வலியை எனது இரண்டாம் பிரக்ஞை என்பேன்.
அது எனக்குள் ஒற்றைக்கண்ணாய் சதா திறந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததுமே
பலருக்கும் அங்கு பார்க்கப்போகும் அபாரமான நூல்கள், எதிர்கொள்ளப் போகும் நண்பர்கள்,
கூட்டத்தின் சலசலப்பு, அழகிய இளம்பெண்கள், குதூகலம் குறித்து ஒரு சித்திரம் கண்முன்
எழும். எனக்கு நேர்மாறாக இவ்வளவு தூரம் நடந்தால் கால் எவ்வளவு வலிக்கும், உடம்பில்
எப்படியான அசதி ஏற்படும் எனும் எண்ணமே முதலில் ஏற்படும். அது குறித்த அலுப்புடனே முதல்
அடியை எடுத்து வைப்பேன். அங்கு போக வேண்டும் என திட்டமிட்டவுடனே என் உடல் அலுத்துக்
கொள்ளும் வலியை கற்பனை பண்ணிக் கொள்ளும். ஆனால் உள்ளே சென்று வேடிக்கை பார்க்க துவங்கியதும்
மனம் குதூகலத்தில் எல்லாவற்றையும் மறந்து விடும்.
இன்றைய நாளும் அப்படித் தான் அமைந்தது.
காலையில் எழுந்ததுமே கை மணிக்கட்டில் மாட்டு ஊசியை நுழைத்து தைத்து இழுப்பது போன்ற
வலி. ஒரு பாரம். இறுக்கம். நான் கையை ஊன்றித் தான் படுக்கையில் இருந்து எழுந்து என்
சக்கர நாற்காலியில் அமர முடியும். இன்று எழுந்த பின் ஒரு மணிநேரம் எப்படி படுக்கையில்
இருந்து எழுந்து அமர்வது என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பசிக்கிறது, தயாராகி
ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். ஆனால் கையை ஊன்றினால் உயிர்போகும் வலி. எப்படி சமாளிப்பது?
கடைசியில் பல முயற்சிகளுக்கு பிறகு படுக்கையில் திரும்பி அமர்ந்து பின்னால் நகர்ந்து
சக்கர நாற்காலியில் தாவிக் கொள்ளும் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அடுத்து தயாரானேன்.
ஆனால் மூன்று மாடிகளை இறங்க வேண்டும். கைப்பிடியை பற்றி ஊன்றாமல் இறங்க முடியாது. எப்படி
வலியை தாங்கி இறங்குவேன்? சரி, இறங்கி விட்டால், எப்படி திரும்ப ஏறுவேன்? இதை நினைத்ததுமே
என் வலியை ஒற்றைக் கண் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சோர்ந்து போனேன்.
ஆனால் இறங்க ஆரம்பித்து வெளியே
போனதும் வலியை மறந்து போனேன். நான் எதிர்பார்த்ததை விட எளிதாகவே இருந்தது. வலி உடம்பில்
இருக்கிறதா அது மனதின் கற்பனையா?
வலியை மறக்க முடிந்ததற்கு நண்பர்
இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை இதற்கு முன் தெரியாது. இன்று தான் முதன்முறை
பேசுகிறேன். அவர் தன் உறவினர் ஒருவருடன் வந்து என்னை ஆஸ்பத்திரி அழைத்து சென்றார்.
எனக்காய் ஒரு பாதி நாளை செலவழித்தார். நான் அவரைப் போல் என் வேலை நாளை இது போல் மற்றொருவரின்
தேவைக்காக எங்கும் செலவழித்தது இல்லை. இப்படியான மனிதர்கள் துன்பங்களை மறந்து மீண்டும்
வாழ்வை உற்சாகமாய் எதிர்கொள்ள ஒரு பாதையை திறக்கிறார்கள். அவர் என் தோழி ஆர்த்தி வேந்தனின்
துணைவர் என்றறிய மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு சுத்தமாய் முன்பழக்கம் இல்லாத எனக்காய்
அவர் இவ்வளவு அக்கறை கொள்வார் என்றால் கூட வாழ்பவருக்காய் இதை விட அதிக அன்பை, பரிவை
கொடுப்பார் என தோன்றியது.
இன்றைய நாள் இவ்வாறு கடும் வலியில்
துவங்கி மகிழ்ச்சியான மனநிலையில் முடிந்தது.