராட்டம் எடுக்கப்
போகிற வடிவம் சமகால தலைமுறையினரின் உளவியலை நமக்கு துல்லியமாக காட்டி விடும்.