இடதுசாரிகளின் போலியான முற்போக்குவாதம்,
அவர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களின் மதப்பிரச்சாரங்களை கேள்வி கேட்காதது தான்
மக்கள் தேர்தல்களில் இடதுசாரிகளை புறக்கணிக்க காரணம் என ஜெயமோகன் சொல்வதுடன் (”முற்போக்கின் தோல்வி ஏன்”) ஜெயமோகனே
இன்னொரு பக்கம் நம்ப மாட்டார். இஸ்லாமியருக்கு உலகை ஆளும் சர்வதேச கனவு உள்ளது, அவர்களால்
உலக மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது ஆகிய கருத்துக்களை தினசரி பத்திரிகைகள்
படிக்கும் எளிய மக்கள் கூட நம்ப மாட்டார்கள்.
ஜெயமோகன் கூறுவது படியே கிறித்துவத்தில் (இஸ்லாத்தில்
போல) வன்முறையால் உலகை வெல்லும் கொள்கை இல்லை தான். ஆனால் அதே கோணத்தில் நோக்கினால்
காலனியவாதம் என்ற பெயரில் ஐரோப்பிய கிறித்துவ தேசங்கள் உலகம் முழுக்க போர் தொடுத்து
ஆக்கிரமித்ததை எப்படி புரிந்து கொள்வது? இந்த போர்கள் கிறித்துவின் வேதத்தை பரப்பும்
நன்னோக்கில் தான் நடந்தன. சிலுவைப் போர்களை எப்படி புரிந்து கொள்வது?
ஒரு மதத்தின் கொள்கைக்கும் வன்முறைக்கும்
எந்த சம்மந்தமும் இருப்பதில்லை. பொருளாதார அழுத்தங்கள், வணிக நோக்கங்கள், அரசியல்,
பேராசை ஆகியன தான் போர்களை தூண்டுகின்றன. இன்றைய உலக சூழலில் ஒரு பெரிய தேசம் போர்
தொடுத்தால் அது நீதிக்கான போராட்டமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய தேசத்துக்குள் ஒரு
போராளிக்குழு போர் தொடுத்தால் அது தீவிரவாதம் ஆகிறது. சில நிலையற்ற ஆப்பிரிக்க தேசங்களிலும்
தெற்காசிய தேசங்களிலும் இஸ்லாம் வேகமாய் பரவுவதையும் அங்கு உருவாகும் வன்முறையையும்
நாம் மதப்போராக பார்க்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் இனக்குழுக்கள் இடையே அரசியல்
ரீதியாய் அதிகாரப் போட்டி வலுக்கிறது. சில குழுக்கள் இஸ்லாத்தின் பெயரில் ஒன்று திரள்கின்றன.
இஸ்லாம் அங்கு இல்லாவிட்டால் வேறு அடையாளத்தின் கீழ் திரளப் போகிறார்கள். அவ்வளவு தான்.
உலகம் முழுக்க இஸ்லாம் ஒரு வெறுப்பு
அலையாய், வன்முறை நெருப்பாய் பரவி வருகிறது என்பது ஒரு கற்பனை மட்டும் தான். உலகம்
முழுக்க அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் நிலையின்மை மிக்க தேசங்களில் மட்டுமே
இது நிகழ்கிறது. அங்கு நிலையான அரசுகள் அமைந்ததும் தீவிரவாதம் ஒடுங்கி விடும். தீவிரவாத
குழுக்கள் தேசிய ராணுவமாய் உருக்கொள்வார்கள்.
ஜெயமோகன் வேறு சில பீதிகளையும்
கிளப்புகிறார். இஸ்லாம் ஒரு பிற்போக்கான மதம் அல்லவா? இஸ்லாம் நவீன தனிமனித உரிமைகளுக்கு
எதிரானது அல்லவா? இஸ்லாம் உலகு முழுக்க பரவினால் மக்கள் அடிப்படைவாதிகளின் கீழ் அஞ்சி
நடுங்கி அல்லவா வாழ வேண்டும்? இஸ்லாமியர் குறித்த மற்றொரு கற்பிதம் இது. இயல்பிலேயே
பிற்போக்கான, இறுக்கமான சில தேசங்களில் இஸ்லாமிய அரசுகள் ஆட்சி அமைக்கும் போது அங்கு
மக்களின் சுதந்திரம் பிடுங்கப்பட்டு ஒடுக்குமுறை நடைபெறுவது உண்மை தான். ஆனால் எந்த
மதமோ ஆட்சியாளரோ மக்களின் பண்பாட்டை தான் பிரதிபலிக்கிறார்கள். ஒரு முற்போக்கான, தனி
மனித சுதந்திரத்தை மெச்சும் தேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் அது முற்போக்கான ஒன்றாகவே
இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
மக்கள் தாம் ஒரு மதத்தை வடிவமைக்கிறார்கள். மதம்
மக்களின் உளவியலை தீர்மானிப்பதில்லை. இந்த விசயத்தில் தான் ஜெயமோகன் தவறு செய்கிறார்.
அவர் ஒரு அமைப்பியல்வாதியை போல் சிந்திக்கிறார். ஒரு கருத்தியலை சுற்றி சமூகம் அமைகிறது
என நம்புகிறார். ஆனால் உண்மையில் சமூகத்தின் போக்கிற்கு ஏற்றாற் போல் கருத்தியல்கள்
மாறுகின்றன.
உலகம் இப்போது எதிர்கொள்ளும் முக்கியமான
சவால் மத பயங்கரவாதம் அல்ல. போதாமை. பணப்பற்றாக்குறை, பசி, கல்வியின், வளர்ச்சியின்,
வசதிகளின், வாய்ப்புகளின் போதாமை. பல்வேறுவிதமான ஒடுக்குமுறைகள், பற்றாக்குறைகள், பரிதவிப்புகள்
உலகம் முழுக்க மக்களை சூழ்கின்றன. வயிற்றில் நெருப்பெரியும், உரிமைகள் நசுக்கப்படும்
இந்த உலக மக்களுக்காய் நாம் யோசித்தால் போதும். இஸ்லாமிய பயங்கரவாதம் இதோ பரவி வருகிறது
எனும் பீதி எல்லாம் அவசியமற்றது.