என்னதான் மக்கள் ஒ.பி.எஸ்ஸை டம்மி
என கலாய்த்தாலும் எனக்கு அவர் மீது மதிப்புண்டு. பிரச்சனைகளை முன்கூறாக கணித்து புன்னகைத்தபடியே
காய்நகர்த்தி அமைதியாக ஜெயித்து விடுவார். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம்
அவரது ராஜதந்திரத்துக்கான சிறந்த உதாரணம்.
இப்போராட்டத்தில் இணைந்த லட்சக்கணக்கான மக்களின்
உணர்வுகள் உண்மையானவை. பாராட்டுக்குரியவை. ஆனால் இன்னொரு பக்கம், இதே மக்கள் ஆளும்
அரசின் நாடகம் ஒன்றின் ஒப்பந்தம் செய்யப்படாத நடிகர்களும் தாம். அவர்களுக்கே தெரியாமல் விரைவில்
ஒ.பி.எஸ் மொத்த போராட்டத்தையும் ஹைஜேக் செய்யப் போகிறார். ஒ.பி.எஸ் இயக்குநர் என்றார்
மோடி தயாரிப்பாளர். வாடிவாசலை ஒ.பி.எஸ் திறந்து வைப்பதுடன் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தில்
அவர் மீதான மக்கள் அபிமானம் இரட்டிப்பாகும். குறைந்தது, ஒரு மக்கள் ஆதரவு நிகழ்வுக்கு
முகம் கொடுத்த பெருமை கிடைக்கும்.
முதல்வர் ஆன பிறகு இப்படியான ஒரு வாய்ப்பு அவருக்கு
அமையவே இல்லை. இதன் மூலம் உறுதியற்ற, கட்சிக்குள் அதிகாரமற்ற, செயலூக்கமற்ற முதல்வர்
எனும் அவப்பெயரை அவர் சுலபத்தில் துடைத்து எறியப் போகிறார். மக்கள் ஆதரவு எனும் ஆயுதம்
கொண்டு சசிகலாவுடனான யுத்தத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள போகிறார்.
தமிழகம் முழுக்க நடந்த இப்போராட்டங்களுக்கு
காவலர்கள் அளித்த ஒத்துழைப்பு, அனைத்து டி.வி சேனல்களுக்கு அளித்த முக்கியத்துவம் போராட்டங்கள்
நிச்சயம் ஒ.பி.எஸ் / பன்னீர் செல்வத்தின் ஆசியுடன் (ஆனால் பங்கேற்றவர்களுக்கு இது தெரியாமலே)
நடந்தது என்பதை காட்டுகிறது. புத்தாண்டு இரவு மக்கள் கடற்கரையில் குழுமக் கூடாது என்பதற்காய்
எல்லா சாலை வழிகளையும் அடைத்த காவல்துறை இம்முறை அப்படியான எந்த தடுப்பு நடவடிக்கைகளையும்
எடுக்கவில்லை. போக்குவரத்துக்கும் எந்த தடையும் இல்லை. பொதுவாக இது போன்ற மாணவர் எழுச்சியை
பல வழிகளில் அடக்க முயலும் அரசு இம்முறை புன்னகையுடன் “போங்க போங்க” என்றது. இப்போராட்டங்களை
நீங்கள் ஈழப்போரின் போதான தமிழ்தேசிய உணர்வாளர்களின் போராட்டங்களுடன் ஒப்பிடுங்கள்.
அன்றும் மிகப்பெரிய உணர்வலை எழுந்தது. ஆனால் கூட்டங்கள் நடப்பதில் காவலர்கள் கடும்
கெடுபிடிகள் போட்டனர். அன்று அரசு எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அப்போராட்டம்
வளர முடியாத வண்ணம் செய்தது. இம்முறை முழுக்க நிலைமை நேர்மாறாக உள்ளது.
நிர்பயா கொலையின்
போது தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த பெரும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு எதிராக இருந்தன.
ஆனால் இப்போராட்டங்களில் அத்தகைய அரசு விரோதம் இல்லை. சிலர் அரசும் காவல்துறையும் மக்கள்
உணர்வுகளை மதித்து அனுமதி அளிக்கிறது என்றும் சொல்லலாம். மற்றும் சிலர் மக்களை தம்
திரைக்கதைக்கு ஏற்ப இயங்க அரசு அனுமதிக்கிறது என்றும் பார்க்கலாம்.
இப்போராட்டங்கள் மக்களின்
ஒன்றிணைந்து செயல்படும் எழுச்சி உணர்வுக்கு ஒரு ஊக்கமாக, நாளைய போராட்டங்களுக்கு மாதிரியாக
இருக்கும் என்பதில் நிச்சயம் மறுப்பில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் நடந்த எழுச்சிகளில் உடனடி
வெற்றி பெறும் ஒரே போராட்டம் என்ற முறையில் ஒரு நிறைவளிக்கும் அரசியல் நிகழ்வு இது.
ஒ.பி.எஸ்ஸும் கோலடித்தால் என்ன இறுதி நொடிக்கு சற்று முன்னால் வரை மக்களும் ஆடினார்களே. நமக்கு அது போதும்!