இவ்வருடத்துக்கான இயல் விருது
பெறும் சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள்!
தமிழின் எல்லா சிறந்த கவிஞர்களுக்கும்
ஒரு தனித்துவமான மொழி உண்டு. ஆனால் இந்த மொழி வெறும் மொழி அல்ல. அது ஒரு அணுகுமுறை,
வாழ்க்கைப்பார்வை, நிலைப்பாடு. தமிழின் இறுக்கமான குறியீட்டு, படிமக் கவிதை உலகில்
சுகுமாரன் நேரடியான (plain) கவிதைகளுடன் தோன்றினார். எண்பதுகளின் இறுதியில் துவங்கி
தொண்ணூறுகளில் மறைபொருளுடன், அரூபமான கேள்விகளுடன் திரிந்த கவிஞர்கள் மத்தியில் அவர்
காட்டன் சேலையில் தோளில் சிறு தோல்பையுடன் சரியான சில்லறையை எண்ணியபடி பேருந்து நிலையத்தில்
நிற்கும் நிற்கும் ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தார். தனது வெறுமையை, தனிமையை, இச்சையின்
தீராத தகிப்பை, உண்மைத் தேடலை, அதற்கான முடிவற்ற தவிப்பை பற்றி தன்னிலையில், வாசகனை
எதிர்முனையில் வைத்து பேசும் தோரணையுடன் எளிய சொற்களுடன் பேசினார்.
சுகுமாரனின் plain poetryக்கு
அமெரிக்க ஆங்கில கவிதையுலகில் வால்ட் விட்மேன், எமிலி டிக்கன்ஸன் போன்று முன்னோடிகள்
உண்டு. அமெரிக்க புனைவு எழுத்து, அதன் கலாச்சாரம், மதம், வாழ்க்கைமுறை என ஒவ்வொன்றுமே
நேரடியான, அன்றாட பௌதிக உலகின் எளிமையை புலப்படுத்தும் plain ஸ்டைலை கொண்டது தான்.
ஜீன்ஸ் பேண்ட் அவர்களின் பண்பாட்டின் ஒரு உச்ச குறியீடு. இதுவே பின்னர் கச்சிதமான,
உணர்ச்சிகளற்ற ஹெமிங்வேயின், ரேமண்ட் கார்வரின் பத்திரிகை அறிக்கை-பாணி எழுத்தாக பரிணமித்தது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பான வெறுமை, அந்நியமாதல், தனிமையை பேச இந்த ஸ்டைல் அவர்களுக்கு
கச்சிதமாக அமைந்தது. ஐரோப்பிய நவீனத்துவம் என இந்த எழுத்தை இன்று அடையாளப்படுத்துகிறோம்.
தமிழிலும் இப்படியான வெறுமையும் அவநம்பிக்கையும் தேச விடுதலைக்கு பின்பான மூன்று பத்தாண்டுகளில்
மெல்ல மெல்ல தோன்றி வளர்ந்தது. காந்திய லட்சியவாதத்தை நம்பி பின்னர் அதனால் கைவிடப்பட்ட
ஒரு தலைமுறையினர் (புதுமைப்பித்தன், சி.சு செல்லப்பா போல்) நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும்
இடைப்பட்டு தவித்தனர். இவர்கள் தமிழ் நவீனத்துவத்தை ஏற்படுத்தினர். இவர்களுக்கு அடுத்தது
சு.ராவின் தலைமுறை. இவர்கள் காந்தியின் இடத்தில் மார்க்ஸை வைத்து கைதொழுதனர். ஆனால்
மார்க்ஸும் கைவிட்டார். ஆக இவர்களும் நம்ப கொள்கைகள் ஏதுமின்றி வெறுமையில் தவித்தனர்.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையின் இறுதி நவீனத்துவர்கள். சுகுமாரனின் தலைமுறையினர்.
இறுதி நவீனத்துவர்கள் மார்க்ஸின்
இடத்தில் வைக்க ஏதுமில்லாததால் அவநம்பிக்கையையே கடவுளாக நிறுவி வணங்கினர். வெறுமையை
அரிச்சுவடியாக கற்று வளர்ந்தனர். “எனக்கு வெளியே தேட ஏதும் இல்லை, நான் நொறுங்கிப்
போனவன்” என அறிவித்தனர். பற்றிக் கொள்ள உண்மையின் ஒரு நிழலாவது போதும் என வறண்ட கண்களுடன்
பொசுங்கும் வெயிலில் நடந்தனர். மணமாலை சூடும் சில நிமிடங்களுக்கு முன்பு தன் “காதலியை”
மீள முடியாதபடி இழந்தவனின் மனநிலை இது. அவருக்கு முந்தைய தலைமுறையினர் லட்சியம் எனும்
காதலியை நம்பி ஏமாற்றமடைந்திருந்தனர். ஆனால் சுகுமாரனின் தலைமுறையினர் அந்த பெண்ணை
கண்ணெடுத்து பார்த்தது கூட இல்லை. அவள் விட்டு சென்ற தடங்களும், வாசனைகளும், நினைவுகளும்
மட்டுமே அவர்களுக்கு எஞ்சின. இந்த செவன் ஜி ரெயின்போ காலனி தான் சுகுமாரனின் உலகம்.
அதனால் தான் அவர் தொடர்ந்து பயணங்களை உருவகமாய் தன் கவிதைகளில் கொண்டு வருகிறார். இந்த
பயணங்கள் இலக்குகளோ வரைபடங்களோ அற்றவை. அவர் கவிதைகள் பனிமூட்டமான பாதையில் திக்கற்று
நடக்கும் மஜ்னுவின் “பயணியின் சங்கீதங்கள்” ஆயின.
முந்தைய தலைமுறையின் லட்சியவாத
எச்சங்கள் ஏதுமின்றி சுகுமாரன் ஒரு வெட்டவெளியை கண்டடைந்தார். அந்த வெட்டவெளிக்கான
சன்னமான, காகிதப்பூ மொழி ஒன்றை உருவாக்கினார். இந்த மொழியில் தனது சமகாலத்து இறுதி
நவீனத்துவர்களுக்காக பல முக்கியமான கவிதைகளை அவர் எழுதினார். சுகுமாரனின் plain
poetry வெகுவான கவனம் பெற்றது. அவரது வாரிசாக தோன்றியவர் தான் மனுஷ்ய புத்திரன். ஒருவிதத்தில்
சுகுமாரனின் சற்றே “பருமனான” இரட்டை என மனுஷ்ய புத்திரனை கருதலாம். அவர் சுகுமாரனின்
கவிதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றார். சுகுமாரன் உருவாக்கிய இந்த தனிப்பாதை
தமிழ் கவிதைக்கு அவரது முக்கிய பங்களிப்பு.
தமிழின் சிறந்த உரைநடையாளர்களில்
ஒருவராக சுகுமாரனை நிச்சயம் சால்வை போர்த்தலாம். அவரது துல்லியமான, பிசிறற்ற, சரளமான,
காட்சிபூர்வமான மொழி நிறமற்ற வோட்காவை போன்றது. சுகுமாரன் உரையில் கருத்து, உணர்ச்சி
ஆகியவற்றை விட ஸ்டைலுக்கு அதிகம் முக்கியவத்துவம் கொடுப்பார். நினைவேக்கம், போதாமை,
கசப்பு, ரொமாண்டிக்கான மயக்கம் போன்ற உணர்வுநிலைகளை தன் உரையில் பிரதிபலிக்க அவரால்
இயன்றது. “உயிர்மையில்” அவர் எழுதிய பத்திகளை நான் நினைவுகளில் பலமுறை உருப்போட்டிருக்கிறேன்.
எதன் மீது பாய்கிறதோ அதன் நிறத்தை பெறும் தண்ணீர் மொழி அவருடையது. ஒரு இலக்கிய விமர்சகராக
அவர் (”பேசும் படத்தில்” வரும் அந்த வில்லனைப் போல்) இந்த தண்ணீர் மொழியை உறைய வைத்து
கூர்மையான பனிக்கத்தியாக்கினார். விமர்சனங்களுக்கு பின்புள்ள அவரது கூர்மையான தர்க்கம்,
கருத்துக்களை பின்னி ரிப்பன் போட்டு விடும் மிடுக்கும் வியக்கத்தக்கவை. ஏனென்றால் அரிதாகத்
தான் கவிஞர்கள் நல்ல உரைநடையாளர்களாக இருப்பார்கள். அதிலும் மிக மிக அரிதாகத் தான்
அவர்கள் சிறந்த விமர்சகர்களாகவும் இருப்பார்கள். சுகுமாரன் அப்படி விரல்விட்டு எண்ணத்தக்கவர்களில்
ஒருவர்.
சுகுமாரனின் முதல் நாவலான “வெல்லிங்டன்”
அவரது கவிதைகளின் மைய உருவகமான பயணத்தை எடுத்துக் கொண்டு கச்சிதமாக அமைந்தது. எம்.டியின்
“மஞ்ஞு” (பனிமூட்டம்) நாவலை போன்று கதையின் மையத்தை ஒரு மனநிலையாக மாற்றி சொற்சித்திரங்கள்
வழி ஒவ்வொரு பக்கத்திலும் உலவ விடும் படைப்பு அது.
இது, போக சுகுமாரன் ஏகப்பட்ட
(மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து) மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். தன் ஆசான்
சு.ராவை போன்றே தன்னையும் எழுத்தின் எல்லா தளங்களிலும் சுணங்காமல் பங்களிக்கும் ஒரு
ஆளுமையாக சுகுமாரன் வடித்திருக்கிறார். அவரால் இயல் விருதுக்கு நிச்சயம் பெருமை தான்.
நன்றி: உயிர்மை, ஜனவரி 2017