Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சமிஸ்கிருதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

Image result for அர்ச்சகர்

சமிஸ்கிருதம் நேரடி மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. ஆனாலும் அது ஏன் திருமண நிகழ்வுகளில், கோயில் சடங்குகளில் முக்கிய இடம் பெறுகிறது? ஏன் நாம் அதற்கு பதிலாக தமிழை பயன்படுத்துவதில்லை? தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அடிக்கடி கோபமாய் கேட்கும் கேள்வி இது. சமீபத்தில் “வந்தேறி மாடு” பேஸ்புக் பக்கத்தில் இக்கேள்வி எழுப்பப்பட வழக்கம் போல் கும்மியடித்தார்கள். ஒரு பக்கம் இது வடமாநில சதி என்றும் இன்னொரு பக்கம் சமிஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி என்றும் சில வாதிட்டார்கள். இந்த விவாதம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரே தேய்ந்த தடத்தில் செல்வது காண வியப்பாக உள்ளது.

 சமிஸ்கிருதத்தை இங்கு தொடர்ந்து மத்திய வர்க்கமும் மேல் மத்திய வர்க்கமும் சில குறிப்பிட்ட சந்தர்பங்களில் பயன்படுத்தி வருகிறது. மக்கள் அதற்கு ஒரு மதிப்பை கொடுக்கிறார்கள். சமிஸ்கிருத ஸ்லோகம் தெரிந்தவர்களுக்கு அதுவே ஒரு தொழிலாகவும் இருக்கும் அளவுக்கு அதற்கு ஒரு பயன்மதிப்பு உள்ளது. தமிழ் தேசியவாதிகள் கேட்கும் இக்கேள்வியை ஏன் பொதுமக்கள் கேட்கவில்லை என நாம் யோசிக்க வேண்டும். நான் எப்போதும் நம்பும் ஒரு விசயம் என்னவென்றால் “பொதுமக்கள் முட்டாள்கள் அல்ல.” பொதுமக்கள் தீவிரமாய் நம்பி ஏற்கும் எதிலும் மனித மனம் பற்றின ஒரு உண்மை இருக்கும். அது அரசியல்ரீதியாய் ”சரியாக” இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் உண்மை இருக்கும்.
சமிஸ்கிருதத்துக்கு போகும் முன் நாம் ஆங்கிலத்துக்கு வருவோம். ஒரு நண்பர் சமீபத்தில் என்னை அழுத்தம் திருத்தமாய் “ஐயா” என்று அழைத்தார். எனக்கு அது ஒரு கூச்சத்தை, மனவிலக்கை ஏற்படுத்தியது. அச்சொல்லுடன் என்னால் இணங்க முடியவில்லை. ஏன்? பொதுவாகவே தீவிர இலக்கிய பரப்பில் “ஐயா” பயன்படுத்துவதில்லை. வயதில் மூத்தவர்களை கூட பெயர் சொல்லி அழைப்போம். பெயர் சொல்லி அழைப்பது மரியாதை அல்ல எனத் தோன்றினால் “சார்” என்று அழைப்போம். ஐம்பதுகளில் இருந்தே தமிழ் தேசிய பண்பாட்டை ஒருவித ”மொழி வெறி” என தீவிர இலக்கியவாதிகள் நம்பி வருகிறார்கள். அதனாலே அவர்கள் “ஐயாவுக்கு” பதில் “சார்” என்பதை ஏற்றார்கள். இதில் ஒரு காலனியவாத எச்சம் உள்ளது என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒன்றுமில்லை. அது ஒரு மாற்றுச்சொல் அவ்வளவு தான். ஆனால் முக்கியமாய், இச்சொல்லின் பின்னே ஐம்பது வருட வரலாறு உள்ளது. மொழியையும் இன அடையாளத்தையும் வழிபட வேண்டும் எனும் அரசியலை ஏற்காமல் நீங்கள் “ஐயாவை” ஏற்க முடியாது.
இந்த “சார்” என்பதற்கு பின்னால் இன்னொரு நுணுக்கமும் உள்ளது. அச்சொல்லில் ஒரு அந்நியத்தன்மை உள்ளது. எது அன்னியமாய் படுகிறதோ அதில் மரியாதையும் அதிகாரமும் உள்ளது. இது ஒரு அடிப்படை உளவியல். எது ஒன்று எளிதில் அணுக முடியாததோ அது அதிகாரம் மிக்கது. உ.தா., உங்கள் நண்பர் ஆளுங்கட்சி பிரமுகர் அல்லது எம்.எல்.ஏ என்றால் அவரை நேரே வீட்டுக்கு சென்று அறைக்குள் புகுந்து பார்க்க முடியாது. அவர் மந்திரி என்றால் அவர் வீட்டு வாசலை சுலபத்தில் தாண்ட முடியாது. அவர் முதல் மந்திரி என்றால் அவர் வீட்டு தெருவுக்குள் சுலபத்தில் நுழைய முடியாது. அதிகாரம் அதிகமாக அவருடனான அணுக்கமும் குறையும். குறைய வேண்டும். இல்லாவிடில் அதிகாரம் குறைந்து விடும். அடுத்த தேர்தலில் அவர் தோற்று, ஆனால் கட்சி ஜெயித்து விட்டால் அவரை போனில் அழைத்து அனுமதி பெற்று சுலபத்தி பார்க்கலாம். அவர் கட்சியும் தோற்று விட்டால் அவரை நீங்கள் நேராகவே வீட்டுக்கு சென்று அருகில் உட்கார்ந்து பேச முடியும்.
 ஏன் உயரதிகாரிகள் உதவியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள்? ஏன் ஒரு அலுவலகத்தில் சிலருக்கு மட்டும் தனி அறை அளிக்கப்படுகிறது? அதுவும் நவீன அலுவலகங்களில் இது கண்ணாடி அறை. இந்த அறைக்குள் அவரை நீங்கள் பார்க்கலாம். அவரும் உங்களைப் பார்க்கலாம். அப்படி என்றால் அந்த அறையின் பயன் என்ன? அது ஒரு குறியீடு. நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்பதற்கான குறியீடு. அப்படி இருப்பதனால் தான் அவர் அதிகாரம் தக்க வைக்கப்படுகிறது. (இந்த விசயங்கள் எல்லாம் வசதி கருதி என்பது புருடா.) இன்றைய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒருவர் உதவியாளர் இன்றியே எல்லா வேலைகளையும் சமாளிக்கலாம். ஆனால் உதவியாளர் தருகிற அந்தஸ்தை தொழில்நுட்பம் தராது. என்னுடைய ஆங்கில பேராசிரியர் செரியன் குரியன் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அதிக சம்பளமே இந்த அதிகாரத்தை உருவாக்கத் தான் என்பார். இதை நான் ஜெயின் கல்லூரியில் பணி புரியும் போது உணர்ந்திருக்கிறேன். அங்கு நிறைய மார்வாரி பையன்கள் வருவார்கள். அவர்கள் சொல்வார்கள் “சார் நீங்கள் ஒரு மாதம் சம்பாதிக்கிறதை நான் ஒரே வாரத்தில் சம்பாதித்து விடுவேன்.” நீங்கள் அபார அறிவு படைத்தவர் என்றால் மட்டுமே அவர்கள் உங்களை விதிவிலக்காய் மதிப்பார்கள். இதற்காகத் தான் அரசு இன்று உதவி பேராசிரியர்களின் சம்பளத்தை அரைலட்சமாய் வைத்திருக்கிறது. பணம் என்பது பணம் மட்டுமே அல்ல.
சமிஸ்கிருதமும், ஆங்கிலமும் இப்படியான ஒரு கண்ணாடி அறை, ஒரு உதவியாளர், அரை லட்ச சம்பளம். எது ஒன்று சுலபத்தில் அணுகக் கூடியதோ அதில் அதிகாரம் இருக்காது. கடவுள் நம்மால் சுலபத்தில் அணுக முடியாது ஒரு அதிகாரப் புள்ளி; ஒரு மறைபொருள்; மாயை. அப்படியான கடவுளை கொச்சை தமிழில் அழைத்து வேண்டிப் பாருங்கள். உங்களுக்கே அவலமாய் தோன்றும். சரி தமிழில் அழைப்பதென்றால் கூட சுலபத்தில் புரியாத, அல்லது அன்றாட புழக்கத்தில் இல்லாத தமிழில் தான் அழைக்க வேண்டும். அதனால் தான் திருப்பாவையை கோயிலில் பாடலாம். கடவுள் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையை பாட முடியாது.
”இந்த அதிகாரத்தை உடைக்கத் தான் நாங்கள் தமிழில் மந்திரம் ஓத விழைகிறோம்” என்று நீங்கள் கோர முடியாது. ஏனென்றால் கடவுள் என்றாலே அதிகாரம் தான். அதை உடைக்க முடியாது. தமிழ் மந்திரம் கூட மக்கள் அன்றாடம் பயன்படுத்தாத புராதனத் தன்மை கொண்டதாய் இருந்தால் மட்டுமே அது எடுபடும்.
மக்கள் ஏன் ஒரு “செத்த மொழியை” கோயிலில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதன் உளவியல் அவர்களுக்கு உள்ளுணர்வு ரீதியாய் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை கேள்வி கேட்கும் உங்களுக்கு புரியவில்லை.

பின்குறிப்பு 1: கடவுளின் அதிகாரத்தை உடைக்க ஒரே வழி மிகவும் கொச்சையாய், தத்துபித்தென்ற உளறல்களாய் கடவுளிடம் பிரார்த்திப்பது. கிறித்துவத்தின் ஒரு பிரிவில் இந்த முறை உள்ளது. பெந்தேகோஸ்துகள் உணர்ச்சிகரமாய் மட்டுமே கடவுளை அணுக முடியும் என நம்புகிறார்கள். சூபிகளும் அவ்வாறு தான். அவர்கள் அழுது பாடுகிறார்கள். கடவுளை உடலுறவு கொள்ளும் பெண் அளவுக்கு அந்தரங்கமாய் எதிர்கொள்ள முயல்கிறார்கள். மொழி முழுக்க தோற்றுப் போகும் இடம் அது. அங்கு நிச்சயம் அதிகாரம் இல்லை. ஆனால் இது மைய நீரோட்ட சமூகத்தில் ஏற்கப்படாது. உதிரி மார்க்கமாய் மட்டுமே இருக்க முடியுமே. “டேய் தெய்வமே, என் உயிரே” என்று எல்லா பக்தர்களும் அழைக்க முடியாது.


பின்குறிப்பு 2: தொண்ணூறுகளில் ஏ.ஆர் ரஹ்மானின் பல பாடல் வரிகள் புரியாது என்றொரு குற்றச்சாட்டு இருந்தது. அது என்ன “முக்காலா முக்காபுலா, சொக்காலா சொக்காபுலா”? ஆனால் புரியாத சொற்களை இசையில் பயன்படுத்துவதில் ஒரு அந்நியத்தன்மை, ஸ்டைல், விசித்திரம் உள்ளது. அதையும் மக்கள் ரசித்தார்கள். இளையராஜாவின் இனக்குழு அடையாளங்கள் பதிந்த தமிழ்த்தன்மை மிகுந்த இசையை அகற்றி புது சுவையை உருவாக்க ரஹ்மான் நிறைய முயன்றார். புதுபுது இசைக்கருவிகள், அயல் இசை கோர்வைகள், வித்தியாசமான குரல்கள் கலந்து பரிசோதனையை இசையை உருவாக்கினார். ராஜாவின் இசை கேட்ட இசை என்றால் ரஹ்மானின் இசை கேட்காத இசை. அதற்கு புரியாத சொற்களும் அன்று பயன்பட்டன. இசையில் எப்போதும் சொற்களுக்கு அர்த்தம் விளங்க வேண்டியதில்லை என அவர் அறிந்திருந்தார். சொற்களின் ஒலி அவற்றின் அர்த்ததத்தை விட முக்கியம்.

Comments

greatguy said…
The statement that Sanskrit is not discernable is not correct. Just not suit fast understanding. Soma vara viradham may be Sanskrit but after few minutes you make what is said. Like god is there you feel him see him but in reality you don't. Sanskrit is similar you feel familiar but don't understand. With out understanding you are comfortable. Perhaps that is why Sanskrit is language of God also origin of indo European languages. Sanskrit is the father language of all humans, just that we are only a shade of our ancestors.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...