நான் என் முனைவர் பட்ட ஆய்வை தமிழ்
நவீனத்துவம் பற்றி செய்தேன். குறிப்பாக உடல் பிம்பம் எவ்வாறு கடந்த நாற்பது வருடங்களில்
மாறி வந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்தேன். அப்போது நான் சந்தித்த முக்கிய இடைஞ்சல்
துணை ஆய்வு ஆதாரங்கள் கிடைக்காதது. என் ஆய்வின் முதல் வருடத்தில் நவீன கவிதை பற்றி
வந்த நூல்களை தேடி சேகரித்தேன். மிக மிக சொற்பமான நூல்களே கிடைத்தன. அவையும் எனக்கு
உதவிகரமாய் இல்லை. ஏனென்றால் அவை தத்துவார்த்தமாயோ மொழி ரீதியிலோ நம் கவிதைகளை ஆராயும்
புத்தகங்கள் அல்ல.
இணையத்தில் நமது எழுத்தாளர்கள், அவர்களின் முக்கிய
படைப்புகள் பற்றி சில கட்டுரைகள் கிடைக்கின்றன. அவையும் ஆழமான ஆய்வுகள் அல்ல. ஆனாலும்
ஏதோ ஒரு மேற்கோள் என இருக்கட்டுமே என அவற்றை பயன்படுத்திக் கொண்டேன். அப்போது நான்
கவனித்தது என்னவென்றால் ஒருசில பிளாகர்களே தொடர்ந்து புத்தகங்கள் பற்றி எழுதுகிறார்கள்.
ஒரு எழுத்தாளன் இறந்து போகும் போது மட்டும் தான் அவனைப் பற்றி விரிவான கட்டுரைகள் வருகின்றன.
அசோகமித்திரன் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் இவ்வளவு தீவிரமான கேள்விகளை யாரும் எழுப்பி
இருக்க மாட்டார்கள். (இப்போது வரும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் இலக்கிய ஆய்வுகள் என அதிகம்
தேறுவதில்லை, என்றாலும் கூட)
பிளாக் நடத்தும் இளம் எழுத்தாளர்கள் தம் நூல்கள், படைப்புகள்
பற்றின மதிப்புரைகளை தொகுக்கிறார்கள். எஸ்.ரா தன் இணைதளத்தில் ஓரளவு மதிப்புரைகளை தொகுத்திருக்கிறார்.
ஜெயமோகன் மட்டும் தான் தன் ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக பிளாக் வைத்து கடிதங்கள்
முதல் விமர்சனங்கள் வரை தொகுத்திருக்கிறார். என் முனைவர் ஆய்வில் ஜெயமோகனின் பிளாகுகள்
எனக்கு மிகவும் பயன்பட்டன.
இந்த ஆய்வு ஆதார பற்றாக்குறை காரணமாகத்
தான் ஆங்கில முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தமிழ் எழுத்துலகம் பற்றி ஆராய தயங்குகிறார்கள்.
ஆங்கிலத்தில் நிலை நேர்மாறானது.
அங்கு எளிய ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு கூட ரீடர் போன்ற நூல்கள் வருகின்றன. எந்த தலைப்பு
எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் வந்து குவிகின்றன.
நான் தற்போது டாம் மர்பி எனும் ஐரிஷ் நாடகாசிரியர் பற்றி நூல் ஒன்று படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஐயர்லாந்தைக் கடந்து அவரை அதிகம் மக்களுக்கு தெரியாது. அவருக்கும் கூட விரிவான சீரியசான
நூல் ஒன்றை எழுத ஒரு விமர்சகர் முயற்சி எடுத்திருக்கிறார். தமிழில் நமது இலக்கிய சாதனையாளர்கள்
பற்றி அத்தகைய நூல் ஒன்று கூட இல்லை. ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் வரிசை அத்தகைய
ஒரு சிறந்த முயற்சி. (எஸ்.ரா குறித்து ஒரு விமர்சன தொகை நூல் வந்துள்ளது என நினைக்கிறேன்.
உறுதியாக தெரியவில்லை.) ஆனால் இவ்வளவு வாசகத் தொண்டர்கள் கொண்ட ஜெயமோகனுக்கு அவரைப்
பற்றி ஒரு ரீடர் நூல் இன்று வரை இல்லை. (அதையும் அவரே தான் எழுதிக் கொள்ள வேண்டும்
என நினைக்கிறேன்.)
உண்மையில் இத்தகைய நூல் ஒன்றை வெளியிடுவது இன்று
ஒரு அசகாய சாதனை அல்ல. ஒரே ஒரு நபர் சற்றே முனைந்தால் போதும். (சாருவின் வாசகரான நண்பர்
ஸ்ரீராம் சாரு பற்றி ஒரு ரீடர் நூல் தொகுப்பதாய் என்னிடம் தெரிவித்து கட்டுரை கேட்டிருக்கிறார்.)
இன்று வாசக சாலை மற்றும் அகரமுதல்வன், ஆத்மார்த்தி போன்றோரது அமைப்புகள் தொடர்ந்து
எழுத்தாளுமைகள் பற்றி முழுநாள் கருத்தரங்குகள் நடத்துகின்றன. இந்நிகழ்வுகளின் முடிவில்
பேசப்பட்ட பேச்சுகளை அல்லது வாசிக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு மலராக தொகுத்து வெளியிட்டால்
போதும். POD முறையில் பத்து பிரதிகள் வெளியிட்டால் கூட போதும். நண்பர்களுடன் பாரில்
சென்று தண்ணியடிக்கிற செலவு அல்லது கெர்ல்பிரண்டுடன் ஒரு திராபையான படத்தை மல்டிபிளக்ஸில்
பார்க்கிற செலவு தான் ஆகும். ஆனால் ஏனோ கூட்டம் நடத்த காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியை
கூட நாம் நூல் கொண்டு வருவதில் காட்டுவதில்லை.
ஆனால் எதிர்காலத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளன்
பற்றி ஆராயவோ அல்லது புரிந்து கொள்ளவோ முனையும் போது இத்தகைய தொகை நூல் மிகவும் உதவும்.
உதிரிக் கட்டுரைகள், பேஸ்புக் குறிப்புகள் சிதறி விடும். ஆனால் ஒரு புத்தம் என்றும்
தனி மதிப்புடன் இருக்கும்.
நாம் நமது படைப்பு பற்றி அடுத்த
வாரம் அல்லது அடுத்த மாதம் என்ன பேசுகிறார்கள் என கவலைப்படுகிறோம். ஆனால் ஐம்பது வருடங்களுக்கு
அல்லது நூறு வருடங்களூக்கு பிறகு வருகிறவர்களுக்கு நாம் என்னவாக தெரியப்பட போகிறோம்
என்பதில் நமக்கு அக்கறை இல்லை. இப்போது வாசகர்கள் நம்மை படிப்பது போல் அப்போதும் யாராவது
படிப்பார்கள் என நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. நமது மரணத்துக்குப் பிறகு நம்மைப்
பற்றி யாராவது தொடர்ந்து எழுதி புரமோட செய்யாவிட்டால் வாசகன் நம்மை சுலபத்தில் தவிர்த்து
சென்று விடுவான்.
இன்னொரு காரணத்துக்காகவும் விமர்சனத்
தொகைகள், ரீடர்கள் முக்கியம். ஒரு எழுத்தாளுமையை ரசித்து படிப்பதும் தர்க்கரீதியாய்
தொகுப்பதும் இருவேறு காரியங்கள். மனுஷ்யபுத்திரனை தொடர்ந்து ரசித்துப் படிக்கிறீர்கள்.
அவர் கவிதை உங்கள் மனதில் பலவித சலனங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவர் எத்தகைய கவிஞர்,
தமிழ் நவீன கவிதை மரபில் அவரை எங்கு பொருத்துவது எனக் கேட்டால் பெரும்பாலான வாசகர்களுக்கு
பதில் இருக்காது. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி சில குற்றச்சாட்டுகள் உண்டு. அவற்றுக்கு
பதில் சொல்ல அவரது தீவிர வாசகர்களுக்கு தெரியாது. அக்கேள்விகள், குற்றச்சாட்டுகள் ஒரு
வேதாளம் போல் அவரது பிம்பத்தின் முதுகில் தொங்கிக் கொண்டே இருக்கும். அவரைப் பற்றின
பாராட்டுகளையும் தர்க்க ரீதியாய் தொகுப்பது சுலபம் அல்ல. அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளை
(பல்லாயிரம் பக்கங்களில்) எழுதியிருக்கிறார். அடுத்த அரை நூற்றாண்டில் அவர் இதற்கு
இரட்டிப்பு மடங்கு எழுதுவார் எனக் கொள்வோம். இக்கவிதைகளை முழுக்க ஒரு தனி வாசகனால்
படிக்க இயலாது. (ஜெயமோகனின் வெண்முரசு நாவல்களுக்கும் இந்த கதி தான்) அப்படி எனில்
இப்படியான ஒரு எழுத்தாளனின் ஒட்டுமொத்த கவிதையின் அல்லது படைப்புகளின் சாரத்தை ஒருவர்
எப்படி புரிந்து கொள்வது, அவரை எப்படி ஒரு படைப்பாளியாக தொகுப்பது, ஒரு கவிஞனாக அவரது
பரிணாமத்தை, தொழில்நுட்ப வளர்ச்சியை, தத்துவார்த்த நிலைப்பாடுகளை எப்படி ஒரு சில வரிகளில்
எடுத்துரைப்பது? எதிர்காலத்தில் ஒரு வாசகன் அவரது ஆயிரக்கணக்கான கவிதைகளில் ஒரு சிலவற்றை
மட்டும் படிப்பான், நினைவு வைத்திருப்பான், அவற்றின் வழி அவரது எழுத்தாளுமையை தனக்குள்
தொகுத்துக் கொள்வான். ஆனால் அப்படி செய்வது அவரது பிற படைப்புகளுக்கு செய்யும் துரோகம்
அல்லவா?
மனுஷ்ய புத்திரனைப் போன்று அதிக
கவிதைகள் எழுதியவர் தேவதேவன். அவரைப் பற்றியும் ஒரே ஒரு ஆய்வு புத்தகம் தான் வந்துள்ளது.
(அதையும் ஜெயமோகன் தான் எழுதியிருக்கிறார்.)
இன்று வரை நமது முன்னோடிகளை பல்வெறு
தலபுராணங்கள் வழியாகத் தான் அறிமுகம் கொண்டிருக்கிறோம். நம் காலத்தைய எழுத்தாளர்களையும்
நூறு வருடங்கள் கழித்து வாசகர்கள் அவ்வாறே அறியப்போகிறார்கள் என நினைக்க அசதியாக இருக்கிறது.
மாபெரும் படைப்பாளியோ அல்லது எளிய
படைப்பாளியோ அவரைப் பற்றி ஒரு சில வரிகளில் அல்லது ஒற்றை வரியில் வரலாற்று, சமூக, தத்துவார்த்த
ரீதியில் அடையாளப்படுத்த முடிய வேண்டும். அவர் யார்? அவரது பங்களிப்பு என்ன? மொழியில்
அவரது சாதனை என்ன? அவரது தத்துவம் என்ன? இக்கேள்விகள் முக்கியம். இவற்றுக்கான பதில்கள்
முக்கியம். இக்கேள்வி பதில்கள் வழித் தான் அடுத்த தலைமுறை நம் காலத்து இலக்கிய வரலாற்றை
எழுதப் போகிறது. நமது சிறந்த படைப்புகள் என்ன, அவற்றை எப்படி அணுக வேண்டும் என அறியப்
போகிறது. அப்போது தான் நமது படைப்பு பணிகளுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்கும். ஒரு
முன்னோடிப் படைப்பாளியின் ஆதாரப் புள்ளியை அறிந்து கொண்டால் தான அங்கிருந்து அடுத்த
கட்ட படைப்பாளிகள் தோன்ற முடியும்.
வாசகனால் ஒரு படைப்பாளியை உணர்வுரீதியாய்
மட்டுமே அணுகி ரசிக்க, புரிந்து கொள்ள முடியும். ஒரு விமர்சகனால் மட்டுமே அந்த உணர்வுகளுக்கு
ஒரு தர்க்க வடிவை அளிக்க முடியும். வாசக உணர்வுகள் பாதுகாப்பான செக்ஸ் போல. ஆனால் தர்க்கம்
விந்து போல. அது பல சந்ததிகள் தோற்றுவிக்கும். தர்க்கரீதியாய் நிலைநிறுத்தப்படாத எழுத்தாளன்
ஒரு விதத்தில் அனாதை தான். படைப்பு என்றுமே தானாக வாசகனை சென்று சேராது. அதற்கு கால்களோ
இறக்கைகளோ இல்லை. ஒரு படைப்பு பற்றின உரையாடல்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். அப்போது
தான் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு புத்தகத்துக்கு வாசகன் தோன்றுவான். இந்த உரையாடல்கள்
ஒரு மைய தர்க்கத்தில் இருந்து தோன்றுகின்றன. ஒரு சொற்றொடர் போதும். அதில் இருந்து ஆயிரம்
உரையாடல்கள் தோன்றும். இந்த உரையாடல்கள் தாம் எதிர்கால தலைமுறையினர் ஒரு படைப்பாளியை
படிக்க வேண்டிய கட்டாயத்தை, நியாயத்தை, தேவையை உருவாக்கும். நம் மரபுக்கு பெருமையையும்
அடையாளத்தையும் தரும்.
தன் காலத்தில் வெறும் வெகுஜன எழுத்தாளனாய் இருந்த
ஷேக்ஸ்பியரை அவருக்கு அடுத்த சில நூற்றாண்டுகள் தோன்றின விமர்சகர்கள் ஆராய்ந்து கொண்டாடி
ஒரு மேதையாய் முன்வைத்தனர். அதற்கு என பல லட்சம் பக்கங்களை எழுதினர். ஆங்கில இலக்கிய
மரபின் மேதைமைக்கு அவர் ஒரு அடையாளமாய் மாறினார். ஆங்கிலேய பண்பாட்டின் முகமாக முன்னிறுத்தப்பட்டார்.
எழுத்தாளனுக்கும் ஒரு சமூகத்துக்கும் ஒரே போல பயன் தரக் கூடிய விசயம் இது.
தமிழர்கள் இந்த வேலையை பாரதி,
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் விசயத்தில் மட்டும் தான் செய்தார்கள். இந்நான்கு
பேரையும் நம் பண்பாட்டு அடையாளங்கள் ஆக்க பல்லாயிரம் பேச்சாளர்கள், பட்டிமன்ற உரையாளர்கள்,
விமர்சகர்கள், பேராசிரியர்கள், தொகுப்பாளர்கள், பதிப்பாளர்கள் பணி செய்தார்கள். இந்நால்வரும்
இல்லாவிட்டால் திராவிடத் தமிழன், செவ்வியல் தமிழன் என எந்த முகத்தை வைத்துக் கொண்டு
சொல்வோம்?
அடுத்த கட்டமாய், நவீனத் தமிழனை அடையாளப்படுத்த நமக்கு
எழுத்தாளர்கள் தேவை. அதற்காக வேலை செய்ய இதே போன்று பல்லாயிரம் தோள்கள் நமக்கு வேண்டும்.
ஆனால் அத்தகையோர் இனி வருவார்களா என்பது ஐயமே.
ஒன்று இத்தகைய நூல்களை வாசகர்கள்,
பதிப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கொண்டு வர வேண்டும். அல்லாவிட்டால் சம்மந்தப்பட்ட
எழுத்தாளனே சங்கோஜப்படாமல் தன்னைப் பற்றின ரீடர் நூலை கொண்டு வர வேண்டும். அழுகிற குழந்தைக்குத்
தான் பால்! சமீபமாய் ஆத்மார்த்தி மனுஷ்யபுத்திரனின் ஐந்து கவிதை நூல்கள் பற்றி கருத்தரங்கு
நடத்தினார். அது பற்றி இம்மாத உயிர்மையில் கடைசி பக்கத்தில் சில கறுப்புவெள்ளைப் படங்களும்
நான்கு வரிகளும் வந்துள்ளன. இது போதுமா? போதாது. குறைந்தது அவர் இதைப் பற்றின பதிவுகளுக்காக
பத்து பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். பேசின சொற்கள் காற்றில் மறைந்து விடும்.
பதிப்பான சொல்லுக்கு மட்டுமே ஆயுசு. அவரே தன் பத்திரிகையில் இதற்காக இடமும் காலமும்
ஒதுக்கவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்?
நாம் இனி இந்த கோணத்தில் சற்று
யோசிக்க வேண்டும். நம் கல்லறையில் செதுக்கப்பட வேண்டிய வாசகங்களை நாமே தீர்மானிக்க
வேண்டும்.